Sunday, February 26, 2012

ரியாத்தில் நேற்று சுழல் மணற்காற்று

வித்தியாசமான, சட் சட்டென்று நாளுக்கு நாள் மாறும் காலநிலையையும், அதனால் ஏற்படும் புறத்தோற்றமும் ரியாத்தில் வசிப்பவர்களுக்குப் பழகிப்போன ஒன்று.

இரண்டு வருடம் முன்பு இது போல பகல் 11 மணி செம்படலமாய் விளங்கியது.
நேற்று காலநிலை அறிவிப்பில் மழை என்று குறிப்பிட்டிருந்தார்கள். காலை நேரத்தில் மழைக்கான அறிகுறியே இன்றி நல்ல வெய்யிலுடன் திகழ்ந்த சூழல் மாலை 4 மணி அளவில் எப்படி மாறியிருக்கிறது!

இப்படித் தொடங்கியது மாலை 3.30 மணியளவில்..




இறுதி நிலையில் இப்படி மாறியது...





செங்காற்று மணற்படலமாய் மாலை 4 மணியளவில்...









2 வருடங்களுக்கு முன்



காணொளித் தொகுப்பு



காணொளித் தொகுப்பு - 2  வருடங்களுக்கு முன்


முகப்புத்தகத்தில் படங்களைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி...

Mr. Ace Espiritu
Mr. Billu Roxz
Mr.Ernie Manuel Salvador Gaesin
Mr. Rajagiri Gazzaali
Mr. Imthiyas
Mr. Vetrivel

Sunday, February 19, 2012

விளைகள நீரும் விண்புல நீரும்






நிறமிகள் குறுகி
இதழ் வறண்ட
வெளிர் ரோஜாவொன்று
பச்சையம் வேண்டி
இலையிடம் முறையிட

அடுப்பிலுறங்கும் பூனையை
விரட்டியடிக்கும் முகமாய்
ஒளிச்சேர்க்கை வேண்டி,
சூரியக் கோட்டினைப்
பற்றிக் கொண்டு
சர சரவென்று கீழிறங்கிய
இலையின் நரம்புகளுக்குச்
செவிமடுத்து

விளைகள வெளியில்
நீர் தேடித்
திசையெங்கும்
அஞ்ஞான வேர்கள்
படர்ந்து பரவிய
அதே வேளை..

விண்புல நிலவில்
நீர் தேடிச்
சீறிப் பாய்கின்றதொரு
விஞ்ஞான எறிகணை.

நிறமிகள் - pigments
பச்சையம் - chlorophyll
ஒளிச்சேர்க்கை - photosynthesis
எறிகணை - rocket

குறளின் குரல் - 45

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 72. அவையறிதல்
குறள் எண்: 713


அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லாதூஉம் இல்.


அவை அறியார், சொல்லல் மேற்கொள்பவர்; சொல்லின்
வகை அறியார்; வல்லதூஉம் இல்.


விளக்கம்:

தம் விருப்பத்துக்கு மனம் போன போக்கில் பேசுபவர் அவையின் நிலையும், தன்மையும் அறியாதவர்; சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் வகையும் அறியாதவர்; வேறு எதிலும் கூட அவர் வல்லவராகத் திகழ்வதற்கு வாய்ப்பில்லை.
-------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 123. பொழுதுகண்டிரங்கல்
குறள் எண்: 1223


பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.


பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித்
துன்பம் வளர வரும்.


விளக்கம்:

அதிகமான பனிப்பொழிவால் நடுக்கம் காணும் மாலைப்பொழுது; பசலை நிறத்தது; என் காதலர் என்னுடன் இருந்த போது நடுக்கமுற்று, அந்நடுக்கத்தால் கறுத்துத் தோன்றியது. இன்று அவர் என்னைப் பிரிந்துள்ள நிலையில் இம்மாலைப்பொழுது என் முன் வந்து என் உயிரை வெறுக்கும் அளவு துன்பம் மேலும் மேலும் வளர்க்கிறது. அவரைப் பிரிந்துள்ள இந்நிலையில், என்னை நடுக்கம் காணவைத்துப் பசலையுற வைக்கிறது.

பைதல் -   குளிர், இளையது, துன்பம், சிறுவன்
துனி - வெறுப்பு, சினம், பிரிவு, துன்பம், அச்சம், நோய், குற்றம்,இடையூறு, ஆறு, வறுமை

----------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 624


மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.


மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.


விளக்கம்:

தடங்கல் பல நிறைந்துள்ள கரடு முரடான பாதையிலும், எடுத்துகொண்ட காரியத்தைக் கைவிடாது பாரவண்டியை இழுத்துக்கொண்டு செல்லும் எருது. அது போல, தமக்குத் துன்பம் நேர்ந்த போதும் எடுத்துக்கொண்ட காரியத்தில் உறுதியாய் இருந்து, இடையே கைவிடாது தொடர்ந்து அக்காரியத்தைச் செய்பவர் அதிக மனவலிமை உடையவர் ஆவர்.

அத்தகைய உறுதி உடையவரைத் துன்பம் துன்புறுத்தல் இயலாது. அவரைத் துன்புறுத்த இயலாது என்பதால் துன்பமே துன்பப் பட நேரிடும். அத்தகைய மனவலிமை உடையவரைக் கண்டு துன்பம் தானே துன்புற்று வருந்த நேரிடும்.

மடுத்த - செலுத்திய, சென்ற, உண்ட, சேர்த்த, மயக்கிய
பகடு - எருது, பெருமை, வலிமை, ஏர், ஆண்யானை, தெப்பம், ஓடம், சந்து

---------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 22. ஒப்புரவறிதல்
குறள் எண்: 211


கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு.


கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றும் கொல்லோ உலகு?


விளக்கம்:

கைம்மாறு எதுவும் வேண்டாமல் தன் கடமையைத் தானே செய்யும் மழை. அதற்கு இவ்வுலகத்தாராகிய நாம் என்ன கைம்மாறு செய்கிறோம்?

ஒப்புரவு என்பது கடமை. பிறர் தமக்கு என்ன கைம்மாறு செய்வார் என்று கருதாமல், தம்மால் ஆன உதவியைப் பிறருக்குச் செய்து, மழை போல் வாழ்வதே சிறப்பு.

ஒப்புரவு - பிறர்க்கு உதவுவது, தம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து கொடுப்பது
கடப்பாடு - கடமை, ஒப்புரவு, கொடை, முறைமை

---------------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 18. வெஃகாமை
குறள் எண்: 180


இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.


இறல் ஈனும் எண்ணாது வெஃகின்; விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.


விளக்கம்:

பின்னால் என்ன நடக்கப்போகிறது என்று எண்ணாமல், அடுத்தவர் பொருளைக் கவர்ந்து கொள்ள எண்ணினால், அது ஒருவருக்கு அழிவைத் தேடிக் கொடுக்கும். அடுத்தவர் பொருளைக் கவர்ந்து கொள்ளும் விருப்பமின்றி வாழ்தல், வெற்றியும் பெருமையும் தரும்.

இறல் - கெடுதி, ஒடிதல், இறுதி, கிளிஞ்சல்
வெஃகாமை - பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்
விறல் - வெற்றி, பெருமை, வலிமை,வீரம், சிறப்பு

-------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 56. கொடுங்கோன்மை
குறள் எண்: 557


துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு.


துளி இன்மை ஞாலத்திற்கு எற்று? அற்றே வேந்தன்
அளி இன்மை வாழும் உயிர்க்கு.


விளக்கம்:

உலகில் மழை இல்லாத போது உலகத்தவர் எவ்வளவு துன்பம் அனுபவிப்பார்களோ, அதைப் போலவே அருளும் கருணையும் இல்லாத அரசின் கீழ் வாழும் குடிமக்களும் அல்லல் படுவர்.

துளி - மழை, சொட்டு, திவலை, சிறிதளவு, நஞ்சு, பெண்மை
அளி - அருள், கருணை, அன்பு, ஆசை, வரவேற்பு, எளிமை, கொடை, வாய், வண்டு, கருந்தேனீ, தேன், மாட்டுக்காடி, கிராதி, மரவுரி மரம், கொடு, காப்பாற்று
--

குறளின் குரல் - 44

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 24. புகழ்
குறள் எண்: 238


வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
மெச்சம் பெறாஅ விடின்.


வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅ விடின்.


விளக்கம்:

புகழ்பட வாழ்வதே அனைவரின் கடமையாகும். புகழுடனான வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல் தவிர்ப்பது மடமையாகும். புகழ் இல்லாத வாழ்வு வாழ்பவரை உலகமும் பழித்து நிற்கும்.

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக்கூடியது புகழ் ஒன்று மட்டுமே. அத்தகைய புகழைப் பெறாவிட்டால் உலகத்தார்க்கு அது ஒன்றே தீராத பழியாகும். இசை பெறாமல் வாழ்வதே வசையாகும்.

இசை- புகழ்
வசை - பழி

-----

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 52. தெரிந்துவினையாடல்
குறள் எண்: 520


நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.


நாள் தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
கோடாமை கோடாது உலகு.


விளக்கம்:

தன் அரசில் பணி செய்யும் அதிகாரிகள் நடுவு நிலைமை தவறாமல் சீரிய முறையில் பணி செய்து வருவார்களாயின், உலகமும் ஒரு தவறும் செய்யாமல், செழிப்பு நீங்காது, சிறந்து விளங்கும். அத்தகைய அதிகாரிகள் தம் பணியைச் சிறப்பாகச் செய்கிறார்களா என்று அரசு ஆளும் தலைவன் ஒரு நாள் கூடத்தவறாமல் நாள் தோறும் ஆராய்ந்து, தானும் அது போன்ற நடுவு நிலையுடன் விளங்க வேண்டும்.

--------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 127. அவர்வயின் விதும்பல்
குறள் எண்: 1261


வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.


வாள் அற்றுப் புற்கென்ற கண்ணும்;அவர் சென்ற
நாள் ஒற்றித் தேய்ந்த விரல்.


விளக்கம்:

வருவார் வருவார் என்று அவர் சென்ற வழிபார்த்துக் காத்திருப்பதால் என் கண்களும் ஒளியிழந்து பூத்துப்போய்விட்டன. அவர் சென்ற நாள் முதல் சுவரில் கோடிட்டு வந்து, அக்கோடுகளைத் தொட்டுத் தொட்டு எண்ணுவதால் என் விரல்களும் தேய்ந்து போய்விட்டன.

வாள் -  ஒளி, கத்தி, கூர்மை, விளக்கம், புகழ், கலப்பை, உழுபடையின் கொழு, கயிறு, நீர்
அவர்வயின் விதும்பல் - பிரிந்து சென்ற காதலர் எப்போது வருவாரென எண்ணி, அவரைக் காணும் ஆசையால் துடித்தல்
----------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 7. மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் எண்: 692


மன்னர் விழைய விழையாமை மன்னரான்
மன்னிய வாக்கந் தரும்.


மன்னர் விழைய விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.


விளக்கம்:

ஆட்சி செய்பவர்களுடன் பழகுபவர்கள், ஆட்சியாளர்கள் விரும்புபவற்றை எல்லாம் விரும்பாமல் இருந்தால், அவர்கள் ஆட்சியாளர்கள் மூலம் என்றென்றும் நிலைக்கும் செல்வத்தைப் பெற்று வாழமுடியும்.
ஆட்சியாளர்கள் விரும்புவதெல்லாம் தமக்கும் வேண்டும் என்ற சின்னச் சின்ன ஆசைகளைத் தவிர்த்து விட்டால், ஆட்சியாளர்களின் நன்மதிப்பினைப் பெற்று, அவருக்கு உகந்தவராக விளங்கி, பெரிய பெரிய செல்வங்களை நிலையாக என்றென்றும் அடைந்திட முடியும்.
மன்னிய - மதிக்கத்தக்க
--------------------

பால்: பொருட்பால்
இயல்: கூழியல்
அதிகாரம்: 76. பொருள் செயல் வகை
குறள் எண்: 754


அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றிவந்த பொருள்.


அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள்.


விளக்கம்:

சேர்க்கும் வழிமுறை நன்கறிந்து, தீயன செய்யாமல் அறவழியில் ஈட்டிய பொருட்செல்வம், அதை ஈட்டியவனுக்கு அறவழியில் செல்வதற்குப் பயன்படும்; அறம் பல செய்வதற்கும் பயன்படும். நல்ல வழியில் வந்த செல்வம் நல்ல முறையில் செலவிடப்படும் என்பதால், இன்பத்தையும் தரும்.

--------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 09. விருந்தோம்பல்
குறள் எண்: 83


வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.


வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.


விளக்கம்:

நாள்தோறும் விருந்தினர் தன்னை நாடி வரும்போது,  மனம் கோணாமல் விருந்தோம்பி வாழ்பவனது வாழ்க்கையில் துன்பமும் வறுமையும் நேர்ந்து கெடுப்பதில்லை. எப்போதும் மகிழ்ச்சியே நிறைந்திருக்கும்.

Tuesday, February 14, 2012

மிடாஸின் காதல் தொடுகை


Midas /மிடாஸ் : The most famous King Midas is popularly remembered in Greek mythology for his ability to turn everything he touched into gold. This came to be called the Golden touch, or the Midas touch.


கற்களை எடுத்து வீசுவாயோ
அமிலத்தை அள்ளித் தெளிப்பாயோ

என்னை உரசிச் செல்லும் அவ்வலித்துளிகள்
சட்டென்று மொட்டவிழ்ந்து மலர்கின்றன
வாசம் வழியும் மலர்களாய்...

பதப்பட்ட கோபத்தை வெளிப்படுத்துவாயோ
நெஞ்சில் நிராகரிப்பை நிறைத்திருப்பாயோ

என்னைக் கடந்து செல்லும் அவ்வுணர்வுகள்
கவரி வீசிச் செல்லும் இதமான தென்றலாய்...

உன் எதிர் நடவடிக்கைகள் கடினமாய் இருக்குமோ
உன் இயல் நடவடிக்கைகள் கொடூரமாய் இருக்குமோ

என்னை  வருடிச் செல்லும் அத்தாக்குதல்கள்
உரு மாறுகின்றன இனிமையான முத்தங்களாய்...

நியாயமற்ற தண்டனைகள் உன்னிடமிருந்து கிடைக்குமோ
வார்த்தைகளற்ற உணர்வுகள் என் மனதில் தேங்குமோ

ஒன்றின் மேல் ஒன்றாய் அவை குவிந்து குவிந்து
பொதிந்து வைக்கப்படுகின்றன மதிப்பற்ற பொக்கிஷமாய்...

இதயம் நிறைந்த வெறுப்புதனை வெளிப்படுத்துவாயோ
பழ்வாங்கும் படலமாய் மௌனத்தை அனுசரிப்பாயோ

என்னைக் குத்திச் செல்லும் அவ்வலிகள்
மீண்டும் மீண்டும் மலர்ந்தெழுகின்றன
என்றென்றும் வாழ்ந்திருக்கும்
பசுமையான காதலாய்..

இந்த மாயப் பின்னல்
எங்ஙனம் மீட்டெடுக்கிறது
என் மனதின் தேக்கத்தை?!
மனம் சொருகி லயிக்கவைக்கும்
இந்தக் காதல் தாலாட்டுக்கு
என்னதான் ராகம்?!

உனக்குப் புரியவில்லையா
என் மிடாஸ்!

என்னை இயக்கிச் செல்லும்
என்றும் இயக்கிச் செல்லவிருக்கும்
என் மிடாஸ்!

உன் காதல் தொடுகை என்ற
வரம் வாய்க்கப்பெற்றிருக்கிறேன்!


என்னுடைய Rainbow Wings என்கிற வலைப்பூவில் உள்ள  Love Touch of my Midas என்ற கவிதையின் தமிழாக்க முயற்சி

Throw pieces of stone
Pour jars of acid

When they brush me
They bloom as fragrant flowers.

Brew anger
Rear rejection

When they fan me
They blow as gentle breeze..

React hard
Act violent

When they hit me
They turn to sweet kisses..

Unjust punishment I may get
Unspoken feelings I may store

When they pile up and up
They shape themselves as treasurable rewards..

Display heartful hatred
Vengeful silence

When they prick me
They flourish as everfresh eternal love...

What is this magical spell
That lures me out of depression
What is this magical tune
That lulls me with a love lullaby?

Don't you know my Midas?

I am blessed with
Love touch of my Midas..
Which keeps me going
Will keep me going..


Wednesday, February 8, 2012

பின்னோக்கி நகரும் நாட்கள்






சிம்னி விளக்கொளியில்
சிறுவரின் தேர்வுக்கான கல்வி
ஓயாமல் உழைத்த களைப்பில்
ஆழ்ந்து உறங்குகின்றன
கணினி ஐபேட் இத்யாதிகள்


அம்மிக்கல் ஆட்டுரலில்
சிறப்புச் சமையல்
விசேடச் சலுகையில்
சிலாகிக்கின்றன
நாவின் சுவைமொட்டுகள்

பேட்டரி வானொலியில்
ஐயாக்கள் செய்திச்செவிமடுப்பு
தொடரின் ஓட்டத்துடன்
தொடர்ந்து ஓடிய
அம்மணிகள் பரிதவிப்பு

வறுமையின் வாசங்கள்
பழகிக் கொண்டு
மெல்லப் பின்னோக்கி 
நகர்ந்து செல்கின்றன
நம் நாட்கள்!

குறளின் குரல் - 43


பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 630

இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்த
னொன்னார் விழையுஞ் சிறப்பு.

இன்னாமை இன்பம் எனக் கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.

விளக்கம்:

செயலாக்கத்துக்கான முயற்சிகளின் போது துன்பங்கள் வரும். ஆனாலும், தன் செயலைத் திறம்பட முடிக்க விழைந்து, அத்துன்பத்தையே இன்பமாகக் கருதும் மனப்பக்குவமும், ஊக்கமும் ஒருவர் அடையப் பெற்றால், பகைவரும் அவர்தம்மை விரும்பும்படியான சிறப்பை அடைவார்.

இன்னாமை - துன்பம், துயரம், தீமை
ஒன்னார் - பகைவர்

----------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 06. வாழ்க்கைத்துணைநலம்
குறள் எண்: 59



புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்மு
னேறுபோற் பீடு நடை.



புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.



விளக்கம்:


புகழை விளைவிக்கும், புகழை விரும்பிக் காக்கும் வாழ்க்கைத் துணையைப் பெறாதவர், மனம் குன்றிப்போய் இருப்பர்; ஆதலால், தம்மை இகழ்பவர்கள் முன் அவர்களால் ஏறு போல் பெருமிதமான நடை நடத்தல் இயலாது.
புரிந்த - விரும்பிய, தியானித்த, படைத்த, ஈன்ற, மேற்கொண்ட, அசைந்த, மிகுந்த
ஏறு - விலங்கின் ஆண், எருது, எருமைக்கடா, ஆண்சுறா, இடப ராசி, சங்கு, பன்றி, அசுவினி நட்சத்திரம், உயர்ச்சி, ,நந்திதேவர், தழும்பு, இவர் என்னும் ஏவல், ஏறு என்னும் ஏவல்

---------------
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 80. நட்பாராய்தல்
குறள் எண்: 798



உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
வல்லற்க ணாற்றறுப்பார் நட்பு.



உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.



விளக்கம்:


உள்ளம் குன்ற வைக்கும், ஊக்கம் மற்றும் உற்சாகம் குறைய வைக்கும் செயல்களை எண்ணிப்பார்க்காமல், அவற்றைச் செய்யாது தவிர்த்து விட வேண்டும். அதே போல் துன்பம் வந்தபோது நம்மைக் கைவிட்டுவிட்டு இடைவழியில் விலகிப்போகின்றவர்களின் நட்பையும் கொள்ளாது தவிர்த்து விட வேண்டும்.
உள்ளற்க - நினைக்காதிருக்க

-------------------



பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 95. மருந்து
குறள் எண்: 947



தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி
னோயள வின்றிப் படும்
.


தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின்,
நோய் அளவு இன்றிப் படும்.



விளக்கம்:


ஒருவன் தான் உண்ணும் உணவு செரிக்க வைக்கும் வயிற்றுத்தீயின் / பசித்தீயின் சரியான அளவை அறியாமல், தன் உடம்புக்கு ஏற்றதல்ல என்று அறிந்தும், அளவுக்கு அதிகமாக உண்டால், அவனுக்கு நோய்கள் அளவுக்கு அதிகமாக விளையும்.
--------------------



பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 31. வெகுளாமை
குறள் எண்: 301



செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.



செல் இடத்துக் காப்பான் சினம் காப்பான்; அல் இடத்துக்
காக்கின் என் காவாக்கால் என்?


விளக்கம்:

எங்கே தன் கோபம் செல்லுமோ / பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாமல் நிறை குணம் காப்பவனே சினத்தைக் காப்பவன் ஆவான். சினம் கொள்ள முடியாத / சினம் பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்துக் கொண்டால்தான் என்ன? காக்காவிட்டால்தான் என்ன? அது வெகுளாமை எனக் கொள்ளல் இயலாது.
---------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 112. நலம்புனைந்துரைத்தல்
குறள் எண்: 1118



மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்
காதலை வாழி மதி.



மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி, மதி.



விளக்கம்:


ஓ வான்மதியே! நீயும் என் காதலியின் முகம் ஒளி வீசுவது போல் பொலிவுடன் ஒளி வீசுவாய் என்றால், அவளைப் போலவே என் காதலுக்கு உரியவள் ஆகி விளங்குவாய்!
மதியின் முகத்தில் உள்ள களங்கம், தன் காதலியின் முகத்தில் இல்லை..களங்கமின்றி ஒளிவீசும் காதலியின் முகத்தை வர்ணிக்க வந்த தலைவன், நிலவு தன் முகத்தில் உள்ள களங்கத்துடன் ஒரு போதும் தலைவியிடம் போட்டியிட முடியாது என்ற தன் பெருமித உணர்வை மறைமுகமாக வெளிப்படுத்துகிறான்.



குறளின் குரல் - 42


பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:18. வெஃகாமை
குறள் எண்: 176

அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

அருள் வெஃகி, ஆற்றின்கண் நின்றான், பொருள் வெஃகிப்
பொல்லாத சூழ, கெடும்.

விளக்கம்:

அருள் என்ற அறத்தை விரும்பி, அதை அடைவதற்காக அறநெறிப் பாதையில் செல்பவன், பிறர்க்கு உரிமையான பொருட்செல்வத்துக்கு ஆசைப்பட்டு, அதைக் கவர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தீய வழியில் செல்ல முற்பட்டுத் திட்டங்கள் தீட்டுவானாயின், அவன் கெட்டழிந்து போவான்.

வெஃகாமை - அவாவின்மை, பிறர் பொருளை விரும்பாமை, வெறுப்பு
வெஃகி - மிகவும் விரும்பி, கவர்ந்து, பிறர் பொருள் மீது ஆசைப்பட்டு
ஆற்றின் - வழியின்

-----------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 57. வெரு வந்த செய்யாமை
குறள் எண்: 562



கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வெண்டு பவர்.



கடிது ஓச்சி, மெல்ல எறிக, நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர்.



விளக்கம்:


நெடுங்காலம் தம் ஆட்சி நிலைபெற்று விளங்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள், குற்றத்திற்கான தண்டனையை நிறைவேற்றும்போது, அளவுக்கதிகமாகத் தண்டிப்பது போல் கடுமையாகத் தொடங்கி, தண்டிக்கும்போது அளவில் அதிகமாகாமல், வரம்பு மீறாமல் தண்டிக்க வேண்டும். ஓங்கி அடிப்பது போலக் கையை ஓங்கி, பின் மெதுவாக அடித்துத் தண்டிப்பது போன்ற மென்மையான தன்மையுடையவர்களாய் இருக்க வேண்டும்.


வெரு வந்த செய்யாமை - ஆட்சியாளர் தம் அதிகாரத்தைச் செலுத்தும்போது, பிறர் அஞ்சி அதிர்ச்சியடையும்படியான செயல்களைச் செய்யாமை
ஓச்சி - எறிந்து, பாய்ந்து, செலுத்தி, உயர்த்தி, வீசி, ஓட்டி, தூண்டி


-------------



பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 21. தீவினையச்சம்
குறள் எண்: 209



தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.



தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்
துன்னற்க, தீவினைப் பால்.



விளக்கம்:


ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவன் என்றால், பிறர்க்குத் தீமை விளைவிக்கக்கூடிய தீய செயல்களை..அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும்....அத்தீய செயல்களிடத்து நெருங்காமல், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
துன்னற்க - நெருங்காதிருக்க


------------



பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 02. வான் சிறப்பு
குறள் எண்: 11



வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுரற் பாற்று.



வான் நின்று உலகம் வழங்கி வருதலால்,
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று.



விளக்கம்:


வானத்தில் இருந்து பொழியும் மழை உலகத்தை வாழ வைப்பதால், மழை அமிழ்தம் என்று உணரத்தக்கது. அமிழ்தம் என்பது சாவா மருந்து என்று சொல்லப்படுவது வழக்கம். மழையும் தவறாமல் பெய்து உயிர்களை உய்விக்கும் சாவா மருந்தாகும்.



------------



பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 110. குறிப்பறிதல்
குறள் எண்: 1092

கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
செம்பாக மன்று பெரிது.

கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று; பெரிது
.
விளக்கம்:
நான் பார்க்காதபோது, என்னைக் கள்ளத்தனமாக இவள் பார்க்கும் கடைக்கண் பார்வை, காதல் இன்பத்தின் சரிபாதி அளவு அன்று; அதை விடப் பெரிதாகும்.
செம்பாகம் - சரிபாதி
----------



பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 39. இறைமாட்சி
குறள் எண்: 384



அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.



அறன் இழுக்காது, அல்லவை நீக்கி, மறன் இழுக்கா
மானம் உடையது அரசு.



விளக்கம்:

தன் அறத்தில் தவறாமல் சிறந்து, தீங்குகள் நேராமல் தடுத்து, வீரத்தில் குறையேதும் நேராத வண்ணம் மானம் காத்து நடைமுறையில் வாழ்பவனே சிறந்த அரசனாவான்.
இழுக்கா - வழுவாத, தவறாத, தளராத