Wednesday, March 21, 2012

குறளின் குரல் - 50

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் எண்: 693

போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கு மரிது.

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

விளக்கம்:

மன்னரிடமிருந்து / ஆட்சி செய்பவர்களிடமிருந்து / தமக்கு மேலுள்ள பதவியில் இருப்பவர்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள விரும்புபவர்கள், பொறுத்துக்கொள்ள முடியாத, மோசமான அரிய பிழைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

அப்படிப் பிழை செய்து விட்டால், மன்னர் / ஆட்சியாளர் / மேலாளரின் நம்பிக்கை குறைந்து சந்தேகப்பட நேரிடும். அப்படிச் சந்தேகம் வந்துவிட்டபிறகு அவரது சந்தேகத்தைத் தீர்ப்பது யார்க்கும் இயலாது.

------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 131. புலவி
குறள் எண்: 1302

உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றா னீள விடல்.

உப்பு அமைந்தற்றால் புலவி; அது, சிறிது
மிக்கற்றால் நீள விடல்.

விளக்கம்:

உணவுக்குச் சுவைசேர்க்க உப்பு உதவுவது போல, காதல் வாழ்வின் இன்பம் கூட்ட ஊடல் வழிவகுக்கும். எனினும், தொடர்ந்து  நீடித்துச் செல்லும் ஊடல், அளவுக்கு அதிகமான உப்பு போல, சுவையைக் கெடுக்கும்.

---------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 20. பயனில சொல்லாமை
குறள் எண்: 197


நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.


நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று
.

விளக்கம்:

பண்பு நிறைந்த சான்றோர் நயமற்ற, இனிமையற்ற சொற்களைப் பேசினாலும் பேசலாம். ஆனால் பயனற்ற சொற்களைப் பேசாமல் இருப்பது நன்மை தரும்.
--------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகார்ம்: 105. நல்குரவு
குறள் எண்: 1041


இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி
னின்மையே யின்னா தது.


இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின்
இன்மையே இன்னாதது.


விளக்கம்:

வறுமையைப் போலக் கொடுமையானது யாது?

வறுமை போலக் கொடியது வறுமையே அன்றி வேறேதும் இல்லை.
எந்த ஓர் உவமையையும் எடுத்துக்காட்டி, வறுமையை விளக்க இயலாது. உவமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில் வறுமை உள்ளதால், வேறு உவமையற்றுத் தனக்குத் தானே உவமையாயிற்று.

நல்குரவு - நுகர்வதற்கு ஏதுமின்றி வருந்தும் வறுமை நிலை

-----------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 103. குடி செயல் வகை
குறள் எண்: 1021


கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும்
பெருமையிற் பீடுடைய தில்.


'கருமம் செய' ஒருவன் 'கைதூவேன்' என்னும்
பெருமையின் பீடு உடையது இல்
.

விளக்கம்:

தம் குடியின் பெருமை உயரும் பொருட்டுப் பல கடமைகளை மேற்கொண்டிருக்கும் ஒருவன், தம் முயற்சிகளில் சோர்ந்து விடாமல், 'அத்தகைய முயற்சிகளைக் கைவிடமாட்டேன்' என்று தொடர்ந்து உழைத்திருப்பான். இதைவிட அவனுக்குப் பெருமை தரக்கூடியது வேறொன்றும் இல்லை.
-- ---------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 109. தகையணங்குறுத்தல்
குறள் எண்: 1088


ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினு
ணண்ணாரு முட்குமென் பீடு.


ஒள் நுதற்கு ஓஓ! உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு.


விளக்கம்:

போர்க்களத்தில் பகைவரும் கண்டு அஞ்சி நடுங்கும் பெருமை வாய்ந்தது என் வலிமை! ஆனால் அந்தோ! அந்த வலிமை முழுவதும் ஒளிபொருந்திய இவள் நெற்றியின் முன் தோற்றுப்போய் நிற்கிறது!

ஒள்நுதல் - ஒளி பொருந்திய நெற்றி
ஓ - மகிழ்ச்சி, இரக்கம் முதலியவற்றைத் தெரிவிக்கும் ஒலிக்குறிப்பு
உடைந்ததே - படை உடைதல் / சிதறி ஓடுதல் - போர்க்களச்சொல்
ஞாட்பு - போர், போர்க்களம், படை, களம், வலிமை, கூட்டம்
நண்ணார் - பகைவர்
உட்கு - அச்சம், நாணம், மதிப்பு, மிடுக்கு
பீடு - பெருமை, வலிமை, தாழ்வு, தரிசு நிலம், துன்பம், குறைவு, ஒப்பு

1 comment:

குமரன் (Kumaran) said...

மிக அருமையான குறட்பாக்கள். எளிமையான விளக்கங்கள். நன்றி.