Thursday, March 13, 2008

நீ மரணித்தும் உயிர்த்திருப்பாய்!




இனியவளே!
உன்னை
இளவேனில் தினத்துக்கு
இணையாக்கிப் பாடவா?


நீ அதனினும்
அழகானவள்,
மென்மையானவள்..
நளினமானவள்..

மனம் கவரும்
மே மாத
மலர் மொட்டுகளைச்
சற்றே வீம்பாக
அளைந்து போகும்
அழுத்தமான தென்றல்..
(உன் மென்மைக்கு இணையாகுமா?)

இம்மண்ணில்
வேனில் பருவத்தின்
குத்தகை தினங்கள்
மிகவும் குறைவுதானே.
(உன் அழகு அப்படியா?)

சில பொழுது சுடுவெயிலால்
தங்கப் பொலிவுடன் தகதகக்கும்
வானத்தின் கண்கள்
பல பொழுது மேகமூட்டத்தால்
மங்கித்தான் போகும்.

விபத்தால் சில பொழுது,
மாற்றம் எழுதிச்செல்லும்
இயற்கையின் விளைவால்
சில பொழுது..
எந்தவொரு அழகுமே தன்
அழகு நிலையிலிருந்து
தாழும்..சரியும்.

அன்பே,
உன் அழகு இளவேனில்தான்.
எனினும் என்றென்றும்
மங்கி மறையாத இளவேனில்.

மரண தேவனும்
தன் நிழற்பரப்பினுள்
உன்னை வலித்திழுக்க முடியாது.
உன்னை வசப்படுத்தியதாக
வனப்புமொழி பேசி
எக்காலமும் எக்காளமிட முடியாது.

ஏனெனில் என்னவளே!
நீ மரணித்தும் உயிர்த்திருப்பாய்..
என்றும் வாழும்
என் கவிதையின் வரிகளில்
என்றென்றும் நீ வாழ்ந்திருப்பாய்..
காலங்கள் கடந்தும் உயிர்த்திருப்பாய்..

இப்பூவுலகில்
மனிதனின் சுவாசம் உள்ளவரை
கண்களில் பார்வைகள் உள்ளவரை
என் கவிதையும் வாழ்ந்திருக்கும்..
உன்னையும் உன் அழகையும்
என்றென்றும் வாழ வைத்து
என் கவிதையும் வாழ்ந்திருக்கும்!

(ஷேக்ஸ்பியரின் Sonnet-18 ன் மொழிபெயர்ப்பு முயற்சி/பயிற்சி)

(இதில் அவ்வளவு திருப்தியில்லாததால்
காவியப்பாவை ஜீவிதம் பதிவில் மீண்டும் ஒரு முயற்சி)

ஆங்கிலத்தில்:

Shall I compare thee to a summer's day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer's lease hath all too short a date:
Sometime too hot the eye of heaven shines,
And often is his gold complexion dimmed,
And every fair from fair sometime declines,
By chance, or nature's changing course untrimmed:
But thy eternal summer shall not fade,
Nor lose possession of that fair thou ow'st,
Nor shall death brag thou wander'st in his shade,
When in eternal lines to time thou grow'st,
So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee.

17 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்லாருக்கு மலர், ரொம்ப உணர்சி மயமான கவிதையை தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள். மொழிபெயர்ப்பு குறித்து எனக்கு மாற்று கருத்தொன்று உண்டென்றாலும் தங்கள் நல்ல முயற்சி குறித்து மாற்றுக்கள் ஏதுமில்லை. வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

கலக்குறிங்க...நல்லாருக்கு ;))

அந்த குழந்தை படமும் அழகு.

பாச மலர் / Paasa Malar said...

கிருத்திகா,

மொழிபெயர்ப்பு முயற்சியில் இறங்கியதுமே..எனக்கும் மாற்றுக் கருத்து வர ஆரம்பித்து விட்டது..ஏதோ இயல்பான அழகைக் கெடுத்தாற் போல ஒரு குற்ற உணர்வு ..

பாச மலர் / Paasa Malar said...

கோபி,

அது குழந்தை படமா..நான் ஓர் இளம்பெண் என்றல்லவா நினைத்தேன்..

கிருத்திகா ஸ்ரீதர் said...

இல்லை அழகை கெடுப்பது என்ற அர்த்தத்தில் நான் கூறவில்லை. ஆனால் மேலும் அழகூட்ட முற்படல் மட்டுமே நான் சொல்ல விளைவது. ஆனால் இது தவிற்க முடியாத ஒன்று தான் மொழிபெயர்ப்பின் போது வெறும் தட்டையான மனதோடு மொழிபெயர்க்க முடியாதுதான் ஏனெனில் நாம் அந்த படைப்பின் அழகில் மயங்கிச்செய்வது தானே மொழிபெயர்ப்பே. தொடர்ந்து செல்லுங்கள் வாழ்த்துகளுடன்

பாச மலர் / Paasa Malar said...

//இல்லை அழகை கெடுப்பது என்ற அர்த்தத்தில் நான் கூறவில்லை//

நீங்கள் கூறவில்லை..எனக்கே அப்படித் தோன்றுகிறது..அதிகப்படியான சில விஷயங்களையும் கலந்து கொடுத்தது போல..

ஊக்கத்துக்கு நன்றி கிருத்திகா..நன்கு செய்ய முயற்சிக்கிறேன்..

பொழிப்புரை என்ற அளவுகோலைத்தாண்டி இயல்பாக வர முயற்சிக்க வேண்டும்.

காட்டாறு said...

மலர், இந்த கவிதையை செந்தமிழில் மொழிப்பெயர்த்து எழுதுங்களேன். எனக்கென்னவோ, ஷேக்ஸ்பியரின் எழுத்துகளில் உள்ள அழுத்தம் குறைந்தாற்போல் ஒரு உணர்வு. உங்கள் மொழிப்பெயர்ப்பை குறை சொல்வதாய் எடுத்துக் கொள்ள வேண்டாம். 'thee', 'thou', 'owst', 'grwst' என வருவதால் நம் பழம்பெரும் செந்தமிழ் இன்னும் அழகைக் கொண்டு வருமோ என்று என் மனதிற்கு தோன்றுகிறது.

இரண்டாம் சொக்கன்...! said...

கொஞ்சம் மொரட்டுத்தனமா இருக்கிற மாதிரியில்ல....

போக போக சரியாயிரும்னு நினைக்கிறேன்....

வாழ்த்துக்கள் பாசமலர்....

கண்மணி/kanmani said...

ஆஹா இது வேறயா?இன்னும் என்னம்மா பாக்கி?
கலக்குங்க மலர்.முதலில் உங்க கவிதையோ என சந்தேகித்தேன் ஏனெனில் காட்டாறு சொன்னது போல் கொஞ்சம் எளிமையாக தோன்றியது.
இருந்தாலும் அருமையான முயற்சி.

இரவு கவி said...

ரொம்ப நல்லா இருக்கு. நல்ல முயற்சி

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

அருமையான கவிதை. ரசித்தேன்!

// தாழும் நேரம் உயர்வுக்காய்
உயரும் நேரம் உச்சிக்காய்.. //

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்..
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும்

என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது! (ஆனால் அங்கு தேடல் தேவை என்ற வகையில் வைரமுத்து கூறுகிறார்!)

// சயன நேரம் நயனத்தில்
சலன நேரம் சரசத்தில் //

:-))

//தேடல் தந்த ஈடாய்க்
கை நிறையப் புதையல்
அள்ளியணைத்துத்
திரும்பிப் பார்த்தால்
அட!
மீண்டுமொரு தேடலா?
ஆம்..
வாழ்க்கை தொலைந்து போனதாம்!
//

மீண்டும் எங்கே தேடுவது? இதை உணர்வதற்குள் "வயோதிகம் வழிமறிக்கும். மரணம் தழுவ காத்திருக்கும்!"

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

மன்னிக்கவும். போன கவிதைக்கு பின்னூட்ட வேண்டியதை தவறுதலாக இங்கு போட்டு விட்டேன் !

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்குங்க மலர். உங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

பாச மலர் / Paasa Malar said...

காட்டாறு..நல்ல யோசனை..முயன்று பார்க்கிறேன்..

ஆமாம் சொக்கரே..முன்னேறுவேன் என்று நானும் நம்புகிறேன்..

கண்மணி..ஆமா ..கொஞ்சம் வேறு மாதிரி முயற்சிக்கிறேன்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி இரவு கவி..

நன்றி வந்தியத்தேவன்..மரணம் வரை தேடல் தொடரத்தான் செய்கிறது..

ஆமாம்..நி.நல்லவன், முயற்சி தொடர முயற்சிக்கிறேன்..

RATHNESH said...

மேடம்,

மொழிபெயர்ப்பு முயற்சி; அதுவும் மிகப்புகழ்பெற்றவர்களின் - ESTABLISH ஆகிவிட்டவர்களின் படைப்புகளில் கைவைக்கும் தங்கள் துணிச்சலுக்கும் தன்னம்பிக்கைக்கும் பாராட்டுக்கள்.

இந்தப் பதிவுலகின் எல்லைகளைத் தாண்டிய எதிர்காலம் தங்களுக்கு இருப்பதை உணர முடிவதால் சொல்ல விரும்புகிறேன்:

அடர்த்தியான அதே சமயம் அலட்டல் இல்லாத வார்த்தைகளை உபயோகியுங்கள். (இந்த விஷயத்தில் நீங்கள் ஏற்கெனவே 60 சதம் தாண்டி விட்டீர்கள்). கவிதைகளில் அடைப்புக் குறிகளைத் தவிருங்கள். நீங்கள் சொல்ல நினைப்பதைப் புரிந்து கொள்ளாத வாசகனை அந்த விவரிப்பு புதிதாகச் சேர்த்து விடாது. அவசியமற்ற விவரிப்புகள் வேண்டாம். எழுதிவிட்டு உடனே வெளியிட வேண்டாம். ஒருவாரம் கழித்து மீண்டும் படித்துப் பாருங்கள்; மாற்றங்கள் தோன்றும்.

முடிந்தால் அப்துல்ரகுமான் எழுதியுள்ள நூல்களைப் படித்தூப் பாருங்கள். பிறமொழிக் கவிதைகளை அதன் சாரம் குறையாமல் அதேசமயம் தமிழின் இனிமையும் சேர்த்து அடர்த்தியாகத் தருவது எப்படி என்பதில் விற்பன்னர் அவர்.

வாழ்த்துக்கள்.

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி..ரத்னேஷ் சார்..நல்ல பயனுள்ள யோசனைகலும் ஊக்கங்களும்..மனதில் கொண்டு முயற்சிக்கிறேன்..