Wednesday, December 14, 2011

தாம்பத்யம் தகிடுதத்தம்

பல சமுதாயப் ப்ரச்னைகள் நமக்குச் சவாலாக இருப்பது கால காலமாகத் தொடர்ந்து வருவதுதான். அரசியல், ஊழல், மதம், இனம், பற்றாக்குறை, கல்வி, வேலைவாய்ப்பின்மை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

தனி ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று பிறழ்ந்து காணப்படும் நிலையும் நாம் நன்கறிவோம். ஆனால், சமீப காலமாக இது போன்ற பிறழ்வுகள்  பல தம்பதிகள் வாழ்வில் கண்கூடாகப் பார்த்து வருகிறேம்.

நம் சொந்தம், நட்பு வட்டம், தெரிந்தவர்கள் வாயிலாகக் கேட்பது என்பது சமீப காலமாக தம்பதியருக்குள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதாகும்.
 
  • பிள்ளை பெத்துக்க வீட்டுக்கு வந்தா...அப்புறம் புருஷன் வீட்டுக்குப் போகவே மாட்டேங்கிறா..
  • என்னை என் புருசன் கூட அனுப்பிச்ச உயிரோடவே பாக்க முடியாது.உங்களுக்கு நான் உயிரோட இருக்கணும்னா என்னை அங்கே போகச் சொல்லாதீங்க..
  • என் காலில் நிக்க என்னால் முடியும்...எனக்கு அந்த ஆள் தயவு தேவையில்லை.
  • என்னை அடிக்கக் கை ஓங்கிட்டு வர்ற அந்த ஆளுகூட நா குப்பை கொட்ட மாட்டேன்..உங்களுக்கு நான் இங்க இருப்பது கஷ்டமா இருந்தாச் சொல்லுங்க..நான் ஹாஸ்டலுக்குப் போறேன்..
  • அவளுக்கு என்ன அவ்ள திமிரு..புள்ளய வேணா வச்சுக்கட்டும்...வேணுங்கிறப்போ போய் நா பாத்துக்கிறேன்...
  • என்னை விட அதிகம சம்பாதிக்கிற திமிரு அவளுக்கு...அவள இங்க கூட்டிட்டு வந்தீங்கன்னா நா என் பிரண்ட் ரூமுக்கு போய்ருவேன்..

ப்ரச்னைகள் யாருக்குத்தான் இல்லை? அதை எதிர்கொள்கிற மனப்பான்மைதான் இன்றைய இளைய தலைமுறையினரிடம் குறைந்து கொண்டே வருவது போல் தோன்றுகிறது.


உண்மையான, தீவிரமான காரணங்களால் சகிப்புத்தன்மை இல்லாமல் பாதுகாப்பு கருதிப் பிரிதல் என்பது அவசியமான ஒன்றுதான்.

ஆனால் இன்று அன்றாட நிகழ்வுகளைக் கூடப் ப்ரச்னை என்று சொல்லி, என் பொம்மையை நீ உடைச்சிட்ட....உன் பொம்மையை நான் உடைக்காம விடமாட்டேன்..என்று குழந்தைத்தனமாக மனமுதிர்ச்சியில்லாமல் பிரிந்து வாழும் இவர்கள்....செய்வதறியாது திகைத்து நிற்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள்....

எல்லா வகையிலும் எதார்த்தவாதிகள், So what? என்று பேசும் தன்மை, பெற்றோரின் அளவுக்கதிகமான செல்லம் அல்லது கண்டிப்பு, நீயா நானா என்கிற அகங்காரம், தனியாக வாழும் பலரை முன்மாதிரியாகக் கொள்ளுதல் என்று பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதில் காதல் திருமணம் புரிந்தவர்கள்..பல நாள் பேசிப் புரிந்து கொண்டு பின் திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற பெயர் வேறு...மாமியார் மாமனார் இல்லாத் தனிக்குடித்தனம் செய்பவர்களுக்கும் ப்ரச்னைதான்...வரதட்சணைத் தொல்லை போன்ற காரணங்கள் கூட இல்லை..


திருமண வாழ்வுக்கு ஆதாரமான, அடித்தளமான சகிப்புத்தன்மை, புரிந்து கொள்ளுதல், நட்பு உணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான காதல் உணர்வு இல்லாமல் போனது....இப்படிக் காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்...


சமீபத்துத் தமிழகப் பயணத்தின் போது திருமணமான தம்பதிகளை வாழ்த்தலாம் என்று அவர்களைப் பற்றி விசாரித்த போது,  விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்,  தனியாகப் பிரிந்து வாழ்கிறார்கள் என்று கேள்விப்பட அதிர்ச்சியாக இருந்தது...நண்பர்கள், தெரிந்தவர்கள் யார் வழியில் பார்த்தாலும் இந்த ரீதியில் ஏதாவது ஒரு கதை...

பயமாய் இருக்கிறது!!

குறளின் குரல்- 39

பால்: பொருட்பால்

இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 72. அவையறிதல்

குறள் எண்: 720

அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த
ரலார்முற் கோட்டி கொளல்.


அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
அல்லார் முன் கோட்டி கொளல்.


விளக்கம்:

நல்ல சான்றோர்கள், அறிவுத்திறனில் தம் இனத்தவர் அல்லாத பிறர் கூடிய அவையின் முன், ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசுதல் எத்தகையது என்றால், கழிவுநீர் தேங்கியுள்ள தூய்மையற்ற முற்றத்தில் அமிழ்தினைக் கொண்டு வந்து கொட்டியதற்குச் சமமாகும்.

அவையில் உள்ளவர்களின் அறிவுத்திறனை அறிந்துகொண்டு, அவர்க்கு ஏற்பல்லாதவற்றைப் பேசாதிருத்தல் நலம்.

அங்கணம் - முற்றம், சேறு, சாக்கடை, இரு தூண் நடுவிடம், மதகு

உக்க - உகுத்த, சிந்திய, சிதறிய

கணத்தார் - கூட்டத்தார், ஊர்க்காரிய நிர்வாகிகள்

கோட்டி - பேச்சு, குழு, கூட்டம், சபை, துன்பம், பகடி, பைத்தியம், நிந்தை, அழகு, கோபுர வாயில், மனை வாயில், விகடக் கூத்து, ஒருவரோடு கூடியிருத்தல்
-------------------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: துறவறவியல்
அதிகாரம்: 27. தவம்
குறள் எண்: 261

உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு.


உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.

விளக்கம்:

பொதுவாக, உடலுக்கு ஏற்படக்கூடிய இடர்களைத் தாங்கும் சக்தி, உண்ணா நோன்பு, காலநிலையின் மாறுபாட்டைத் தாங்கும் சக்தி, செயற்கரிய வித்தைகள் செய்யும், செய்விக்கும் சக்தி..முதலானவற்றைத் தவம் என்று போற்றுவது வழக்கம்.

ஆனால், திருவள்ளுவரின் தவம் குறித்த விளக்கம் முற்றிலும் மாறுபடுகிறது.

ஒருவன் தனக்கு வரக்கூடிய துன்பங்களை, தன் முயற்சியின் திறத்தால் தாங்கி எதிர்நோக்கக்கூடிய வல்லமை, பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாத தன்மை, தனக்குத் துன்பம் செய்த உயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல் - இவைதான் தவத்திற்கு உரு / வடிவம் / இலக்கணம் ஆகும் என்று விளக்குகிறார்.

நோய் - துன்பம், வருத்தம், பிணி, குற்றம், அச்சம், நோவு

நோன்றல் - பொறுத்தல், தள்ளல், நிலை நிறுத்தல், துரத்தல், தவம் செய்தல்

உறுகண்- துன்பம், வறுமை, நோய்

உரு - வடிவம், உருவம், உடல், தெய்வத்திருமேனி, நிரம், அச்சம், பலமுறை சொல்லுகை, தோணி, எலுமிச்சை, இசைப்பாடல், உருவம் உள்ளது.
 
-----------------
 
பால்: பொருட்பால்

இயல்: படையியல்
அதிகாரம்: 78. படைச்செருக்கு
குறள் எண்: 774

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.


கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும்.


விளக்கம்:

போர்க்களத்தில், தன் கையில் இருந்த வேலைத் தன்னைத் தாக்க வந்த யானையின் மீது எறிந்து தாக்கிய வீரன், மேலும் அடுத்த தாக்குதல் பொருட்டு எறிவதற்காய் வேல் ஒன்றைத் தேடி நிற்க, தன் மேல் வீசப்பட்டுத் தன் மார்பில் பதிந்து கிடக்கும் வேலைக் கண்டு, தக்க சமயத்தில் தக்க கருவி கிடைத்துவிட்டதென்று எண்ணி, அதைப் பறித்துக் கையில் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியடைவான். மாபெரும் வீரனின் சிறப்பு இத்தகையது.

----------------
பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 81. பழைமை
குறள் எண்: 801

பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.


'பழைமை எனப்படுவது யாது?' எனின், யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

விளக்கம்:

'பழைமை' என்று சொல்லப்படுவது எது என்று கேட்டால், நீண்ட காலமாகப் பழகி வரும் நண்பர், நட்பின் உரிமை காரணமாக, ஏதாவது பிழையாகச் செய்து விட்டாலும் கூட, அதனைப் புரிந்து பொறுத்துக்கொண்டு, அந்த நட்பைக் கீழ்ப்படுத்தாமல் கைவிடாமல், சிதைக்காமல் தக்கவைத்துக்கொள்வதாகும்.

கிழமை - உரிமை, உறவு, நட்பு, ஆறாம் வேற்றுமைப்பொருல், குணம், முதுமை, வார நாள்

-------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 62. ஆள்வினையுடைமை
குறள் எண்: 611

அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.


அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

விளக்கம்:

எந்த ஒரு காரியத்தையும் 'இது செய்யக்கூடியதன்று; செய்ய இயலாது' என்று தம்மைத் தாமே தாழ்த்திக் கொண்டு மனம் தளராமல், சோர்ந்து விடாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஏன் என்றால் முயற்சியுடைமை அதற்கேற்ற பெருமையை தப்பாமல் தரும். எப்படிப்பட்ட செயலையும் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி உண்டாக்கும்.

அருமை - கடினம், இன்மை, எளிதில் கிடைக்காதது, பெருமை

அசாவாமை - தளராமை
------------------
 
பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 60. ஊக்கமுடைமை
குறள் எண்: 597


சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.


சிதைவிடத்து ஒல்கார், உரவோர்; புதை அம்பின்
பட்டுப் பாடு ஊன்றும் களிறு.


விளக்கம்:

தன் உடல் முழுவதும் துளைத்துப் புதையுண்ட அம்புகளால் தைக்கப்பட்டு வலியால் துன்பப்படும்போதும், யானை தன் மன உறுதியில் தளராது எதிர்த்து நின்று தன் பெருமையை நிலைநிறுத்தும். அது போல் தாம் எடுத்துக்கொண்ட முயற்சிக்குக் கேடு வந்த போதும் ஊக்கமுடையவர் தளராது நின்று, தமது பெருமையை நிலைநாட்டி நிற்பர்.

ஒல்கார் - தளராதவர்

உரவோர் - ஊக்கமுடையவர், வலிமையுடையவர், மூத்தோர்

களிறு - யானை

குறளின் குரல்- 38

பால்: அறத்துப்பால்

இயல்: ஊழ் இயல்
அதிகாரம்: 36. ஊழ்
குரள் எண்: 376

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா, தம.


பரியினும் ஆகாவாம், பால் அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம.

விளக்கம்:

ஒருவன் தனக்கு உரிமையில்லாதவற்றை எவ்வளவுதான் போற்றிப் பாதுகாத்தாலும், ஊழ் / விதி என்பதன் காரணமாக, அப்பொருள் அவனிடம் தங்காமல் போய்விடும். தனக்கு உரிமையானவற்றை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும், ஊழ் / விதி காரணமாய் அவை உரியவரை நீங்கிப் போகாது.
---------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 46. சிற்றினம் சேராமை
குறள் எண்: 454

மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு.


மனத்து உளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்து உளதாகும் அறிவு.

விளக்கம்:

ஒருவருடைய அறிவு, வெளிப்படையாகப் பார்க்கும் போது, அவரது மனதில் உள்ளது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் அவர் சேர்ந்த இனத்தைப் பொறுத்தே அவரது அறிவாற்றல் அமையும்.

அறிவாற்றல் அவரவர் மனதில் இருந்துதான் வெளிப்படுகிறது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். என்றாலும், அவர் சென்று சேரும் இனத்தின் குணநலத்தால், அவர் அறிவாற்றல் கூடவோ குறையவோ செய்கிறது என்பது எதார்த்தம். அவர் இனத்தைப் பொறுத்தே அவர் அறிவு அவர்க்கு நன்மையும், தீமையும் தரும்.

மனதில் உள்ள அறிவு, இப்படித்தான் இனம் சார்ந்த அறிவாகிறது.

இப்படித்தான், இயல்பாக நல்லறிவு இல்லாதவராய் இருந்தாலும், அவர் சேர்ந்த இனத்தின் நற்குணங்களால் அறிவாற்றல் பெற்று நன்மையடைவர்.

இன்னும் பலர் இயல்பாக நல்லறிவு பெற்றிருந்தாலும், அவர் சேர்ந்த இனத்தின் தீய தன்மையால் அறிவிழந்து மதிமயங்கி அவதிப்படுவர்.

நன்மைகள் அடைய நல்லவருடன் சேருங்கள்.

தீமைகள் அடையத் தீயவருடன் சேருங்கள்.

உங்கள் அறிவாற்றல் குறைந்திருந்தாலும், நல்லவர்களின் சேர்க்கையால் அது மிகுதியாகப் பெருகும்.

உங்கள் அறிவின் சிறப்புக்கூட, தீயவரின் சேர்க்கையால் ஒளி குன்றிப்போகும்.
---------------------------

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 94. சூது
குறள் எண்: 931

வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.


வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கியற்று.

விளக்கம்:

மீன் பிடிப்பதற்காகத் தூண்டிலில் வைக்கப்பட்ட இரை அளவில் மிகச் சிறியது, என்றாலும், அதனால் கவரப்பட்ட மீன்கள் தாமாகவே சென்று அந்த இரையை உண்ண எண்ண, தூண்டிலில் மாட்டிக்கொண்டு, தாமாகவே தம் முடிவைத் தேடிக் கொள்ளும்.

சூதாட்டத்தின் மூலம் சிறிய அளவில் பொருள் வந்தவுடனேயே, மேன்மேலும் அதைப் பெருக்க எண்ணி, அச்சூதாட்டத்திலேயே மீண்டும் மீண்டும் தன் உடைமைகளைப் பணயம் வைத்து ஆடுவார்கள். முடிவில் முற்றும் இழந்து அவதிப்படுவார்கள்.

சூதாட்ட வெற்றி, மீனுக்காகத் தூண்டிலின் இரும்பு முள்ளில் வைக்கப்பட்ட இரை போன்றது. ஆபத்து அறியாமல் இரைக்காகச் சென்று மாட்டிக்கொள்ளும் மீனைப் போல, பொருட்கள் அனைத்தையும் இழக்கப்போகும் ஆபத்து அறியாமல், மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று தவறாக எண்ணி உள்ள பொருள் அனைத்தையும் இழந்து நிற்பர்.

அதனால் வெற்றியே பெற்றாலும் கூடச் சூதாட்டத்தை விரும்பாமல் தவிர்க்க வேண்டும்.

பொன் - இரும்பு, தங்கம், மேருமலை, செல்வம், பொலிவு, பசலை, ஒளி, அழகு, ஏற்றம், திருமகள், வியாழன், சூரியன்
------------------------
 
பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 79. நட்பு
குறள் எண்: 781

செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.


செயற்கு அரிய யா உள, நட்பின்? அது போல்
வினைக்கு அரிய யா உள, காப்பு?

விளக்கம்:

நல்லதொரு நட்பினை உருவாக்கிக் கொள்தல் போன்ற செயற்கரிய சிறந்த செயல் உலகில் யாது உள்ளது? எந்த ஒரு செயலுமில்லை.

எந்த ஒரு காரியத்துக்கும் பாதுகாப்பாகவும், துணையாகவும் நிற்கக்கூடிய அத்தகைய நட்பைப் போன்ற சிறந்ததொரு, கிடைத்தற்கு அரியதொரு பாதுகாப்பு இவ்வுலகில் யாது உள்ளது? ஏதுமில்லை.

நல்லதொரு நட்பு வாய்ப்பதென்பது எளிதன்று. எல்லோர்க்கும் வாய்க்கக்கூடியதும் அன்று. அப்படி ஒரு நட்பு வாய்க்கையில், அது போல நம் காரியங்களுக்குப் பாதுகாப்பாக, துணையாக வரக்கூடியது, கைகொடுத்து உதவக்கூடியது வேறு ஏதுமில்லை.
-------------------------
 
பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 93. கள்ளுண்ணாமை
குறள் எண்: 929

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.


களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ் நீர்க்
குளித்தானைத் தீத் துரீஇயற்று.


விளக்கம்:

மது அருந்திக் களித்து மகிழ்ந்து பழகிப்போய்விட்ட ஒருவனை, 'அது தீயது' என்று பல்வேறு காரணங்களை எடுத்துக்காட்டித் தெளிவித்தல், குளத்தின் நீருக்கு உள்ளே போய் மூழ்கிக் குளிக்கின்றவனைத் தீப்பந்தம் ஏந்தித் தேடுவதற்கு ஒப்பானது.

குளத்தின் நீர்ப்பரப்பில் நின்று குளிப்பவனைத் தீப்பந்தம் பிடித்துத் தேடுதல் எளிது. ஆனால், குளத்திற்குள் மூழ்கிக் குளிப்பவனைத் தேடுகிறவனும் மூழ்கித் தேட வேண்டும். மூழ்கியவுடனேயே ஒளியிழந்து பயனற்றுப்போகும் தீப்பந்தம்.

நீருக்கு அடியில் தீப்பந்தத்தின் ஒளிமிகு சுடரும் செயலிழந்து போகும்;

போதைக்கு அடிமையானவன் முன் எடுத்துவைக்கப்படும் நியாயமான காரணங்களும் வலுவிழந்து போகும்.

மதுவின் பழக்கம் அளவுடன் இருக்கும் போது உரிய காரணங்கள் எடுத்துக்கூறித் திருத்துவது சற்றே எளிதான செயலாக இருக்கக் கூடும். ஆனால், அப்பழக்கத்தில் அளவுக்கு அதிகமாய் மூழ்கி, அந்த மகிழ்ச்சியில் / போதையில் திளைத்தவனுக்குக் கூறப்படும் அறிவுரையும், எடுத்துக்காட்டும் காரணங்களும் பயனற்றவை. மதுப்பழக்கம் அளவுக்கு அதிகமாகப் பழகிவிட்டால் திருத்துதல் மிகவும் கடினமாகும்.
---------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 622

வெள்ளத் தனைய யிடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும்.


வெள்ளத்து அனைய இடும்பை, அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

விளக்கம்:

வெள்ளம் போல் பெருகி வரும் துன்பம் அனைத்தும், அறிவுடைய ஒருவன் அத்துன்பங்களைக் கடத்தல் எளிது என்று மனதில் உறுதியுடன் நினைத்த உடனேயே அழிந்து போகும்.

அறிவுடையவன் மனதில் உறுதி உடையவன் ஆகிறான்; உறுதி கொண்டவுடன் நன்கு செயலாற்றும் தன்மை பெற்றுவிடுகிறான்; அத்தகையவனுக்குத் துன்பங்கள் ஒரு பொருட்டல்ல.

Sunday, December 11, 2011

சொல் மயக்கம்

வான வில்லின்
வண்ணங்கள் 
வகைபிரியும்
ஏதோவோர் இழை

நீலக்கடலும்
நீலவானும்
நீளச் சந்திக்கும் கோட்டின்
ஏதோவொரு புள்ளி

முதல் அலையை
முன்னேறும் அலை
முத்தமிட்டுச் செல்லும்
ஏதோவொரு துளி

உனக்குள்ளும்
எனக்குள்ளும்
வெடித்துச் சிதறும்
காதல் பூகம்பத்தின்
ஏதோவொரு துகள்

அனுபவங்களால் மட்டுமே
நுகரப்படுவதாய்...
புலன்களுகெல்லாம்
புலப்படாத புதிராய்..

சொல்லத் தெரியவில்லை;
சொல்லித் தெரிவதில்லை.

முயன்று தோற்று
முடங்கி மடங்கி
மயங்கிப் போகின்றன
சொற்கள்.

குறளின் குரல் - 37

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 59. ஒற்றாடல்
குறள் எண்: 588

ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ
ரொற்றினா லொற்றிக் கொளல்.


ஒற்று ஒற்றித் தந்த பொருளையும், மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி, கொளல்.

விளக்கம்:

ஓர் ஒற்றன் உளவறிந்து வந்து செய்தி கூறினாலும், அந்தச் செய்தியை இன்னுமோர் ஒற்றன் மூலம் அறியச் செய்து இரண்டு உளவையும் ஒப்பிட்டுப் பார்த்து, உண்மை அறிந்து கொள்ள வேண்டும்.

ஓர் ஒற்றன் செயலை இன்னுமோர் ஒற்றன் மூலம் கண்காணிக்கும் திறமை இருந்தால், உண்மைச் செய்திகளை உறுதிப் படுத்திக்கொள்ள முடியும். அது மட்டுமில்லாமல், தவறுகள் மற்றும் நம்பிக்கைத் துரோகங்கள் செய்யாமல் இருக்கும் பண்பை ஒற்றர்களிடம் உருவாக்கவும் முடியும்.

-----------------
பால்: பொருட்பால்

இயல்: குடியியல்
அதிகாரம்: 101. நன்றியில் செல்வம்
குறள் எண்: 1004


எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ வொருவரா
னச்சப் படாஅ தவன்.


எச்சம் என்று என் எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாதவன்.

விளக்கம்:

பிறர்க்கு உதவி செய்து வாழாதவனை எவரும் விரும்பமாட்டார்கள். இப்படி ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பின் எஞ்சி நிற்கும் என்று எதனை எண்ணுவானோ?

உதவி செய்து வாழும் போதுதான் அவன் பெற்ற செல்வம் பயனுள்ளதாகிறது. பிறர்க்கு உதவாமல் வாழும் போது அவனை எவரும் விரும்பும் வாய்ப்பில்லை; பிறர் விரும்பாத போது, ஒருவன் தான் இறந்த பின் எஞ்சி நிற்கும் என்று கருதக்கூடிய பொருளோ, புகழோ ஏதுமில்லை.

நன்றியில் செல்வம் - நன்றி இல் செல்வம் - ஈட்டியவருக்கும், பிறருக்கும் பயன்படாத செல்வம்

--------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 61. மடியின்மை
குறள் எண்: 604


குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து
மாண்ட வுஞற்றி லவர்க்கு.


குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இல் அவர்க்கு.

விளக்கம்:

சோம்பலில் திளைத்து மூழ்குவதால், ஒருவர் வாழ்க்கையில் முயற்சி செய்யும் தன்மை குன்றிப் போகும். இதனால் சிறப்பு / மாட்சிமை தரக்கூடிய உழைப்பினையும் ஒருவர் கைவிட நேரிடும். இந்த நிலையில், அவர் குடியும் அழிந்து போகும்; குற்றங்களும் பெருகிப்போகும்.

மடி - சோம்பல்

மாண்ட - மாட்சிமை பொருந்திய, இறந்த

உஞற்று - முயற்சி, ஊக்கம், வழக்கு, தூண்டு, தவறு, முயற்சி செய்
 
-----------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 21. தீவினையச்சம்
குறள் எண்: 208

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று.


தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று.

விளக்கம்:

தீய செயல்களைச் செய்தவர் அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க இயலாது. ஒருவன் மேற்கொண்ட தீய செயல்களால், அவனுக்கு நேரவிருக்கும் துன்பங்களில் இருந்து அவன் தப்பிக்கவே இயலாது.

இது எத்தகையது என்றால், ஒருவன் தன் நிழல் அவன் பாதங்களின் கீழேயே எப்போதும் தங்கும் தன்மையுடையது. அப்படி அவன் பாதங்களின் கீழ் உறையும் நிழல், சமயம் வரும்போதெல்லாம் தவறாமல் வெளிப்பட்டே தீரும்.

நிழல் பாதத்தின் அடியே மறையாது தங்கியிருப்பது போல, தீய செயலால் வரும் துன்பங்களும் விலகாது கூடவே வரும். சமயம் வரும்போது வெளிப்படும் நிழல் போல, தக்க சமயத்தில் தவிர்க்க முடியாத துன்பங்கள் தவறாமல் வந்து சேரும்.

வீயாது - தவறாது, விலகாது, விடாது
--------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 92

அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.


அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

விளக்கம்:

மனம் மகிழ்ந்து ஒருவருக்குப் பொருளை ஈவது நல்லதா? முகம் மலர்ந்து ஒருவரிடம் இன்சொல் பேசுவது நல்லதா?

பிறர்க்கு ஈவது என்பது தம்மிடம் இருக்கும் பொருளின் அளவைப் பொறுத்தே அமையக் கூடிய ஒரு சிறப்பாகும். பொருளின் இருப்பைப் பொறுத்து

ஈயும் தன்மை மற்றும் அளவு, சூழலுக்கேற்றாற் போல மாறக் கூடும்.

ஆனால், இன்சொல் என்பது எப்போதும் ஒருவரிடம் இயல்பாய் இருக்க வேண்டிய தன்மையாகும். இது எந்த நிலையிலும் மாறாத இயல்புடன் விளங்கும். எப்போதும் குன்றி விடாமல், இன்சொல் பேசும் தன்மை நிறைந்து இருக்கும்படி பார்த்துக் கொள்வது சிறப்பு.

எனவே இன்சொல் பேசுவது, ஈவதைக் காட்டிலும் சிறந்ததாகும்.
---------------

பால்: இன்பத்துப்பால்

இயல்: கற்பியல்
அதிகாரம்: 126. நிறையழிதல்
குறள் எண்: 1256

செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர்.


செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ
எற்று என்னை உற்ற துயர்?


விளக்கம்:

என் மனதுக்கு நெருக்கமானவர் என்னை பிரிந்து சென்ற பின்னும், அவர் பின் செல்ல விரும்புகிறது என் நெஞ்சம். என்னை வாட்டுகிறது இந்தப் பிரிவுத் துயர். இந்தத் துயரம் எத்தன்மையது? அந்தோ! மிகக் கொடியது. இரங்கத்தக்கது.

நிறையழிதல் - மனதின் இரகசியம் மறைத்து அலை பாயும் மனதை ஒரு நிலைப்படுத்துவது நிறை; பிரிவாற்றாமையால் மனதை நிலைப்படுத்தமுடியாமல், வெளிப்படையாகப் பேசுவது நிறையழிதல்.

எற்று - எத்தன்மையது

அரோ - அசைச்சொல்

சேறல் - செல்லுதல்

செற்று - நெருக்கம்; செற்றவர் - நெருங்கியவர்

குறளின் குரல் - 36

பால்: அறத்துப்பால்

இயல்: துறவறவியல்
அதிகாரம்: 28. கூடாவொழுக்கம்

குறள் எண்: 271


வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும்.


வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

விளக்கம்:

வஞ்சம் நிறைந்த மனம் உடையவர் உண்மையான நல்லொழுக்கத்துடன் செயல்பட இயலாது. அவர் பொய்யொழுக்கம் புறத்தே காண்பித்து ஒழுக்கசீலரைப் போல வேடம் தரிப்பர். அத்தகைய பொய்யர்களைப் பார்த்து அவர் உடம்பில் தங்கியிருக்கும் காற்று, நீர், தீ, நிலம், ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களும் தம்முள் சிரித்து நிற்கும்.
-----------------------

பால்: இன்பத்துப்பால்

இயல்: களவியல்
அதிகாரம்: 111. புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண்: 1101

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்தொடி கண்ணே யுள.


கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

விளக்கம்:

காண்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது, தீண்டுவது என்று வகைப்படுத்தப்பட்ட ஐம்புலன்களும் ஒளிபொருந்திய வளையல்கள் அணிந்துள்ள இப்பெண்ணிடம் ஒருங்கே நிறைந்துள்ளன. காதல் இன்பத்தின் முழுமை நிலை இங்கு விளக்கப்படுகிறது.

------------------

பால்: அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 03. நீத்தார் பெருமை
குறள் எண்: 25

ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா
னிந்திரனே சாலுங் கரி.


ஐந்து அவித்தான் ஆற்றல், அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி.

விளக்கம்:

(1) ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவனது பெருமை மிகவும் சிறந்தது. ஐம்புலன்களையும் அடக்கித் தன் தவ வலிமையால், அகன்ற வானின் கண் உறைபவர்க்குத் தலைவனாகிய இந்திரனே இதற்கு மிகச் சிறந்த சான்றாவான்.

ஒருவன் தன் தவத்தின் வலிமையால் இந்திர பதவி அடைவான் என்பது வழிவழியாக வரும் நம்பிக்கையாகும்.

அகல் விசும்புளார் கோமான் - அகன்ற வானத்தின் கண் உறைகின்றவர்க்கு அரசன் / தலைவன்

(2) ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவனது பெருமை மிகவும் சிறந்தது. ஐம்புலன்களையும் அடக்கித் தன் தவ வலிமையால், அகன்ற வானம் போன்று, பரந்து விரிந்த பெருமை வாய்ந்த இந்திரனே இதற்கு மிகச் சிறந்த சான்றாவான்.

அகல் விசும்புளார் கோமான் - அகன்ற வானம் போன்று பரந்து விரிந்த புகழ் உள்ளவன்; பெருமையில் சிறந்து விளங்குபவன்

தந்நலம் நீத்தாரின் பெருமைக்கு மிகவும் முக்கியமானது, ஐம்புலன்களை அடக்கியாளும் அவர்களது ஆற்றலே என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

விசும்பு - வானம், தேவலோகம், மேகம், செருக்கு, வீம்பு, திசை

கோமான் - பெருமையிற் சிறந்தவன், அரசன், மூத்தோன், குரு

கரி - சான்று, சாட்சியம், நஞ்சு, மிளகு, அடுப்புக் கரி, யானை, நிலக்கரி, கரிந்தது, பெண்கழுதை, மரவைரம், விருந்தினன், பயிர் தீய்தல்

------------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 08. அன்புடைமை
குறள் எண்: 79

புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு.


புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு?


விளக்கம்:

உடம்பின் அகத்தே உறையும் உறுப்பான அன்பு என்பது சரிவர இயங்காத போது, புற உறுப்புகள் கை, கால் முதலியன சரிவர இயங்கிப் பயன் ஒன்றும் இல்லை. அகத்து உறுப்பான அன்பு புற உறுப்புகளை இயக்கினால்தான் பயன் பெற முடியும்.

யாக்கை - உடம்பு, கட்டுகை
----------------
 
பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 39. இறைமாட்சி
குறள் எண்: 389

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு.


செவி கைப்பச் சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.


விளக்கம்:

அமைச்சர்கள், மக்கள் மற்றும் கடிந்து பேசும் பெரியோர் - இவர்களது சொற்கள் செவிகளையே புண்படுத்தக்கூடியவை என்றாலும், அத்தகைய சொற்கள் தனக்கு ஏற்றவை அல்ல என்றாலும், அவற்றைப் பொறுமையோடு கேட்கும் பண்புடைய வேந்தனின் வெண்கொற்றக்குடையின் / ஆட்சியின் கீழ் இந்த உலகமே நீண்ட நாள் தங்கி மகிழும் வாய்ப்பினைப் பெறும்.

கவிகை - குடை, வளைவு, நன்மை தீமை, தியாகம்

Sunday, December 4, 2011

THE DIRTY PICTURE

எண்பதுகளில் சில்க் புகழின் உச்சகட்டத்தில் இருந்து, பின் 1996 ல்

இறந்த போது ...ஊடக வளர்ச்சி தற்காலம் போல இல்லாத நிலையில், கொலையா தற்கொலையா..தாடிக்காரர் காரணமா என்ற கேள்விகள் எழ விடைகள் கிடைக்கவில்லை. நடிகை என்றாலே தற்கொலை முடிவு என்பதுதானே என்று போய்விட்டது இதுவும் அப்போது.


கவர்ச்சி நடிகை என்றாலும் பெண்களையும் அக்காலத்தில் கவர்ந்தவர் சில்க் என்பதால் என் தோழிகள் முதல் எங்களின் அம்மாக்கள் வரை அப்போது அவர் மரணம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.

இன்று இந்தப் படம் அவர் வாழ்க்கை வரலாறு அல்ல என்றே கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும், இப்படத்தைப் பார்க்கும்போது இவை இவை காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று சில விடைகள் கிடைக்கின்றன.

தோல்வியைத் தாங்க இயலாமை, போட்டி நடிகையின் வரவு, யாருமற்ற தனிமை, கடன் தொல்லை ..பல காரணங்களைத் திரைப்படம் வாயிலாகப் பார்க்கும்போது அவர் மரணம் தற்கொலைதான், கொலையாக இருந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

வித்யா பாலன் தோற்றத்தில் சில்க் பக்கம் கூட நெருங்க முடியவில்லை..என்ற போதும் நடிப்பில் தன் முழுத்திறமையும் பதித்துள்ளார். 'என்னுடன் பேசுவதற்கு யாருமில்லையா' என்று கதறுகிற போதும், பத்திரிகையாளர் வீட்டின் வெளியே ஆட்டம் போடும் போதும், நசுருதீன் ஷாவின் குதர்க்கமான பேச்சுக்குப் பதிலாகத்  தன்வலியைத் தைரியமாக வெளிப்படுத்தும் மன உறுதியிலும், 'நான் சில்க்' என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் போதும்......மிக நேர்த்தியான, அழுத்தமான முகபாவங்கள்..

மறைந்த சில்க் வாழ்க்கையின் பல தெளிவான கோணங்கள்....சன்னல் வழியாகக் குதித்துத் தப்பிக்கும் துணிச்சல் முதல்...தோல்வியால் துவண்டு கோழைத்தனமாக முடிவெடுக்கும் வரை... மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு சிறப்புப் பாராட்டுகள்...

இந்தப் படம் தந்த பாதிப்பையும் சில்க் என்ற பெண்ணின் பாத்திரத்தையும் மறப்பதற்குச் சில நாட்கள் ஆகும்.

குறளின் குரல் - 35

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 54. பொச்சாவாமை / கடமையை மறக்கும் தன்மை
குறள் எண்: 531

இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு.


இறந்த வெகுளியின் தீதே - சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.


விளக்கம்:

அளவுக்கு மீறிய கோபம் மிகவும் தீதான ஒன்றாகும். அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்து, தன்னிலை மறந்து, தன் கடமைகள் மறந்து செயலற்று இருப்பது கொடுஞ்சினத்தைக் காட்டிலும் தீயதாகும்.

----------------

பால்: பொருட்பால்

இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 67. வினைத் திட்பம்
குறள் எண்: 669


துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
யின்பம் பயக்கும் வினை.


துன்பம் வரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை.


விளக்கம்:

ஒரு செயலை மேற்கொள்ளும் போது துன்பங்கள் அதிகமாக வந்தாலும், அதனால் மனம் தளர்ந்து விடக்கூடாது. துணிவுடன் செயல்பட்டுக் கடினமாக உழைத்து முயன்றால், முடிவில் இன்பம் என்பது தவறாமல் வந்து சேரும்.
----------------------
பால்: பொருட்பால்

இயல்: அரணியல்
அதிகாரம்: 75. அரண்
குறள் எண்: 744

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
யூக்க மழிப்ப தரண்.


சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.


விளக்கம்:

காவல் செய்ய வேண்டிய வாயில் முதலான இடங்கள் சிறிய பரப்பளவில் அமைந்து, சிறிதளவு முயற்சியுடன் காக்கக்கூடியதாய் இருக்க வேண்டும். உட்பகுதியோ பரப்பளவில் அகன்று இருக்க வேண்டும். நெருங்கி வந்து பகைவர் முற்றுகையிட அஞ்சும் வண்ணம் பகைவரின் ஊக்கத்தை அழித்து, அவர்களின் மலைப்பைப் பெருக்கும் வண்ணம் பரந்ததாய் அமைய வேண்டும். அத்தகைய அரணே சிறந்ததாகும்.
----------------------------

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 06. வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 53

இல்லதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ
னில்லவள் மாணாக் கடை.


இல்லது என், இல்லவள் மாண்பு ஆனால்? உள்ளது என்,
இல்லவள் மாணாக் கடை?


விளக்கம்:

இல்லறத்தில் இல்லாளின் பண்புகள் மிகவும் முக்கியமானவை. அவள் மாண்பு மிக்கவளாய் இருந்தால் இல்லாதது என்று எதுவும் இல்லை; அவளிடம் மாட்சிமைப் பண்புகள் இல்லையெனில் உள்ளது என்று எதுவும் இல்லை.

------------------

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 08. அன்புடைமை
குறள் எண்: 74

அன்பீனு மார்வ முடைமை யதுவீனும்

நண்பென்னு நாடாச் சிறப்பு.


அன்பு ஈனும் ஆர்வம் உடைமை; அது ஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.


விளக்கம்:

குடும்பம், உறவு மற்றும் பிறரிடம் கொள்ளும் அன்பு, அனைவரையும் விரும்பத்தக்க பண்பை உள்ளத்தில் உருவாக்கும்; அதுவே அனைவரையும் நட்பாக்கிக் கொள்ளும் பெருஞ்சிறப்பையும் உண்டாக்கும்.

----------------

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 14. ஒழுக்கமுடைமை
குறள் எண்: 132

பரிந்தோம்பிக் காக்க வொழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினு மஃதே துணை.


பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித்
தேரினும் அஃதே துணை.

விளக்கம்:

எத்தகைய துன்பம் வந்து அதனால் வருந்த நேரிட்டாலும், அத்தனை துன்பத்தையும் பொறுத்துக்கொண்டு எப்பாடு பட்டாவது ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும். எந்தெந்த வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும், எப்போதும் மிகவும் சிறந்த துணையாக வருவது ஒழுக்கம் என்பதால் அதனை எப்பாடு பட்டாவது போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும்.

குறளின் குரல் - 34

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 60. ஊக்கமுடைமை
குறள் எண்: 598

உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து
வள்ளிய மென்னுஞ் செருக்கு.


உள்ளம் இலாதவர் எய்தார் 'உலகத்து
வள்ளியம்' என்னும் செருக்கு.

விளக்கம்:

ஊக்கம் இல்லாதவர்கள், 'பிறர்க்கு உதவும் வள்ளல் தன்மை உடையவர் யாம்' என்னும் பெருமையான மன உணர்வைப் பெறுதல் இயலாது.

ஊக்கம் இல்லாத காரணத்தால், பொருள் ஈட்டும் தன்மை குன்றியே காணப்படுவார்கள். அத்தகையவர்கள் பொருள் ஈட்டி, தானும் அனுபவித்து, அடுத்தவர்க்கும் கொடுத்து உதவுவது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.

உள்ளம் - ஊக்கம், முயற்சி, மனம், உள்ளக்கருத்து, ஞானம், ஆன்மா

வள்ளியம் - ஈகைக்குணம், ஊதுகுழல், மரக்கலம், மெழுகு, மிளகு
------------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 45. பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்: 442

உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

உற்ற நோய் நீக்கி, உறாஅமை முன் காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

விளக்கம்:

ஒருவர்க்கு நேர்ந்துள்ள துன்பத்தைப் போக்கி, இனிமேல் வரக்கூடிய துன்பங்களையும் முன்கூட்டியே அறிந்துகொண்டு, அத்துன்பங்கள் நேராமல் காக்க வல்ல தன்மையுடைய பெரியவர்களைப் போற்றி, அவர்களை நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.

உறாஅமை - இசைநிறையளபெடை
-----------------


பால்: அறத்துப்பால்

இயல்: துறவறவியல்
அதிகாரம்: 37. அவாவறுத்தல்
குறள் எண்: 368


அவாவிலார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்
றவாஅது மேன்மேல் வரும்.


அவா இலார்க்கு இல்லாகும் துன்பம்; அஃது உண்டேல்,
தவாஅது மேன்மேல் வரும்.


விளக்கம்:

ஆசைகள் இல்லாதவர்களுக்குத் துன்பம் உண்டாவதில்லை; ஆசைகள் உள்ளவர்க்கு, இடைவிடாது, முடிவில்லாது துன்பம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

---------------

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 07. மக்கட்பேறு
குறள் எண்: 68


தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.


தம்மின், தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது.


விளக்கம்:

தம்மை விடத் தம் பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்குவது, அப்பிள்ளைகளின் பெற்றோருக்கு மட்டுமேயன்றி, உலகில் உள்ள அனைவருக்கும் இனிமை தரக்கூடிய ஒன்றாகும்.

-------------------

பால்: இன்பத்துப்பால்

இயல்: கற்பியல்
அதிகாரம்: 125. நெஞ்சொடு கிளத்தல்
குறள் எண்: 1247

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு.


காமம் விடு, ஒன்றோ; நாண் விடு - நல் நெஞ்சே
யானோ பொறேன் இவ்விரண்டு.

விளக்கம்:

என் நல்ல நெஞ்சமே! காமம், நாணம் இவற்றுள் ஒன்றை விட்டுவிடு..ஒன்று காமத்தை விட்டுவிடு..அல்லது அதை வெளிப்படையாக என் காதலரிடம் கூற முடியாமல் தடுக்கும் நாணத்தை விட்டுவிடு..இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை..எனவே இரண்டையும் ஒரே சமயத்தில் பொறுத்துக்கொள்ளும் திறம் எனக்கில்லை.
------------------------

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 95. மருந்து
குறள் எண்: 941


மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர்
வளிமுதலா லெண்ணிய மூன்று.


மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று.


விளக்கம்:

மருத்துவக் குறிப்புகள் அடங்கிய நூல்கள் எழுதியவர்கள், வளியை முதலாகாக் கொண்டு எண்ணிய வாதம், பித்தம், சிலேட்டுமம் என்ற மூன்றும் தன் அளவில் குறைந்தாலும், மிகுந்தாலும் உடலில் நோய் ஏற்படும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

வளி - காற்று, வாதம்
பித்தம் - பித்த நீர், சூடு
சிலேட்டுமம் - கபம், குளிர்ச்சி