Sunday, February 19, 2012

குறளின் குரல் - 45

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 72. அவையறிதல்
குறள் எண்: 713


அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லாதூஉம் இல்.


அவை அறியார், சொல்லல் மேற்கொள்பவர்; சொல்லின்
வகை அறியார்; வல்லதூஉம் இல்.


விளக்கம்:

தம் விருப்பத்துக்கு மனம் போன போக்கில் பேசுபவர் அவையின் நிலையும், தன்மையும் அறியாதவர்; சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் வகையும் அறியாதவர்; வேறு எதிலும் கூட அவர் வல்லவராகத் திகழ்வதற்கு வாய்ப்பில்லை.
-------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 123. பொழுதுகண்டிரங்கல்
குறள் எண்: 1223


பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.


பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித்
துன்பம் வளர வரும்.


விளக்கம்:

அதிகமான பனிப்பொழிவால் நடுக்கம் காணும் மாலைப்பொழுது; பசலை நிறத்தது; என் காதலர் என்னுடன் இருந்த போது நடுக்கமுற்று, அந்நடுக்கத்தால் கறுத்துத் தோன்றியது. இன்று அவர் என்னைப் பிரிந்துள்ள நிலையில் இம்மாலைப்பொழுது என் முன் வந்து என் உயிரை வெறுக்கும் அளவு துன்பம் மேலும் மேலும் வளர்க்கிறது. அவரைப் பிரிந்துள்ள இந்நிலையில், என்னை நடுக்கம் காணவைத்துப் பசலையுற வைக்கிறது.

பைதல் -   குளிர், இளையது, துன்பம், சிறுவன்
துனி - வெறுப்பு, சினம், பிரிவு, துன்பம், அச்சம், நோய், குற்றம்,இடையூறு, ஆறு, வறுமை

----------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 624


மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.


மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.


விளக்கம்:

தடங்கல் பல நிறைந்துள்ள கரடு முரடான பாதையிலும், எடுத்துகொண்ட காரியத்தைக் கைவிடாது பாரவண்டியை இழுத்துக்கொண்டு செல்லும் எருது. அது போல, தமக்குத் துன்பம் நேர்ந்த போதும் எடுத்துக்கொண்ட காரியத்தில் உறுதியாய் இருந்து, இடையே கைவிடாது தொடர்ந்து அக்காரியத்தைச் செய்பவர் அதிக மனவலிமை உடையவர் ஆவர்.

அத்தகைய உறுதி உடையவரைத் துன்பம் துன்புறுத்தல் இயலாது. அவரைத் துன்புறுத்த இயலாது என்பதால் துன்பமே துன்பப் பட நேரிடும். அத்தகைய மனவலிமை உடையவரைக் கண்டு துன்பம் தானே துன்புற்று வருந்த நேரிடும்.

மடுத்த - செலுத்திய, சென்ற, உண்ட, சேர்த்த, மயக்கிய
பகடு - எருது, பெருமை, வலிமை, ஏர், ஆண்யானை, தெப்பம், ஓடம், சந்து

---------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 22. ஒப்புரவறிதல்
குறள் எண்: 211


கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு.


கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றும் கொல்லோ உலகு?


விளக்கம்:

கைம்மாறு எதுவும் வேண்டாமல் தன் கடமையைத் தானே செய்யும் மழை. அதற்கு இவ்வுலகத்தாராகிய நாம் என்ன கைம்மாறு செய்கிறோம்?

ஒப்புரவு என்பது கடமை. பிறர் தமக்கு என்ன கைம்மாறு செய்வார் என்று கருதாமல், தம்மால் ஆன உதவியைப் பிறருக்குச் செய்து, மழை போல் வாழ்வதே சிறப்பு.

ஒப்புரவு - பிறர்க்கு உதவுவது, தம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து கொடுப்பது
கடப்பாடு - கடமை, ஒப்புரவு, கொடை, முறைமை

---------------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 18. வெஃகாமை
குறள் எண்: 180


இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.


இறல் ஈனும் எண்ணாது வெஃகின்; விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.


விளக்கம்:

பின்னால் என்ன நடக்கப்போகிறது என்று எண்ணாமல், அடுத்தவர் பொருளைக் கவர்ந்து கொள்ள எண்ணினால், அது ஒருவருக்கு அழிவைத் தேடிக் கொடுக்கும். அடுத்தவர் பொருளைக் கவர்ந்து கொள்ளும் விருப்பமின்றி வாழ்தல், வெற்றியும் பெருமையும் தரும்.

இறல் - கெடுதி, ஒடிதல், இறுதி, கிளிஞ்சல்
வெஃகாமை - பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்
விறல் - வெற்றி, பெருமை, வலிமை,வீரம், சிறப்பு

-------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 56. கொடுங்கோன்மை
குறள் எண்: 557


துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு.


துளி இன்மை ஞாலத்திற்கு எற்று? அற்றே வேந்தன்
அளி இன்மை வாழும் உயிர்க்கு.


விளக்கம்:

உலகில் மழை இல்லாத போது உலகத்தவர் எவ்வளவு துன்பம் அனுபவிப்பார்களோ, அதைப் போலவே அருளும் கருணையும் இல்லாத அரசின் கீழ் வாழும் குடிமக்களும் அல்லல் படுவர்.

துளி - மழை, சொட்டு, திவலை, சிறிதளவு, நஞ்சு, பெண்மை
அளி - அருள், கருணை, அன்பு, ஆசை, வரவேற்பு, எளிமை, கொடை, வாய், வண்டு, கருந்தேனீ, தேன், மாட்டுக்காடி, கிராதி, மரவுரி மரம், கொடு, காப்பாற்று
--

No comments: