Sunday, February 19, 2012

குறளின் குரல் - 44

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 24. புகழ்
குறள் எண்: 238


வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
மெச்சம் பெறாஅ விடின்.


வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅ விடின்.


விளக்கம்:

புகழ்பட வாழ்வதே அனைவரின் கடமையாகும். புகழுடனான வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல் தவிர்ப்பது மடமையாகும். புகழ் இல்லாத வாழ்வு வாழ்பவரை உலகமும் பழித்து நிற்கும்.

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக்கூடியது புகழ் ஒன்று மட்டுமே. அத்தகைய புகழைப் பெறாவிட்டால் உலகத்தார்க்கு அது ஒன்றே தீராத பழியாகும். இசை பெறாமல் வாழ்வதே வசையாகும்.

இசை- புகழ்
வசை - பழி

-----

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 52. தெரிந்துவினையாடல்
குறள் எண்: 520


நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.


நாள் தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
கோடாமை கோடாது உலகு.


விளக்கம்:

தன் அரசில் பணி செய்யும் அதிகாரிகள் நடுவு நிலைமை தவறாமல் சீரிய முறையில் பணி செய்து வருவார்களாயின், உலகமும் ஒரு தவறும் செய்யாமல், செழிப்பு நீங்காது, சிறந்து விளங்கும். அத்தகைய அதிகாரிகள் தம் பணியைச் சிறப்பாகச் செய்கிறார்களா என்று அரசு ஆளும் தலைவன் ஒரு நாள் கூடத்தவறாமல் நாள் தோறும் ஆராய்ந்து, தானும் அது போன்ற நடுவு நிலையுடன் விளங்க வேண்டும்.

--------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 127. அவர்வயின் விதும்பல்
குறள் எண்: 1261


வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.


வாள் அற்றுப் புற்கென்ற கண்ணும்;அவர் சென்ற
நாள் ஒற்றித் தேய்ந்த விரல்.


விளக்கம்:

வருவார் வருவார் என்று அவர் சென்ற வழிபார்த்துக் காத்திருப்பதால் என் கண்களும் ஒளியிழந்து பூத்துப்போய்விட்டன. அவர் சென்ற நாள் முதல் சுவரில் கோடிட்டு வந்து, அக்கோடுகளைத் தொட்டுத் தொட்டு எண்ணுவதால் என் விரல்களும் தேய்ந்து போய்விட்டன.

வாள் -  ஒளி, கத்தி, கூர்மை, விளக்கம், புகழ், கலப்பை, உழுபடையின் கொழு, கயிறு, நீர்
அவர்வயின் விதும்பல் - பிரிந்து சென்ற காதலர் எப்போது வருவாரென எண்ணி, அவரைக் காணும் ஆசையால் துடித்தல்
----------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 7. மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் எண்: 692


மன்னர் விழைய விழையாமை மன்னரான்
மன்னிய வாக்கந் தரும்.


மன்னர் விழைய விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.


விளக்கம்:

ஆட்சி செய்பவர்களுடன் பழகுபவர்கள், ஆட்சியாளர்கள் விரும்புபவற்றை எல்லாம் விரும்பாமல் இருந்தால், அவர்கள் ஆட்சியாளர்கள் மூலம் என்றென்றும் நிலைக்கும் செல்வத்தைப் பெற்று வாழமுடியும்.
ஆட்சியாளர்கள் விரும்புவதெல்லாம் தமக்கும் வேண்டும் என்ற சின்னச் சின்ன ஆசைகளைத் தவிர்த்து விட்டால், ஆட்சியாளர்களின் நன்மதிப்பினைப் பெற்று, அவருக்கு உகந்தவராக விளங்கி, பெரிய பெரிய செல்வங்களை நிலையாக என்றென்றும் அடைந்திட முடியும்.
மன்னிய - மதிக்கத்தக்க
--------------------

பால்: பொருட்பால்
இயல்: கூழியல்
அதிகாரம்: 76. பொருள் செயல் வகை
குறள் எண்: 754


அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றிவந்த பொருள்.


அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள்.


விளக்கம்:

சேர்க்கும் வழிமுறை நன்கறிந்து, தீயன செய்யாமல் அறவழியில் ஈட்டிய பொருட்செல்வம், அதை ஈட்டியவனுக்கு அறவழியில் செல்வதற்குப் பயன்படும்; அறம் பல செய்வதற்கும் பயன்படும். நல்ல வழியில் வந்த செல்வம் நல்ல முறையில் செலவிடப்படும் என்பதால், இன்பத்தையும் தரும்.

--------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 09. விருந்தோம்பல்
குறள் எண்: 83


வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.


வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.


விளக்கம்:

நாள்தோறும் விருந்தினர் தன்னை நாடி வரும்போது,  மனம் கோணாமல் விருந்தோம்பி வாழ்பவனது வாழ்க்கையில் துன்பமும் வறுமையும் நேர்ந்து கெடுப்பதில்லை. எப்போதும் மகிழ்ச்சியே நிறைந்திருக்கும்.

No comments: