Tuesday, March 15, 2011

குறளின் குரல் - 24

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 04. அறன் வலியுறுத்தல்
குறள் எண்: 37

அறத்தாற் றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.


'அறத்து ஆறு இது' என வேண்டா; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தானிடை.

விளக்கம்:

பல்லக்கைச் சுமப்பவனுக்கும், அதில் அமர்ந்துள்ளவனுக்கும் இடையே உள்ள ஏற்றாத் தாழ்வு / நிலை வேறுபாடு அறத்தின் வழிப்பட்டது எனக் கருதக் கூடாது.

பல்லக்கைத் தூக்குகின்றவன் பாவம் செய்தவன்; பல்லக்கில் அமர்ந்திருப்பவன் புண்ணியம் செய்தவன் என்று கூறுவர். அவரவர் முன் செய்த வினைப்பயன் என்றும் கூறுவர். இதுதான் அறத்தின் வழி என்ற தவறான முடிவுக்கும் வருவர். இதுதான் அறத்தின் வழி என்று கூறுவது தேவையற்றது. ஏனெனில் அவ்வாறு கூறுவது தவறானது.

பல்லக்கைச் சுமப்பவனுக்கும், அமர்ந்திருப்பவனுக்கும் உள்ள வேறுபாடு அவரவர் தொழில் வேறுபாட்டால் அல்லது செல்வநிலை வேறுபாட்டால் உருவாகின்ற ஒன்றாகும். அதனை அறத்தின் காரணமாக உருவான வேறுபாடு என்பது தவறான கூற்றாகும்.

சிவிகை - பல்லக்கு

---------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 54. பொச்சாவாமை (மறதி இல்லாமை)
குறள் எண்: 539

இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.


இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக - தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

விளக்கம்:

தமக்குக் கிடைக்கும் வெற்றியின் களிப்பினால் மகிழ்ச்சியில் மூழ்கி அதில் மயங்கும் போது தம்மை, தம் நிலையை மறந்து செருக்கு கொள்ளும் வாய்ப்புண்டு. அவ்வாறு வெற்றி தந்த மயக்கத்தினால் செயல் மறந்து நிற்கும் வேளை, இதுபோல் முன் வெற்றிக் களிப்பில் மிதந்து கெட்டழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் கெட்டழிந்ததற்கு இச்செருக்கும் முக்கிய காரணம் என்றுணர்ந்து வெற்றிக் களிப்பில் நிலை மறக்காது கவனத்துடன் செயல்பட வேண்டும்.

உள்ளுக - நினைக்க
மைந்துறும் - மறந்து செயல்படும்

-----------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 58. கண்ணோட்டம் (கனிவான உள்ளம்)
குறள் எண்: 580

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.


பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்.

விளக்கம்:

எல்லோரும் மதித்துப் போற்றத்தக்க நாகரிகத்தை வேண்டுபவர்கள், தம்மோடு பழகியவர் தமக்கு நஞ்சு இடுவதை நேரில் பார்த்துக் கொண்டிருந்த போதும், அதை மறுக்காமல் உண்டு அமைதியாக இருப்பார்கள். அவர்களிடம் இருக்கும் கண்ணோட்டம் என்ற தன்மையால் இத்தகைய அமைதி கைகூடி வருகிறது.

தமக்குக் கெடுதல் செய்தவரிடத்தும் கனிவான உள்ளத்துடன் நடந்து கொள்வதே நாகரிகம் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

-----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 09. விருந்தோம்பல்
குறள் எண்: 85

வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்.


வித்தும் இடல்வேண்டும் கொல்லோ - விருந்து ஓம்பி
மிச்சின் மிசைவான் புலம்?

விளக்கம்:

விருந்தினருக்கு முதலில் உணவளித்துவிட்டு, பின் மிச்சமிருப்பதைத் தான் உண்ணுபவனின் நிலத்தில் விதை விதைக்கவும் வேண்டுமோ? தேவையில்லை. தன்னாலேயே நிலம் செழித்து வளரும்.

'அவன் செய்த நல்ல செயல்களுக்கு அவன் நிலம் தானாகவே விளையும்' என்ற உலக வழக்கை ஒட்டி வருகின்றது இக்கருத்து.

வித்து - விதை
மிச்சில் - எஞ்சிய பொருள், எச்சில், கரி
மிசைதல் - உண்ணுதல், நுகர்தல்
மிசைவான் - உண்ணுபவன்
--------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 126. நிறை அழிதல்
குறள் எண்: 1258

பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.


பல மாயக் கள்வன் பணிமொழி அன்றோ - நம்
பெண்மை உடைக்கும் படை!

விளக்கம்:

பல மாயங்களைச் செய்துவரும் கள்வர்தாம் காதலர். அவர் பணிந்து, தாழ்ந்து, மென்மையாய்ப் பேசும் மொழி, நம் மன அடக்கம் என்னும் பெண்மையின் உறுதியான கோட்டையை உடைத்துச் சிதைக்கவல்ல படையன்றோ?

நிறை - மன அடக்கம்
-----------------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 68. வினை செயல்வகை
குறள் எண்: 679

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல்.


நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

விளக்கம்:

நம் நண்பர்களுக்கு நல்ல உதவிகள் செய்வது நன்று. என்றாலும், அதைக்காட்டிலும் விரைந்து செய்ய வேண்டிய செயல் ஒன்று உண்டு; - தமக்குப் பகையாய் நிற்பவராகவே இருந்தாலும் அவருடன் பழகி நட்புக் கொள்வது, காலம் தாழ்த்தாது மிக விரைவாகச் செய்து முடிக்க வேண்டிய செயலாகும். அரசியல் / வாழ்க்கைத் தந்திரங்களுள் இதுவும் ஒன்று.

எப்போதும் அரசியலுக்கும் பொருந்தும் இத்தந்திரம், பல சமயங்களில் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

ஒட்டார் - பகைவர்

No comments: