Wednesday, February 20, 2008

நிறம் மாறும் விதிகள்

ரம்யாவின் தாயார் ரம்யாவிடம்:

சரி. போற இடத்துல புருஷனுக்கு அனுசரிச்சு நடக்கிறவதான் பொம்பள. புது இடம். கொஞ்சம் அப்டி இப்டித்தான் இருக்கும்.நீதான் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போணும். ஆம்பளைங்க வெளில சுத்திட்டு வருவாங்க..ஆயிரம் டென்ஷன் இருக்கும். பாத்துப்பதமா நடந்துக்கோ..மாமியார், மாமனார்கிட்டயும் அப்படித்தான்..ஏடாகூடமா ஏதாவது பண்ணாத..முக்கியமா அவங்க அப்பா,அம்மா பத்தி உன் புருஷன்கிட்ட குறை சொல்லிட்டே இருக்காத..

ரம்யாவின் தாயார் தன் கணவனிடம்:

என்ன அப்டி முழிக்கிறீங்க? ஆபீஸாம்...டென்ஷனாம்..கத்தரிக்கா..வீட்ல இருந்தா எங்களுக்கு மட்டும் டென்ஷன் இல்லையா..நல்லா வளத்து வெச்சிருக்காங்க புள்ளய உங்க அப்பா, அம்மா எதுக்குமே லாயக்கில்லாம.. அவுங்களத்தான் சொல்லணும்..

** ** ** ** * * ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **

ரம்யாவின் மாமியார் தன் மகள் உமாவிடம்:

ஏண்டி..வரும்போது பீரோவெல்லாம் பூட்டிட்டுத்தான வந்த? குடும்பத்துல அத்தனை பேர் நடமாடுற இடம்..ஏதாவது காணோம்னா யாரைச் சொல்ல முடியும்..பாத்துப் பாத்து வாங்கிக் கொடுத்தது..பத்திரமா வச்சுக்கோடி..


உன் மாமியாருக்கென்ன..கையும் காலும் நல்லாத்தான் இருக்கு..அவ புடவைய நீதான் மடிக்கணுமா..நீ என்ன அவ வீட்டு வேலக்காரியாடி?சும்மா உன்னயவே வேல வாங்கிக்கிட்டு..ஆனாலும் ஒனக்குச் சாமர்த்தியம் பத்தாதுடி..

ஆமா..உன் நாத்தனார்க்காரி இன்னும் அடிக்கடி வந்து டேரா போடுறாளா..போன தரம் உங்க வீட்டுக்கு வந்தப்பவே எனக்குப்பத்திக்கிட்டு வந்துச்சு..உன் மாமியார் வேற மீனை வறு, கறிக்குழம்பு வையி அவளுக்குப் புடிக்கும்னு..நீ ஒருத்தியே எவ்வளவு வேலசெய்ய முடியும்..என்னமோ அவ வீட்ல சமைக்கவே சமைக்காதது மாதிரி..உங்க வீட்டுக்கு வந்தாத்தான் சோத்தையே பாப்பாளோ..

ரம்யாவின் மாமியார் ரம்யாவிடம்:

ஏம்மா ரம்யா..என் நீலக் கலர் புடவையக் காணோம்..துவைச்ச துணியெல்லாம் மடிச்சு ஒழுங்கா வக்கிறதில்லயா..இல்ல ஒரு வேள நாந்தான் மறந்தாப்புல உன் பீரோல வச்சுட்டேனா பாரு..

அப்டியே சிக்கன் 65, முட்டைக் குழம்பு, இறாத் தொக்கு பண்ணிடு..உமாவுக்கு ரொம்பப் புடிக்கும்..கொஞ்சம் தேங்காய்ப்பால்சாதமும் பண்ணிடு..

** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** ** **

ரம்யாவின் கணவன் ரம்யாவிடம்:(கல்யாணமான் புதிதில்)

வயசானவங்க அப்டித்தான் இருப்பாங்க..இன்னும் எத்தன காலம் இருக்கப் போறாங்க..அதுவரைக்கும் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயேன்..படிச்ச பொண்ணுதானே நீ..சும்மா சும்மா ஒப்பாரி வச்சுக்கிட்டு..நல்லா வளத்து வச்சுருக்காங்க..
தொட்டாச்சிணுங்கி..

ரம்யாவின் கணவர் ரம்யாவிடம்:(தன் மகளுக்கு வரன் தேடுகையில்)

மாமியார் மாமனார் இருக்கிற இடமெல்லாம் வேணாம்..கூடவே இருந்து என் பொண்ணு உயிர வாங்கறதுக்கா? வர்றவனும் என் பொண்ண எப்டிப் பாத்துக்குவானோ? இப்பக் காலம் இருக்குற இருப்புல..இவ்ள படிக்க வச்சுப் பாத்துப் பாத்து வளத்து வச்சுருக்கேன்..கண் கலங்காமப் பாத்துக்குவான்னு என்ன நிச்சயம்..நம்ம பார்வையிலேயே இருக்குறதுதான் நல்லது..பேசாம வீட்டோட மாப்பிள்ளையாப் பாத்துற வேண்டியதுதான்..

ரம்யா: ????!!!!

24 comments:

pudugaithendral said...

நிறம் மாறவதில் இது பச்சோந்தி வகைங்க.....

நல்லா சொல்லியிருக்கீங்க.

நித்யன் said...

ஐயோ... ஐயோ...

(வடிவேலு ஸ்டைலில் படித்து பெருமூச்சு விடவும்...)

குசும்பன் said...

செம கலக்கல்:)))

பாச மலர் / Paasa Malar said...

ஆமாம் புதுகைத்தென்றல்..
பச்சோந்திகள்தான் நாம்..

வடிவேலு ஸ்டைலில் படிச்சாச்சு நித்யகுமாரன்..

நன்றி குசும்பன்.

இரண்டாம் சொக்கன்...! said...

சினிமா எடிட்டிங்ல...Parallel Cut...அப்டீன்னு ஒரு முறை இருக்கு.அதாவது காட்சியை கோர்வையா சொல்லாம, சம்பந்தபட்ட காட்சியை அடுத்து அடுத்து அடுக்கிட்டே போறது.பார்க்கிறவங்க அதை தொகுத்துக்கனும்...கொஞ்சம் சுவாரஸ்யமான முறை....

நம்ம பதிவர் உஷா ராமசந்திரன் இந்த உத்திய நல்லா கையாளுவாங்க...இப்ப அந்த லிஸ்ட்ல எங்க ஊரு அம்மனியும் சேர்ந்திருகாங்க....

நல்லா வந்திருக்கு வாழ்த்துகள்...

(உண்மைய சொல்லுங்க...இதை எழுத எத்தனை நேரம் எடுத்துகிட்டீங்க....ஹி..ஹி...)

பாச மலர் / Paasa Malar said...

சொக்கரே..

என்ன parallel ஓ என்ன cut ஓ..technical ஆ எல்லாம் யோசிக்கலப்பா கதை எழுதணும்னுதான்
ஆரம்பிச்சேன்..டைப் பண்ண ஆரம்பிக்கும்போது இப்டி தோணுச்சு.

குடும்ப விஷயத்துல நடக்குற எல்லாமே இப்படி parallel cut பண்ணலாம்..

(டைப் பண்ணின நேரம்தான் எடுத்துக்கிட்டேன்..உண்மையாலுமே..)

Unknown said...

ரம்யா மகளிடம்:
//போற இடத்துல புருஷனுக்கு அனுசரிச்சு நடக்கிறவதான் பொம்பள. புது இடம். கொஞ்சம் அப்டி இப்டித்தான் இருக்கும்.நீதான் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போணும். ஆம்பளைங்க வெளில சுத்திட்டு வருவாங்க..ஆயிரம் டென்ஷன் இருக்கும். பாத்துப்பதமா நடந்துக்கோ..மாமியார், மாமனார்கிட்டயும் அப்படித்தான்..ஏடாகூடமா ஏதாவது பண்ணாத..முக்கியமா அவங்க அப்பா,அம்மா பத்தி உன் புருஷன்கிட்ட குறை சொல்லிட்டே இருக்காத..//
தொடர்ந்து நிறம் மாறும் விதிகள்.
அருமை.

கோவி.கண்ணன் said...

பாசமலர் மேடம்,

இரண்டு மாமியார்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள். ஒரே மாதிரியாக சொல்லி இருக்கிங்க. ஒரு தாயாக பொறுப்பாக பேசுறாங்க, ரம்யாவின் கணவர் எல்லாம் தெரிந்து சூழ்நிலை கைதியாக இருந்தார் என்பது மகளைப் பற்றி அவர் சொல்வதில் தெரிகிறது.

ஆக மொத்தம் மாமியார்கள் கொடுமைக்காரிகள் என்று சொல்லி இருக்கிறீர்கள்.

ரம்யா அம்மாவுக்கும் ஒரு மருமகள் வைத்திருக்கலாம். ஒருவேளை அங்கேயும் அப்படித்தான் இருந்திருக்குமோ. ரம்யா பையைனை பெற்றுக் கொள்ளவில்லையா ? அவங்க மாமியார் ஆனால் ?
:)

பொதுவாகவே 50 விழுக்காட்டுக்கும் அதிகமான பெண்கள் ரத்த சொந்தத்துக்கு கொடுக்கும் அன்பை பிறருக்குக் கொடுப்பதில்லை. :(

பாச மலர் / Paasa Malar said...

சுல்தான் சார்,

இது ஒரு தொடர்கதைதான்..

கோவி சார்,

ரம்யா மாமியார் ஆனாலும்..மாமியார் இலக்கணம் பெரும்பங்கு வகிக்கும்...

//பொதுவாகவே 50 விழுக்காட்டுக்கும் அதிகமான பெண்கள் ரத்த சொந்தத்துக்கு கொடுக்கும் அன்பை பிறருக்குக் கொடுப்பதில்லை//

ஆண்களுக்கும் (சரி 50 விழுக்காடு)
இது பொருந்துமே..பாருங்க..
மனைவிக்கு ஒரு விதி..ஆசை மகளென்றால் ஒரு விதி..ரத்தமல்லவா?

பாச மலர் / Paasa Malar said...

//ஆக மொத்தம் மாமியார்கள் கொடுமைக்காரிகள் என்று சொல்லி இருக்கிறீர்கள்.//

இப்படியெல்லாம் நான் சொல்லவில்லை சொல்லவில்லை சொல்லவில்லை..

மருமகள்களிடம் மாமியார்களின் எதிர்பார்ப்பு அப்படி..அதற்கு பேர் கொடுமையா? இல்லவே இல்லை..

மங்கை said...

செம அனாலிஸஸ்...மனசுக்கு இதமா இருக்கு...புட்டு புட்டு வச்சிட்டீங்க

பாச மலர் / Paasa Malar said...

நன்றி மங்கை..

ஆமா..என்ன வசந்த மாளிகை பாட்டுன்னு மகளிர் சக்தில வந்துச்சு..வந்தா போஸ்டைக் காணோம்..

கோபிநாத் said...

யக்கோவ்...சூப்பரு ;))

மங்கை said...

மலர்
அந்த கொடுமை ஏன் கேக்கறீங்க
காலேஜ்ல ஜிமெயில், தமிழ்மணம் எல்லாம் பிளாக் பண்ணிட்டாங்க.. ஆனா இன்னைக்கு என்னமோ எல்லாம் ஓபன் ஆச்சு..இந்த பாட்ட போடனும்னு இருந்தேன்..போட்டேன் ஆனா ஆடியோ கிடைக்கலை..ஆடீயோ இல்லாம போட்டா நல்லா இல்லைனு அப்புறம் விட்டுட்டேன்...தெரியாம பப்ளிஷ் பட்டம் அழுத்திட்டேன் போல...நீங்க சொன்ன அப்புறம் தான் நானே பார்த்தேன்...:-))))
வேலை செய்யாம மட்டம் அடிச்சா இப்படித்தான் இருக்கும்..

கண்மணி/kanmani said...

மலர் மனிதர்கள் பச்சோந்திகள் தான்.தன் குடும்பம்,தன் மக்கள் னு வரும்போது நாக்கும் புரளும் நிறமும் மாறும்.இது பொதூ நியதியாயிருக்கு.

RATHNESH said...

இன்னொரு காட்சி விடுபட்டுப் போச்சே மேடம்:

ரம்யா தன் தாயிடம் (திருமணமான உடன்):

"அம்மா! நான் புகுந்த வீட்டில் எப்படி நடந்துக்கணும்? அவரும் அவங்க வீட்டுப் பெரியவங்களும் சொல்றதைக் கேட்டா? ஏன் இஷ்டப்படியா?"

"அதுகள் உளர்றதைக் கேட்டுக்கோ. உன் இஷ்டப்படி நட"

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி..

ஆமாம் கண்மணி..நான் எல்லோரும் இப்படித்தான்..

ரத்னேஷ் சார்,

//அதுகள் உளர்றதைக் கேட்டுக்கோ. உன் இஷ்டப்படி நட"//

இது நல்லா இருக்கே...

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்லாருக்கு மலர்.. சுய கட்டுக்களைத்தாண்டி வருவதற்கு நம்மை சுற்றியுள்ள சமூகத்திற்கு இன்னும் காலங்கள் நிறைய ஆகும் என்றுதான் தோன்றுகிறது. கிட்டத்தட்ட இப்படி ஒரு சூழலை கண்டுவிட்டு மனது பொருமிய வேளையில் தான் உங்கள் பதிவு. (இரண்டு மரணங்கள் ஒன்று மாமனார் மற்றொன்று தகப்பனார் அந்த குடும்பத்தலைவி நடந்து கொண்ட விதம் என்னால் ஒத்துக்கொள்ள முடியாத நிலமை) என்ன செய்ய மனிதர் இத்தனை நிறங்கள் தான்..

பாச மலர் / Paasa Malar said...

என்ன கிருத்திகா..விபரீதமா ஏதும் நடந்துருச்சா..ஏதோ சோகமான சம்பவம் மாதிரித் தெரியுது..

நிஜமா நல்லவன் said...

பெரும்பாலான இடங்களில் இப்படிதான் நடக்குது. மனங்கள் மாறட்டும்.

காட்டாறு said...

நிதர்சனம்! அருமையா எழுதியிருக்கீங்க. எழுத்தாசிரியரா பயிற்சி ஏதும் எடுத்துக்குறீங்களா மலர்?

பாச மலர் / Paasa Malar said...

வாங்க நிஜம்மாநல்லவன்(அதென்ன அப்படி ஒரு பெயர்)..

ஆஹா..காட்டாறு..பயிற்சி எடுப்பதெல்லாம் இது போல(உங்களைச்) சோதனை (செய்யும்) முயற்சிகளில்தான்..

நிஜமா நல்லவன் said...

பாச மலர் said...
வாங்க நிஜம்மாநல்லவன்(அதென்ன அப்படி ஒரு பெயர்)..







சும்மா வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தான். மற்றபடி பேருக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.

கீழை ராஸா said...

"நகைச்சுவை" லேபிலில் ஒருசீரியஸ்பதிவுபோட்டிருக்கீங்க...
முகமூடி அணிந்த மனித மனங்களின் முகத்திரை கிழித்துள்ளீர்...நல்ல கற்பனை...