Thursday, March 10, 2011

கண்ணாடிப்பெட்டியும் கலிஃபோர்னியாவும் காத்திருத்தலும்


ஆச்சு...ராமநாதன் போய்ச் சேர்ந்து சரியா இருபத்து நாலு மணி நேரம் முடியப் போகிறது...இறுதிக்காரியங்கள் முடிந்திருக்க வேண்டிய நிலையில் கலிஃபோர்னியாவிலிருந்து வரவேண்டிய மூத்த மகன் கண்ணனுக்காய்க் காத்திருக்கிறார்கள்...

மதுரை மையப்பகுதிலிருந்து சற்றே ஒதுக்குப்புறமான ஐயர் பங்களா பகுதியில் இருந்தது ராமநாதன் வீடு..ஒரு மகன் கலிஃபோர்னியாவில், இரண்டாவது மகன் பெங்களூரில், மூன்றாவது பெண் சென்னையில்...
இவ்வீட்டில் ராமநாதனும், அவர் மனைவி பரிமளாவும் மட்டுமே வாசம்...

பெரிய தோட்டம்...அதை மொத்தமாக அடைத்துப் போடப்பட்டிருந்த ஷாமியானாப் பந்தல்..வீட்டுக்கு வெளியே அகலமான தெரு என்பதால் நல்ல வேளையாக உட்காரும் இடத்துக்குப்பஞ்சமில்லை...

முருகனும், அவன் மனைவியும் எல்லாவேலைகளையும் முன் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தனர்..முருகன் பரிமளாவுக்குத் தம்பிமுறை ...கிராமத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த அவர்களைத் தங்களுக்குத் துணைக்காக மதுரைக்கு வரவழைத்துக்கொண்டார்கள். அவர்கள் பிள்ளைகள் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.

சட்டென்று ஒரு நாள் இரவு வந்த நெஞ்சுவலியில் தூக்கத்திலேயே போய்விட்டார் ராமநாதன்..முதல் சில மணி நேரங்கள் குளிப்பாட்டுதல், சங்கு சவுண்டிக்கு ஆள் சொல்லுதல், கண்ணாடிப்பெட்டி ஏற்பாடு, ஆர்ப்பட்டமான அழுகை என்று ஆரம்பித்தது..தொடர்ந்தது...

*********

ராஜா..அப்பா போய்ட்டாருடா...பெங்களூரிலிருந்து வந்துவிட்டது இரண்டாவது மகன் ராஜேஷ் குடும்பம்...அவனும் வாய்பொத்தி அழுது, அம்மாவை அணைத்து ஆறுதல் சொல்லி அடுத்தடுத்த ஏற்பாடுகளைக் கவனிக்கலானான்.

இந்தா இருக்கு பெங்களூரு..இவன் வரவே இவ்வளவு நேரமாகிவிட்டதே...கண்ணன் எப்போ வரப்போறானோ...

ஃபிளைட் ஏறிட்டானாம்...மாறி மாறி வரணுமில்லியா...லாங் ஜர்னி....நாளைக்குச் சாயந்திரம் வருவானாம்...

போன மாசம் என் நண்பன் செத்தப்போ அவன் மகன் துபாய்லருந்துதான்ன்னு நெனக்கிறேன் ..அவன் உடனே வந்துட்டானே...

துபாய் பக்கம்யா...இது ரொம்பத் தூரம்...பெருசாச் சொல்றியே..அதுவும் சரியான கிழமைல இங்க செத்திருக்கணும்..அவனுக்கு லீவு நாளாப்பாத்துச் சாகணும்..இல்லேன்னா வர்றது கஷ்டம்.. என் பெரியம்மா இறந்தப்போ, சவூதிலருந்து அவங்க பையனால வர முடியல...பாஸ்போர்ட் புதுப்பிச்சு வந்திருக்கு...இவங்க புதன்கிழமை செத்துட்டாங்க...வியாழன் வெள்ளி லீவு...அவன் வரவும் ரெண்டு நாளாச்சு..

வெளிநாட்டச் சொல்றீங்களே...இந்தாருக்கு டில்லி நம்ம நாட்லயே....பிரகாஷ் அவங்க அப்பா சாவுக்கு வந்தப்ப ஃபிளைட் ஸ்ட்ரைக் அது இதுன்னு மும்பைல வந்து மாட்டிட்டு இங்க வரவே ரெண்டாவது நாளாயிடுச்சே...

இந்த விஷயத்துல ஒண்ணும் சொல்ல முடியாது...அவங்க அவங்க நேரம் காலம்..

***********

பூமா, ராமநாதன் மகளும் குடும்பத்தோடு வந்து சேர்ந்தாள்...அழுகை, ஆர்ப்பாட்டம் ஓய்ந்த பின் அவள் கணவன் அவளை ஜாடை செய்து வெளியே அழைத்தான்..

பூமா...அப்பா, அம்மாவை இங்க தங்க வைக்க முடியாது...பக்கத்துல நல்ல ஹோட்டல் விசாரி..அவங்களைப்போய்த் தங்க வச்சுட்டு வந்துர்றேன்..கடைசி நேரம் அவங்க வந்தாப்போதும்...

சரி..முருகன் மாமாவைக் கேட்டு ஏற்பாடு பண்ணிக்கோங்க..

அவனுக்கு மதுரை ஒன்றும் தெரியாத ஊரில்லை..இருந்தாலும் மனைவியிடம் சொன்னால், அவள் வீட்டுச் செலவாகிவிடும் அல்லவா!

***************

ஏ...காப்பி குடுப்பா...சர்க்கரை போடாதே...காபியை வாங்கிக் குடித்துக் கொண்டே வந்தார் உறவினர் ஒருவர்..கன்னியப்பன் கேட்டரிங் சர்வீசாரை வரவழைத்து வந்திருந்தவர்களுக்குத் தாகசாந்தி செய்வித்தார்கள்..

எப்போதும் காப்பி, உணவு வேளைகளில் சித்ரான்னம், சப்பாத்தி, கறி, இட்லி, சட்னி, சாம்பார் என்று ஒரு பக்கம் வந்தவர் பசி ஆறிக்கொண்டிருந்தது..

என்னங்க...இந்தக் கேட்டரிங் சர்வீஸ் நம்பர் வாங்கி வச்சுக்கோங்க...நாளைப்பின்ன நமக்கு உபயோகப்படும்...ஒரு மருமகளின் பொறுப்பான கவலை..அவள் கவலை அவளுக்குத்தானே தெரியும்...வயதான மாமனார், மாமியார் அவர்கள் பொறுப்பில் இருக்க, மூத்தார் குடும்பம் சிங்கப்பூரில்...


**************

யப்பப்பா...இழவு வீட்டில் இத்தனை வேலைகள் இருக்கிறதா...பார்த்துப் பார்த்து மாய்ந்து போனது கார்த்திக் மனம்...ராமநாதனுக்குத் தூரத்து சொந்தம்..கார்த்திக் ஓர் இந்தக்கால இளசு ...வேலையில்லாப் பட்டதாரி..

பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு எல்லார் வீட்லயுமா ஒரு முருகன் இருக்க முடியும்..

கண்ணாடிப்பெட்டி, சங்கு, சவுண்டி, கேட்டரிங், பந்தல், விளக்கு, மின்சாரம் போனால் கண்ணாடிப்பெட்டி இயங்க ஜெனரேட்டர், வருவோர் போவோர் முறை செய்ய ஜவுளி வாங்கப் போய் வர ஆட்டோ ஏற்பாடு, பட்டாசு, போஸ்டர், மேளம், ஒயிலாட்டம், ஒப்பாரி ஏற்பாடு, இறுதி ஊர்வல ஏற்பாடு, மயான ஏற்பாடு...இன்னும் இன்னும்...

போனில் நண்பனிடம் பேசினான் கார்த்திக்...டே மச்சி...கல்யாண வீடு மாதிரியே சாவு வீட்டில் கூட எவ்ள வேலைடா...பேசாம நாம இதுக்காக ஒரு காண்டிராக்டிங் சர்வீஸ் ஆரம்பிச்சுரலாம்...சேவை செஞ்ச புண்ணியமும் சேரும்...வேலை கிடச்ச மாதிரியும் இருக்கும்..
மச்சி..சிரிக்காதடா..சீரியஸாச் சொல்றேன்..

**********

உலகக் கோப்பை கிரிக்கெட் பிரியர்கள் வேறு..அவ்வப்போது போனில் ஸ்கோர் கேட்டார்கள் ஆரம்பத்தில்..பின் மெதுவாக ராஜேஷிடம் சொல்லி டிவியைத் தோட்டத்துப் பக்கம் கொண்டுவரச்செய்து விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்தார்கள்...நடுநடுவில் கூட்டணிக் களேபரத்துக் குளறுபடிச் செய்திகள் வேறு...அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற அலசல்கள், உரசல்கள் வேறு..

அய்யோ...கோபி, மகாவுக்கு ராமேஸ்வரத்தில் கல்யாணம் ஆச்சோ இல்லியோ தெரியலியே...ஒரே கலாட்டாவா இருந்துச்சு...ஒரு மனைவி அங்கலாய்க்க..

கணவன் அப்பாவியாய்ச் சொன்னான்........போன் போட்டுக் கேட்க வேண்டியதுதானே..

அய்யோ..அய்யோ...இது நாதஸ்வரம் சீரியல் கோபி, மகா...உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது..

ரொம்ப அவசியம்...

ஆமா எவனோ எவனோடயோ ஆடறான்...இந்தியா கூட இல்ல...உங்களுக்கு மட்டும் சாவு வீட்லயும் கிரிக்கெட்டும், அரசியலும் கேக்குதோ...ஒரு நிமிஷம் சானல் மாத்தி வச்சா என்ன குறஞ்சா போய்டுவீங்க...

************

வீட்டுக்குள்ள இருக்க முடியல...என்னதான் ஐஸ் பொட்டின்னாலும் சரியா வராது போலிருக்கு...ஏதோ வாசனை வர மாதிரி இருக்கு..இந்தக் கண்ணன் எப்போதான் வரப்போறானோ..

பிள்ளைகள் தனியா விட்டுட்டு வந்திருக்கேன்....

ஆபிசில் ஆடிட் நடக்குது...லீவு போட முடியாது..
பெரியப்பா பிள்ளை கல்யாணத்துக்குப் போகணும்..

காரியத்தவாது பத்து பதினைஞ்சு நாள்னு நீட்டிட்டுப் போகாம உடனே சட்டுப் புட்டுன்னு முடிச்சா நல்லாருக்கும்..அதுக்கு வேற லீவு போட்டுட்டு இவ்ள தூரம் வர முடியாது...

சான்ஸே இல்ல..காரியத்துக்குத்தும் சேத்துதான் இங்க உக்காந்தாச்சே...காரியத்துக்கு வேற எங்க வர்றது..

இப்படி அவரவர் வேலை அவரவர்க்கு...

************
இரண்டாம் நாள் இரவு வந்து சேர்ந்தான் கலிஃபோர்னியாக் கண்ணன்...

ஆமா...அவன் மட்டும் வந்திருக்கான்..பொண்டாட்டி பிள்ளைகளைக் காணோம்...

பிள்ளைகளுக்குப் பரீட்சை...அவளுக்கு லீவு கிடைக்கலியாம்..போன மாசம்தான் தங்கச்சி கல்யாணத்துக்கு வந்துட்டுப் போயிருக்கா...

*************

ஒரு வழியாக ராமநாதன் இறந்து ஐம்பத்தைந்து மணிநேரங்கள் கடந்த நிலையில் இறுதிக்காரியங்கள் நடந்தேறின. நெஞ்சு வலியால் ஒரு முறை செத்த அவர், சூழ்நிலைகளால் மீண்டும் மீண்டும் சாகடிக்கப்பட்டார்.

கண்ணன் கிளம்பும்போது அம்மா சொன்னாள்: நான்லாம் செத்தா உடனே எல்லாத்தையும் முடிச்சுடுங்கடா....அவங்க அவங்க சவுகரியத்துக்குப் பதினோராம் நாள் காரியத்துக்கு வந்தால் போதும்....யாருக்கும் கஷ்டம் வேணாம்..

12 comments:

ஹுஸைனம்மா said...

உண்மைதான். வருத்தமானதாத் தெரிஞ்சாலும், யதார்த்தம் இதுதான்.

சுந்தரா said...

துக்கம் நடந்த வீட்டின் நிகழ்வுகளை அப்படியே காட்டியிருக்கீங்க.

வருத்தமான நிஜமென்றாலும், வெளிநாட்டில் வாழ்கிறவர்களின் நிலைமை இதுதான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம் :(

கோபிநாத் said...

மிக இயல்பாக வந்திருக்கு ;) (சோகம் எல்லாம் இல்ல)

இப்போது எல்லாம் டிவி சீரியல் அப்பாவிகள் அப்பாக்கள் இல்லை பிள்ளைகளே ;)

ராஜ ராஜ ராஜன் said...

எதார்த்தம்...

வீராங்கன் said...

:(((

Whity said...

நான் உங்களிடம் அனுப்பிய தனி மடலில் சொன்ன விஷயத்தை இங்கேயும் சொல்கிறேன். இது மிகவும் மனதை பாதிக்கும் விஷயம்.நான் மிகவும் ரசித்தேன். மேலும் எழுதுங்கள்.

எல் கே said...

வருத்தமாய் இருந்தாலும்,வலித்தாலும் இன்று உண்மை இதுதான்

பாச மலர் / Paasa Malar said...

வாழ்க்கையின் நிதர்சனம் இதுதான்....சில காத்திருப்புகள் தேவையற்றவைதானே...
நட்புகளே...கருத்துகளுக்கு நன்றி...

குமரன் (Kumaran) said...

வீட்டுக்கு வீடு வாசற்படி....

மதுரையில எங்க வீட்டுல 2009ல எங்க அப்பா இறந்தப்ப ஏறக்குறைய இப்படி தான்....

பாச மலர் / Paasa Malar said...

வாங்க குமரன்..இதில் எங்கேயோ ஏதோ ஓர் பாத்திரமாக நம்மில் பெரும்பாலானோர் இருக்கக்கூடும்...

சிலம்பு எழுதி வெகுநாளாகி விட்டது....அவ்வப்போது தோன்றும் இந்த எண்ணம் உங்கள் வருகையால் உறுதி பெற்றுள்ளது...குட்டியாய் ஓர் இந்தியப்பயணம் போக இருக்கிறேன்...வந்த பின் முதல் வேலை அதுதான்...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Good one!