Monday, January 24, 2011

குறளின் குரல் - 19

பால்: பொருட்பால் இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 65. சொல்வன்மை
குறள் எண்: 643

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.


கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்
வேட்ப மொழிவது ஆம் சொல்.

விளக்கம்:

தன் சொல்லை விரும்பிக் கேட்டவரைத் தன்வயப்படுத்தி வைக்கும் வகையிலும், தன் பேச்சைக் கேளாது இருந்தவரும் இவர் பேச்சைக் கேட்க வேண்டும் என்று விரும்பும்படியும் பேசப்படுவதே சிறந்த சொல்வன்மையாகும்.
----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 04. அறன் வலியுறுத்தல்
குறள் எண்: 38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.


வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின், அஃது ஒருவன்
வாழ் நாள் வழி அடைக்கும் கல்.

விளக்கம்:

ஒருவன் நாள் தவறாமல் நல்லது செய்து வருவானாயின், அஃது அவனது வாழ்நாள் எனப்படும் வழியில் இடைவெளிகள் இல்லாது அடைக்கும் கல்லாகும். அது வாழும் நாட்களின் தொடர்ச்சியை / வாழ்க்கையைக் காக்கும் என்பது குறிப்பு. நல்லதைச் செய்யும் நாளெல்லாம் வாழும் நாளாகும்.

-------------------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 94. சூது
குறள் எண்: 940

இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப
முழத்தொறூஉங் காதற் றுயிர்.


இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல், துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.

விளக்கம்:

ஆடும் போது பொருளை இழக்க நேர்ந்தாலும் சூது, இழந்ததை வென்றிட மீண்டும் மீண்டும் ஆடவேண்டுமென்று ஆசைப்படவைக்கும். அதே போல், இந்த உடம்பு மேன்மேலும் துன்பத்தால் உழன்று வருந்தினாலும், உயிரானது உடலையே மீண்டும் மீண்டும் காதலிக்கும்.

உயிர் / உடல் மேல் இருக்கும் ஆசையும், சூதின் மேல் இருக்கும் பற்றும் அவ்வளவு எளிதில் குறையாது.

--------------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் எண்: 700

பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.



பழையம் எனக் கருதிப் பண்பு அல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

விளக்கம்:

அரசரிடம் தாம் நீண்ட நாட்கள் பழக்கமுடையவர் என்று எண்ணிக் கொண்டு, அந்த நட்பின் உரிமையால் தமக்குப் பொருந்தாத பண்பற்ற செயல்களைச் செய்வது துன்பம் மற்றும் அழிவைத் தரும்.

---------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:17. அழுக்காறாமை
குறள் எண்: 163

அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.


அறன் ஆக்கம், வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான்.

விளக்கம்:

பிறருக்கு வருகின்ற ஆக்கத்தைக் கண்டு அது அவருக்கு உரியதுதான் என்று கருதாமல் பொறாமைப்படுபவன், தனக்கு அறமாகிய ஆக்கம் வேண்டாம் என்பவனாவான்.

ஆக்கம்: செல்வம், பதவி, முன்னேற்றம் முதலிய ஆகி வரும் தகுதிகளையெல்லாம் குறிக்கும்.

-----------------

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்:01. கடவுள் வாழ்த்து
குறள் எண்: 05

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார்மாட்டு.

விளக்கம்:

நற்குணங்கள் அனைத்தும் கொண்ட இறைவன் அவனின் புகழே மெய்யான புகழாகும். அப்புகழுக்குரிய வகையில் நற்செயல்களைச் செய்பவர்க்கு, அப்புகழை எப்போதும் விரும்பிச் சொல்வார்க்கு அறியாமையோடு கூடிய நல்வினை தீவினை இரண்டும் சென்று சேரா.

No comments: