Wednesday, February 8, 2012

குறளின் குரல் - 42


பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:18. வெஃகாமை
குறள் எண்: 176

அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

அருள் வெஃகி, ஆற்றின்கண் நின்றான், பொருள் வெஃகிப்
பொல்லாத சூழ, கெடும்.

விளக்கம்:

அருள் என்ற அறத்தை விரும்பி, அதை அடைவதற்காக அறநெறிப் பாதையில் செல்பவன், பிறர்க்கு உரிமையான பொருட்செல்வத்துக்கு ஆசைப்பட்டு, அதைக் கவர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தீய வழியில் செல்ல முற்பட்டுத் திட்டங்கள் தீட்டுவானாயின், அவன் கெட்டழிந்து போவான்.

வெஃகாமை - அவாவின்மை, பிறர் பொருளை விரும்பாமை, வெறுப்பு
வெஃகி - மிகவும் விரும்பி, கவர்ந்து, பிறர் பொருள் மீது ஆசைப்பட்டு
ஆற்றின் - வழியின்

-----------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 57. வெரு வந்த செய்யாமை
குறள் எண்: 562



கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வெண்டு பவர்.



கடிது ஓச்சி, மெல்ல எறிக, நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர்.



விளக்கம்:


நெடுங்காலம் தம் ஆட்சி நிலைபெற்று விளங்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள், குற்றத்திற்கான தண்டனையை நிறைவேற்றும்போது, அளவுக்கதிகமாகத் தண்டிப்பது போல் கடுமையாகத் தொடங்கி, தண்டிக்கும்போது அளவில் அதிகமாகாமல், வரம்பு மீறாமல் தண்டிக்க வேண்டும். ஓங்கி அடிப்பது போலக் கையை ஓங்கி, பின் மெதுவாக அடித்துத் தண்டிப்பது போன்ற மென்மையான தன்மையுடையவர்களாய் இருக்க வேண்டும்.


வெரு வந்த செய்யாமை - ஆட்சியாளர் தம் அதிகாரத்தைச் செலுத்தும்போது, பிறர் அஞ்சி அதிர்ச்சியடையும்படியான செயல்களைச் செய்யாமை
ஓச்சி - எறிந்து, பாய்ந்து, செலுத்தி, உயர்த்தி, வீசி, ஓட்டி, தூண்டி


-------------



பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 21. தீவினையச்சம்
குறள் எண்: 209



தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.



தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்
துன்னற்க, தீவினைப் பால்.



விளக்கம்:


ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவன் என்றால், பிறர்க்குத் தீமை விளைவிக்கக்கூடிய தீய செயல்களை..அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும்....அத்தீய செயல்களிடத்து நெருங்காமல், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
துன்னற்க - நெருங்காதிருக்க


------------



பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 02. வான் சிறப்பு
குறள் எண்: 11



வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுரற் பாற்று.



வான் நின்று உலகம் வழங்கி வருதலால்,
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று.



விளக்கம்:


வானத்தில் இருந்து பொழியும் மழை உலகத்தை வாழ வைப்பதால், மழை அமிழ்தம் என்று உணரத்தக்கது. அமிழ்தம் என்பது சாவா மருந்து என்று சொல்லப்படுவது வழக்கம். மழையும் தவறாமல் பெய்து உயிர்களை உய்விக்கும் சாவா மருந்தாகும்.



------------



பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 110. குறிப்பறிதல்
குறள் எண்: 1092

கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
செம்பாக மன்று பெரிது.

கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று; பெரிது
.
விளக்கம்:
நான் பார்க்காதபோது, என்னைக் கள்ளத்தனமாக இவள் பார்க்கும் கடைக்கண் பார்வை, காதல் இன்பத்தின் சரிபாதி அளவு அன்று; அதை விடப் பெரிதாகும்.
செம்பாகம் - சரிபாதி
----------



பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 39. இறைமாட்சி
குறள் எண்: 384



அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.



அறன் இழுக்காது, அல்லவை நீக்கி, மறன் இழுக்கா
மானம் உடையது அரசு.



விளக்கம்:

தன் அறத்தில் தவறாமல் சிறந்து, தீங்குகள் நேராமல் தடுத்து, வீரத்தில் குறையேதும் நேராத வண்ணம் மானம் காத்து நடைமுறையில் வாழ்பவனே சிறந்த அரசனாவான்.
இழுக்கா - வழுவாத, தவறாத, தளராத



No comments: