Sunday, December 11, 2011

குறளின் குரல் - 36

பால்: அறத்துப்பால்

இயல்: துறவறவியல்
அதிகாரம்: 28. கூடாவொழுக்கம்

குறள் எண்: 271


வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும்.


வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

விளக்கம்:

வஞ்சம் நிறைந்த மனம் உடையவர் உண்மையான நல்லொழுக்கத்துடன் செயல்பட இயலாது. அவர் பொய்யொழுக்கம் புறத்தே காண்பித்து ஒழுக்கசீலரைப் போல வேடம் தரிப்பர். அத்தகைய பொய்யர்களைப் பார்த்து அவர் உடம்பில் தங்கியிருக்கும் காற்று, நீர், தீ, நிலம், ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களும் தம்முள் சிரித்து நிற்கும்.
-----------------------

பால்: இன்பத்துப்பால்

இயல்: களவியல்
அதிகாரம்: 111. புணர்ச்சி மகிழ்தல்

குறள் எண்: 1101

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்தொடி கண்ணே யுள.


கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

விளக்கம்:

காண்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது, தீண்டுவது என்று வகைப்படுத்தப்பட்ட ஐம்புலன்களும் ஒளிபொருந்திய வளையல்கள் அணிந்துள்ள இப்பெண்ணிடம் ஒருங்கே நிறைந்துள்ளன. காதல் இன்பத்தின் முழுமை நிலை இங்கு விளக்கப்படுகிறது.

------------------

பால்: அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 03. நீத்தார் பெருமை
குறள் எண்: 25

ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா
னிந்திரனே சாலுங் கரி.


ஐந்து அவித்தான் ஆற்றல், அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி.

விளக்கம்:

(1) ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவனது பெருமை மிகவும் சிறந்தது. ஐம்புலன்களையும் அடக்கித் தன் தவ வலிமையால், அகன்ற வானின் கண் உறைபவர்க்குத் தலைவனாகிய இந்திரனே இதற்கு மிகச் சிறந்த சான்றாவான்.

ஒருவன் தன் தவத்தின் வலிமையால் இந்திர பதவி அடைவான் என்பது வழிவழியாக வரும் நம்பிக்கையாகும்.

அகல் விசும்புளார் கோமான் - அகன்ற வானத்தின் கண் உறைகின்றவர்க்கு அரசன் / தலைவன்

(2) ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவனது பெருமை மிகவும் சிறந்தது. ஐம்புலன்களையும் அடக்கித் தன் தவ வலிமையால், அகன்ற வானம் போன்று, பரந்து விரிந்த பெருமை வாய்ந்த இந்திரனே இதற்கு மிகச் சிறந்த சான்றாவான்.

அகல் விசும்புளார் கோமான் - அகன்ற வானம் போன்று பரந்து விரிந்த புகழ் உள்ளவன்; பெருமையில் சிறந்து விளங்குபவன்

தந்நலம் நீத்தாரின் பெருமைக்கு மிகவும் முக்கியமானது, ஐம்புலன்களை அடக்கியாளும் அவர்களது ஆற்றலே என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

விசும்பு - வானம், தேவலோகம், மேகம், செருக்கு, வீம்பு, திசை

கோமான் - பெருமையிற் சிறந்தவன், அரசன், மூத்தோன், குரு

கரி - சான்று, சாட்சியம், நஞ்சு, மிளகு, அடுப்புக் கரி, யானை, நிலக்கரி, கரிந்தது, பெண்கழுதை, மரவைரம், விருந்தினன், பயிர் தீய்தல்

------------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 08. அன்புடைமை
குறள் எண்: 79

புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு.


புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு?


விளக்கம்:

உடம்பின் அகத்தே உறையும் உறுப்பான அன்பு என்பது சரிவர இயங்காத போது, புற உறுப்புகள் கை, கால் முதலியன சரிவர இயங்கிப் பயன் ஒன்றும் இல்லை. அகத்து உறுப்பான அன்பு புற உறுப்புகளை இயக்கினால்தான் பயன் பெற முடியும்.

யாக்கை - உடம்பு, கட்டுகை
----------------
 
பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 39. இறைமாட்சி
குறள் எண்: 389

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு.


செவி கைப்பச் சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.


விளக்கம்:

அமைச்சர்கள், மக்கள் மற்றும் கடிந்து பேசும் பெரியோர் - இவர்களது சொற்கள் செவிகளையே புண்படுத்தக்கூடியவை என்றாலும், அத்தகைய சொற்கள் தனக்கு ஏற்றவை அல்ல என்றாலும், அவற்றைப் பொறுமையோடு கேட்கும் பண்புடைய வேந்தனின் வெண்கொற்றக்குடையின் / ஆட்சியின் கீழ் இந்த உலகமே நீண்ட நாள் தங்கி மகிழும் வாய்ப்பினைப் பெறும்.

கவிகை - குடை, வளைவு, நன்மை தீமை, தியாகம்

No comments: