Wednesday, March 28, 2012

வெள்ளைச் சூரியன்

பார்த்துப் பார்த்து,
கேட்டுக் கேட்டு,
நுகர்ந்து நுகர்ந்து,
ஸ்பரிசித்து ஸ்பரிசித்து,
சுவைத்துச் சுவைத்து,
சலித்துக் களைத்து
இளைப்பாறத்துடிக்கும்
புலன்கள் போலவே

தீச்சிவப்பாய் எரிந்து
தங்கத்தகடாய்த் தகதகத்து
இளஞ்சிவப்பில் மினுமினுத்துக்
களைத்துப்போனதொரு மாலை
வெள்ளைச் சூரியன்.

புனரமைப்பு தேவைப்படுகிறது.
புலன்களுக்கும்
சூரியக்கோளுக்கும்.


(கத்தார் - சவூதி நெடுஞ்சாலைப் பயணமொன்றில் மறைந்துவிடத் துடித்த சூரியனை கார் கதவின் கண்ணாடி கூடத் திறக்க நேரமின்றி எடுத்த புகைப்படம்...)

14 comments:

ஜீவி said...

தூரத்தில் நெற்றிப் பொட்டாய்த் தெரியும் அந்த சூரியப் பொட்டு?..
அழகாகத் தான் இருக்கிறது.. எத்தனை காத தூரம் என்கிற கணக்கு மனதை மருட்டுகிறது. அத்தனை காத தூரம் கடந்து, அதன் வெம்மையை வடிகட்டித் தரும் லேயரைத் தாண்டி, கண்மணிப் பாப்பா படம் பிடித்துத் தரும் போட்டோ, உடற்கூறின் அற்புதம்!
இறைவன் தந்த கொடையான வரம்!
'பார்வை'யைத் தந்த பரமனுக்கு இதை உணர்கின்ற இந்த நேரத்தில் நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

புனரமைப்பு தேவைப்படுகிறது.
புலன்களுக்கும்
சூரியக்கோளுக்கும்.

அருமையான படமும் பகிர்வும்.. பாராட்டுக்கள்..

Anonymous said...

படம் + புனரமைப்பு = அருமை

ராமலக்ஷ்மி said...

படமும் அனுபவக் கவிதையும் அருமை மலர்.

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ! ;-)

சாந்தி மாரியப்பன் said...

கவிதையும் படமும் அருமையாயிருக்குங்க..

மேம்படணும்ன்னா சில சமயம் புனரமைப்பும் தேவைப்படத்தான் செய்யுது..

பாச மலர் / Paasa Malar said...

வித்தியாசமான காட்சி இது....மிகவும் அழகான சில காட்சிகளைப் பார்க்கையில், கண்பார்வைக்கு நன்றிதான் சொல்லவேண்டும்...

பாச மலர் / Paasa Malar said...

வாங்க இராஜராஜேஸ்வரி மேடம்...நன்றி..

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ரெவெரி..கருத்துக்கு நன்றி..

பாச மலர் / Paasa Malar said...

ராமலக்ஷ்மி..நீங்களும் உங்கள் காமிராவும்தான் நினைவுக்கு வந்தீர்கள் இந்தப் படம் எடுக்கும்போது.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி...

பாச மலர் / Paasa Malar said...

வாங்க சாரல்...புனரமைப்பு தரும் புத்துணர்ச்சி அலாதிதான்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

போதும்ப்போ ந்னு கிளம்பிட்டிருந்தவரை பிடிச்சு வச்சிருக்கீங்க கேமிரால ..:)

பாச மலர் / Paasa Malar said...

வாங்க கயல்...

வேக வேகமா ஒடிப்போனவரை அப்புறம் எப்படிப் புடிக்கிறது...
ஏற்கனவே ரெண்டு மூணு தரம் இப்படி தப்பிச்சுப்போனவரை அன்னிக்குப் பிடிச்சாச்சு...