Sunday, December 11, 2011

சொல் மயக்கம்

வான வில்லின்
வண்ணங்கள் 
வகைபிரியும்
ஏதோவோர் இழை

நீலக்கடலும்
நீலவானும்
நீளச் சந்திக்கும் கோட்டின்
ஏதோவொரு புள்ளி

முதல் அலையை
முன்னேறும் அலை
முத்தமிட்டுச் செல்லும்
ஏதோவொரு துளி

உனக்குள்ளும்
எனக்குள்ளும்
வெடித்துச் சிதறும்
காதல் பூகம்பத்தின்
ஏதோவொரு துகள்

அனுபவங்களால் மட்டுமே
நுகரப்படுவதாய்...
புலன்களுகெல்லாம்
புலப்படாத புதிராய்..

சொல்லத் தெரியவில்லை;
சொல்லித் தெரிவதில்லை.

முயன்று தோற்று
முடங்கி மடங்கி
மயங்கிப் போகின்றன
சொற்கள்.

9 comments:

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை மலர்.

ஜீவி said...

சொல்லத் தெரியவில்லை யானினும்
உணரத் தெரிந்தோருக்கு
உணர்த்தத் தவறுவதில்லை!

cheena (சீனா) said...

அன்பின் பாசமலர் - சொல் மயக்கம் தான் - அருமையான கவிதை - சொல்லத் தெரியவில்லை - சொல்லித் தெரிவதில்லை ம்ம்ம்ம்

ஜீவியின் மறுமொழியும் அருமை - இரசித்தேன். உணரத் தெரிந்தோருக்கு
உணர்த்தத் தவறுவதில்லை!

நல்வாழ்த்துகள் பாசமலர் - நட்புடன் சீனா

கோபிநாத் said...

கலக்கல் அக்கா ;-)

\\சொல்லத் தெரியவில்லை;
சொல்லித் தெரிவதில்லை.

முயன்று தோற்று
முடங்கி மடங்கி
மயங்கிப் போகின்றன
சொற்கள்.\\

அருமை ;-)

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஜீவி....ஆமா தெரிய வேண்டியவர்களுக்குச் சரியாகப் புரியும்....

உங்கள் 'பார்வை' பாதிவரை வந்துவிட்டேன்...மனதுக்குக் கொஞ்சம் கனமான உணர்வு...அதனால் படிப்பதில் கொஞ்சம் தொய்வு..சீக்கிரம் படித்து முடிக்கிறேன்...

பாச மலர் / Paasa Malar said...

வாங்க சீனா சார்...நீண்ட நாட்கள் கழித்து உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி...நன்றி..

குட்டிக் குட்டியாய் மதுரைப் பயணம் வரும்போதும், ஒவ்வொரு முறை KK நகர் அண்ணா நகர் பகுதியைக் கடக்கும்போதும் உங்கள் இருவருக்கும் மானசீகமாய் ஒரு நலம் விசாரிப்பைச் சொல்லிச் செல்வோம்....சந்திப்போம் சீக்கிரம்...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி..

ஜீவி said...

'பார்வை'யில் தங்கள் பார்வை படிவது குறித்து மகிழ்ச்சி.

படிக்கையில் அவ்வப்போதோ அல்லது படித்து விட்டோ சொல்லுங்கள்.