Monday, January 24, 2011

சில நேரங்களில் சில உணர்வுகள்


'பொன்னியின் செல்வன்' கனவுகள்

பலரின் நீண்ட நாள் கனவு 'பொன்னியின் செல்வன்' நிகழ்வுகளைத் திரையில் காண வேண்டுமென்பது. மக்கள் தொலைக்காட்சியும் இதற்கான நடிகர் தேர்வுக்கான அறிவுப்புகளை அளித்த வண்ணம் இருக்கிறது. இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தாரும் இப்படத்தை 500 கோடி ரூபாய் செலவில் எடுப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. சங்கர் இயக்குவதாக ஒரு செய்தி சொல்ல, மணிரத்னம் இயக்குவதாகவும் சொல்லப்படுகிறது.

கமல், ரஜினி நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இதற்காகவே காத்திருக்கின்ற பலருள் நானும் ஒருத்தி. பலரின் கனவு கைகூடி வரும் வேளையில், சில பயங்களும் எழாமல் இல்லை. நன்றாகச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

அன்றிலிருந்து ஜெமினி, எம்.ஜி.ஆர், கமல் மற்றும் பலரும் செய்ய நினைத்துக் கைவிட்ட முயற்சி, இத்தனை ஆண்டுகளுக்குப் பின், தொழில்நுட்பரீதியாக பலவகை முன்னேற்றங்கள் உள்ள இக்கால கட்டத்தில் எளிதாகவே இருக்கும்.

பாத்திரங்களின் தேர்வு, காட்சி திரைக்கதை அமைப்பு, வசனம், ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என்று அனைத்துத் தரப்பினருக்கும் சவாலாய் அமையப் போகும் இப்பணி. அவரவர் தனிப்பட்ட கருத்தை, பாணியைத் திணிக்காமல் புத்தக அழகு சற்றும் குறையாமல் கால அவகாசம் சரிவர எடுத்துக் கொண்டு செய்வார்களேயானால்...என்னை போன்ற பலரின் கனவுகள் அழகாய் மெய்ப்பட வாய்ப்புண்டு.

நீயா நானா....இது தகுமா தகுமா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி எவ்வளவு விமரிசனங்கள் வந்தாலும் இவர்கள் திருந்துகின்ற வழியாய்த் தெரியவில்லை. நல்ல நல்ல செய்திகளைத் தரும் நிகழ்ச்சிகள் கூட மூன்றாம் தரத்துக்கு இறங்கிப் போகின்ற கொடுமை.....தாங்கவில்லை.

நீயா நானா...நல்லதொரு நிகழ்ச்சி(இனிமேல் அப்படிச் சொல்ல மனம் வரவில்லை.)  பிரபலமாவதற்கும், நல்ல பெயர் எடுப்பதற்கும், சுவாரசியம்(?!) சேர்ப்பதற்கும் சில காட்சிகளைத் திட்டமிட்டு, ஒத்திகையுடன் சித்தரித்து அரங்கேற்றுவதாகக் கேள்விப்பட்டதுண்டு. என்றாலும் அதையெல்லாம் மீறி ஆக்கப்பூர்வமான வாக்குவாதங்கள் வாயிலாக நல்ல செய்திகளையும் பல நேரங்களில் நமக்குத் தந்துள்ளது இந்நிகழ்ச்சி.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் கணவன் - மனைவி விவாதம் என்ற பெயரில் அடித்த கூத்தை என்ன வார்த்தைகளால் விமர்சிப்பது என்றே புரியவில்லை. ஆங்கிலம் பேசத் தெரியாது, கர்னாடக சங்கீதம் ரசிக்கத் தெரியாது, சமையலை ரசித்துச் சப்பிடத் தெரியாது...என்று வார்த்தைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட பாங்கு, போனால் போகிறதென்று மன்னிப்பும் கேட்டு...அடா அடா .....

இவர்களால் எப்படி இது முடிகிறது? இவர்கள் பெற்றோர், உறவினர், பிள்ளைகள், சம்பந்தமேயில்லாத மூன்றாவது மனிதர்கள் என்று அனைவரும் பார்ப்பார்கள் என்ற உணர்வு கொஞ்சம் கூட இன்றி....நாராசம்!

இவர்கள்  பெற்றெடுத்த பிள்ளைகளை எங்ஙனம் வழிநடத்தப் போகிறார்கள்?

2 comments:

ராமலக்ஷ்மி said...

நீயா நானா, குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சி பிறகு திசை மாறி விட்டது உண்மையே.

கோபிநாத் said...

2 பகிர்வுக்கும் ஒரு ரீப்பிட்டே ;)