பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 72. அவையறிதல்
குறள் எண்: 714
ஒளியார்மு னொள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்.
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல், வெளியார்முன்
வான் சுதை வண்ணம் கொளல்.
விளக்கம்:
அறிவில் ஒளிர்பவர் முன் பேசும்போது, தாமும் அறிவில் ஒளிர்பவராகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவொளி குன்றியவர் முன
பேசும் போது வெள்ளைச் சுண்ணாம்பின் நிறம் போல வெள்ளையாக, அறிவை வெளிப்படுத்திக் கொள்ளாதவராக இருக்க வேண்டும்.
----------------------
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 80. நட்பாராய்தல்
குறள் எண்: 795
அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்.
அழச் சொல்லி, அல்லது இடித்து, வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்.
விளக்கம்:
தவறு செய்யும்போது அதற்காக வருந்துமாறு புத்தி சொல்லித்திருத்தியும், முறையற்ற நெறியில் செல்லும் போது இடித்துக் கூறித் திருத்தியும், தனது நடப்பை அறிய வல்லவராய்த் தன்னை வழிநடத்திச் செல்லுகின்றவரின் நட்பை ஆராய்ந்து அத்தகையவரிடம் நட்புக் கொள்ள வேண்டும்.
---------------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 16. பொறையுடைமை
குறள் எண்: 155
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர்,
பொறுத்தாரைப் பொன்பொல் பொதிந்து.
விளக்கம்:
தவறு செய்துவிட்ட காரணத்தால் ஒருவரைத் தண்டித்தவரை, யாரும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். ஆனால், பெருந்தன்மையோடு அத்தவறைப் பொறுத்துக் கொண்டவரைத் தம் உள்ளத்தில் பொதிந்து வைத்துப் பொன் போல் மதிப்பார்கள்.
------------------
பால்: பொருட்பால்
இயல்: கூழியல்/பொருளியல்
அதிகாரம்: 76. பொருள்செயல்வகை
குறள் எண்: 753
பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு
மெண்ணிய தேயத்துச் சென்று.
பொருள் என்னும் பொய்யா விளக்கம், இருள் அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
விளக்கம்:
பொருட்செல்வம் என்னும் உண்மையான விளக்கு. அதை உடையவர்கள் நினைத்த இடங்களுக்கெல்லாம் சென்று அவருடைய பகையாகிய இருளைப் போக்க வல்லது.
-------------
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 82. தீநட்பு
குறள் எண்: 818
ஒல்லுங் கரும முயற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார், சோரவிடல்.
விளக்கம் - 1:
ஒருவர் தன்னால் செய்ய முடியும் செயலையும் தன்னைச் செய்ய விடாமல் குழப்புபவரின் / கெடுப்பவரின் நட்பை, அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் மெதுவாக விட்டுவிட வேண்டும்.
விளக்கம் -2:
தன்னால் செய்ய முடியும் செயலைச் செய்து உதவாமல், அதனைச் செய்ய இயலாதவர் போல் இருந்து குழப்புகிறவரின் / கெடுப்பவரின் நட்பை, அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் மெதுவாக விட்டுவிட வேண்டும்.
இக்குறளுக்கு இருவேறு விளக்கங்கள் காணப்பெற்றேன். இரண்டுமே பொருத்தமாகத் தோன்றுகிறது.
------------------
பால்: காமத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 131. புலவி
குறள் எண்: 1309
நீரு நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே யினிது.
நீரும் நிழலது இனிதே, புலவியும்
விழுநீர் கண்ணே இனிது.
விளக்கம்:
நிழலின் இடத்து இருக்கும் போதுதான் நீர் மிகவும் குளிர்ச்சியாக இனிதாக இருக்கும். அன்புடையவர்களிடத்து நிகழும்போதுதான் ஊடல் இனிமையாக இருக்கும்.
Tuesday, January 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment