Tuesday, March 15, 2011

சில நேரங்களில் சில உணர்வுகள்

சுனாமியாஞ்சலி

அலை அழகு
அமைதி அழகு
மாறும் நிறம் அழகு
உதிக்கும் சூரியன் அழகு
மறையும் சூரியன் அழகு
வேக நடை அழகு
மெது ஓட்டம் அழகு
மணல் கோபுரம் அழகு
தளும்பும் மீன்படகு அழகு.

ஆனால்
சுனாமி...சுனாமி..
அழகை மறக்கவைத்த ஆபத்து.

சீறும் சுனாமியே
சீக்கிரம் அமைதியாகுக!

அணு உலைகள் வெடிப்பு
உலகுக்கு அபாய எச்சரிப்பு..

இயற்கையுடன் பகைக்கின்
வேரோடு கெடும்..

பொன்னியின் செல்வன்

அவ்வப்போது அறிவிப்புகள் மாறி மாறி வந்தாலும், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்பது மிகவும் மகிழ்ச்சியானதொரு தகவல். விஜய், அனுஷ்கா, ஆரியா மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அனுஷ்கா குந்தவை, விஜய் ஜோடி என்கிறார்கள். அப்படியானால் விஜய்தான் வந்தியத்தேவன்...மிளிர்வார் என்றுதான் நினைக்கிறேன்..அனுஷ்கா வேடத்துக்குப் பொருத்தம்தான்..பாத்திரத்தில் எவ்வளவு தூரம் ஜொலிப்பார்?! குந்தவையின் குறும்பு வருமா? மிடுக்கு வருமா? கம்பீரம் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

விஷால், விக்ரம் பேச்சையே காணோம் இப்போது..


மகேஷ் பாபு, ஆதித்த கரிகாலன்...சூர்யா ராஜராஜ சோழன் என்றால்..ஆரியா யார்?

நந்தினி வேடம் யாருக்கு?

எப்போது படம் வரும் எப்போது பார்ப்போம் என்றிருக்கிறது..

வரும்...ஆனா வராது....

மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைக்காலங்களில் நிலவி வரும் சூழல், சவூதி அரேபியாவிலும் சூடு பிடிக்கக்கூடும் என்ற நிலையில்..மார்ச் 11 கிளர்ச்சி மற்றும் ஊர்வலங்கள் எதிர்பார்க்கப்பட்டன....கண்டிப்பாக இங்கேயும் ப்ரசனை வரும் என்றும், அமைதியை விரும்பும் நாடு என்பதால் அப்படி ஏதும் வராது என்றும் எதிர்பார்க்கப்பட்டது..மார்ச் 11 அமைதியாகவே போனது..

சவூதி இளவரசர் அல் வாலித் சொன்னது போல் இது 'tempest in a tea cup' ... 'Saudi is Saudi ..it is no Egypt, no Tunisia, no Libya'...அமைதி இப்போதைக்கு நிச்சயம்...

எது எப்படியோ காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

சின்னதாய் ஓர் இந்தியப் பயணம்

மார்ச் 16-30 இந்தியப்பயணம்...மிகவும் குறுகிய காலம்..பரபரவென்று பறந்து கொண்டேயிருந்தாலும் ஒவ்வொரு நொடியும் ரசித்து அனுபவிக்கப் போகிறேன்..

குறளின் குரல் - 24

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 04. அறன் வலியுறுத்தல்
குறள் எண்: 37

அறத்தாற் றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.


'அறத்து ஆறு இது' என வேண்டா; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தானிடை.

விளக்கம்:

பல்லக்கைச் சுமப்பவனுக்கும், அதில் அமர்ந்துள்ளவனுக்கும் இடையே உள்ள ஏற்றாத் தாழ்வு / நிலை வேறுபாடு அறத்தின் வழிப்பட்டது எனக் கருதக் கூடாது.

பல்லக்கைத் தூக்குகின்றவன் பாவம் செய்தவன்; பல்லக்கில் அமர்ந்திருப்பவன் புண்ணியம் செய்தவன் என்று கூறுவர். அவரவர் முன் செய்த வினைப்பயன் என்றும் கூறுவர். இதுதான் அறத்தின் வழி என்ற தவறான முடிவுக்கும் வருவர். இதுதான் அறத்தின் வழி என்று கூறுவது தேவையற்றது. ஏனெனில் அவ்வாறு கூறுவது தவறானது.

பல்லக்கைச் சுமப்பவனுக்கும், அமர்ந்திருப்பவனுக்கும் உள்ள வேறுபாடு அவரவர் தொழில் வேறுபாட்டால் அல்லது செல்வநிலை வேறுபாட்டால் உருவாகின்ற ஒன்றாகும். அதனை அறத்தின் காரணமாக உருவான வேறுபாடு என்பது தவறான கூற்றாகும்.

சிவிகை - பல்லக்கு

---------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 54. பொச்சாவாமை (மறதி இல்லாமை)
குறள் எண்: 539

இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.


இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக - தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

விளக்கம்:

தமக்குக் கிடைக்கும் வெற்றியின் களிப்பினால் மகிழ்ச்சியில் மூழ்கி அதில் மயங்கும் போது தம்மை, தம் நிலையை மறந்து செருக்கு கொள்ளும் வாய்ப்புண்டு. அவ்வாறு வெற்றி தந்த மயக்கத்தினால் செயல் மறந்து நிற்கும் வேளை, இதுபோல் முன் வெற்றிக் களிப்பில் மிதந்து கெட்டழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் கெட்டழிந்ததற்கு இச்செருக்கும் முக்கிய காரணம் என்றுணர்ந்து வெற்றிக் களிப்பில் நிலை மறக்காது கவனத்துடன் செயல்பட வேண்டும்.

உள்ளுக - நினைக்க
மைந்துறும் - மறந்து செயல்படும்

-----------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 58. கண்ணோட்டம் (கனிவான உள்ளம்)
குறள் எண்: 580

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.


பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்.

விளக்கம்:

எல்லோரும் மதித்துப் போற்றத்தக்க நாகரிகத்தை வேண்டுபவர்கள், தம்மோடு பழகியவர் தமக்கு நஞ்சு இடுவதை நேரில் பார்த்துக் கொண்டிருந்த போதும், அதை மறுக்காமல் உண்டு அமைதியாக இருப்பார்கள். அவர்களிடம் இருக்கும் கண்ணோட்டம் என்ற தன்மையால் இத்தகைய அமைதி கைகூடி வருகிறது.

தமக்குக் கெடுதல் செய்தவரிடத்தும் கனிவான உள்ளத்துடன் நடந்து கொள்வதே நாகரிகம் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

-----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 09. விருந்தோம்பல்
குறள் எண்: 85

வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்.


வித்தும் இடல்வேண்டும் கொல்லோ - விருந்து ஓம்பி
மிச்சின் மிசைவான் புலம்?

விளக்கம்:

விருந்தினருக்கு முதலில் உணவளித்துவிட்டு, பின் மிச்சமிருப்பதைத் தான் உண்ணுபவனின் நிலத்தில் விதை விதைக்கவும் வேண்டுமோ? தேவையில்லை. தன்னாலேயே நிலம் செழித்து வளரும்.

'அவன் செய்த நல்ல செயல்களுக்கு அவன் நிலம் தானாகவே விளையும்' என்ற உலக வழக்கை ஒட்டி வருகின்றது இக்கருத்து.

வித்து - விதை
மிச்சில் - எஞ்சிய பொருள், எச்சில், கரி
மிசைதல் - உண்ணுதல், நுகர்தல்
மிசைவான் - உண்ணுபவன்
--------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 126. நிறை அழிதல்
குறள் எண்: 1258

பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.


பல மாயக் கள்வன் பணிமொழி அன்றோ - நம்
பெண்மை உடைக்கும் படை!

விளக்கம்:

பல மாயங்களைச் செய்துவரும் கள்வர்தாம் காதலர். அவர் பணிந்து, தாழ்ந்து, மென்மையாய்ப் பேசும் மொழி, நம் மன அடக்கம் என்னும் பெண்மையின் உறுதியான கோட்டையை உடைத்துச் சிதைக்கவல்ல படையன்றோ?

நிறை - மன அடக்கம்
-----------------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 68. வினை செயல்வகை
குறள் எண்: 679

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல்.


நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

விளக்கம்:

நம் நண்பர்களுக்கு நல்ல உதவிகள் செய்வது நன்று. என்றாலும், அதைக்காட்டிலும் விரைந்து செய்ய வேண்டிய செயல் ஒன்று உண்டு; - தமக்குப் பகையாய் நிற்பவராகவே இருந்தாலும் அவருடன் பழகி நட்புக் கொள்வது, காலம் தாழ்த்தாது மிக விரைவாகச் செய்து முடிக்க வேண்டிய செயலாகும். அரசியல் / வாழ்க்கைத் தந்திரங்களுள் இதுவும் ஒன்று.

எப்போதும் அரசியலுக்கும் பொருந்தும் இத்தந்திரம், பல சமயங்களில் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

ஒட்டார் - பகைவர்

Thursday, March 10, 2011

கண்ணாடிப்பெட்டியும் கலிஃபோர்னியாவும் காத்திருத்தலும்


ஆச்சு...ராமநாதன் போய்ச் சேர்ந்து சரியா இருபத்து நாலு மணி நேரம் முடியப் போகிறது...இறுதிக்காரியங்கள் முடிந்திருக்க வேண்டிய நிலையில் கலிஃபோர்னியாவிலிருந்து வரவேண்டிய மூத்த மகன் கண்ணனுக்காய்க் காத்திருக்கிறார்கள்...

மதுரை மையப்பகுதிலிருந்து சற்றே ஒதுக்குப்புறமான ஐயர் பங்களா பகுதியில் இருந்தது ராமநாதன் வீடு..ஒரு மகன் கலிஃபோர்னியாவில், இரண்டாவது மகன் பெங்களூரில், மூன்றாவது பெண் சென்னையில்...
இவ்வீட்டில் ராமநாதனும், அவர் மனைவி பரிமளாவும் மட்டுமே வாசம்...

பெரிய தோட்டம்...அதை மொத்தமாக அடைத்துப் போடப்பட்டிருந்த ஷாமியானாப் பந்தல்..வீட்டுக்கு வெளியே அகலமான தெரு என்பதால் நல்ல வேளையாக உட்காரும் இடத்துக்குப்பஞ்சமில்லை...

முருகனும், அவன் மனைவியும் எல்லாவேலைகளையும் முன் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தனர்..முருகன் பரிமளாவுக்குத் தம்பிமுறை ...கிராமத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த அவர்களைத் தங்களுக்குத் துணைக்காக மதுரைக்கு வரவழைத்துக்கொண்டார்கள். அவர்கள் பிள்ளைகள் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.

சட்டென்று ஒரு நாள் இரவு வந்த நெஞ்சுவலியில் தூக்கத்திலேயே போய்விட்டார் ராமநாதன்..முதல் சில மணி நேரங்கள் குளிப்பாட்டுதல், சங்கு சவுண்டிக்கு ஆள் சொல்லுதல், கண்ணாடிப்பெட்டி ஏற்பாடு, ஆர்ப்பட்டமான அழுகை என்று ஆரம்பித்தது..தொடர்ந்தது...

*********

ராஜா..அப்பா போய்ட்டாருடா...பெங்களூரிலிருந்து வந்துவிட்டது இரண்டாவது மகன் ராஜேஷ் குடும்பம்...அவனும் வாய்பொத்தி அழுது, அம்மாவை அணைத்து ஆறுதல் சொல்லி அடுத்தடுத்த ஏற்பாடுகளைக் கவனிக்கலானான்.

இந்தா இருக்கு பெங்களூரு..இவன் வரவே இவ்வளவு நேரமாகிவிட்டதே...கண்ணன் எப்போ வரப்போறானோ...

ஃபிளைட் ஏறிட்டானாம்...மாறி மாறி வரணுமில்லியா...லாங் ஜர்னி....நாளைக்குச் சாயந்திரம் வருவானாம்...

போன மாசம் என் நண்பன் செத்தப்போ அவன் மகன் துபாய்லருந்துதான்ன்னு நெனக்கிறேன் ..அவன் உடனே வந்துட்டானே...

துபாய் பக்கம்யா...இது ரொம்பத் தூரம்...பெருசாச் சொல்றியே..அதுவும் சரியான கிழமைல இங்க செத்திருக்கணும்..அவனுக்கு லீவு நாளாப்பாத்துச் சாகணும்..இல்லேன்னா வர்றது கஷ்டம்.. என் பெரியம்மா இறந்தப்போ, சவூதிலருந்து அவங்க பையனால வர முடியல...பாஸ்போர்ட் புதுப்பிச்சு வந்திருக்கு...இவங்க புதன்கிழமை செத்துட்டாங்க...வியாழன் வெள்ளி லீவு...அவன் வரவும் ரெண்டு நாளாச்சு..

வெளிநாட்டச் சொல்றீங்களே...இந்தாருக்கு டில்லி நம்ம நாட்லயே....பிரகாஷ் அவங்க அப்பா சாவுக்கு வந்தப்ப ஃபிளைட் ஸ்ட்ரைக் அது இதுன்னு மும்பைல வந்து மாட்டிட்டு இங்க வரவே ரெண்டாவது நாளாயிடுச்சே...

இந்த விஷயத்துல ஒண்ணும் சொல்ல முடியாது...அவங்க அவங்க நேரம் காலம்..

***********

பூமா, ராமநாதன் மகளும் குடும்பத்தோடு வந்து சேர்ந்தாள்...அழுகை, ஆர்ப்பாட்டம் ஓய்ந்த பின் அவள் கணவன் அவளை ஜாடை செய்து வெளியே அழைத்தான்..

பூமா...அப்பா, அம்மாவை இங்க தங்க வைக்க முடியாது...பக்கத்துல நல்ல ஹோட்டல் விசாரி..அவங்களைப்போய்த் தங்க வச்சுட்டு வந்துர்றேன்..கடைசி நேரம் அவங்க வந்தாப்போதும்...

சரி..முருகன் மாமாவைக் கேட்டு ஏற்பாடு பண்ணிக்கோங்க..

அவனுக்கு மதுரை ஒன்றும் தெரியாத ஊரில்லை..இருந்தாலும் மனைவியிடம் சொன்னால், அவள் வீட்டுச் செலவாகிவிடும் அல்லவா!

***************

ஏ...காப்பி குடுப்பா...சர்க்கரை போடாதே...காபியை வாங்கிக் குடித்துக் கொண்டே வந்தார் உறவினர் ஒருவர்..கன்னியப்பன் கேட்டரிங் சர்வீசாரை வரவழைத்து வந்திருந்தவர்களுக்குத் தாகசாந்தி செய்வித்தார்கள்..

எப்போதும் காப்பி, உணவு வேளைகளில் சித்ரான்னம், சப்பாத்தி, கறி, இட்லி, சட்னி, சாம்பார் என்று ஒரு பக்கம் வந்தவர் பசி ஆறிக்கொண்டிருந்தது..

என்னங்க...இந்தக் கேட்டரிங் சர்வீஸ் நம்பர் வாங்கி வச்சுக்கோங்க...நாளைப்பின்ன நமக்கு உபயோகப்படும்...ஒரு மருமகளின் பொறுப்பான கவலை..அவள் கவலை அவளுக்குத்தானே தெரியும்...வயதான மாமனார், மாமியார் அவர்கள் பொறுப்பில் இருக்க, மூத்தார் குடும்பம் சிங்கப்பூரில்...


**************

யப்பப்பா...இழவு வீட்டில் இத்தனை வேலைகள் இருக்கிறதா...பார்த்துப் பார்த்து மாய்ந்து போனது கார்த்திக் மனம்...ராமநாதனுக்குத் தூரத்து சொந்தம்..கார்த்திக் ஓர் இந்தக்கால இளசு ...வேலையில்லாப் பட்டதாரி..

பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு எல்லார் வீட்லயுமா ஒரு முருகன் இருக்க முடியும்..

கண்ணாடிப்பெட்டி, சங்கு, சவுண்டி, கேட்டரிங், பந்தல், விளக்கு, மின்சாரம் போனால் கண்ணாடிப்பெட்டி இயங்க ஜெனரேட்டர், வருவோர் போவோர் முறை செய்ய ஜவுளி வாங்கப் போய் வர ஆட்டோ ஏற்பாடு, பட்டாசு, போஸ்டர், மேளம், ஒயிலாட்டம், ஒப்பாரி ஏற்பாடு, இறுதி ஊர்வல ஏற்பாடு, மயான ஏற்பாடு...இன்னும் இன்னும்...

போனில் நண்பனிடம் பேசினான் கார்த்திக்...டே மச்சி...கல்யாண வீடு மாதிரியே சாவு வீட்டில் கூட எவ்ள வேலைடா...பேசாம நாம இதுக்காக ஒரு காண்டிராக்டிங் சர்வீஸ் ஆரம்பிச்சுரலாம்...சேவை செஞ்ச புண்ணியமும் சேரும்...வேலை கிடச்ச மாதிரியும் இருக்கும்..
மச்சி..சிரிக்காதடா..சீரியஸாச் சொல்றேன்..

**********

உலகக் கோப்பை கிரிக்கெட் பிரியர்கள் வேறு..அவ்வப்போது போனில் ஸ்கோர் கேட்டார்கள் ஆரம்பத்தில்..பின் மெதுவாக ராஜேஷிடம் சொல்லி டிவியைத் தோட்டத்துப் பக்கம் கொண்டுவரச்செய்து விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்தார்கள்...நடுநடுவில் கூட்டணிக் களேபரத்துக் குளறுபடிச் செய்திகள் வேறு...அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற அலசல்கள், உரசல்கள் வேறு..

அய்யோ...கோபி, மகாவுக்கு ராமேஸ்வரத்தில் கல்யாணம் ஆச்சோ இல்லியோ தெரியலியே...ஒரே கலாட்டாவா இருந்துச்சு...ஒரு மனைவி அங்கலாய்க்க..

கணவன் அப்பாவியாய்ச் சொன்னான்........போன் போட்டுக் கேட்க வேண்டியதுதானே..

அய்யோ..அய்யோ...இது நாதஸ்வரம் சீரியல் கோபி, மகா...உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது..

ரொம்ப அவசியம்...

ஆமா எவனோ எவனோடயோ ஆடறான்...இந்தியா கூட இல்ல...உங்களுக்கு மட்டும் சாவு வீட்லயும் கிரிக்கெட்டும், அரசியலும் கேக்குதோ...ஒரு நிமிஷம் சானல் மாத்தி வச்சா என்ன குறஞ்சா போய்டுவீங்க...

************

வீட்டுக்குள்ள இருக்க முடியல...என்னதான் ஐஸ் பொட்டின்னாலும் சரியா வராது போலிருக்கு...ஏதோ வாசனை வர மாதிரி இருக்கு..இந்தக் கண்ணன் எப்போதான் வரப்போறானோ..

பிள்ளைகள் தனியா விட்டுட்டு வந்திருக்கேன்....

ஆபிசில் ஆடிட் நடக்குது...லீவு போட முடியாது..
பெரியப்பா பிள்ளை கல்யாணத்துக்குப் போகணும்..

காரியத்தவாது பத்து பதினைஞ்சு நாள்னு நீட்டிட்டுப் போகாம உடனே சட்டுப் புட்டுன்னு முடிச்சா நல்லாருக்கும்..அதுக்கு வேற லீவு போட்டுட்டு இவ்ள தூரம் வர முடியாது...

சான்ஸே இல்ல..காரியத்துக்குத்தும் சேத்துதான் இங்க உக்காந்தாச்சே...காரியத்துக்கு வேற எங்க வர்றது..

இப்படி அவரவர் வேலை அவரவர்க்கு...

************
இரண்டாம் நாள் இரவு வந்து சேர்ந்தான் கலிஃபோர்னியாக் கண்ணன்...

ஆமா...அவன் மட்டும் வந்திருக்கான்..பொண்டாட்டி பிள்ளைகளைக் காணோம்...

பிள்ளைகளுக்குப் பரீட்சை...அவளுக்கு லீவு கிடைக்கலியாம்..போன மாசம்தான் தங்கச்சி கல்யாணத்துக்கு வந்துட்டுப் போயிருக்கா...

*************

ஒரு வழியாக ராமநாதன் இறந்து ஐம்பத்தைந்து மணிநேரங்கள் கடந்த நிலையில் இறுதிக்காரியங்கள் நடந்தேறின. நெஞ்சு வலியால் ஒரு முறை செத்த அவர், சூழ்நிலைகளால் மீண்டும் மீண்டும் சாகடிக்கப்பட்டார்.

கண்ணன் கிளம்பும்போது அம்மா சொன்னாள்: நான்லாம் செத்தா உடனே எல்லாத்தையும் முடிச்சுடுங்கடா....அவங்க அவங்க சவுகரியத்துக்குப் பதினோராம் நாள் காரியத்துக்கு வந்தால் போதும்....யாருக்கும் கஷ்டம் வேணாம்..

குறளின் குரல் - 24

பால்: பொருட்பால் இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 72. அவை அறிதல்
குறள் எண்: 718

உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
பாத்தியு னீர்சொரிந் தற்று.


உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்தற்று.

விளக்கம்:

பிறர் உணர்த்தத் தேவையின்றித் தாமே தம் திறத்தால் உணர்ந்து கொள்ளும் ஆற்றலுடையவர் முன் ஒன்றைப் பேசுதல், தானாகவே வளரும் பயிர்கள் நின்ற பாத்தியில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.

-------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 101. நன்றி இல் செல்வம்
(நன்மை இல்லாத செல்வம்)
குறள் எண்: 1006

ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்.


ஏதம் பெருஞ்செல்வம் - தான் துவ்வான், தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான்.

விளக்கம்:

தானும் அனுபவிக்காமல், தேவைப்படும் பிறர்க்கும் அவர் வேண்டுவது ஒன்றைக் கொடுத்து உதவும் இயல்பு இல்லாதவன், தான் பெற்ற பெருஞ்செல்வத்திற்குத் தானே கேடாவான். அச்செல்வமும் அவனுக்கும், பிறர்க்கும் பயன் இன்றியே கெட்டழியும். பயன்படுத்தப்பாடாத கனி வீணாகக் கெட்டுத்தான் அழியும். அதுபோல் உதவும் குணம் இல்லாதவன் பெற்ற செல்வமும் அவனுக்கும், பிறருக்கும் நன்மை தராமல் வீணாக அழியும்.

ஏதம் - துன்பம்,குற்றம்,கேடு

-----------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 80. நட்பாராய்தல்
குறள் எண்: 796

கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்.


கேட்டினும் உண்டு ஓர் உறுதி, கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

விளக்கம்:

ஒருவனுக்குத் துன்பம் வந்த போதும், அத்துன்பத்தால் ஒரு நல்ல பயனுள்ளது. அது தன்னைச் சூழ்ந்துள்ள நட்பின் தன்மையைப் புரிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பாகும். நண்பர்கள் தன்னிடம் எந்த அளவு அன்புடையவர்களாய் இருக்கிறார்கள் என்று நன்றாக அளந்து அறிய ஓர் அளவுகோல் ஆகும் அத்துன்பம்.

துன்பம் வரும்போது, சுற்றியுள்ளவர் ஒவ்வொருவராக நீங்குவர். உண்மையான அன்புடையவரே இறுதி வரை உடன் நிற்பர். இங்ஙனம் ஒருவனுக்கு வரும் துன்பம் உண்மையான அன்பை அறிந்து கொள்ளப் பயன்படுகிறது.

------------------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 13. அடக்கமுடைமை
குறள் எண்: 130

கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.


கதம் காத்து, கற்று, அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

விளக்கம்:

கடுங்கோபத்தைக் காத்து, கற்கவேண்டியவற்றைக் கற்று அறிந்து, அதனால் வரக்கூடிய ஒருவகையான தற்பெருமையையும் அடக்கி ஆள வல்லவராய் இருந்து தன் கடமைகளைச் சரிவரச் செய்யும் தன்மை உடையவராயின், அறம் அவர் வழியைத் தேடிச் சென்று, அவரை அடைய ஏற்ற சமயம் பார்த்து நிற்கும். இவ்வாறு நல்ல தன்மைகள் பெற்று அதன் வழி நடந்தாலே போதும். அறத்தை நாம் தேட வேண்டியதில்லை. அதுவே தக்க சமயத்தில் நம்மைத் தேடி வந்து வேண்டியவற்றை எல்லாம் தந்து சிறப்பிக்கும்.

செவ்வி - ஏற்ற சமயம்

--------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 71. குறிப்பறிதல்
குறள் எண்: 708

முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி
யுற்ற துணர்வார்ப் பெறின்.


முகம் நோக்கி நிற்க அமையும் - அகம் நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்.

விளக்கம்:

பிறர் உள்ளத்தைக் குறிப்பால் உணர்ந்து கொள்ளும் வல்லமை உடையவரைப் பெற்றால், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நின்றாலே போதும். அறிய வேண்டிய செய்தியைத் தாமாகாவே அறிந்து கொள்ள முடியும். ஒருவருக்கு ஒருவர் வார்த்தைப் பரிமாற்றம் எதுவும் வேண்டியதில்லை. முகத்தைப் பார்த்து, குறிப்புகள் உணர்ந்து, செய்தியைப் புரிந்து கொள்ள முடியும்.

-----------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 115. அலர் அறிவுறுத்தல்
குறள் எண்: 1144

கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற்
றவ்வென்னுந் தன்மை யிழந்து.


கவ்வையான் கவ்விது, காமம்; அது இன்றேல்,
தவ்வென்னும், தன்மை இழந்து.

விளக்கம்:

ஊரார் எம் காதலைப் பழித்துப் பேசுவதால் என்னுடைய காதல் உணர்வானது மேலும் மேலும் வளர்ந்து இன்பம் தருகிறது. அந்தப் பழிச்சொல் மட்டும் இல்லையென்றால் இன்பம் தரும் தன் தனித்தன்மையை இழந்து, அக்காதல் உணர்வு குறைந்து சுவையற்றதாகிவிடும்.

பழிச்சொல்லும் காதல் உணர்வை வளர்த்து இன்பம் தரும் விந்தை காதலில் மட்டுமே சாத்தியம்.

அலர் - மகிழ்ச்சி, மலர்ந்த பூ, நீர், மஞ்சள், மிளகுக்கொடி, (இங்கே) பழிச்சொல்

உடன்போக்காகத் தலைவி தலைவனுடன் சென்ற பிறகு அவளது களவு வாழ்க்கையைப் பற்றி அயலவர் பலரும் அறிந்து கொள்வர். அதன் தொடர்ச்சியாய் அது பற்றியே பேசுவர். அதற்கு அலர் என்று பெயர்.

கவ்வை - ஒலி, துன்பம், பொறாமை, கவலை, கள், செயல், எள் இளங்காய், ஆயிலியம், துன்பம், பழிச்சொல்

தவ்வுதல் - குறைதல்

Monday, March 7, 2011

குறளின் குரல் - 23

பால்: அறத்துப்பால் இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 15. பிறன் இல் விழையாமை
குறள் எண்: 144

எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந்
தேரான் பிறனில் புகல்.


எனைத் துணையர் ஆயினும் என்னாம் - தினைத் துணையும்
தேரான், பிறன் இல் புகல்?

விளக்கம்:

வரக்கூடிய இழிவைத் திணையளவும் சிந்திக்காமல் பிறன் மனைவியை விரும்புபவன், எத்தனை பெருமை வாய்ந்தவனாய் இருந்து என்ன பயன்? தீய எண்ணமுடையவன் ஆதலால் அவன் பெருமை அனைத்தும் இழந்து, இழிவையே அடைவான்.

------------------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 98. பெருமை
குறள் எண்: 972

பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா,
செய்தொழில் வேற்றுமையான்.

விளக்கம்:

பிறப்பினால் அனைவரும் ஒத்த தன்மையுடையவர்களே. அவரவர் செய்யும் தொழில் காரணமாய் வேறுபட்ட தன்மையுடையவர்களாக இருக்கின்றார்கள். அவரவர் செய்கின்ற தொழில் வேறுபாடுகள் காரணமாய் அவரவருடைய சிறப்புநிலை வேறுபட்டு அமைகின்றது.

எல்லாத் தொழில்களுக்கும், அது அதற்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை. அது தரக்கூடிய வசதி வாய்ப்புகளின் காரணமாக மக்களின் சிறப்புநிலை வேறுபட்டு அமைகின்றது.

------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 36. மெய்யுணர்தல்
குறள் எண்: 354

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.


ஐஉணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே-
மெய் உணர்வு இல்லாதவர்க்கு.

விளக்கம்:

மெய், வாய், கண், மூக்கு, செவி - ஆகிய ஐம்பொறிகளின் மூலம் அறியப்படும் ஐம்புலன்களைத் தன்வயப்படுத்திக் கட்டுக்குள் வைத்திருந்தாலும், உண்மைப் பொருளை உணரும் ஆற்றல் இல்லாதவர்களுக்கு, ஐம்புலன்களின் உணர்வாற்றலால் ஒரு பயனும் இல்லை. ஐம்புலன்களின் உணர்வாற்றலை விட, மெய்யுணர்வின் அறிவாற்றலே வலிமை வாய்ந்தது.

-------------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 93. கள்ளுண்ணாமை
குறள் எண்: 926

துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.


துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர்; எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்.

விளக்கம்:

நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்கள், உயிருள்ளவர்களே என்றாலும், அந்த நிலையில் அவர்கள் தோற்றத்தால் இறந்தவரேயன்றி வேறல்லர். அது போல எப்போதும் கள் குடிப்பவர்கள், நஞ்சினை உண்டவரேயன்றி வேறல்லர்.
---------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 118. கண் விதுப்பு அழிதல்
(காணும் துடிப்பால் கண் வருந்துதல்)
குறள் எண்: 1176

ஓஓ வினிதெ யெமக்கிந்நோய் செய்தகண்
டாஅ மிதற்பட் யது.


ஓ, இனிதே! எமக்கு இந்நோய் செய்த கண்
தாஅம் இதற்பட்டது.

விளக்கம்:

எமக்கு இக்காமநோய் வரச் செய்தவை எம் கண்கள்தான்..இன்று அக்கண்கள் தலைவனைக் காணாமல், அவர்தம் பிரிவின் துயரால் வருந்தி அழுகின்றன...ஓ, மிகவும் இனிது இனிது! எமக்குத் துன்பம் தந்த கண்கள் தாமும் துன்புறட்டும். துன்பம் செய்தவர்க்குத் துன்பம் நேர்ந்தால் மகிழ்ச்சிதானே!

------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 05. இல்வாழ்க்கை
குறள் எண்: 48

ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து.


ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

விளக்கம்:

மற்றவர்கள் அனைவரும் அவரவர் நெறிப்படி முறையாக வாழத் துணைநின்று, தானும் அறநெறியில் சிறிதும் தவறாது வாழ்பவனின் இல்வாழ்க்கை, துன்பங்களைத் தாங்கித் தவம் செய்தவரின் தவத்தைவிட மிக்க வலிமையுடையதாகும்.