Sunday, December 11, 2011

குறளின் குரல் - 37

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 59. ஒற்றாடல்
குறள் எண்: 588

ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ
ரொற்றினா லொற்றிக் கொளல்.


ஒற்று ஒற்றித் தந்த பொருளையும், மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி, கொளல்.

விளக்கம்:

ஓர் ஒற்றன் உளவறிந்து வந்து செய்தி கூறினாலும், அந்தச் செய்தியை இன்னுமோர் ஒற்றன் மூலம் அறியச் செய்து இரண்டு உளவையும் ஒப்பிட்டுப் பார்த்து, உண்மை அறிந்து கொள்ள வேண்டும்.

ஓர் ஒற்றன் செயலை இன்னுமோர் ஒற்றன் மூலம் கண்காணிக்கும் திறமை இருந்தால், உண்மைச் செய்திகளை உறுதிப் படுத்திக்கொள்ள முடியும். அது மட்டுமில்லாமல், தவறுகள் மற்றும் நம்பிக்கைத் துரோகங்கள் செய்யாமல் இருக்கும் பண்பை ஒற்றர்களிடம் உருவாக்கவும் முடியும்.

-----------------
பால்: பொருட்பால்

இயல்: குடியியல்
அதிகாரம்: 101. நன்றியில் செல்வம்
குறள் எண்: 1004


எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ வொருவரா
னச்சப் படாஅ தவன்.


எச்சம் என்று என் எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாதவன்.

விளக்கம்:

பிறர்க்கு உதவி செய்து வாழாதவனை எவரும் விரும்பமாட்டார்கள். இப்படி ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பின் எஞ்சி நிற்கும் என்று எதனை எண்ணுவானோ?

உதவி செய்து வாழும் போதுதான் அவன் பெற்ற செல்வம் பயனுள்ளதாகிறது. பிறர்க்கு உதவாமல் வாழும் போது அவனை எவரும் விரும்பும் வாய்ப்பில்லை; பிறர் விரும்பாத போது, ஒருவன் தான் இறந்த பின் எஞ்சி நிற்கும் என்று கருதக்கூடிய பொருளோ, புகழோ ஏதுமில்லை.

நன்றியில் செல்வம் - நன்றி இல் செல்வம் - ஈட்டியவருக்கும், பிறருக்கும் பயன்படாத செல்வம்

--------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 61. மடியின்மை
குறள் எண்: 604


குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து
மாண்ட வுஞற்றி லவர்க்கு.


குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இல் அவர்க்கு.

விளக்கம்:

சோம்பலில் திளைத்து மூழ்குவதால், ஒருவர் வாழ்க்கையில் முயற்சி செய்யும் தன்மை குன்றிப் போகும். இதனால் சிறப்பு / மாட்சிமை தரக்கூடிய உழைப்பினையும் ஒருவர் கைவிட நேரிடும். இந்த நிலையில், அவர் குடியும் அழிந்து போகும்; குற்றங்களும் பெருகிப்போகும்.

மடி - சோம்பல்

மாண்ட - மாட்சிமை பொருந்திய, இறந்த

உஞற்று - முயற்சி, ஊக்கம், வழக்கு, தூண்டு, தவறு, முயற்சி செய்
 
-----------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 21. தீவினையச்சம்
குறள் எண்: 208

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று.


தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று.

விளக்கம்:

தீய செயல்களைச் செய்தவர் அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க இயலாது. ஒருவன் மேற்கொண்ட தீய செயல்களால், அவனுக்கு நேரவிருக்கும் துன்பங்களில் இருந்து அவன் தப்பிக்கவே இயலாது.

இது எத்தகையது என்றால், ஒருவன் தன் நிழல் அவன் பாதங்களின் கீழேயே எப்போதும் தங்கும் தன்மையுடையது. அப்படி அவன் பாதங்களின் கீழ் உறையும் நிழல், சமயம் வரும்போதெல்லாம் தவறாமல் வெளிப்பட்டே தீரும்.

நிழல் பாதத்தின் அடியே மறையாது தங்கியிருப்பது போல, தீய செயலால் வரும் துன்பங்களும் விலகாது கூடவே வரும். சமயம் வரும்போது வெளிப்படும் நிழல் போல, தக்க சமயத்தில் தவிர்க்க முடியாத துன்பங்கள் தவறாமல் வந்து சேரும்.

வீயாது - தவறாது, விலகாது, விடாது
--------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 92

அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.


அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

விளக்கம்:

மனம் மகிழ்ந்து ஒருவருக்குப் பொருளை ஈவது நல்லதா? முகம் மலர்ந்து ஒருவரிடம் இன்சொல் பேசுவது நல்லதா?

பிறர்க்கு ஈவது என்பது தம்மிடம் இருக்கும் பொருளின் அளவைப் பொறுத்தே அமையக் கூடிய ஒரு சிறப்பாகும். பொருளின் இருப்பைப் பொறுத்து

ஈயும் தன்மை மற்றும் அளவு, சூழலுக்கேற்றாற் போல மாறக் கூடும்.

ஆனால், இன்சொல் என்பது எப்போதும் ஒருவரிடம் இயல்பாய் இருக்க வேண்டிய தன்மையாகும். இது எந்த நிலையிலும் மாறாத இயல்புடன் விளங்கும். எப்போதும் குன்றி விடாமல், இன்சொல் பேசும் தன்மை நிறைந்து இருக்கும்படி பார்த்துக் கொள்வது சிறப்பு.

எனவே இன்சொல் பேசுவது, ஈவதைக் காட்டிலும் சிறந்ததாகும்.
---------------

பால்: இன்பத்துப்பால்

இயல்: கற்பியல்
அதிகாரம்: 126. நிறையழிதல்
குறள் எண்: 1256

செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர்.


செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ
எற்று என்னை உற்ற துயர்?


விளக்கம்:

என் மனதுக்கு நெருக்கமானவர் என்னை பிரிந்து சென்ற பின்னும், அவர் பின் செல்ல விரும்புகிறது என் நெஞ்சம். என்னை வாட்டுகிறது இந்தப் பிரிவுத் துயர். இந்தத் துயரம் எத்தன்மையது? அந்தோ! மிகக் கொடியது. இரங்கத்தக்கது.

நிறையழிதல் - மனதின் இரகசியம் மறைத்து அலை பாயும் மனதை ஒரு நிலைப்படுத்துவது நிறை; பிரிவாற்றாமையால் மனதை நிலைப்படுத்தமுடியாமல், வெளிப்படையாகப் பேசுவது நிறையழிதல்.

எற்று - எத்தன்மையது

அரோ - அசைச்சொல்

சேறல் - செல்லுதல்

செற்று - நெருக்கம்; செற்றவர் - நெருங்கியவர்

No comments: