Wednesday, March 21, 2012

நான் அறிந்த சிலம்பு - பகுதி 12

புகார்க்கண்டம் - 2. மனையறம் படுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே..73-90

கோவலன் பேசிய காதல் மொழிகள்

மாசு ஏதுமற்ற
பொன் போன்றவளே!   (பார்த்தல்)
இன்பம் ஊற்றெடுக்கும் 
வலம்புரி முத்தே!         (தொடுதல்)
குற்றமற்ற
மணப்பொருள் தரும்
தெய்வ மணமே!             (நுகர்தல்)
இனிமையான
கரும்பு போன்றவளே!  (சுவைத்தல்)
இன்மொழியில்
தேன் போன்றவளே!     (கேட்டறிதல்)

பெறுதற்கரிய
பெரும்பேறே!
இன்னுயிர் காக்கும்
அருமருந்தே!
பெருங்குடி வணிகனின்
பெருமை வாய்ந்த மகளே!

நின்னை
மலையிடைப் பிறவா
மாணிக்கம்தான் என்பேனா..
அலையிடைப் பிறவா
அமிழ்துதான் என்பேனா..
யாழிடைப் பிறவா
இசைதான் என்பேனா..

நீண்டு தாழ்ந்திறங்கும்
இருள் கூந்தற்பெண்ணே!
நின்னை
என்னென்று பாராட்டுவேன்!

இன்னும் இன்னும்
முடிவற்ற
பாராட்டுரைகள் பலப்பல
நித்தமும் நவின்று

பூமாலை அணிந்து
ஒளிர்கின்ற
கண்ணகி அவளுடன்

கொத்துமலர்
மாலையணிந்த
கோவலன் அவனும்

நித்தமும் களித்து
மனம் மலர்ந்து
வாழ்ந்து வந்த
ஒரு நாளில்..

தம்பதியரின் இனிய இல்லறம்

பண்புகள்
பெருமை சேர்த்திட
நீண்ட கூந்தலுடை
இல்லக்கிழத்தி
கோவலன் அன்னையும்,
அவன் தம் தந்தையும்
தம்பதியர் தமக்காய்த்
தனி இல்லறம்
சமைக்க விழைந்தனர்.

தம்பதியர் தாமும்
தம் கடமை
மறவாமல் தவறாமல்
சுற்றத்துடன் இயைந்து வாழ்தல்
துறவியர் பேணுதல்
விருந்தினர் உபசரித்தல்

இன்னும் இன்னும்
நற்செயல்கள்
பல புரிந்து

இல்லறவாழ்வில்
இனிதே ஈடுபட்டு
வாழ வேண்டி

தம் கண்களால்
திரு அறங்கள்
காணவேண்டி,

தாம் ஈட்டிய பொருட்களின்
பகுதி ஒன்றைப்  பிரித்தளித்து,
உரிமைச் சுற்றமாய்ப்
பணியாட்களும் பலர் அளித்துத்
தனிக் குடும்பம்தான்
அமைத்துக் கொடுத்தனரே..

கண்ணகியவள் பேணிய
இல்லறப் பாங்கினைக்
கண்டவர் பாராட்ட,

இவ்வினிய
இல்வாழ்க்கையில்
ஆண்டுகள் சிலதான்
கழிந்தனவே.

வல்லமையில் வெளிவந்தது.

8 comments:

கோபிநாத் said...

ம்ம்...;-)

ஜீவி said...

//தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னை...//
-- சிலம்பு
நீண்டு தாழ்ந்திறங்கும்
இருள் கூந்தற்பெண்ணே!
நின்னை

--இந்த இடம் சிலம்பில் எனக்கு மிகவும் பிடித்த இடம்.

நின்னை.. என்று கோவலன் சொல்ல வந்தது, பாதியில் நிற்கிறது. அடுத்து கோவலன் எதற்கு வருகிறான் என்பதை அடிகளார் நம் யூகத்திற்கு விட்டு விடுகிறார். அற்புதமான இடம்! 'நின்னை'.. என்கிற வார்த்தைக்குப் பிறகு, தொடராமல் விட்டு, அங்கு அவ்விருவரின் காதலை, உயிரை ஒளித்து வைத்திருக்கிறார் அடிகளார்!

இலக்கியங்கள்--அவற்றின் அமைதி, அமைப்பு,அலங்காரங்கள் அத்தனையும் மேனாட்டிலிருந்து இறக்குமதியானதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்..

எவ்வளவு காலத்திற்கு முன்னால், நம் காவிய மூலவர்கள் எழுதுவதில் எத்தனை சோதனைகள் செய்து பார்த்திருக்கிறார்கள் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை!

ராமலக்ஷ்மி said...

மிக அருமை. தொடருங்கள்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி....அதென்ன ம்ம்.....இனிய நினைவுகள்தானே...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜீவி....நீங்கள் குறிப்பிட்ட அந்த இரு வரிகள் நன்று...உங்கள் பின்னூட்டத்தைப் படித்ததும் இன்னும் கூட அழுத்தமாகச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது...

நம் இலக்கிய வேந்தர்கள் செய்த சத்தமற்ற சாதனைகளால்தான் இன்னும் உயிர்
வாழ்ந்துகொண்டு இருக்கின்றன இலக்கியங்கள்...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி...

சாந்தி மாரியப்பன் said...

சிலம்பாட்டம் அருமையா இருக்குங்க..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சாரல்..