Friday, March 14, 2008

காவியப்பாவை ஜீவிதம்

இளவேனில் தினத்துக்கு நின்னை
இணைமொழிய இயலாதன்றோ?
நின் எழில்மென்மை நல்நளினம்
வேனிலினும் வனப்பன்றோ!

சித்தம்கவர் சித்திரைப்பூ மொட்டுகளை
மெத்தனமாய் அளைந்து செல்லும்
வேனிற்தென்றல் அழுத்தமானது;
வேனிலின் வாழ்நாளோ
குத்தகையில் கொஞ்சம் குறைந்திட்டது.

கணப்பொழுது வானின் கண்ணது
சுடர்விட்டுப் பொலிந்திடும்.
மறுகணமே தன் தங்க நிறம்
மங்கலுற்று மயங்கிடும்.

எழிலார்ந்த எந்தவொன்றும்
எழிற்கோலம் சற்றே பிறழ்ந்திடும்.
விதிவசத்தால் சில பொழுது,
வழிமாறாது சென்றிடும்
இயற்கையால் சிலபொழுது.

எனினும் நின் எழில்வேனில்
என்றென்றும் மங்கிடாது,
தனியழகின் தன்மையதனை
ஒருபோதும் இழந்திடாது.

காலத்துக்கும் வாழும்
காவியத்தின் வரிகளில்
வளர்ந்து வரும் நின்னழகை
மரணதேவனும் தன் நிழலில்
வசப்படுத்தல் இயலாது.

மனிதனவன் சுவாசிக்கும் காலம்வரை
கண்களது காட்சிகள் காணும்வரை
இந்தக் கவிதையும் வாழ்ந்திருந்து
நின்னையும் வாழவைக்கும்.

ஷேக்ஸ்பியரின் Sonnet - 18ன் மொழிபெயர்ப்பு முயற்சி/பயிற்சி..
ஏற்கனவே செய்த இந்த முதல் முயற்சி திருப்தியில்லாததால் மீண்டும்...

ஆங்கிலத்தில்:

Shall I compare thee to a summer's day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer's lease hath all too short a date:
Sometime too hot the eye of heaven shines,
And often is his gold complexion dimmed,
And every fair from fair sometime declines,
By chance, or nature's changing course untrimmed:
But thy eternal summer shall not fade,
Nor lose possession of that fair thou ow'st,
Nor shall death brag thou wander'st in his shade,
When in eternal lines to time thou grow'st,
So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee.

18 comments:

நிஜமா நல்லவன் said...

வார்த்தை பிரயோகங்கள் மாறும்போது முன்னிலும் அழகாய் தோன்றுகிறது.

ரசிகன் said...

மொழிப்பெயர்ப்பு தமிழில் அருமையா இருக்கு:) உங்க கவித்துவமும் ரொம்பவே உதவியிருக்கு :) வாழ்த்துக்கள்:)

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரொம்ப நல்லா வந்திருக்கு மலர், கிடத்தட்ட இப்படித்தான் என் மனதில் தோன்றியது. தொடர்ந்து செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

RATHNESH said...

பாசமலர் மேடம்,

அழகான அடர்த்தியான அர்த்த பூர்வமான சொல்லடுக்கு. அற்புதம். அருமை.

பாச மலர் / Paasa Malar said...

நிஜமா நல்லவன்,
ரசிகன்,
கிருத்திகா,
ரத்னேஷ் சார்,

மிக்க நன்றி..முன் எழுதியதை விட சற்று அதிகம் திருப்தி கிட்டியது என்றுதான் சொல்லவேண்டும்..

கோபிநாத் said...

அருமை....;)

மங்களூர் சிவா said...

nice
:)

காட்டாறு said...

வாவ் வாவ் வாவ்.... மலர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வார்த்தைகள் வெளி வர தர்க்கம் செய்கிறதே. மனதை அப்படியே சுண்டி இழுத்து எங்கோ கொண்டு போய் விட்டது உங்கள் மொழிப் பெயர்ப்பு. உங்கள் இரண்டாம் முயற்சியே அமர்க்களம்.

மேலும் மேலும் பொலிவுடன், வார்த்தைகளில் ஜாலங்கள் தெளித்து, உள்ளுணர்வுகளை வெளிக் கொணர்ந்து, பல மொழிப்பெயர்ப்புகளை எங்களுக்கு தர வேண்டுகிறேன். வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி, சிவா.

முயற்சிக்கிறேன் காட்டாறு..

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

நல்ல மொழிபெயர்ப்பு ! முன்னிலும் அருமை!
உங்கள் பதிவு என்னை இதைப் பற்றி ஒரு சிறு ஆராய்ச்சியே செய்ய உந்திவிட்டது.
கண்கள் என்பதை மட்டும் கண் என்று மாற்றிக் கொள்ளலாமோ? (சூரியனை மட்டும் தானே சொல்கிறார் ?)

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி வந்தியத்தேவன்.."கண்கள்" என்பதைக் "கண்ணது" என்று மாற்றி விட்டேன்..இப்போது சரியாக வருமென்று நினைக்கிறேன்.
மொழிபெயர்ப்பில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம்...எதையும் சற்றும் மாறாமல் வழங்குவது...சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

மலர்,உங்கள் மின்மடல் கிடைத்தது,நன்றி,என் ரசனையின் மீதான உங்கள் நட்புக்கு! இப்போது அவசரமாக வருகையை பதிக்கிறேன்;நிதானமாகப் படித்துவிட்டு மீண்டும் வருவேன்.....

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கொஞ்சம் மறந்துதான் போய்விட்டது,இன்று மின்மடல்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் மடல் கண்டு மீண்டு(ம்) வந்தேன்.
முதலில் அருமையான,அழகான,நல்ல முயற்சிக்கான வாழ்த்துக்கள்,கவிதையின் பொருளை இயன்ற அளவில் கொண்டுவர முயன்றதற்கான பாராட்டுகள்.
////கணப்பொழுது வானின் கண்ணது
சுடர்விட்டுப் பொலிந்திடும்//// போன்ற வரிகளில் 'சானெட்ஸ்'ஐ அப்படியே கொண்டு வரும் 'கவித் தவிப்பு' தெரிகிறது.
சில இடங்கள் மேலும் நறுக்கென்று இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.
காட்டாக, ///////எழிலார்ந்த எந்தவொன்றும்
எழிற்கோலம் சற்றே பிறழ்ந்திடும்.
விதிவசத்தால் சில பொழுது,
வழிமாறாது சென்றிடும்
இயற்கையால் சிலபொழுது./////
என்பவை போன்ற வரிகள் சிறிது கவிதைக் கட்டைக் குறைப்பது போன்ற தோற்றம் தருகின்றன.
இதை எனது அரைகுறை முயற்சியில்,
/////அகிலத்தின் அழகெழில்கள்
வளர்ந்திடும் நாட்களிலே
கலைந்திடும் சிலநேரம்/////
என சொல்லலாமோ????

முழுமையாகப் படிக்கையில் சானெட்ஸ்'ன் இன்பத்தை சிந்தனைக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் !

வேறொரு சுவையான கோணம் இருக்கிறது,ஷேக்ஸ்பியர் இந்தக் கவிதையில் காதலியை உருவகப் படுத்துவதாகவே பலரும்,உங்கள் மொழிபெயர்ப்பு உட்பட,பொருள் கொடுக்கிறார்கள்.Out of the box idea' வாக வேறெதுவும் உங்களுக்குத் தோன்றுகிறதா?

கண்மணி/kanmani said...

மலர் இது போன்ற மொழிபெயர்ப்பு எனக்கு முற்றிலும் புதிது.உங்கள் உறுதியைப் பாராட்டுகிறேன்.
மிகமிக நன்றாக வந்திருக்கிறது முன்னையதைக் காட்டிலும்.
எனக்குத் தோன்றியது ஒன்றுதான் வார்த்தைகள் முழு வாக்கியம் போல இல்லாமல் தொக்கி நிற்கும் போது கவிதையின் அழகு கூடும் என்பது என் எண்ணம்.மற்றபடி உங்கள் முயற்சிக்கு பக்கத்தில் நிற்கும் தகுதி கூட எனக்கில்லை.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி அறிவன்..உங்கள் வரிகள் மிகவும் பொருந்தி வருகின்றன..உங்கள் ஆலோசனையை வரும் முயற்சிகளில் பின்பற்ற முயல்கிறேன்..

காதலி தவிர அவருடைய புரவலர் Earl of Southampton அவரின் நட்பு பாராட்டும் முகமாகவும் இந்த sonnets இருந்ததாகப் படித்துள்ளேன்..அதைப் பற்றிய விவகாரமான விவாதங்களும் இன்னும் ஆய்வுகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன..

பாச மலர் / Paasa Malar said...

என்ன கண்மணி..தகுதி அது இது என்று சொல்லிக் கொண்டு...

நல்ல ஆலோசனை..அடுத்த முயற்சியில் இதை முயல்கிறேன்..கொஞ்சம் மரபுக் கவிதை விதிகளை முறையாகப் பின்பற்றினால் சரியாக வரும் வாய்ப்புகள் அதிகம்..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

மிக்க நன்றி மலர், என்னுடைய கருத்தை இயல்பாக எடுத்துக் கொண்டதற்கு !!!
நானே சிறிது பயந்து கொண்டுதான் இருந்தேன்,முன்பொரு முறை ஒரு பதிவர்-ஒரு பெண்- சில கவிதைகளை எழுதியிருந்தார்,அழகியல் நோக்கில் சில விதயங்களை சுட்டி ஒரு கருத்து சொல்லியிருந்தேன்..
மிகு காட்டமாக,என்னுடைய கவிதை வரிகளுக்கு மாற்று சொல்ல நீ யார்??? என சண்டைக்கே வந்து விட்டார் !
தாயே,மன்னித்து விடுங்கள்,இனி கனவிலும் இப்பக்கம் வரமாட்டேன் எனச் சொல்லி அவர் வருந்தியதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்து விட்டு வந்துவிட்டேன்.
உங்களுக்கு பதில் எழுதும் போதும் மிகவும் யோசித்தே எழுதினேன்,பயமுடன்..
இயல்புடனும்,நட்புடனும் அதை அணுகியதற்கு நன்றி.

மற்றபடி சானெட்ஸ் 18 ல்,'காதலி' என்ற பொருளை எடுத்துவிட்டு 'இளமை' என்ற பொதுப் பொருளை கருதி கவிதை முழுவதையும் படித்துப் பாருங்கள்,ஒரு புதிய கோணம் கிடைக்கும்.
வோர்ட்ஸ்வொர்த் இந்த நோக்கிலேயே
We'll talk of sunshine and of song,
And summer days when we were young,
Sweet childish days which were as long
என்றெழுதியதாகவும் சில ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பின்னவரின் பல கவிதைகளில் முன்னவரின் பல சாயல்கள் இருக்கும் என்பதைக் கவனித்திருக்கிறீர்களோ??????

பாச மலர் / Paasa Malar said...

மீண்டும் நன்றி அறிவன்..விமர்சனங்கள் எப்போதுமே வளர்ச்சிக்கு உதவும்..

நீங்கள் சொல்வதும் புதிய கோணம்..பொருந்தி வருகிறது..

இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமை பல இடங்களில் வெளிப்படும்..