Monday, January 24, 2011

குறளின் குரல் - 20

பால்: அறத்துப்பால் இயல்: இல்லறவியல்
அதிகாரம்:06. வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 57

சிறைக்காக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.


சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை.

விளக்கம்:

பெண்ணைச் சிறைவைத்துக் காக்கும் காவல் பயன்படாது. பெண் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டும். தன் மனதை ஒருவழி நிறுத்தும் நிறை காப்பே / பண்பே / நற்குணமே சிறந்ததாகும்.

-------------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம் :07. மக்கட்பேறு
குறள் எண்: 61

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.


பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

விளக்கம்:

அறிய வேண்டியதை அறியும் அறிவார்ந்த பிள்ளைகளைப் பெறுவதை விட, உலகில் ஒருவர் பெறக்கூடிய சிறந்த செல்வம் / பேறு வேறு எதையும் யாம் அறியவில்லை.

----------------------
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம் :61. மடியின்மை
குறள் எண்: 605

நெடுநீர் மறவி மடிதுயி னான்குங்
கெடுநீரார் காமக் கலன்.


நெடு நீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

விளக்கம்:

விரைந்து செய்ய வேண்டிய செயலைக் காலம் நீட்டித்துச் செய்தல், செய்ய வேண்டிய / நினைத்த செயலைச் செய்ய மறத்தல், அந்தச் செயலைச் செய்யாமல் சோம்பலாய் இருத்தல், காலம் கருதாது தேவைக்கு அதிகமாயத் தூங்கும் தூக்கம் - இவை நான்கும் தம்மை விரும்பி ஏறியவரை நடுக்கடலில் தள்ளிவிடும் மரக் கலங்கள் / கப்பல்கள் போன்றவை. இவை நான்கையும் விரும்பிச் செய்தோமானால் அழிவு நிச்சயமானது. எனவே இவை தவிர்க்கவேண்டியவை.

---------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம் 60. ஊக்கமுடைமை
குறள் எண்: 596

உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.


உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல், மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.


விளக்கம்:

ஒருவர் தம் உள்ளத்தல் தாம் அடைய வேண்டும் என்று நினைப்பவற்றையெல்லாம் உயர்வாக நினைக்க வேண்டும். அது நிறைவேறாமல் தற்காலிகமாய்த் தள்ளிப் போனாலும் கூட முயற்சி செய்து அதன் மூலம் அக்காரியம் நிறைவேறியதற்கு ஒப்பாகுமேயன்றி தப்பிப்போனதாகாது. எனவே ஊக்கத்தை எப்போதும் கைவிடாமல் உயர்வான குறிக்கோள்களை எண்ண எண்ண வாழ்வு உயரும்.

------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம் 49. காலமறிதல்
குறள் எண்: 490

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.


கொக்கு ஒக்க, கூம்பும் பருவத்து; மற்று அதன்
குத்து ஒக்க, சீர்த்த இடத்து.

விளக்கம்:

காலம் நேரம் பார்த்து அமைதியாகக் காத்துச் செயலாற்ற வேண்டிய காலத்தில் மடையருகில் கொக்கு போல கவனமாய்க் காரியமே கண்ணாக இருந்திடவேண்டும். செயலைச் செய்வதற்கு உரிய காலம் நேரம் வரும்போது, அக்கொக்கு மீனைக் குறிதவறாமல் குத்தி எடுப்பது போலத் தப்பாமல் விரைந்து செயலாற்ற வேண்டும்.

------------
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 98. பெருமை
குறள் எண்: 973

மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர்.


மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர்; கீழ் இருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர்.

விளக்கம்:

பதவியால், செல்வத்தால் - இன்னும் பல காரணங்களால் சிலர் வாழ்க்கையில் மேலான நிலையில் வீற்றிருப்பர். அவ்வாறு மேலான நிலையில் இருந்தாலும் கூட அவர்கள், 'இவர் பெரியவர்' என்று அனைவரும் மதிக்கத்தக்க மேல் நிலையை அடைய மாட்டார். குணம், பண்பில் தாழ்ந்தவர் மேலானவர் என்ற பெருமைவாய்ந்த நிலையை அடைய இயலாது.

மாறாக, மேன்மக்கள் சிலர் பதவி மற்றும் செல்வத்தால் கீழ்ப்பட்ட இடங்களில் இருக்க நேரிடலாம். அவ்வாறு தாழ்ந்த நிலையில் இருந்தாலும் கூட அவர்கள், 'இவர் சிறியவர்' என்று பலரும் இகழும்படியான நிலைக்குத் தள்ளப்பட மாட்டார். குணம், பண்பில் உயர்ந்தவர் கீழானவர் என்ற தாழ்நிலையை அடைய இயலாது.

No comments: