'உஸ் அப்பாடா...' என்று வீட்டிற்குள் நுழைந்த நல்லகண்ணன் காலை ஓடி வந்து கட்டிக் கொண்டாள் கீர்த்தி. கீர்த்தி, நல்லகண்ணன் - உமா தம்பதியரின் செல்ல மகள்.
நல்லகண்ணன் ஒரு வார இதழின் சினிமா விமர்சகன். நடுநிலையான நல்ல விமர்சகர் என்று பரவலாகப் பலரும் பாராட்டும் புகழ் அவனுக்குண்டு. இது மேற்படி வருமானத்துக்கான பகுதி நேர வேலைதான். மற்றபடி தனியார் நிறுவனமொன்றில் சொற்பமான சம்பளத்துக்கு வேலை செய்து, தேதி இருபதைத் தாண்டுகையில் அடுத்த மாதம் எப்போது பிறக்கும் என்று நாட்காட்டியைப் பார்த்துக் குடும்பம் நடுத்துகின்ற கீழடுக்கு நடுத்தர வர்க்கம்.
'இந்தாங்க..' தண்ணீர் லோட்டாவைத் தந்தாள் உமா.
'என்னங்க...'வல்லவன் வில்' படத்துக்கு உங்கள் விமர்சனம் படிச்சாங்களாம் மல்லிகாக்கா...அவங்க மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லிருக்கீங்களாமே....புத்தகம் கொடுத்துட்டுப் போனாங்க....படிக்கணும். நல்லாருக்கா படம்? என்ன எழுதிருக்கீங்க'....என்றவள் குழந்தையைப் பார்த்துக் கொள்ள அவன் வந்துவிட்ட திருப்தியில் பக்கங்களைப் புரட்டிப் படிக்க ஆரம்பித்தாள். படத்தின் நாயகன் அவள் மனம் கவர்ந்தவர் ஆயிற்றே.
'என்னங்க...எல்லாரும் படம் நல்லாருக்குன்றாங்க. நீங்க இப்படி பாடாவதின்ற மாதிரி எழுதிருக்கீங்க....அதானே..மல்லிகாக்கா எப்படி இப்படிப் பாராட்டுனாங்கன்னு நான் அப்பவே நெனச்சேன். அவங்களும் உங்கள மாதிரிதான். எதையும் நல்லாருக்குன்னு அவ்வளவு சுலபமாச் சொல்லிர மனசு வராது.'
'காபி கொண்டு வா உமா'...'கீர்த்திக்குட்டி..அது மேல ஏறாத..விழுந்துறப் போற..'
'இந்த வாரம் இந்தப் படத்துக்குப் போலாம்னு நெனச்சேன்....நீங்க இப்படி எழுதிருக்கதைப் பாத்தாத் திரும்பியும் ஒரு வாட்டி பாப்பீங்களான்னு சந்தேகமாருக்குங்க...'
'...........'
'என்ன..பதிலே காணோம்...அவ்ள மோசமாவாருக்கு படம்?'
'யப்பா...உங்காளு நடிச்ச படம்னவுடன எவ்வளவு ஆர்வம் உமா உனக்கு?'
' ஆமாமா..கதநாயகியத்தான் மாஞ்சு மாஞ்சு வர்ணிச்சுருக்கீங்களே...'
அவளின் உதட்டுச் சுழிப்பை ரசித்தவன் சட்டப்பையிலிருந்து இரண்டு நுழைவுச்சீட்டுகளை எடுத்தான்.
'இந்தா... இந்த வாரம் வெள்ளிக்கிழமை அந்தப் படத்துக்குப் போறோம்...'
புருவத்தை நெறித்து அவனைப் பார்த்த உமா, தொடர்ந்து வந்த அவன் பேச்சைக் கேட்டு இன்னும் ஆச்சரியமானாள்.
'இயல்பா ஓடுற எதார்த்தமான படம். சந்தேகப் புத்தினால வர்ற கேடு, இப்ப சில டிவி சானல்கள் நடத்துற சில கேடுகெட்ட நிகழ்ச்சிகள், சில பணக்காரப் புத்திகள், கொஞ்சம் சோகம், கொஞ்சம் மிகை, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் அத்துமீறல்கள், கொஞ்சம் குழப்பம், தவிர்த்திருக்க வேண்டிய விஷயங்கள்.....இப்டில்லாம் நிகழ்ச்சிகள் தொட்டுக்காட்டி எழுதணும்னு ஆசைதான்.
ஆனா அதுக்கெல்லாம் எனக்குச் சுதந்திரம் இல்ல உமா.....எவ்வளவு மோசமா எழுதணுமோ அவ்வளவு மோசமா எழுதணும்...நேரடியா இல்லாம மறைமுகமா...படத்தை விட. படத்தின் இயக்குநரைவிட, மத்த விஷயங்களவிடப் படத்தின் நாயகனத் தாக்கணும்னு எனக்கு உத்தரவு....
ஆங்கிலப்படத்தின் அப்பட்ட காப்பி, தன் கேவலமான கருத்துகளை நாசூக்காய் வெளியிட்டு வேஷம் போடும் நாயகன்......அவர் சொந்த வாழ்க்கை பிரதிபலிப்பு, ஆத்திகம் / நாத்திகம் என்றெல்லாம் விமர்சனம் எழுதவேண்டிய தலையெழுத்து...
இப்ப 'தந்திரன்' படத்துக்கு என்ன எழுதுனேன்....ஆஹா..ஓஹோ...
ஆங்கிலப்படத்திற்கு நிகரான தமிழ்ப்படம்....நினைக்கவே முடியாத பட்ஜெட்டில் எடுத்த படம்.....மறந்தும் கூட நடிகரின் சொந்த வாழ்க்கைய விமர்சனத்தில் இழுக்கக்கூடாது...அதுவும் உத்தரவுதான்...என் எண்ணங்கள் சிலவற்றை மறைச்சு, நடுநிலை மறந்துதான் எழுதவேண்டிருக்கு.
என் சொந்த நினைப்பை நண்பர்கள்கிட்டக் கூடப் பகிர்ந்துக்க முடியாது....வெளிய தெரியாமருக்கணுமே...அலுத்துப்போச்சு உமா..
ஆங்கிலப்படச் சாயல் இருப்பதை ஒருபடத்தில் தூக்கி எழுதிவிட்டு, அடுத்த படத்தில் தாக்குவது...எனக்கே கொஞ்சம் அசிங்கமாத்தான் இருக்கு....என்ன பண்றது சொல்லு?
இதுல சம்பந்தப்பட்ட நாயகனின் ரசிகர்களிடமிருந்து மிரட்டல் கடிதங்கள் வேற போட்டுத் தாக்குது....
நடுநிலைமையோட விமர்சனம் எழுதுறது சொந்த விருப்பு வெறுப்பு இருக்குற ஒரு சாதாரண மனுஷனுக்கு ரொம்பச் சுலபமான காரியமில்ல. இருந்தும் இப்டில்லாம் பண்ண வேண்டிருக்கு.
நல்லவேள...சமுதாய விமர்சனம் பண்ற வேல எனக்கில்ல...அதுலயும் இப்படி எழுத வேண்டிய கட்டாயம் இருந்துச்சுன்னா....கஷ்டம்தான்..
வேற நல்ல வேலை பாத்துட்டு இருக்கேன். கெடச்சதும் சீக்கிரம் இந்த வேலைய விட்டுறலாம்னு இருக்கேன்.... '
குறிப்பு: இது யாரையும் எதற்காகவும் தாக்க எழுதப்பட்டதல்ல...பார்வைகள் நபருக்கு நபர் எப்படி வேறுபடுகின்றன, விமர்சனங்கள் எப்படி, எதனால் மாறுபடுகின்றன, விமர்சனம் செய்வது சுலபமான காரியமா, விமர்சகர்கள் மனநிலை எப்படியிருக்கும்என்று எண்ணிய விபரீத எண்ணத்தின் விளைவான கற்பனையே....
Tuesday, January 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அக்கா லேபல்...குறிப்பும் போட்டு எஸ்கேப்பு ஆகிட்டிங்க :)))
கலக்கியிருகீங்க...
பொங்கல் வாழ்த்துக்கள்.
Post a Comment