Wednesday, February 8, 2012

குறளின் குரல் - 43


பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 630

இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்த
னொன்னார் விழையுஞ் சிறப்பு.

இன்னாமை இன்பம் எனக் கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.

விளக்கம்:

செயலாக்கத்துக்கான முயற்சிகளின் போது துன்பங்கள் வரும். ஆனாலும், தன் செயலைத் திறம்பட முடிக்க விழைந்து, அத்துன்பத்தையே இன்பமாகக் கருதும் மனப்பக்குவமும், ஊக்கமும் ஒருவர் அடையப் பெற்றால், பகைவரும் அவர்தம்மை விரும்பும்படியான சிறப்பை அடைவார்.

இன்னாமை - துன்பம், துயரம், தீமை
ஒன்னார் - பகைவர்

----------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 06. வாழ்க்கைத்துணைநலம்
குறள் எண்: 59புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்மு
னேறுபோற் பீடு நடை.புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.விளக்கம்:


புகழை விளைவிக்கும், புகழை விரும்பிக் காக்கும் வாழ்க்கைத் துணையைப் பெறாதவர், மனம் குன்றிப்போய் இருப்பர்; ஆதலால், தம்மை இகழ்பவர்கள் முன் அவர்களால் ஏறு போல் பெருமிதமான நடை நடத்தல் இயலாது.
புரிந்த - விரும்பிய, தியானித்த, படைத்த, ஈன்ற, மேற்கொண்ட, அசைந்த, மிகுந்த
ஏறு - விலங்கின் ஆண், எருது, எருமைக்கடா, ஆண்சுறா, இடப ராசி, சங்கு, பன்றி, அசுவினி நட்சத்திரம், உயர்ச்சி, ,நந்திதேவர், தழும்பு, இவர் என்னும் ஏவல், ஏறு என்னும் ஏவல்

---------------
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 80. நட்பாராய்தல்
குறள் எண்: 798உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
வல்லற்க ணாற்றறுப்பார் நட்பு.உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.விளக்கம்:


உள்ளம் குன்ற வைக்கும், ஊக்கம் மற்றும் உற்சாகம் குறைய வைக்கும் செயல்களை எண்ணிப்பார்க்காமல், அவற்றைச் செய்யாது தவிர்த்து விட வேண்டும். அதே போல் துன்பம் வந்தபோது நம்மைக் கைவிட்டுவிட்டு இடைவழியில் விலகிப்போகின்றவர்களின் நட்பையும் கொள்ளாது தவிர்த்து விட வேண்டும்.
உள்ளற்க - நினைக்காதிருக்க

-------------------பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 95. மருந்து
குறள் எண்: 947தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி
னோயள வின்றிப் படும்
.


தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின்,
நோய் அளவு இன்றிப் படும்.விளக்கம்:


ஒருவன் தான் உண்ணும் உணவு செரிக்க வைக்கும் வயிற்றுத்தீயின் / பசித்தீயின் சரியான அளவை அறியாமல், தன் உடம்புக்கு ஏற்றதல்ல என்று அறிந்தும், அளவுக்கு அதிகமாக உண்டால், அவனுக்கு நோய்கள் அளவுக்கு அதிகமாக விளையும்.
--------------------பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 31. வெகுளாமை
குறள் எண்: 301செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.செல் இடத்துக் காப்பான் சினம் காப்பான்; அல் இடத்துக்
காக்கின் என் காவாக்கால் என்?


விளக்கம்:

எங்கே தன் கோபம் செல்லுமோ / பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாமல் நிறை குணம் காப்பவனே சினத்தைக் காப்பவன் ஆவான். சினம் கொள்ள முடியாத / சினம் பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்துக் கொண்டால்தான் என்ன? காக்காவிட்டால்தான் என்ன? அது வெகுளாமை எனக் கொள்ளல் இயலாது.
---------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 112. நலம்புனைந்துரைத்தல்
குறள் எண்: 1118மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்
காதலை வாழி மதி.மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி, மதி.விளக்கம்:


ஓ வான்மதியே! நீயும் என் காதலியின் முகம் ஒளி வீசுவது போல் பொலிவுடன் ஒளி வீசுவாய் என்றால், அவளைப் போலவே என் காதலுக்கு உரியவள் ஆகி விளங்குவாய்!
மதியின் முகத்தில் உள்ள களங்கம், தன் காதலியின் முகத்தில் இல்லை..களங்கமின்றி ஒளிவீசும் காதலியின் முகத்தை வர்ணிக்க வந்த தலைவன், நிலவு தன் முகத்தில் உள்ள களங்கத்துடன் ஒரு போதும் தலைவியிடம் போட்டியிட முடியாது என்ற தன் பெருமித உணர்வை மறைமுகமாக வெளிப்படுத்துகிறான்.1 comment:

கோபிநாத் said...

அனைத்தும் நன்று ;-)