Thursday, March 10, 2011

குறளின் குரல் - 24

பால்: பொருட்பால் இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 72. அவை அறிதல்
குறள் எண்: 718

உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
பாத்தியு னீர்சொரிந் தற்று.


உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்தற்று.

விளக்கம்:

பிறர் உணர்த்தத் தேவையின்றித் தாமே தம் திறத்தால் உணர்ந்து கொள்ளும் ஆற்றலுடையவர் முன் ஒன்றைப் பேசுதல், தானாகவே வளரும் பயிர்கள் நின்ற பாத்தியில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.

-------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 101. நன்றி இல் செல்வம்
(நன்மை இல்லாத செல்வம்)
குறள் எண்: 1006

ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்.


ஏதம் பெருஞ்செல்வம் - தான் துவ்வான், தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான்.

விளக்கம்:

தானும் அனுபவிக்காமல், தேவைப்படும் பிறர்க்கும் அவர் வேண்டுவது ஒன்றைக் கொடுத்து உதவும் இயல்பு இல்லாதவன், தான் பெற்ற பெருஞ்செல்வத்திற்குத் தானே கேடாவான். அச்செல்வமும் அவனுக்கும், பிறர்க்கும் பயன் இன்றியே கெட்டழியும். பயன்படுத்தப்பாடாத கனி வீணாகக் கெட்டுத்தான் அழியும். அதுபோல் உதவும் குணம் இல்லாதவன் பெற்ற செல்வமும் அவனுக்கும், பிறருக்கும் நன்மை தராமல் வீணாக அழியும்.

ஏதம் - துன்பம்,குற்றம்,கேடு

-----------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 80. நட்பாராய்தல்
குறள் எண்: 796

கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்.


கேட்டினும் உண்டு ஓர் உறுதி, கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

விளக்கம்:

ஒருவனுக்குத் துன்பம் வந்த போதும், அத்துன்பத்தால் ஒரு நல்ல பயனுள்ளது. அது தன்னைச் சூழ்ந்துள்ள நட்பின் தன்மையைப் புரிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பாகும். நண்பர்கள் தன்னிடம் எந்த அளவு அன்புடையவர்களாய் இருக்கிறார்கள் என்று நன்றாக அளந்து அறிய ஓர் அளவுகோல் ஆகும் அத்துன்பம்.

துன்பம் வரும்போது, சுற்றியுள்ளவர் ஒவ்வொருவராக நீங்குவர். உண்மையான அன்புடையவரே இறுதி வரை உடன் நிற்பர். இங்ஙனம் ஒருவனுக்கு வரும் துன்பம் உண்மையான அன்பை அறிந்து கொள்ளப் பயன்படுகிறது.

------------------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 13. அடக்கமுடைமை
குறள் எண்: 130

கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.


கதம் காத்து, கற்று, அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

விளக்கம்:

கடுங்கோபத்தைக் காத்து, கற்கவேண்டியவற்றைக் கற்று அறிந்து, அதனால் வரக்கூடிய ஒருவகையான தற்பெருமையையும் அடக்கி ஆள வல்லவராய் இருந்து தன் கடமைகளைச் சரிவரச் செய்யும் தன்மை உடையவராயின், அறம் அவர் வழியைத் தேடிச் சென்று, அவரை அடைய ஏற்ற சமயம் பார்த்து நிற்கும். இவ்வாறு நல்ல தன்மைகள் பெற்று அதன் வழி நடந்தாலே போதும். அறத்தை நாம் தேட வேண்டியதில்லை. அதுவே தக்க சமயத்தில் நம்மைத் தேடி வந்து வேண்டியவற்றை எல்லாம் தந்து சிறப்பிக்கும்.

செவ்வி - ஏற்ற சமயம்

--------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 71. குறிப்பறிதல்
குறள் எண்: 708

முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி
யுற்ற துணர்வார்ப் பெறின்.


முகம் நோக்கி நிற்க அமையும் - அகம் நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்.

விளக்கம்:

பிறர் உள்ளத்தைக் குறிப்பால் உணர்ந்து கொள்ளும் வல்லமை உடையவரைப் பெற்றால், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நின்றாலே போதும். அறிய வேண்டிய செய்தியைத் தாமாகாவே அறிந்து கொள்ள முடியும். ஒருவருக்கு ஒருவர் வார்த்தைப் பரிமாற்றம் எதுவும் வேண்டியதில்லை. முகத்தைப் பார்த்து, குறிப்புகள் உணர்ந்து, செய்தியைப் புரிந்து கொள்ள முடியும்.

-----------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 115. அலர் அறிவுறுத்தல்
குறள் எண்: 1144

கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற்
றவ்வென்னுந் தன்மை யிழந்து.


கவ்வையான் கவ்விது, காமம்; அது இன்றேல்,
தவ்வென்னும், தன்மை இழந்து.

விளக்கம்:

ஊரார் எம் காதலைப் பழித்துப் பேசுவதால் என்னுடைய காதல் உணர்வானது மேலும் மேலும் வளர்ந்து இன்பம் தருகிறது. அந்தப் பழிச்சொல் மட்டும் இல்லையென்றால் இன்பம் தரும் தன் தனித்தன்மையை இழந்து, அக்காதல் உணர்வு குறைந்து சுவையற்றதாகிவிடும்.

பழிச்சொல்லும் காதல் உணர்வை வளர்த்து இன்பம் தரும் விந்தை காதலில் மட்டுமே சாத்தியம்.

அலர் - மகிழ்ச்சி, மலர்ந்த பூ, நீர், மஞ்சள், மிளகுக்கொடி, (இங்கே) பழிச்சொல்

உடன்போக்காகத் தலைவி தலைவனுடன் சென்ற பிறகு அவளது களவு வாழ்க்கையைப் பற்றி அயலவர் பலரும் அறிந்து கொள்வர். அதன் தொடர்ச்சியாய் அது பற்றியே பேசுவர். அதற்கு அலர் என்று பெயர்.

கவ்வை - ஒலி, துன்பம், பொறாமை, கவலை, கள், செயல், எள் இளங்காய், ஆயிலியம், துன்பம், பழிச்சொல்

தவ்வுதல் - குறைதல்

No comments: