Wednesday, December 14, 2011

குறளின் குரல்- 38

பால்: அறத்துப்பால்

இயல்: ஊழ் இயல்
அதிகாரம்: 36. ஊழ்
குரள் எண்: 376

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா, தம.


பரியினும் ஆகாவாம், பால் அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம.

விளக்கம்:

ஒருவன் தனக்கு உரிமையில்லாதவற்றை எவ்வளவுதான் போற்றிப் பாதுகாத்தாலும், ஊழ் / விதி என்பதன் காரணமாக, அப்பொருள் அவனிடம் தங்காமல் போய்விடும். தனக்கு உரிமையானவற்றை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும், ஊழ் / விதி காரணமாய் அவை உரியவரை நீங்கிப் போகாது.
---------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 46. சிற்றினம் சேராமை
குறள் எண்: 454

மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு.


மனத்து உளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்து உளதாகும் அறிவு.

விளக்கம்:

ஒருவருடைய அறிவு, வெளிப்படையாகப் பார்க்கும் போது, அவரது மனதில் உள்ளது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் அவர் சேர்ந்த இனத்தைப் பொறுத்தே அவரது அறிவாற்றல் அமையும்.

அறிவாற்றல் அவரவர் மனதில் இருந்துதான் வெளிப்படுகிறது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். என்றாலும், அவர் சென்று சேரும் இனத்தின் குணநலத்தால், அவர் அறிவாற்றல் கூடவோ குறையவோ செய்கிறது என்பது எதார்த்தம். அவர் இனத்தைப் பொறுத்தே அவர் அறிவு அவர்க்கு நன்மையும், தீமையும் தரும்.

மனதில் உள்ள அறிவு, இப்படித்தான் இனம் சார்ந்த அறிவாகிறது.

இப்படித்தான், இயல்பாக நல்லறிவு இல்லாதவராய் இருந்தாலும், அவர் சேர்ந்த இனத்தின் நற்குணங்களால் அறிவாற்றல் பெற்று நன்மையடைவர்.

இன்னும் பலர் இயல்பாக நல்லறிவு பெற்றிருந்தாலும், அவர் சேர்ந்த இனத்தின் தீய தன்மையால் அறிவிழந்து மதிமயங்கி அவதிப்படுவர்.

நன்மைகள் அடைய நல்லவருடன் சேருங்கள்.

தீமைகள் அடையத் தீயவருடன் சேருங்கள்.

உங்கள் அறிவாற்றல் குறைந்திருந்தாலும், நல்லவர்களின் சேர்க்கையால் அது மிகுதியாகப் பெருகும்.

உங்கள் அறிவின் சிறப்புக்கூட, தீயவரின் சேர்க்கையால் ஒளி குன்றிப்போகும்.
---------------------------

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 94. சூது
குறள் எண்: 931

வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.


வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கியற்று.

விளக்கம்:

மீன் பிடிப்பதற்காகத் தூண்டிலில் வைக்கப்பட்ட இரை அளவில் மிகச் சிறியது, என்றாலும், அதனால் கவரப்பட்ட மீன்கள் தாமாகவே சென்று அந்த இரையை உண்ண எண்ண, தூண்டிலில் மாட்டிக்கொண்டு, தாமாகவே தம் முடிவைத் தேடிக் கொள்ளும்.

சூதாட்டத்தின் மூலம் சிறிய அளவில் பொருள் வந்தவுடனேயே, மேன்மேலும் அதைப் பெருக்க எண்ணி, அச்சூதாட்டத்திலேயே மீண்டும் மீண்டும் தன் உடைமைகளைப் பணயம் வைத்து ஆடுவார்கள். முடிவில் முற்றும் இழந்து அவதிப்படுவார்கள்.

சூதாட்ட வெற்றி, மீனுக்காகத் தூண்டிலின் இரும்பு முள்ளில் வைக்கப்பட்ட இரை போன்றது. ஆபத்து அறியாமல் இரைக்காகச் சென்று மாட்டிக்கொள்ளும் மீனைப் போல, பொருட்கள் அனைத்தையும் இழக்கப்போகும் ஆபத்து அறியாமல், மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று தவறாக எண்ணி உள்ள பொருள் அனைத்தையும் இழந்து நிற்பர்.

அதனால் வெற்றியே பெற்றாலும் கூடச் சூதாட்டத்தை விரும்பாமல் தவிர்க்க வேண்டும்.

பொன் - இரும்பு, தங்கம், மேருமலை, செல்வம், பொலிவு, பசலை, ஒளி, அழகு, ஏற்றம், திருமகள், வியாழன், சூரியன்
------------------------
 
பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 79. நட்பு
குறள் எண்: 781

செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.


செயற்கு அரிய யா உள, நட்பின்? அது போல்
வினைக்கு அரிய யா உள, காப்பு?

விளக்கம்:

நல்லதொரு நட்பினை உருவாக்கிக் கொள்தல் போன்ற செயற்கரிய சிறந்த செயல் உலகில் யாது உள்ளது? எந்த ஒரு செயலுமில்லை.

எந்த ஒரு காரியத்துக்கும் பாதுகாப்பாகவும், துணையாகவும் நிற்கக்கூடிய அத்தகைய நட்பைப் போன்ற சிறந்ததொரு, கிடைத்தற்கு அரியதொரு பாதுகாப்பு இவ்வுலகில் யாது உள்ளது? ஏதுமில்லை.

நல்லதொரு நட்பு வாய்ப்பதென்பது எளிதன்று. எல்லோர்க்கும் வாய்க்கக்கூடியதும் அன்று. அப்படி ஒரு நட்பு வாய்க்கையில், அது போல நம் காரியங்களுக்குப் பாதுகாப்பாக, துணையாக வரக்கூடியது, கைகொடுத்து உதவக்கூடியது வேறு ஏதுமில்லை.
-------------------------
 
பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 93. கள்ளுண்ணாமை
குறள் எண்: 929

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.


களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ் நீர்க்
குளித்தானைத் தீத் துரீஇயற்று.


விளக்கம்:

மது அருந்திக் களித்து மகிழ்ந்து பழகிப்போய்விட்ட ஒருவனை, 'அது தீயது' என்று பல்வேறு காரணங்களை எடுத்துக்காட்டித் தெளிவித்தல், குளத்தின் நீருக்கு உள்ளே போய் மூழ்கிக் குளிக்கின்றவனைத் தீப்பந்தம் ஏந்தித் தேடுவதற்கு ஒப்பானது.

குளத்தின் நீர்ப்பரப்பில் நின்று குளிப்பவனைத் தீப்பந்தம் பிடித்துத் தேடுதல் எளிது. ஆனால், குளத்திற்குள் மூழ்கிக் குளிப்பவனைத் தேடுகிறவனும் மூழ்கித் தேட வேண்டும். மூழ்கியவுடனேயே ஒளியிழந்து பயனற்றுப்போகும் தீப்பந்தம்.

நீருக்கு அடியில் தீப்பந்தத்தின் ஒளிமிகு சுடரும் செயலிழந்து போகும்;

போதைக்கு அடிமையானவன் முன் எடுத்துவைக்கப்படும் நியாயமான காரணங்களும் வலுவிழந்து போகும்.

மதுவின் பழக்கம் அளவுடன் இருக்கும் போது உரிய காரணங்கள் எடுத்துக்கூறித் திருத்துவது சற்றே எளிதான செயலாக இருக்கக் கூடும். ஆனால், அப்பழக்கத்தில் அளவுக்கு அதிகமாய் மூழ்கி, அந்த மகிழ்ச்சியில் / போதையில் திளைத்தவனுக்குக் கூறப்படும் அறிவுரையும், எடுத்துக்காட்டும் காரணங்களும் பயனற்றவை. மதுப்பழக்கம் அளவுக்கு அதிகமாகப் பழகிவிட்டால் திருத்துதல் மிகவும் கடினமாகும்.
---------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 63. இடுக்கண் அழியாமை
குறள் எண்: 622

வெள்ளத் தனைய யிடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும்.


வெள்ளத்து அனைய இடும்பை, அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

விளக்கம்:

வெள்ளம் போல் பெருகி வரும் துன்பம் அனைத்தும், அறிவுடைய ஒருவன் அத்துன்பங்களைக் கடத்தல் எளிது என்று மனதில் உறுதியுடன் நினைத்த உடனேயே அழிந்து போகும்.

அறிவுடையவன் மனதில் உறுதி உடையவன் ஆகிறான்; உறுதி கொண்டவுடன் நன்கு செயலாற்றும் தன்மை பெற்றுவிடுகிறான்; அத்தகையவனுக்குத் துன்பங்கள் ஒரு பொருட்டல்ல.

No comments: