Thursday, January 31, 2008

பிரிவோம் சந்திப்போம் - மனோதத்துவ வகுப்பு

ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரே கவுன்சிலிங் மயம். திருமணமான புதிதில் சினேகா தோழிகளிடம், ஏன் தன் தாயிடம் கூட எப்படி நடந்து கொண்டால் என்ன கிடைக்கும் என்பது மாதிரியான கவுன்சிலிங். திருமண ஆல்பத்தைப் புரட்டினாலே, மீண்டும் கவுன்சிலிங்.(counselling - ஆலோசனை தவிர வேறு ஏதும் தமிழ் வார்த்தை இருக்கிறதா? ஆலோசனன ஏனோ இங்கு பொருந்தாதது போல் தோன்றுகிறது.)

தனிக்குடித்தனத்தில் வளரும் ஒரே குழந்தையின் ஆதங்கம் எப்படியிருக்கும்?
மரணத்தனிமை மன நோயில் கொண்டு விட்டுவிடும்.
பாதிக்கப்பட்டவர்களின் நடத்தை எப்படியிருக்கும்?

அதற்காகச் செய்ய வேண்டியது என்ன?
மனனவியின் எதிர்பார்ப்பு என்ன?
கணவன் செய்ய வேண்டியது என்ன?


இத்தனையும் ஒன்றின் மேல் ஒன்றான சம்பவங்களாய் அடுக்கிக்கொண்டு போகிறார் இயக்குநர். ஆழமான கருத்து என்றாலும் சொல்லிய முறையில் செயற்கைப்பூசல்கள் அதிகம் என்பதால் ஏதோ மனோதத்துவ வகுப்பில் உட்கார்ந்து வந்தது போல் ஓர் அனுபவம்.

சம்பவங்களை அதன் போக்கிலேயே விட்டுவிட்டுப் புரிய வைப்பதுதான் இயக்குநருக்கு அழகு. இப்படி ஒவ்வொரு சம்பவத்தின் முடிவிலும் ஓர் ஆசிரியர் போல் புத்திமதிகள் சில நேரம் சினேகா சொல்கிறார், சில நேரம் ஜெயராம் சொல்கிறார். போதுமடா சாமி என்று ஆகிவிடுகிறது.

பார்த்திபன் கனவு இயக்குநரா இப்படி?

உறவுகளின் ஆழம், கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு, கூட்டுக் குடும்ப சந்தோஷம், இப்படி அழகிய இழைகள் உள்ள கதையைத் தன் போக்கில் போக விடாமல் மனோதத்துவ ரீதியாய்க் கொண்டு போனதால், மிதமிஞ்சிய சலிப்புதான் இறுதியில் ஏற்படுகிறது.

"புதிதாய்க் கல்யாணம் செய்து தனிமை சூழ் உலகுக்குப் போகிற பெண்கள் பயப்படப்போகிறார்கள் இந்தப் படம் பார்த்தபின்" என்று என் தோழி சொன்னாள். இதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

இப்படி யாராவது இருப்பார்களா இந்தக் காலத்துப் பெண்கள் என்று வியக்கிறது மனம். இந்தப் பாத்திரப் படைப்பு தரும் வியப்பு மட்டுமே இயக்குநர் பெற்ற ஒரே வெற்றி.

இது போன்ற ஒரு மரணத்தனிமையை அனுபவித்தவள் நான் என்றாலும் கூட இது ஏதோ அபத்தத்தின் உச்சகட்டம் என்று தோன்றுகிறது.

பெண்கள் என்றாலே சீரியல் பார்ப்பவர்கள் என்ற வழக்கமான முத்திரை நாயகியின் மீது குத்தப்பட்டுவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு இருக்கிற இயக்குநர், ஏதோ தொலைக்காட்சியில் வேறு நிகழ்ச்சிகளே இல்லாதது போல் காண்பிப்பதை என்னவென்று சொல்வது?

சீரியல் பிடிக்கவில்லை என்பதால் வித்தியாசமான பெண் என்று அனனவரும் நினைக்கவேண்டும் என்பது ஒரு சறுக்கல்.

பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள்:

சினேகாவின் நடிப்பு, காரைக்குடி வீடு மற்றும் திருமணம், ஒரு நிமிடம் வந்து போகும் அந்த மதுரை அத்தை, பலருக்குத் தெரியாத அட்டஹட்டி என்ற அழகான ஊரின் அறிமுகம்.

மொத்தத்தில்..

அழகான, ஆழமான கருத்துகளைச் சொல்ல வந்த இயக்குநர், செய்தித்தாள் பாணியில் விறுவிறுப்பாய்ச் சொல்லாமல், அவள் விகடன் பாணியில் மனோதத்துவ ரீதியாகச் சொல்வதுதான் மிகப் பெரிய சறுக்கல்.

(சேரன், ப்ளீஸ் இயக்குநராக மட்டும் இருந்து விடுங்களேன்.)



Tuesday, January 29, 2008

விளிம்பு

விரக்தியின் விளிம்பில்
விழிகள் நிறைந்து
விழத்துடிக்கும் கண்ணீர்.

கண்ணீரின் விளிம்பில்
கரையத் துடிக்கும்
கல்லாய்ப் போன மனம்.

மனதின் விளிம்பில்
மயங்கி மீண்டும்
மலர்ந்து நிற்கும் நினைவு.

நினைவின் விளிம்பில்
நீந்திச்சென்று மீட்டெடுத்த
நிச்சய நிச்சலன அன்பு.

அன்பின் விளிம்பில்
அகன்ற துயரம்
அலையின் தொடராய் நம்பிக்கை.

நம்பிக்கையின் விளிம்பில்
நலிந்து போய்
நாடி தளர்ந்தது விரக்தி.

Saturday, January 19, 2008

இரட்டைச் சிறுகதை - ஒரே தலைப்பில்(2)

மறுமணம் - இரண்டாவது கதை.

ஏன் இப்படி நடக்க வேண்டும் எனக்கு? மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்த கல்பனாவைப் பார்த்துக்
குமுறினான் மோகன். வாய் விட்டுக் கதறியழ நினைத்தான் முடியவில்லை....அருகில் இருக்கும் சொந்தங்கள் .. வாயில் துணி பொத்திச் சிறிய விசும்பல்கள், துக்க முகம் என்று அடக்கி வாசித்தார்கள். கல்பனாவின் தாயார் மட்டும் சற்றுப் பெருங்குரலில் அவ்வப்போது அழ..ஒரு இறுக்கமான மௌனம் நிலவியது.

வெளியே போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலின் கீழ் ஆண்கள் அமர்ந்திருக்க,
உணவகத்திலிருந்து தருவித்த சிற்றுண்டிகள் பக்கம் ஒன்றிரண்டு பேராய்த் தொடர்ந்து சென்று பசியாறிக் கொண்டிருந்தார்கள்.

"ஈவ்னிங் 4.30 க்கு மேல்தான் எடுப்பார்களாம்."

"எலெக்ட்ரிக் சுடுகாடுன்னாலே இது ஒரு கஷ்டம்..அவன் கொடுக்கற டைமுக்குதான் நாம் போகணும்."

"இல்ல. மோகன் தான் லேட் பண்றான்..ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணப்போ கல்பனா ஒரே ஒரு தடவை வீட்டுக்குப் போகணும் போல இருக்குன்னு சொல்லிருக்கா..டாக்டர்கள் அனுமதிக்கலயாம். அதுகுள்ள இப்டியாகி விட்டது..அதுனால கொஞ்சம் நேரம் வீட்ல
வச்சுருக்க நெனக்கிறான்.."

"ஆம்புலன்ஸ் வருதாம்..சரியான டைமுக்கு வருமோ வராதோ..நைட்டே போகணும் ஊருக்கு. லீவில்ல...பஸ், ட்ரெய்ன் எல்லாம் கூட்டம்..எப்படிப் போகப் போகிறோமோ.."

அவரவர் கவலைப்படும் இடைவெளியில், கல்பனாவுக்கு என்ன ஆயிற்று என்று பார்க்கலாம். முதல் குழந்தை பிறக்கும் போது சுகப் பிரசவந்தான். இரண்டாவது குழந்தைக்குப் பிரசவ நேரம் நெருங்கிய போது வடபழனி மருத்துவமனையில் சேர்த்தார்கள்.சற்றுச் சிக்கல் என்று தெரியவர சிசேரியன் செய்து பெண் குழந்தை பிறந்தது. எனினும் ரத்தப் போக்கு நிற்காததால், மீண்டும் ஒரு
அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றிக் கல்பனா கண்மூடினாள். இப்படி ஒரு துர்பாக்கியம் எப்போதாவது ஒரு முறை நிகழக்கூடும் என்று மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

நான்கு வயதில் ஒரு மகன் கார்த்திக், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை விட்டு விட்டுக் கண்மூடிய 28 வயது கல்பனா ஒரு பொறியாளர்.மோகனை (30 வயது)
விடச் சற்று வசதியான குடும்பத்தில் வந்த பெண். அவளுக்கு ஓர் அண்ணன். அவனுக்குக் குழந்தையில்லை. பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த மோகன்,மூன்று அக்காக்களுக்கு ஒரே தம்பி. சரியான வேலையில்லாமல் இருந்தவனுக்கு, கல்பனாவின் அப்பாதான் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தந்து, ஒரு விட்டையும் கொடுத்து, தன் பெண்ணைக் கொடுத்தார்.
கல்பனா மோகன் வீட்டைச் சேர்ந்தவருக்கு உதவுவதில் மிகவும் உறுதுணை புரிந்தவள். அவன் அக்கா பையன்கள், பெண் சென்னையில் படிக்க வந்த போது, அவர்கள் வீட்டில் தங்கிக் கொள்ள மட்டுமின்றி, படிப்புக்காகப் பண உதவியும் செய்தவள்.

இன்று மூத்த அக்கா, நர்ஸ், தலைமாட்டில் அமர்ந்து இன்னமும் மூக்கில் இருந்து கசியும் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது அக்காவின் மகள் சௌம்யா தான் கல்பனா வீட்டில் தங்கிக் கலைக்கல்லூரியில் முதல் வருடமும், கல்பனா அறிவுரையின்படி வேறு சில தனி விசேட வகுப்புகளுக்கும் சென்று வந்தாள். மாமியார் இறந்து விட, மாமனாருக்கான கடமைகளையும் நன்கு செய்து வந்தாள். அலுவலகம், வீடு இரண்டுக்காகவும் உழைத்தவளுக்கு அதிகம் உதவியாக இருந்தது அவள் பெற்றோர்.மோகனின் அதிர்ஷ்டத்தைப் பாராட்டாதவர்களே கிடையாது.

ஆயிற்று. எல்லாம் முடிந்து கல்பனாவை எரித்து விட்டு வந்தாயிற்று. பிறந்த குழந்தையைக் கல்பனா வீட்டார் தங்களுடன் எடுத்துச் சென்று விட்டனர். அவர்கள் வீடு சற்றுப் பக்கம்தான். தன் அறையிலேயே மோகன் பெரும்பாலும் அடைந்து கொள்ள, தொடர்ந்த நாட்களில்
அக்காக்கள் கச்சேரி ஆரம்பம்.

"பாவம். எப்படி இந்தப் பிள்ளைகளை வளர்க்கப் போகிறானோ..வீடு கல்பனா பெயரில்தானே இருக்கிறது..." அக்கா 1.

"ஆமாம். சௌம்யாதான் நல்லா ஒத்தாசையா இருந்தா..கார்த்திக் அவகிட்ட ரொம்ப ஒட்டிக்கிட்டான்.." அக்கா 2.

"சரிடி..எதுக்கு ரூட் போடறன்னு தெரியுது நல்லா..." அக்கா 3.

"சௌம்யா சின்னப் பொண்ணுதானேடி..படிச்சு வரட்டும்..எம் பொண்ணு கலாவுக்கும் மாப்பிள்ளை பாக்கலாம்னு இருந்தோம்..இப்ப தம்பியக்கேக்க வேண்டியதுதான்..அவன எப்படி இப்டியே விட்டுற முடியும்?" அக்கா 1.

"ஒனக்கென்னம்மா..அத்தானும் நீயும் சம்பாரிக்கிறீங்க..மகனும் வேலக்குப் போகப்போறான்..
சௌம்யாவுக்கு முடிச்சுக்கிறேன்.."அக்கா 2.

"அது சரிடி...தம்பி விஷயத்துல நீங்க என்ன பேசுறது...நல்லாருக்கே நியாயம்.."அக்கா 3.

"உனக்கு மகள் இல்ல..நீ ஏன் பேசமாட்டே?" ..அக்கா 2.

இப்படி அவர்களுக்குள்ளே பேசினாலும் தம்பியிடம் யாரும் பேசவில்லை. ஆனால் அக்கா 2 மட்டும் சௌம்யாவைவிட்டு கார்த்திக்கும், மோகனுக்கும் பணிவிடைகள் செய்யச் சொன்னாள்.
காரணம் புரிந்த போது சௌம்யா தயங்கினாள்.

பிறந்த குழந்தையைக் கல்பனாவின் அண்ணன் குடும்பம் சேலத்துக்கு எடுத்துப் போய்விட்டார்கள். கார்த்திக் மற்றும் மோகனை அவ்வப்போது வந்து பார்த்துப் போவார்கள் கல்பனாவின் பெற்றோர். அக்கா 2 மட்டும் தற்காலிகமாகக் குடும்பத்தோடு அங்கேயே தங்கிவிட, அக்கா 1,3 ஊருக்குப் போய்விட்டார்கள். அக்கா 1 அவ்வப்போது வந்து போவாள் அப்பாவை, தம்பியைப்
பார்க்கும் சாக்கில்.

மறுமணப் பேச்சை அக்காக்கள் எடுத்த போது பிடி கொடுக்காமல் இருந்தான் மோகன்.

"முதல்ல ஒன் மகள இங்க கூட்டிட்டு வந்துருப்பா..நானும் சௌம்யாவும் பாத்துக்க மாட்டோமா.."அக்கா 2.

"வீடு கல்பனா பேர்ல இருக்குது. புள்ள இல்லன்னா அனாதப் பிள்ளைய எடுத்து வளர்க்க வேண்டியதுதானே.அம்மா சொத்து மகளுக்குன்னு சட்டமிருக்குல்ல..வீட்டக் காபந்து பண்ணிக்கடா தம்பி.." அக்கா 1.

அவனுக்குப் புரிய ஆரம்பித்தது அக்காக்களின் எண்ணம். "நான் மறுமணம் பண்ணிக்கிறதா இல்ல..இதப் பத்திப் பேச வேண்டாம்"னு அவர்களை அடக்கினான். இருந்தாலும் பல இடங்களிலிருந்து பலவித அறிவுரைகள் இது குறித்து..ஏன், கல்பனாவின் பெற்றோரே
இதை வலியுறுத்தினார்கள். மகளைப் பிரிய முடியாமல் கூட்டி வந்து விட்டான்.

கல்பனா இறந்து எட்டு மாதங்கள் கழிந்தது. மனம் மாறி மறுமணத்துக்குச் சம்மதம் தெரிவித்துள்ளான் மோகன். அவன் கலாவையோ, சௌம்யாவையோ மணக்கத் தன் மனம் ஒப்பவில்லை என்று கூறிவிட்டான். ஆதரவற்ற விதவை, குழந்தைகளற்ற விதவைக்கு முன்னுரிமை, அல்லது அதிக காலம் மணமாகாத பெண்..தன்னை விட வயது சற்று அதிகமானாலும் பரவாயில்லை என்று சம்மதம் தெரிவிக்க, தகுந்த பெண் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

(இதுவும் உண்மைச் சம்பவம்தான்.மன்னிக்கணும் மக்களே..கொஞ்சம் நீ...ள....மாகி விட்டது)
மறுமணம்-முதல் கதை - http://pettagam.blogspot.com/2008/01/blog-post_17.html

Sunday, January 13, 2008

பொங்கல் புத்தாண்டு

இந்த வருடம்
பொங்கல் புதுமை!

விலைக்குறைப்பு
நகைக்கடைகளில்.

மழை நீரில்
மூழ்கிய பயிர்கள்
சாகுபடிச் சாக்குகள்
சரளமாய்ச் சொல்லி
எசமான் செய்தார்
கூலிக் குறைப்பு!

மூழ்கிப் போயின
மனைவியின் நகைகள்
குட்டி போட்ட
வட்டிகளால்!

தள்ளுபடி விற்பனை
துணிக்கடைகளில்.

கிழிந்த மேல்சட்டையைக்
கிழிந்த கால்சராயுள்
தள்ளியபடி
உழவன் மகன்...

நிவாரணமற்ற
நிலையில்
(அரை)நிர்வாணமே
நிதர்சனம்!

ஜல்லிக்கட்டு
உயிர் வதையாம்
குரல் கொடுக்க
ஆயிரம் பேர்..

உசிதத் தீர்ப்பு
துரிதம் எழுதும்
உச்ச நீதி மன்றம்!

உரத்தெழும்
உழவனின் பசிக்குரல்
காலம் காலமாய்..
செவிடாய்ப் போன
சமுதாயம்.

வழக்கு வாதம்
வழக்கொழிய
தீர்ப்புகள் யார் தருவார்?

இந்த வருடம்
பொங்கல் புதுமை!

உழவனுக்குத் திருநாள்
இல்லையல்லவா?

தமிழ்ப் புத்தாண்டு!
மாற்றுப் பெயர்
பொதுவாய்ச் சொல்லிப்
பொத்தல்கள் மறைப்பது
பொருத்தமல்லவா?

Thursday, January 10, 2008

நந்து f/o நிலாவின் விருப்பத்துக்காக - மாண்டிஸோரி கல்வி முறை

(என் http://pathivu.madurainagar.com/2008/01/blog-post_5731.html பதிவில் மாண்டிஸோரி பள்ளி நினைவுகளைத் தொகுத்திருந்தேன். அதைப் படித்து நந்து வைத்த கோரிக்கைக்கான பதிவு இது.)

இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொருத்தமானதாக, குழந்தைகளின் ஆரம்ப காலக் கல்வித் தேவைகளுக்கேற்ப இந்தக் கல்வி முறை அமைந்துள்ளது என்பது என் கருத்து. இத்தகைய ஒரு அமைப்பை சுமார் 35 வருடங்களுக்கு முன்பே கொண்ட ஒரு பள்ளியில் நான் படித்தது இன்றைக்கும் நான் நினைத்து மகிழும் ஒரு விஷயம். அப்பள்ளியில் படித்த காலத்தில் அந்த அருமை பெருமையெல்லாம் புரியாத வயது. பின் கல்வித்துறையில் பட்டப்படிப்பில் இம்முறை பற்றி அறிந்த போது, இம்முறையைச் சரியான முறையில் பயன்படுத்தும் பள்ளிகளைக் கண்ட போது இதன் அருமை புரிந்தது.

நான் படித்த பள்ளியில் (அமலா..திருநகர், மதுரை) ஆரம்ப நிலையில் இக்கல்விமுறை இருந்தது. அப்போது LKG, UKG இல்லை. மூன்றரை வயதில் பள்ளியில் சேர்த்தார்கள். I class, II class, III class என்றும், பின் III std - V std வரை என்றும் இரு பிரிவுகளாக இருந்தன. (இரண்டு வருஷம் 3வது வகுப்பில் என்று தப்புக் கணக்குப்போட்டு மாற்றுச் சான்றிதழ் வாங்கிப் பள்ளி மாறியவர்கள் சிலர்.) இப்போதைய LKG, UKG அமைப்பில் இது போன்ற குளறுபடிகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில பள்ளிகளில்(K.G. காலம் 2 வருடமென்றாலும்) K.G.யே நான்கு நிலைகளில் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

மாண்டிஸோரி கல்வி அமைப்பு: முழுக்க முழுக்க ஆரம்ப காலக் கல்விக்குப் பொருத்தமானது. குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுக் கற்றுக் கொடுக்கும் முறை கொண்டது. கற்றல் முக்கியம் எனினும் குழந்தைகளின் சுதந்திரத்துக்கும், உரிமைக்கும் உரிய இடம் வழங்க வேண்டும் என்பதும் இதன் சிறப்பம்சம். தானாகவே இயல்பான சூழலில், தனக்கே உரிய வேகத்தில் கற்றுக் கொள்ளும் திறன், குழந்தையில் பலவகைப்பட்ட முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் பயிற்சி முறைகள் இதன் சிறப்பு. நான் படித்த காலகட்டத்தில், மாண்டிஸோரி முறை முழுமையாக அமைத்துத் தரப்படவில்லை. ஆனால் இன்றைய சூழல் அப்படியல்ல.

வகுப்பறையே வித்தியாசமாக இருக்கும். பலதரப்பட்ட விளக்கப் படங்கள், குட்டி நாற்காலி, மேசைகள்..வித்தியாசமான பயிற்சி முறைகள்..எதையும் வாய்வழியோடு மட்டுமல்லாமல் செயல்முறை விளக்கமாகவும் போதிக்கும் கூடங்கள் இந்த வகுப்பறைகள்.இம்முறைக்கென்றே ப்ரத்யேகமாக உருவாக்கப்பட்ட கருவிகள் இதன் பிரதான அம்சம். சதா சத்தம் போடும் ஆசிரியர்களை இங்கே காண முடியாது. ஆசிரியரின் பணி ஒரு மேற்பார்வையாளர் என்ற அளவில் மட்டுமே. மொழிப் பயிற்சியில் எழுத்துக்களை விட ஒலிகளுக்கு முக்கியத்துவம் அதிகம். ஒலிகளைப் புரிந்து கொண்டால் எழுத்துக்களைச் சுலபமாகப் படிக்க முடியும் என்ற அடிப்படைதான் இது. எல்லாவகையான கல்வி முறைகளையும் போலவே..தெரிந்ததை முதலில் விளக்கித் தெரியாததை நோக்கி இட்டுச் செல்லல்(From known to unkown, from near to far) என்பது கடைப்பிடிக்கப்படுகிறது.

வழக்கமான தேர்வின் மூலம் மாணவர்களை மதிப்பிடும் முறை இதில் இல்லை. என்றாலும் ஓர் ஆசிரியர் மாணவர்களின் செயல்பாட்டை வைத்து அவர்களை மதிப்பிடுவர்.

குறைபாடுகள்:

1.நம் நாட்டைப் பொறுத்த வரை ஆரம்ப காலக் கல்விக்கு மட்டுமே பொருந்தும் இம்முறை.

2.செயல்பாட்டு முறைக் கல்வி பல நேரங்களில் முழுமை பெறுவது இல்லை.

3.சரிவர இந்தச் சூழல் அமையாத பள்ளியாக இருந்தால் குழந்தைகள் எதையும் கற்றுக் கொல்ளாமல் போகும் அபாயமுண்டு. எனவே பள்ளியை ஆய்வு செய்து சேர்ப்பது முக்கியம்.

4.ஆசிரியர்களுக்கு மதிப்பிடும் முறை சுலபம் என்றாலும் பெற்றோருக்குத் தன் குழந்தை எந்த அளவு கற்றுள்ளது என்பதைப் பல நேரங்களில் சரிவரப் புரிந்து கொள்ள முடியாமல் போவது இயல்பு.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இம்முறை 2ம் வகுப்பு வரை சரிவரும். அதன் பின் மாற்றங்கள் அவசியம் நம் கல்வி அமைப்பைப் பொருத்தவரை.

புதுகைத்தென்றல் இதை விளக்கமான தொடராகப் பதிவிடுகிறார்.

Wednesday, January 9, 2008

எது கலாசாரம்?

சமீபத்திய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சில கலவரங்களில் முடிந்தன. சில நிகழ்வுகள் சில கேள்விகள் கேட்க வைத்தன. இன்றைய காலகட்டத்தில் கலாசாரம் என்பதற்குச் சரியான விளக்கமோ, அளவுகோலோ தனியாக விதிக்க முடியாத நிலைமைதான்.அவரவர்க்கு எது சௌகரியமோ,எது பிடிக்குமோ அதுவே கலாசாரம் என்று பொத்தாம் பொதுவாக ஒரு விளக்கம் சொன்னாலும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது இதன் விளக்கம்.

கலாசாரம் அவரவர் பார்வையில், புத்தாண்டு சம்பந்தமாக..

சில ஆண்கள்: கேளிக்கைகள் என்ற பெயரில் அத்துமீறல் என்பது எங்கள் கலாசாரம்.

சில பெண்கள்: யாரை எப்படிப் பாதித்தாலும் சரி, நாங்களே பாதிப்புக்குள்ளானாலும் சரி..
எங்கள் விருப்பத்திற்கேற்ப, விருந்துக்கேற்ப ஆடை அணிந்து கலாசாரம் காப்போம்.

சில பெற்றோர்: புது வருடக் கேளிக்கைக்குப் போக வேண்டும் என்று மகள்/மகன் சொன்னால் அனுப்பி வைப்பதும்,அசம்பாவிதம் நடக்கும் போது விடுதி நிர்வாகத்தை மட்டுமே சாடுவதும் எங்கள் கலாசாரம்.

சில வாரிசுகள்: விருந்துக்குப் போவதற்குக் கணக்கில்லாமல் பொய் சொல்லிச் சென்று அப்பாவிப் பெற்றோரை முட்டாளாக்குவது எங்கள் கலாசாரம்.

சில மனைவிகள்: கணவனே கண்கண்ட தெய்வம்..அவர்கள் கூப்பிட்டால் விருந்து என்றாலும் மருந்து என்றாலும் சரியென்று சொல்வதுதான் எங்கள் கலாசாரம்.

சில கணவன்கள்: கோவிலோ, திரையரங்கோ.. எங்கே போனாலும் பெண்களுக்குப் ப்ரச்னைதான்..அதற்குப் பயந்து விருந்துகளைப் புறக்கணிக்க முடியுமா? எதற்கும் துணிந்து நிற்பதுதான் எங்கள் கலாசாரம்.

மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம்: மக்கள் கூட்டம் புத்தாண்டிற்கு அலை மோதியது. அவர்களுக்காகவே நடைசாத்தாமல் தொடர்ந்து திறந்து வைத்திருந்து காலம் காலமாகப் பாவித்து வந்த நடைமுறைகளைச் சற்றே மீறியது எங்கள் கலாசாரம். தேவைப்படின் இந்தச் சேவை கூட்ட நாட்கள் அனைத்திலும் தொடரும். ஏன், 24 மணி நேர தரிசனத்துக்கும், ஷிப்ட் முறையில் பணியாளர்கள் நியமிப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம். காசு பண்ணுவதற்காக அல்ல. கலாசாரம் காப்பதற்காக!!!

இன்னும் சில கோவில்கள்: வழக்கமாகச் செய்யும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யாமல் காசு கொடுத்தால் கடவுள் தரிசனம் என்று புதுமையிலும் புதுமை செய்து, சிறப்பு வழிபாடுக்குச் சிறப்பு ஏற்பாடு செய்வது எங்கள் புதிய கலாசாரம்.

சில பக்தர்கள்: காசும் காலமும் விரயம் செய்தாவது புத்தாண்டில் கடவுள் தரிசனத்தில் புண்ணியம் தேடுவது எங்கள் கலாசாரம். தமிழ்ப்புத்தாண்டு, சைனீஸ் புத்தாண்டு எல்லாமே சமமாகப் பாவித்துக் கொண்டாடுவது இன்னும் புண்ணியம்.

சொல்லிக் கொண்டே போகலாம்..காலத்தினால், அவரவர் வசதிக்காய் மாறுவதுதான், மாற்றப்படுவதுதான் கலாசாரம். அடுத்தவர்களையோ ஏன் தங்களையே பாதிக்காத கலாசாரத்தைப் பின்பற்றுவது பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

(பி.கு: கலாசாரம்? கலாச்சாரம்? எது சரியென்று ஒரு விவாதம் வந்து கலாசாரம் என்று சில நண்பர்கள் திருத்தினார்கள். எது சரியென்று சரிவர விளக்கம் யாரேனும் தருவீர்களா?)

Sunday, January 6, 2008

மொக்கை tag - முடிவுகள் பலவிதம்

சீனா சார் ரசிகனின் மொக்கை tag ல் என்னை இணைத்திருக்கிறார். நன்றி அவருக்கு.

இது திரைப்பட மொக்கை..ரொம்ப நாளாவே சில தமிழ்த் திரைப்படங்களோட முடிவுகள் பத்தி எழுத நினைப்பு..இப்போ எழுதலாம்..

மூன்றாம் பிறை: இன்றும் கூடப் பாதிக்கும் முடிவு..அந்தப் பாடல்களைப் பார்க்கும்போதே இன்னும் கூட முடிவுதான் நினைவுக்கு வரும்.

சிந்து பைரவி: அபத்தமான முடிவு...சிந்து சொல்வார்...இரண்டு கல்யாணம் செய்து கொண்டால் கே.பி. செஞ்சுக்கிட்டார்..நாங்களும் செஞ்சுக்குவோம் 2 கல்யாணம்னு ரசிகர்கள்
சொல்வார்கள்...ஏன்...கல்யாணம் செய்யாமல் குழந்தை பெத்துக்கிட்டதை ரசிகர்கள் பின்பற்ற மாட்டார்களா என்று தோன்றியது இந்த அபத்த முடிவைப் பார்க்கும்போது...இதே முடிவுக்கு வேறு காரணம் சொல்லியிருக்கலாம்.

சம்சாரம் அது மின்சாரம்: நச் முடிவு.

வசந்த மாளிகை, கிரீடம், முகவரி: சோகமயமான முடிவை என் போல் சந்தோஷ முடிவை விரும்பும் ரசிகர்களுக்காக மாற்றியமைத்தார்கள்.

விதி: இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றவைத்த முடிவு.

காதல்: இப்படியும் நடக்குமா என்று நெகிழ வைத்த முடிவு..

கல்லூரி: இது தேவையா என்று சலிக்க வைத்த முடிவு.

நூறாவது நாள்: எதிர்பார்க்காத முடிவு.

தாமரை நெஞ்சம்: கதாசிரியாரான நாயகி தன் முடிவையும், தன் கதை நாயகியின் முடிவையும் ஒருசேரத் தேடும்..மனம் கனக்க வைக்கும் முடிவு.

வெயில்: தம்பி உயிரோடு இருப்பதையாவது தெரிந்து கொண்டு நாயகன் இறந்திருக்கலாமே என்று ஆதங்கம் ஏற்படுத்திய முடிவு.(இதே போல்தான் கஜினி: அசின் சஞ்சய் ராமசாமி
யாரென்று அறிந்தபின் இறந்திருக்கலாம் என்று தோன்றியது.)

அவள் ஒரு தொடர்கதை, அவர்கள்: சோக முடிவுதான் என்றாலும், எதார்த்தம் என்பதால் படத்துக்கே வெற்றி தந்தது இந்த முடிவு.

சிறை: சமூகத்தையே அந்த காலத்தில் ஒரு கலக்கு கலக்கிய புரட்சிகரமான முடிவு.

புதுமைப்பெண்: வீட்டை விட்டு வெளியேறுவது புதுமை என்று காட்டிய அபத்த முடிவு.

பருத்திவீரன்: என்னவென்று விவரிக்க இயலாத உணர்வை ஏற்படுத்திய முடிவு.

சேது: வாய்க்குள் கையைவிட்டு இதயத்தைத் தொட்ட முடிவு.

யப்பாடி..இன்னும் நிறைய இருந்தாலும் இப்போதைக்குப் போதும்னு நினைக்கிறேன். அடுத்து நான் இணைப்பவர்கள்:

1. கோவி.கண்ணன்
2. வவ்வால்
3. கண்மணி (மதுரைக்காரவங்களுக்கு யாருமே எதிர்க்கட்சி கிடையாது.)
4. காட்டாறு

Friday, January 4, 2008

தகப்பன் சாமிகள்

உறங்கும் மனங்களைத்
தட்டியெழுப்பும் பிஞ்சுக்கரங்கள்..

பிள்ளையார் சுழிகள்
பிள்ளைகள் இட்டு நிற்க
அடியொற்றும் பெரியவர்கள்...

காரியத்தின் வீரியத்தில்
காரிருள் களைந்து
கார்த்திகை தீபம்
ஏற்றி நிற்கும்
சாதனைச் சிறார்கள்.

பள்ளிப் பாடத்தில்
பரீட்சைகள் பாக்கி
என்றாலும்
வாழ்க்கைப் பாடத்தில்
பட்டங்கள் வென்றவர்கள்.

பூக்களின் சுவடுகளைப்
பின்பற்றும் புயல்கள்
இது
சத்தமின்றிப்
பூக்கள் செய்த புரட்சி!

Child is the Father of Man
Wordsworth இன் மொழியை
மெய்ப்பித்த‌
தகப்பன் சாமிகள்!

வருங்காலத் தூண்களின்
அஸ்திவாரம் ஆழத்தில்..
எதிர்கால இந்தியாவுக்கான‌
நமது நம்பிக்கைகள்
இமயத்தின் சிகரத்தில்.

(கோபிநாத்தின் வலையில் தரப்பட்ட காட்சிப்பதிவுக்கான கவிதை இது..
http://gopinath-walker.blogspot.com/2007/12/blog-post_19.html
சாலையின் குறுக்கே விழுந்து கிட‌க்கும் ம‌ர‌த்தை அல‌ட்சிய‌ம் செய்து போக்குவ‌ர‌த்து நெரிச‌லிலும் பெரிய‌வ‌ர்க‌ள் காத்திருக்க, சில‌ சிறுவ‌ர்க‌ள் அம்ம‌ர‌த்தைப் பிஞ்சுக்க‌ர‌ங்க‌ளால்
அப்புற‌ப‌டுத்துவ‌து க‌ண்டு பெரிய‌வ‌ர்க‌ளும் தொட‌ரும் காட்சி.)