Sunday, January 30, 2011

குறளின் குரல் - 21

பால்: அறத்துப்பால் இயல்: ஊழியல்
அதிகாரம்: 38. ஊழ்
குறள் எண்: 375

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.


நல்லவை எல்லாம் அம் தீய ஆம்; தீயவும்
நல்ல ஆம்; செல்வம் செயற்கு.

விளக்கம்:

செல்வம் ஈட்டும் முயற்சியின் போது, நல்லவை என்று கருதுபவையெல்லாம் தீயனவாய் மாறும்; தீயன என்று கருதுபவை எல்லாம் நல்லனவாய் மாறும்.

ஊழின் காரணமாய்க் காலம், கருவி, இடம், முயற்சி எல்லாம் உதவியாய் மாறவும் கூடும்; எதிராக மாறி அழிக்கவும் கூடும்.

ஊழ் - வினைப்பயன் / விதி

---------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 11. செய்ந்நன்றியறிதல்
குறள் எண்: 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு.


மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு.

விளக்கம்:

மனதில் அழுக்கில்லாத குற்றமற்றவரின் நட்பு, அவர் செய்த உதவி, அவர் உறவு - இவற்றை மறத்தல் கூடாது. துன்பம் வந்த போது அருகில் துணையாய் நின்றிருந்து உதவி புரிந்தவரின் நட்பைக் கைவிடக்கூடாது. உதவியால் நட்பும் நட்பால் உதவியும் - இரண்டும் ஒன்றையொன்று தொடரும் தன்மை வாய்ந்தவை.

-----------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 62. ஆள்வினையுடைமை
குறள் எண்: 620

ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்.


ஊழையும் உப்பக்கம் காண்பர் - உலைவு இன்றித்
தாழாது உஞற்றுபவர்.

விளக்கம்:

தடைகள் வரும்போது மனம் குலையாது, சோர்வடையாது, தடுக்கும் விதியாலும் வீழாது, விடாமுயற்சியுடன் செயல்பட்டுக் காரியத்தில் கடும் உழைப்பை மேற்கொள்பவர், அங்ஙனம் தடுக்கும் விதியையும் புறமுதுகுகாட்டி ஓடச் செய்து வெல்வர்.

-------------------------
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 95. மருந்து
குறள் எண்: 942

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்.


மருந்து என வேண்டாவாம், யாக்கைக்கு - அருந்தியது
அற்றாது போற்றி உணின்.

விளக்கம்:

ஒருவர் ஏற்கனவே தான் உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிகுறிகளால் நன்கு அறிந்து கொண்டபின் அடுத்து உணவு உண்டால், அவர் உடம்புக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை.
----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 08. அன்புடைமை
குறள் எண்: 76

அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை.


அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

விளக்கம்:

'அறத்தை வலியுறுத்தி நிற்கும் நல்ல செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாகும்' என்று கூறுவர் அறியாதவர். தீமையை எதிர்த்து, நன்மை சார்ந்து நிற்கும் வீரச் செயல்களுக்கும் கூட அன்பே துணையாகும்.


-------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 91. பெண்வழிச் சேறல்
குறள் எண்: 907

பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்து.


பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின், நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

விளக்கம்:

சிந்திக்கும் துணிவின்றி, பெண் / மனைவி ஏவியதையெல்லாம் கேட்டு அதன்படி கண்மூடித்தனமாய் நடந்து கொள்பவனின் ஆண் தன்மையைக் காட்டிலும் இயல்பான நாணமுடைய பெண்தன்மையே மேலான பெருமையுடையதாகும்.

Monday, January 24, 2011

சில நேரங்களில் சில உணர்வுகள்


'பொன்னியின் செல்வன்' கனவுகள்

பலரின் நீண்ட நாள் கனவு 'பொன்னியின் செல்வன்' நிகழ்வுகளைத் திரையில் காண வேண்டுமென்பது. மக்கள் தொலைக்காட்சியும் இதற்கான நடிகர் தேர்வுக்கான அறிவுப்புகளை அளித்த வண்ணம் இருக்கிறது. இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தாரும் இப்படத்தை 500 கோடி ரூபாய் செலவில் எடுப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. சங்கர் இயக்குவதாக ஒரு செய்தி சொல்ல, மணிரத்னம் இயக்குவதாகவும் சொல்லப்படுகிறது.

கமல், ரஜினி நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இதற்காகவே காத்திருக்கின்ற பலருள் நானும் ஒருத்தி. பலரின் கனவு கைகூடி வரும் வேளையில், சில பயங்களும் எழாமல் இல்லை. நன்றாகச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

அன்றிலிருந்து ஜெமினி, எம்.ஜி.ஆர், கமல் மற்றும் பலரும் செய்ய நினைத்துக் கைவிட்ட முயற்சி, இத்தனை ஆண்டுகளுக்குப் பின், தொழில்நுட்பரீதியாக பலவகை முன்னேற்றங்கள் உள்ள இக்கால கட்டத்தில் எளிதாகவே இருக்கும்.

பாத்திரங்களின் தேர்வு, காட்சி திரைக்கதை அமைப்பு, வசனம், ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என்று அனைத்துத் தரப்பினருக்கும் சவாலாய் அமையப் போகும் இப்பணி. அவரவர் தனிப்பட்ட கருத்தை, பாணியைத் திணிக்காமல் புத்தக அழகு சற்றும் குறையாமல் கால அவகாசம் சரிவர எடுத்துக் கொண்டு செய்வார்களேயானால்...என்னை போன்ற பலரின் கனவுகள் அழகாய் மெய்ப்பட வாய்ப்புண்டு.

நீயா நானா....இது தகுமா தகுமா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி எவ்வளவு விமரிசனங்கள் வந்தாலும் இவர்கள் திருந்துகின்ற வழியாய்த் தெரியவில்லை. நல்ல நல்ல செய்திகளைத் தரும் நிகழ்ச்சிகள் கூட மூன்றாம் தரத்துக்கு இறங்கிப் போகின்ற கொடுமை.....தாங்கவில்லை.

நீயா நானா...நல்லதொரு நிகழ்ச்சி(இனிமேல் அப்படிச் சொல்ல மனம் வரவில்லை.)  பிரபலமாவதற்கும், நல்ல பெயர் எடுப்பதற்கும், சுவாரசியம்(?!) சேர்ப்பதற்கும் சில காட்சிகளைத் திட்டமிட்டு, ஒத்திகையுடன் சித்தரித்து அரங்கேற்றுவதாகக் கேள்விப்பட்டதுண்டு. என்றாலும் அதையெல்லாம் மீறி ஆக்கப்பூர்வமான வாக்குவாதங்கள் வாயிலாக நல்ல செய்திகளையும் பல நேரங்களில் நமக்குத் தந்துள்ளது இந்நிகழ்ச்சி.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் கணவன் - மனைவி விவாதம் என்ற பெயரில் அடித்த கூத்தை என்ன வார்த்தைகளால் விமர்சிப்பது என்றே புரியவில்லை. ஆங்கிலம் பேசத் தெரியாது, கர்னாடக சங்கீதம் ரசிக்கத் தெரியாது, சமையலை ரசித்துச் சப்பிடத் தெரியாது...என்று வார்த்தைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட பாங்கு, போனால் போகிறதென்று மன்னிப்பும் கேட்டு...அடா அடா .....

இவர்களால் எப்படி இது முடிகிறது? இவர்கள் பெற்றோர், உறவினர், பிள்ளைகள், சம்பந்தமேயில்லாத மூன்றாவது மனிதர்கள் என்று அனைவரும் பார்ப்பார்கள் என்ற உணர்வு கொஞ்சம் கூட இன்றி....நாராசம்!

இவர்கள்  பெற்றெடுத்த பிள்ளைகளை எங்ஙனம் வழிநடத்தப் போகிறார்கள்?

குறளின் குரல் - 20

பால்: அறத்துப்பால் இயல்: இல்லறவியல்
அதிகாரம்:06. வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 57

சிறைக்காக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.


சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை.

விளக்கம்:

பெண்ணைச் சிறைவைத்துக் காக்கும் காவல் பயன்படாது. பெண் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டும். தன் மனதை ஒருவழி நிறுத்தும் நிறை காப்பே / பண்பே / நற்குணமே சிறந்ததாகும்.

-------------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம் :07. மக்கட்பேறு
குறள் எண்: 61

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.


பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

விளக்கம்:

அறிய வேண்டியதை அறியும் அறிவார்ந்த பிள்ளைகளைப் பெறுவதை விட, உலகில் ஒருவர் பெறக்கூடிய சிறந்த செல்வம் / பேறு வேறு எதையும் யாம் அறியவில்லை.

----------------------
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம் :61. மடியின்மை
குறள் எண்: 605

நெடுநீர் மறவி மடிதுயி னான்குங்
கெடுநீரார் காமக் கலன்.


நெடு நீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

விளக்கம்:

விரைந்து செய்ய வேண்டிய செயலைக் காலம் நீட்டித்துச் செய்தல், செய்ய வேண்டிய / நினைத்த செயலைச் செய்ய மறத்தல், அந்தச் செயலைச் செய்யாமல் சோம்பலாய் இருத்தல், காலம் கருதாது தேவைக்கு அதிகமாயத் தூங்கும் தூக்கம் - இவை நான்கும் தம்மை விரும்பி ஏறியவரை நடுக்கடலில் தள்ளிவிடும் மரக் கலங்கள் / கப்பல்கள் போன்றவை. இவை நான்கையும் விரும்பிச் செய்தோமானால் அழிவு நிச்சயமானது. எனவே இவை தவிர்க்கவேண்டியவை.

---------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம் 60. ஊக்கமுடைமை
குறள் எண்: 596

உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.


உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல், மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.


விளக்கம்:

ஒருவர் தம் உள்ளத்தல் தாம் அடைய வேண்டும் என்று நினைப்பவற்றையெல்லாம் உயர்வாக நினைக்க வேண்டும். அது நிறைவேறாமல் தற்காலிகமாய்த் தள்ளிப் போனாலும் கூட முயற்சி செய்து அதன் மூலம் அக்காரியம் நிறைவேறியதற்கு ஒப்பாகுமேயன்றி தப்பிப்போனதாகாது. எனவே ஊக்கத்தை எப்போதும் கைவிடாமல் உயர்வான குறிக்கோள்களை எண்ண எண்ண வாழ்வு உயரும்.

------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம் 49. காலமறிதல்
குறள் எண்: 490

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.


கொக்கு ஒக்க, கூம்பும் பருவத்து; மற்று அதன்
குத்து ஒக்க, சீர்த்த இடத்து.

விளக்கம்:

காலம் நேரம் பார்த்து அமைதியாகக் காத்துச் செயலாற்ற வேண்டிய காலத்தில் மடையருகில் கொக்கு போல கவனமாய்க் காரியமே கண்ணாக இருந்திடவேண்டும். செயலைச் செய்வதற்கு உரிய காலம் நேரம் வரும்போது, அக்கொக்கு மீனைக் குறிதவறாமல் குத்தி எடுப்பது போலத் தப்பாமல் விரைந்து செயலாற்ற வேண்டும்.

------------
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 98. பெருமை
குறள் எண்: 973

மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர்.


மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர்; கீழ் இருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர்.

விளக்கம்:

பதவியால், செல்வத்தால் - இன்னும் பல காரணங்களால் சிலர் வாழ்க்கையில் மேலான நிலையில் வீற்றிருப்பர். அவ்வாறு மேலான நிலையில் இருந்தாலும் கூட அவர்கள், 'இவர் பெரியவர்' என்று அனைவரும் மதிக்கத்தக்க மேல் நிலையை அடைய மாட்டார். குணம், பண்பில் தாழ்ந்தவர் மேலானவர் என்ற பெருமைவாய்ந்த நிலையை அடைய இயலாது.

மாறாக, மேன்மக்கள் சிலர் பதவி மற்றும் செல்வத்தால் கீழ்ப்பட்ட இடங்களில் இருக்க நேரிடலாம். அவ்வாறு தாழ்ந்த நிலையில் இருந்தாலும் கூட அவர்கள், 'இவர் சிறியவர்' என்று பலரும் இகழும்படியான நிலைக்குத் தள்ளப்பட மாட்டார். குணம், பண்பில் உயர்ந்தவர் கீழானவர் என்ற தாழ்நிலையை அடைய இயலாது.

குறளின் குரல் - 19

பால்: பொருட்பால் இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 65. சொல்வன்மை
குறள் எண்: 643

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.


கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்
வேட்ப மொழிவது ஆம் சொல்.

விளக்கம்:

தன் சொல்லை விரும்பிக் கேட்டவரைத் தன்வயப்படுத்தி வைக்கும் வகையிலும், தன் பேச்சைக் கேளாது இருந்தவரும் இவர் பேச்சைக் கேட்க வேண்டும் என்று விரும்பும்படியும் பேசப்படுவதே சிறந்த சொல்வன்மையாகும்.
----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 04. அறன் வலியுறுத்தல்
குறள் எண்: 38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.


வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின், அஃது ஒருவன்
வாழ் நாள் வழி அடைக்கும் கல்.

விளக்கம்:

ஒருவன் நாள் தவறாமல் நல்லது செய்து வருவானாயின், அஃது அவனது வாழ்நாள் எனப்படும் வழியில் இடைவெளிகள் இல்லாது அடைக்கும் கல்லாகும். அது வாழும் நாட்களின் தொடர்ச்சியை / வாழ்க்கையைக் காக்கும் என்பது குறிப்பு. நல்லதைச் செய்யும் நாளெல்லாம் வாழும் நாளாகும்.

-------------------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 94. சூது
குறள் எண்: 940

இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப
முழத்தொறூஉங் காதற் றுயிர்.


இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல், துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.

விளக்கம்:

ஆடும் போது பொருளை இழக்க நேர்ந்தாலும் சூது, இழந்ததை வென்றிட மீண்டும் மீண்டும் ஆடவேண்டுமென்று ஆசைப்படவைக்கும். அதே போல், இந்த உடம்பு மேன்மேலும் துன்பத்தால் உழன்று வருந்தினாலும், உயிரானது உடலையே மீண்டும் மீண்டும் காதலிக்கும்.

உயிர் / உடல் மேல் இருக்கும் ஆசையும், சூதின் மேல் இருக்கும் பற்றும் அவ்வளவு எளிதில் குறையாது.

--------------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் எண்: 700

பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.



பழையம் எனக் கருதிப் பண்பு அல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

விளக்கம்:

அரசரிடம் தாம் நீண்ட நாட்கள் பழக்கமுடையவர் என்று எண்ணிக் கொண்டு, அந்த நட்பின் உரிமையால் தமக்குப் பொருந்தாத பண்பற்ற செயல்களைச் செய்வது துன்பம் மற்றும் அழிவைத் தரும்.

---------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:17. அழுக்காறாமை
குறள் எண்: 163

அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.


அறன் ஆக்கம், வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான்.

விளக்கம்:

பிறருக்கு வருகின்ற ஆக்கத்தைக் கண்டு அது அவருக்கு உரியதுதான் என்று கருதாமல் பொறாமைப்படுபவன், தனக்கு அறமாகிய ஆக்கம் வேண்டாம் என்பவனாவான்.

ஆக்கம்: செல்வம், பதவி, முன்னேற்றம் முதலிய ஆகி வரும் தகுதிகளையெல்லாம் குறிக்கும்.

-----------------

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்:01. கடவுள் வாழ்த்து
குறள் எண்: 05

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார்மாட்டு.

விளக்கம்:

நற்குணங்கள் அனைத்தும் கொண்ட இறைவன் அவனின் புகழே மெய்யான புகழாகும். அப்புகழுக்குரிய வகையில் நற்செயல்களைச் செய்பவர்க்கு, அப்புகழை எப்போதும் விரும்பிச் சொல்வார்க்கு அறியாமையோடு கூடிய நல்வினை தீவினை இரண்டும் சென்று சேரா.

Tuesday, January 4, 2011

வல்லவன் வில் - விமர்சிப்பது நல்லகண்ணன்

'உஸ் அப்பாடா...' என்று வீட்டிற்குள் நுழைந்த நல்லகண்ணன் காலை ஓடி வந்து கட்டிக் கொண்டாள் கீர்த்தி. கீர்த்தி, நல்லகண்ணன் - உமா தம்பதியரின் செல்ல மகள்.

நல்லகண்ணன்  ஒரு வார இதழின் சினிமா விமர்சகன். நடுநிலையான நல்ல விமர்சகர் என்று பரவலாகப் பலரும் பாராட்டும் புகழ் அவனுக்குண்டு. இது மேற்படி வருமானத்துக்கான பகுதி நேர வேலைதான். மற்றபடி தனியார் நிறுவனமொன்றில் சொற்பமான சம்பளத்துக்கு வேலை செய்து, தேதி இருபதைத் தாண்டுகையில் அடுத்த மாதம் எப்போது பிறக்கும் என்று நாட்காட்டியைப் பார்த்துக் குடும்பம் நடுத்துகின்ற கீழடுக்கு நடுத்தர வர்க்கம்.


'இந்தாங்க..' தண்ணீர் லோட்டாவைத் தந்தாள் உமா.


'என்னங்க...'வல்லவன் வில்' படத்துக்கு உங்கள் விமர்சனம் படிச்சாங்களாம் மல்லிகாக்கா...அவங்க மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லிருக்கீங்களாமே....புத்தகம் கொடுத்துட்டுப் போனாங்க....படிக்கணும். நல்லாருக்கா படம்? என்ன எழுதிருக்கீங்க'....என்றவள் குழந்தையைப் பார்த்துக் கொள்ள அவன் வந்துவிட்ட திருப்தியில் பக்கங்களைப் புரட்டிப் படிக்க ஆரம்பித்தாள். படத்தின் நாயகன் அவள் மனம் கவர்ந்தவர் ஆயிற்றே.



'என்னங்க...எல்லாரும் படம் நல்லாருக்குன்றாங்க. நீங்க இப்படி பாடாவதின்ற மாதிரி எழுதிருக்கீங்க....அதானே..மல்லிகாக்கா எப்படி இப்படிப் பாராட்டுனாங்கன்னு நான் அப்பவே நெனச்சேன். அவங்களும் உங்கள மாதிரிதான். எதையும் நல்லாருக்குன்னு அவ்வளவு சுலபமாச் சொல்லிர மனசு வராது.'



'காபி கொண்டு வா உமா'...'கீர்த்திக்குட்டி..அது மேல ஏறாத..விழுந்துறப் போற..'



'இந்த வாரம் இந்தப் படத்துக்குப் போலாம்னு நெனச்சேன்....நீங்க இப்படி எழுதிருக்கதைப் பாத்தாத் திரும்பியும் ஒரு வாட்டி பாப்பீங்களான்னு சந்தேகமாருக்குங்க...'


'...........'


'என்ன..பதிலே காணோம்...அவ்ள மோசமாவாருக்கு படம்?'


'யப்பா...உங்காளு நடிச்ச படம்னவுடன எவ்வளவு ஆர்வம் உமா உனக்கு?'


' ஆமாமா..கதநாயகியத்தான் மாஞ்சு மாஞ்சு வர்ணிச்சுருக்கீங்களே...'


அவளின் உதட்டுச் சுழிப்பை ரசித்தவன் சட்டப்பையிலிருந்து இரண்டு நுழைவுச்சீட்டுகளை எடுத்தான்.


'இந்தா... இந்த வாரம் வெள்ளிக்கிழமை அந்தப் படத்துக்குப் போறோம்...'


புருவத்தை நெறித்து அவனைப் பார்த்த உமா, தொடர்ந்து வந்த அவன் பேச்சைக் கேட்டு இன்னும் ஆச்சரியமானாள்.


'இயல்பா ஓடுற எதார்த்தமான படம். சந்தேகப் புத்தினால வர்ற கேடு, இப்ப சில டிவி சானல்கள் நடத்துற சில கேடுகெட்ட நிகழ்ச்சிகள், சில பணக்காரப் புத்திகள், கொஞ்சம் சோகம், கொஞ்சம் மிகை, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் அத்துமீறல்கள், கொஞ்சம் குழப்பம், தவிர்த்திருக்க வேண்டிய விஷயங்கள்.....இப்டில்லாம் நிகழ்ச்சிகள் தொட்டுக்காட்டி எழுதணும்னு ஆசைதான்.



ஆனா அதுக்கெல்லாம் எனக்குச் சுதந்திரம் இல்ல உமா.....எவ்வளவு மோசமா எழுதணுமோ அவ்வளவு மோசமா எழுதணும்...நேரடியா இல்லாம மறைமுகமா...படத்தை விட. படத்தின் இயக்குநரைவிட, மத்த விஷயங்களவிடப் படத்தின் நாயகனத் தாக்கணும்னு எனக்கு உத்தரவு....


ஆங்கிலப்படத்தின் அப்பட்ட காப்பி, தன் கேவலமான கருத்துகளை நாசூக்காய் வெளியிட்டு வேஷம் போடும் நாயகன்......அவர் சொந்த வாழ்க்கை பிரதிபலிப்பு, ஆத்திகம் / நாத்திகம் என்றெல்லாம் விமர்சனம் எழுதவேண்டிய தலையெழுத்து...


இப்ப 'தந்திரன்' படத்துக்கு என்ன எழுதுனேன்....ஆஹா..ஓஹோ...
ஆங்கிலப்படத்திற்கு நிகரான தமிழ்ப்படம்....நினைக்கவே முடியாத பட்ஜெட்டில் எடுத்த படம்.....மறந்தும் கூட நடிகரின் சொந்த வாழ்க்கைய விமர்சனத்தில் இழுக்கக்கூடாது...அதுவும் உத்தரவுதான்...என் எண்ணங்கள் சிலவற்றை மறைச்சு, நடுநிலை மறந்துதான் எழுதவேண்டிருக்கு.


என் சொந்த நினைப்பை நண்பர்கள்கிட்டக் கூடப் பகிர்ந்துக்க முடியாது....வெளிய தெரியாமருக்கணுமே...அலுத்துப்போச்சு உமா..

ஆங்கிலப்படச் சாயல் இருப்பதை ஒருபடத்தில் தூக்கி எழுதிவிட்டு, அடுத்த படத்தில் தாக்குவது...எனக்கே கொஞ்சம் அசிங்கமாத்தான் இருக்கு....என்ன பண்றது சொல்லு?


இதுல சம்பந்தப்பட்ட நாயகனின் ரசிகர்களிடமிருந்து மிரட்டல் கடிதங்கள் வேற போட்டுத் தாக்குது....


நடுநிலைமையோட விமர்சனம் எழுதுறது சொந்த விருப்பு வெறுப்பு இருக்குற ஒரு சாதாரண மனுஷனுக்கு ரொம்பச் சுலபமான காரியமில்ல. இருந்தும்  இப்டில்லாம் பண்ண வேண்டிருக்கு.


நல்லவேள...சமுதாய விமர்சனம் பண்ற வேல எனக்கில்ல...அதுலயும் இப்படி எழுத வேண்டிய கட்டாயம் இருந்துச்சுன்னா....கஷ்டம்தான்..




வேற நல்ல வேலை பாத்துட்டு இருக்கேன். கெடச்சதும் சீக்கிரம் இந்த வேலைய விட்டுறலாம்னு இருக்கேன்.... '



குறிப்பு: இது யாரையும் எதற்காகவும் தாக்க எழுதப்பட்டதல்ல...பார்வைகள் நபருக்கு நபர் எப்படி வேறுபடுகின்றன, விமர்சனங்கள் எப்படி,  எதனால் மாறுபடுகின்றன, விமர்சனம் செய்வது சுலபமான காரியமா, விமர்சகர்கள் மனநிலை எப்படியிருக்கும்என்று எண்ணிய விபரீத எண்ணத்தின் விளைவான கற்பனையே....

குறளின் குரல் - 18

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 72. அவையறிதல்
குறள் எண்: 714

ஒளியார்மு னொள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்.


ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல், வெளியார்முன்
வான் சுதை வண்ணம் கொளல்.

விளக்கம்:

அறிவில் ஒளிர்பவர் முன் பேசும்போது, தாமும் அறிவில் ஒளிர்பவராகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவொளி குன்றியவர் முன
பேசும் போது வெள்ளைச் சுண்ணாம்பின் நிறம் போல வெள்ளையாக, அறிவை வெளிப்படுத்திக் கொள்ளாதவராக இருக்க வேண்டும்.

----------------------
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 80. நட்பாராய்தல்
குறள் எண்: 795

அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்.


அழச் சொல்லி, அல்லது இடித்து, வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்.

விளக்கம்:

தவறு செய்யும்போது அதற்காக வருந்துமாறு புத்தி சொல்லித்திருத்தியும், முறையற்ற நெறியில் செல்லும் போது இடித்துக் கூறித் திருத்தியும், தனது நடப்பை அறிய வல்லவராய்த் தன்னை வழிநடத்திச் செல்லுகின்றவரின் நட்பை ஆராய்ந்து அத்தகையவரிடம் நட்புக் கொள்ள வேண்டும்.
---------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 16. பொறையுடைமை
குறள் எண்: 155

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.


ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர்,
பொறுத்தாரைப் பொன்பொல் பொதிந்து.

விளக்கம்:

தவறு செய்துவிட்ட காரணத்தால் ஒருவரைத் தண்டித்தவரை,  யாரும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். ஆனால், பெருந்தன்மையோடு அத்தவறைப் பொறுத்துக் கொண்டவரைத் தம் உள்ளத்தில் பொதிந்து வைத்துப் பொன் போல் மதிப்பார்கள்.

------------------

பால்: பொருட்பால்
இயல்: கூழியல்/பொருளியல்
அதிகாரம்: 76. பொருள்செயல்வகை
குறள் எண்: 753

பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு
மெண்ணிய தேயத்துச் சென்று.


பொருள் என்னும் பொய்யா விளக்கம், இருள் அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

விளக்கம்:

பொருட்செல்வம் என்னும் உண்மையான விளக்கு. அதை உடையவர்கள் நினைத்த இடங்களுக்கெல்லாம் சென்று அவருடைய பகையாகிய இருளைப் போக்க வல்லது.

-------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 82. தீநட்பு
குறள் எண்: 818

ஒல்லுங் கரும முயற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.


ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார், சோரவிடல்.

விளக்கம் - 1:

ஒருவர் தன்னால் செய்ய முடியும் செயலையும் தன்னைச் செய்ய விடாமல் குழப்புபவரின் / கெடுப்பவரின் நட்பை, அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் மெதுவாக விட்டுவிட வேண்டும்.

விளக்கம் -2:

தன்னால் செய்ய முடியும் செயலைச் செய்து உதவாமல், அதனைச் செய்ய இயலாதவர் போல் இருந்து குழப்புகிறவரின் / கெடுப்பவரின் நட்பை, அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் மெதுவாக விட்டுவிட வேண்டும்.

இக்குறளுக்கு இருவேறு விளக்கங்கள் காணப்பெற்றேன். இரண்டுமே பொருத்தமாகத் தோன்றுகிறது.

------------------

பால்: காமத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 131. புலவி
குறள் எண்: 1309

நீரு நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே யினிது.


நீரும் நிழலது இனிதே, புலவியும்
விழுநீர் கண்ணே இனிது.

விளக்கம்:

நிழலின் இடத்து இருக்கும் போதுதான் நீர் மிகவும் குளிர்ச்சியாக இனிதாக இருக்கும். அன்புடையவர்களிடத்து நிகழும்போதுதான் ஊடல் இனிமையாக இருக்கும்.