Wednesday, March 7, 2012

உத்தியோகம் பெண்கள் லட்சணம் - வித்யா

வல்லமையில் நேற்று வெளிவந்தது..


மழை வருமா என்று அண்ணாந்து பார்த்தபடியே கோரிப்பாளையம் பிராஞ்ச் பேங்க் வாசலை விட்டு வெளியே வந்தாள் சாரதா. நல்ல வேளை அதற்கான அறிகுறியே இல்லை. கைப்பேசி எடுத்து எண்களைச் சுழற்ற ஓட்டுநர், 

"என்னம்மா வண்டி எடுத்தாரட்டா" என்று கேட்டார்.

"வாப்பா..நான் வாசலுக்கு வந்துட்டேன்...லேட் பண்ணிராத.."

ஒரிரு நிமிடங்களில் கார் வர, விரைந்து சென்று ஏறியவள்.."மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போப்பா."

"சரிம்மா."

இந்நேரம் மாப்பிள்ளை வந்திருப்பாரா..இந்த வித்யா என்னதான் மனசில நெனச்சிட்டிருக்காளோ புரியலை..வித்யா சாரதாவின் மூத்த பெண். இரண்டாவது பெண் பூஜா 12ம் வகுப்பு படிக்கிறாள்.

கடந்த வருடம்தான் வித்யாவுக்கும், டாக்டர் அரவிந்துக்கும் திருமணம் நடந்தது. வித்யா பொறியியல் பட்டதாரி. விரும்பிப் படித்தாளேயொழிய, வேலைக்குச் செல்வதில் துளியும் விருப்பமில்லை. படித்த முடித்த கையுடன் நல்ல சம்பந்தம் வந்து விட கலயாணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தார்கள்.

ஆயிற்று. வருடம் ஒன்று ஆவதற்குள் என்னென்ன ப்ரச்னைகள்.....ப்ரச்னைகள் என்ன ப்ரச்சனைகள்...ஒரேயொரு தலைவலிதான்..டாக்டர் எப்போதும் பிஸி. இவளுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை..புதுக் கல்யாணக் கனவுகள்..கணவனுடன் அங்கே இங்கே சுற்ற வேண்டும் என்ற அவா..

திருச்சிதான் அவர்கள் சொந்த ஊர்; அங்கே தில்லை நகரில் சொந்தமாய் மருத்துவமனை வைத்துக் கொடுத்திருந்தார் அரவிந்துக்கு, கட்டடக் கான்டிராக்டரான அப்பா.

இத்தனைக்கும் மாமியார், நாத்தனார் பிடுங்கல் இல்லாத தனிக்குடித்தனம்தான்...

அரவிந்திடம் குறை சொல்ல ஒன்றுமில்லை...அவன் கல்யாணம் நிச்சயித்த போதே தன் பிஸியான, மூச்சு விட நேரம் இல்லாத வாழ்க்க்கையைப் பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் அவளிடம் சொல்லியிருந்தான். அப்போதெல்லாம் சரி சரி என்று தலையாட்டியவள், சாரதாவும், கணவர் ரமேஷ்பாபுவும் வரப்போகும் கஷ்டங்களை, சந்தோஷங்களை எடுத்துக்கூறும் போது பொறுமையாகக் கேட்டவள்...இப்போது எடுத்ததுக்கெல்லாம் குத்தம் சொல்கிறாள்..

"வேலைக்குப் போகச் சொல்றாரும்மா...அப்போதான் அவர் கஷ்டம் எனக்குப் புரியுமாம்..எனக்கும் மனசு அலைபாயாம இருக்குமாம்.."

"அதுல என்னம்மா தப்பு.."ரமேஷ் பாபு கேட்க..

"அது சரி..அம்மா வேலைக்குப் போனதால நானும், பூஜாவும் எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு எங்களுக்குத்தான் தெரியும். அதையே என் பிள்ளைகளும் படணுமா...அதும் க்ளினிக்கையே கட்டிக்கிட்டு எப்பவும் இவர் மாரடிக்கிற லட்சணத்துக்கு நானும் வேலைக்குப் போனா நல்லாத்தான் இருக்கும்."

"வெளில வேற எங்கயும் போகாட்டாப் பரவால்ல...மாப்பிள்ளை க்ளினிக்கத்தான கவனிச்சுக்கச் சொல்றார்..அதைச் செய்யலாமில்ல.."

"போங்கம்மா...அதுக்கு டாக்டர் பொண்ணாக் கட்டிருக்க வேண்டியதுதானே...ரெண்டு பேரும் வேல பிஸின்னு இருந்திருக்கலாமே..சரிக்குச் சரியா ஜாடிக்கேத்த மூடியா இருந்திருக்கும்...நீங்கதான் இந்த வயசுலயும் வேலக்குப் போயிக் கஷ்டப்படுறீங்க...வேலைய விட்டுட்டு அக்கடான்னு இருங்கன்னாக் கேக்குறீங்களா...அப்போதான் தேவையிருந்துச்சு..வேலைக்குப் போனீங்க..இப்ப என்ன தேவை...நிம்மதியா வீட்ல இல்லாம..இந்த வயசுலயும் உங்க அம்மா எப்படி உழைக்கிறாங்கன்னு உம் மாப்பிள்ளை நக்கல் பேச்சு வேற.."

அரவிந்த் நல்ல டாக்டர்னு பேரெடுத்தவன்..பணக்கார அப்பாக்குப் பொறந்து, நல்லாவும் படிச்சு வந்தவன். அவனிடம் வரும் நோயாளிகள், அந்த டெஸ்ட், இந்த ஸ்கேன்னு அங்கே இங்கே அலைய வேண்டியதில்லை. நவீன கருவிகள் எல்லாம் அங்கேயே இருந்தது....அவன் மட்டுமின்றி, கூட இருந்த 5 டாக்டர்களும் நல்ல பேர் எடுத்து விட, நோய்க்குத்தான் பஞ்சமா..நோயாளிகளுக்குதான் பஞ்சமா..

சின்னச் சின்னதாய்த் தொடங்கிய ப்ரச்னை, வித்யா வீட்டோடு வந்துவிடும் அளவுக்கு முற்றிவிட்டது..இரண்டு தரப்பிலும் சமாதானமும் செய்தாகிவிட்டது..சும்மா சொல்லக்கூடாது அவ்வளவு வேலையிலும், மாதம் இருமுறையாவது திருச்சியிலிருந்து வந்து அவளைச் சமாதானப் படுத்திக்கொண்டுதான் இருந்தான்..நோயாளியைக் குணப்படுத்த அவ்வபோது வரும் ஹவுஸ் விஸிட் போல..

இன்றும் அப்படி அவன் வருவதால்தான், அவர்கள் தனியாக இருக்கட்டும் என்று இவர்கள் ஒதுங்கி விட்டார்கள்..அலுவலகப் பணிக்காய் ரமேஷ்பாபு சென்னை சென்றுவிட, பூஜாவும் தோழி பிறந்த நாள் பார்ட்டிக்குப் போய் விட, இதோ சாரதா மீனாட்சி கோவில் தெப்பக்குளப் படிகளில்...

மணி 7 ஆக, மீண்டும் டிரைவருக்கு நம்பரைச் சுழற்றி, வீட்டுக்குக் கிளம்பினாள். வீடு பசுமலையில்..வரும் வழியெல்லாம் மனசு பதைத்தது. கணவனுக்கு போன் அடிக்க, அவர் எடுத்தால்தானே..."என்னதான் பிஸியோ..".பேங்கில் என்ன வேலையிருந்தாலும், வீட்டில் யாரிடமிருந்தாவது போன் வரும்போது, தலை போற வேலையாருந்தாலும், அட்லீஸ்ட்15 நிமிடம் கழித்தாவது போன் பேசி விடுவாள்..

"அது சரி..கணவன் என்ன..மாப்பிள்ளை என்ன..இந்த ஆண்கள் எல்லாரும் இப்படித்தான்..அய்யயோ..இது என்ன நானும் வித்யா மாதிரிப் புலம்புகிறேன்..."
இன்னிக்காவது மனசு மாறியிருப்பாளா..என்னாச்சோ தெரியலை என்று குழம்பியபடி வீட்டுக்குள் நுழைந்தாள்.

வித்யாவின் இறுகிய முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

"மாப்பிள்ளை போயிட்டாரா வித்யா.."

"ம்..ம்.."வேறு எதுவும் கேட்காதே என்கிற தோரணை...

"என்ன சொன்னார்.."

"வழக்கமான பல்லவிதான்..வீட்டுக்கு வான்னு...ஹாஸ்பிட்ல்ல மோகன்னு ஒரு டாக்டர்..அவங்க பொண்டாட்டியாம் போர் அடிக்குதுன்னு வேலைக்குப் போறாங்களாம்..இன்னோரு டாக்டரோட பொண்டாட்டி வீட்டுல இருந்தாலும் ஜாலியா இருக்காங்களாம்..இதேதான் புராணம்.."

வேலைக்குப் போகலாமா வேணாமான்னு ஒரு பொண்ணே முடிவெடுக்கிற சூழல் எத்தனை பேருக்கு வாய்க்கும்.....தன்னோட கொடுப்பினை இந்தப் பொண்ணுக்கு ஏன் புரிய மாட்டேங்குது..

இந்தப் பூஜா நாளைக்கு என்ன கூத்தடிக்கப் போறாளோ...கட்டுப்பாடாய்த்தானே வளர்த்தோம்..என்னதான் பண்றதோ..காபி கலக்க கிச்சனுக்குச் சென்றாள் சாரதா..

"யம்ம்மோவ்..."வேலைக்கார சுப்பம்மாவின் குரல்..

"வாங்க மகாராணி..என்ன ரெண்டு நாளா ஆளயே காணோம்..."காபியைக் கொஞ்ச நேரம் மறந்து விட்டு அவளிடம் பாயலானாள் சாரதா..

ஓங்கிக் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் சுப்பம்மா...திரும்பி முதுகைக் காண்பித்து, "அந்தப் பாழாப் போன மனுசன் குடிச்சுட்டு வந்து போட்டு அடியா அடிச்சுட்டான்...காய்ச்சல்ல ரெண்டு நாள் படுத்துட்டேன்..இன்னிக்காவது பொழுதோட வரணும்னு இருந்தேம்மா ...தூங்கிப்புட்டேன்...அதான் லேட்டாயிர்ச்சு.."

என்றவள் வித்யா பக்கம் திரும்பி
"என்ன பாப்பா மாப்பிள்ளை இன்னிக்கு வந்திருப்பாரே..கூடப் போகலியா..."

"ஆமா ..ஆமா..உனக்கெல்லாம் அறிவே இல்லியா...இப்படி அடி வாங்குற..இதெல்லாம் ஒரு பொழப்பு...ஆம்பளையா லட்சணமா உன் புருஷனை வேலைக்குப் போகச் சொல்லாம நீ சம்பாரிச்சுப் போடுற திமிர்...நீ வேலைக்கு வராம, நாலு நாள் பட்னி போடு..வயிறு காஞ்சா எல்லாம் வழிக்கு வந்து சேரும்.."

"என்னம்மா பண்றது..உத்யோகம் புருச லச்சணம்னு சொல்வாக..குடிக்குறதுதான் இந்தாளோட லச்சணமாருக்கு...அதெல்லாம் பாத்தா முடியுமா...அதெல்லாம் பாத்தா என் பொழப்பைப் பாக்க முடியுமாம்மா...நாலு நாள் அந்த ஆள மட்டுமா என் புள்ளயும்தான் பட்னியாக் கெடக்கும்.

பாவம்...என் மகன மாதிரித்தான் அந்தாளும்னு நெனச்சு சமாதானமாப் போக வேண்டியதுதான்..அதுவும்...தப்புச் செஞ்சுப்புட்டு அப்றம் தலையைச் சொறிஞ்சிட்டு வந்து நிக்கும்...எங்க ஆத்தா சொல்லும்...புருசன உன் புள்ள மாதிரி நெனச்சுக்கோ..தப்பு செஞ்ச புள்ளய அடிச்சாலும் பின்ன நம்மதான தாயி அணச்சுக்கிறோம்...புருசனயும் அப்படி மன்னிச்சுட்டா எல்லாம் சரியாப் போய்ரும் தாயி..நீங்க ஒரு புள்ள பெக்கும் போதுதான் பாப்பா உங்களுக்குப் புரியும்...

மாப்பிள்ளைத் தம்பி எவ்ள தங்கமான புள்ள...பொழுத வெட்டியாப் போக்குற மாதிரிக் கோச்சுக்கிறீங்களே பாப்பா..எத்தன உசுரைக் காப்பாத்துது..போன தரம் உங்க ஊருக்கு வந்தப்ப பாத்தேன்..ஆஸ்பத்திரில, எவ்வளவு பேரு வாழ்த்துறாங்க..பாவம் பாப்பா அந்தத் தம்பி...புரிஞ்சு பக்குவமா நடந்துக்காம ஏன் கஷ்டப்படுத்துறீக..

ஒங்க அம்மா அப்பாவும் பாவம்தானே பாப்பா..மனசுக்குள்ள மருகிப் போறாக..இத்தன நாள் சொல்லத் தயக்காமாருந்துச்சு..இன்னிக்கு என்னமோ மனசு தாங்கல..அதான் சொல்லிப்புட்டேன்.."

சுப்பம்மா சொல்லிக்கொண்டேசேலையை இழுத்துச் சொருகியபடி புழக்கடைப்பக்கம் போக, அடுக்களையில் இருந்து காபி குடித்தபடியே வந்த சாரதா, வித்யாவின் முகத்தில் என்றும் இல்லாத மென்மையும் தெளிவும் பொலிவது கண்டு, பெருமூச்செறிந்தாள்.

10 comments:

ஹுஸைனம்மா said...

இரு துருவங்கள்... பொழுது போவதற்காக மட்டுமே வேலைக்குச் செல்லவேண்டிய நிலையில் இருப்பது எவ்வளவு அதிர்ஷ்டமானது என்பது வித்யாவுக்கு இப்போதாவது புரிந்திருக்கும். மாறிவிடுவாள் இல்லையா. அப்படியே, சுப்பம்மாவும் கொஞ்சம் மாறனும் என்பது என் ஆசை. :-))))

நல்ல கதைங்க.

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஹுஸைனம்மா...

நன்றி..சுப்பம்மா போன்ற பெண்களும் மாறத்தான் வேண்டும்..வேலைக்குப் போகும் பெண்கள் அனுபவங்கள் பலரகமாக இருக்கும்..

இத்தலைப்பிலேயே பலதரப்பட்ட பெண்களின் அனுபவங்களைக் கதையாக வடிக்கும் எண்ணம் நேற்று தோன்றியது..

இதே தலைப்புடன் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரைச் சேர்த்து எழுத எண்ணியிருக்கிறேன்...சுப்பம்மாவின் கதையும் வரும்..

கோமதி அரசு said...

வித்யா மனம் மாறியது மகிழ்ச்சி.
வித்யா மாதிரி டாக்டரை கல்யாணம் செய்து கொண்டு அங்கே இங்கே கூட்டி போகவில்லை என்று தற்கொலை செய்து கொண்ட பெண்களும் உண்டு.

சுப்பம்மா போன்ற பெண்கள் நிறைய இருக்கிறார்கள், வேலை செய்யாத கணவருக்கும், குழந்தைகளுக்கும் சேர்த்து உடலை வருத்திக் கொண்டு.

கதை அருமையாக இருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை மலர். வித்யாவின் முகத்தில் வந்த தெளிவு அகத்திலும் வந்து பார்வை விரிவடையவும், வாழ்வை ஒப்பீடுகளால் ஒரு வட்டத்துக்குள் நிறுத்தக் கூடாது என்கிற புரிதலையும் தருமென நம்புவோம்.

தொடரவிருக்கும் கதையில் சுப்பம்மா என்ன செய்யப் போகிறாள் என அறியக் காத்திருக்கிறோம்.

ஜீவி said...

நல்ல கதை, பாசமலர்!

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிறைய இடங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இருந்தது. இயல்பான நடையில் கதை, கதையாக இருக்கிறது. அதான் இந்தக் கதையின் கூடுதல் சிறப்பே!

இதே கருத்தை வேறு ஒரு கோணத்தில், எனது பதிவின் சிறுகதைப் பகுதியில் 'பெண்மை வாழ்க' கதையில் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

http://jeeveesblog.blogspot.com/2008/01/blog-post_09.html

'மகளிர் சக்தி' அதைப் படித்துத் தங்கள் கருத்துக்களைச் சொன்னால் இன்னும் வேகமாக இதே கருத்தை
மகளிர் மத்தியில் பதிய வைக்கலாம்.

பாச மலர் / Paasa Malar said...

உண்மைதான் கோமதி மேடம்..தங்கள் பலம் தெரியாமல், தனக்கு இதுதான் வேண்டும் என்று ஆணித்தரமாகச் சொல்ல இயலாத நிலையில் தற்கொலை என்பது இவர்களுக்கு எளிதான முடிவாகி விடுகிறது...

சுப்பம்மா போன்றவர்களும் வேறு வழியில்லாமல் இப்படிப் போக வேண்டிய சூழல்..

தான் மாற வேண்டும் அல்லது தன் கணவனை மாற்ற் வேண்டும் என்ற எண்ணம் வலுவாக ஏற்படக் கூடிய வழியின்றி வறுமையின் வயிற்று பசியின் கொடுமைகளைத் தீர்க்கும் வழிகளுக்காக எதார்த்த நடை போட வேண்டியுள்ளது..உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடம் இன்றி..

பாச மலர் / Paasa Malar said...

வித்யாவின் ப்ரச்னைக்கான காரணத்தைத் தெளிவாக எழுதி விட்டீர்கள்...தன் அம்மா வேலைக்குப் போனதால் தான் இழந்தது அதிகம் என்ற நினைப்பிலிருந்து மீளாமல் அவள் அதை ஒப்பீடு செய்ததே இதற்குக் காரணம்...

சுப்பம்மாவின் கதையும் வரும்..அதற்கு முன் நந்தினி வருவாள்..

பாச மலர் / Paasa Malar said...

மிகவும் நன்றி ஜீவி...

உங்களின் அந்தக் கதையையும் முன் படித்திருக்கிறேன்..மீண்டும் ஒரு முறை படித்தேன்..பெண்கள் எப்போதும் தங்களைச் சுற்றிய வட்டங்களில்தான் வாழவேண்டியுள்ளது...சில சமயம் அந்த வட்டங்கள் பிறராலும், சில சமயங்களில் தமக்குத் தாமேயும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்..பெரும்பாலாக இப்படித்தான்..இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் விதிவிலக்கு இல்லை...

மகளிர் சக்திக்குத் தன்னைத் தானே புரிந்து கொன்டதன் விளைவுதான் ஓரளவு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன...இன்னும் மாற வேண்டும் மாறும் என நம்புவோம்...

உற்சாகப்படுத்தும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி..

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ! ;-)

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி..