Wednesday, December 14, 2011

குறளின் குரல்- 39

பால்: பொருட்பால்

இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 72. அவையறிதல்

குறள் எண்: 720

அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த
ரலார்முற் கோட்டி கொளல்.


அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
அல்லார் முன் கோட்டி கொளல்.


விளக்கம்:

நல்ல சான்றோர்கள், அறிவுத்திறனில் தம் இனத்தவர் அல்லாத பிறர் கூடிய அவையின் முன், ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசுதல் எத்தகையது என்றால், கழிவுநீர் தேங்கியுள்ள தூய்மையற்ற முற்றத்தில் அமிழ்தினைக் கொண்டு வந்து கொட்டியதற்குச் சமமாகும்.

அவையில் உள்ளவர்களின் அறிவுத்திறனை அறிந்துகொண்டு, அவர்க்கு ஏற்பல்லாதவற்றைப் பேசாதிருத்தல் நலம்.

அங்கணம் - முற்றம், சேறு, சாக்கடை, இரு தூண் நடுவிடம், மதகு

உக்க - உகுத்த, சிந்திய, சிதறிய

கணத்தார் - கூட்டத்தார், ஊர்க்காரிய நிர்வாகிகள்

கோட்டி - பேச்சு, குழு, கூட்டம், சபை, துன்பம், பகடி, பைத்தியம், நிந்தை, அழகு, கோபுர வாயில், மனை வாயில், விகடக் கூத்து, ஒருவரோடு கூடியிருத்தல்
-------------------------
 
பால்: அறத்துப்பால்

இயல்: துறவறவியல்
அதிகாரம்: 27. தவம்
குறள் எண்: 261

உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு.


உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.

விளக்கம்:

பொதுவாக, உடலுக்கு ஏற்படக்கூடிய இடர்களைத் தாங்கும் சக்தி, உண்ணா நோன்பு, காலநிலையின் மாறுபாட்டைத் தாங்கும் சக்தி, செயற்கரிய வித்தைகள் செய்யும், செய்விக்கும் சக்தி..முதலானவற்றைத் தவம் என்று போற்றுவது வழக்கம்.

ஆனால், திருவள்ளுவரின் தவம் குறித்த விளக்கம் முற்றிலும் மாறுபடுகிறது.

ஒருவன் தனக்கு வரக்கூடிய துன்பங்களை, தன் முயற்சியின் திறத்தால் தாங்கி எதிர்நோக்கக்கூடிய வல்லமை, பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாத தன்மை, தனக்குத் துன்பம் செய்த உயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல் - இவைதான் தவத்திற்கு உரு / வடிவம் / இலக்கணம் ஆகும் என்று விளக்குகிறார்.

நோய் - துன்பம், வருத்தம், பிணி, குற்றம், அச்சம், நோவு

நோன்றல் - பொறுத்தல், தள்ளல், நிலை நிறுத்தல், துரத்தல், தவம் செய்தல்

உறுகண்- துன்பம், வறுமை, நோய்

உரு - வடிவம், உருவம், உடல், தெய்வத்திருமேனி, நிரம், அச்சம், பலமுறை சொல்லுகை, தோணி, எலுமிச்சை, இசைப்பாடல், உருவம் உள்ளது.
 
-----------------
 
பால்: பொருட்பால்

இயல்: படையியல்
அதிகாரம்: 78. படைச்செருக்கு
குறள் எண்: 774

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.


கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும்.


விளக்கம்:

போர்க்களத்தில், தன் கையில் இருந்த வேலைத் தன்னைத் தாக்க வந்த யானையின் மீது எறிந்து தாக்கிய வீரன், மேலும் அடுத்த தாக்குதல் பொருட்டு எறிவதற்காய் வேல் ஒன்றைத் தேடி நிற்க, தன் மேல் வீசப்பட்டுத் தன் மார்பில் பதிந்து கிடக்கும் வேலைக் கண்டு, தக்க சமயத்தில் தக்க கருவி கிடைத்துவிட்டதென்று எண்ணி, அதைப் பறித்துக் கையில் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியடைவான். மாபெரும் வீரனின் சிறப்பு இத்தகையது.

----------------
பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்
அதிகாரம்: 81. பழைமை
குறள் எண்: 801

பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.


'பழைமை எனப்படுவது யாது?' எனின், யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

விளக்கம்:

'பழைமை' என்று சொல்லப்படுவது எது என்று கேட்டால், நீண்ட காலமாகப் பழகி வரும் நண்பர், நட்பின் உரிமை காரணமாக, ஏதாவது பிழையாகச் செய்து விட்டாலும் கூட, அதனைப் புரிந்து பொறுத்துக்கொண்டு, அந்த நட்பைக் கீழ்ப்படுத்தாமல் கைவிடாமல், சிதைக்காமல் தக்கவைத்துக்கொள்வதாகும்.

கிழமை - உரிமை, உறவு, நட்பு, ஆறாம் வேற்றுமைப்பொருல், குணம், முதுமை, வார நாள்

-------------------

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 62. ஆள்வினையுடைமை
குறள் எண்: 611

அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.


அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

விளக்கம்:

எந்த ஒரு காரியத்தையும் 'இது செய்யக்கூடியதன்று; செய்ய இயலாது' என்று தம்மைத் தாமே தாழ்த்திக் கொண்டு மனம் தளராமல், சோர்ந்து விடாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஏன் என்றால் முயற்சியுடைமை அதற்கேற்ற பெருமையை தப்பாமல் தரும். எப்படிப்பட்ட செயலையும் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி உண்டாக்கும்.

அருமை - கடினம், இன்மை, எளிதில் கிடைக்காதது, பெருமை

அசாவாமை - தளராமை
------------------
 
பால்: பொருட்பால்

இயல்: அரசியல்
அதிகாரம்: 60. ஊக்கமுடைமை
குறள் எண்: 597


சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.


சிதைவிடத்து ஒல்கார், உரவோர்; புதை அம்பின்
பட்டுப் பாடு ஊன்றும் களிறு.


விளக்கம்:

தன் உடல் முழுவதும் துளைத்துப் புதையுண்ட அம்புகளால் தைக்கப்பட்டு வலியால் துன்பப்படும்போதும், யானை தன் மன உறுதியில் தளராது எதிர்த்து நின்று தன் பெருமையை நிலைநிறுத்தும். அது போல் தாம் எடுத்துக்கொண்ட முயற்சிக்குக் கேடு வந்த போதும் ஊக்கமுடையவர் தளராது நின்று, தமது பெருமையை நிலைநாட்டி நிற்பர்.

ஒல்கார் - தளராதவர்

உரவோர் - ஊக்கமுடையவர், வலிமையுடையவர், மூத்தோர்

களிறு - யானை

2 comments:

கோபிநாத் said...

அனைத்தும் அருமை..!

குறிப்பாக ***உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு.*** விளக்கம் கலக்கல் ;-)

குமரன் (Kumaran) said...

பாசமலர்,

தொடரும் உங்கள் அரும்பணிக்கு நன்றி. தொடர்ந்து படித்து வருகிறேன்.