Sunday, December 16, 2012

பாடப்படாத பாடல்

 
மூலம்: Song Unsung, Gitanjali, Selected Poems, Tagore

நான் பாடவந்த ஒரு பாடல்
பாடப்படாமலேயே இருக்கிறது
இன்று வரையில்....

என்னுடையை
இசைக்கருவியின் தந்திகளை
முடுக்கவுமாய் தளர்த்தவுமாய்
என் நாட்களைக் கழிக்கின்றேன்.

இன்னும் மெய்மையான அந்த நேரம்
வந்து வாய்த்தபாடில்லை;
வார்த்தைகளும் சரிவர
அமைக்கப்படவில்லை.

காற்று மட்டும் பெருமூச்சுடன்
கடந்து போகின்றது;
இன்னும் மொட்டுகள் அவிழ்ந்து திறக்கவில்லை.

நான் அவனுடைய முகத்தைப் பார்க்கவில்லை
இன்னும்..
அவன் குரலையும் கூடக் கேட்கவில்லை.

என் வீட்டின் முன் செல்லும் சாலையில்
மென்மையான அவன் காலடி அசைவுகளின்
ஒலி மட்டுமே கேட்டிருக்கிறேன்.

இந்த நீண்ட நாள் முழுவதும்
அவனுக்கான இருக்கையைத்
தரையில் விரிப்பதிலேயே கழிந்துபோய்விட்டது.

ஆனால் ஒளிவிளக்கு இன்னமும் ஏற்றப்படவில்லை;
என்னால் வீட்டுக்குள் வரும்படி
அவனை வரவேற்கவும் இயலவில்லை.

அவனைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்
நான் வாழ்கின்றேன்;
ஆனால் அந்தச் சந்திப்பு இதுவரையில்
நிகழவே இல்லை.
 

அதீதம் 14 செப்டம்பர் 2012 இதழில் வெளிவந்தது.

Monday, December 10, 2012

நான் அறிந்த சிலம்பு - 31

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

நாள் அங்காடி பூதத்தை மறக்குல மகளிர் வழிபடுதல்

சிலம்பின் வரிகள் இங்கே: 60-75

இருபெரு வேந்தர்
போர் செய்யும் முனைப்பில்
வந்து தங்கும் பாசறைகளுக்கு
இடைப்பட்ட நிலத்தில் இருக்கும்
இருவர்க்கும் பொதுவாக அமைந்த
போர்க்களம் அது போல
மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம்
இடையேயுள்ள நிலப்பரப்பில்தான் இருந்ததுவே
நாள் அங்காடி எனும் கடைத்தெரு.

நெருக்கமாய் நெருங்கி வளர்ந்திருந்த
சோலையதன் மரங்களின் அடிகளைத்
தூணாகக் கொண்டேதான்
அமைக்கப்பட்டிருந்தன கடைகள்.


அக்கடைகளில்தாம் பொருட்களை
விலை பேசி விற்போர் குரலும்
விலை கொடுத்து வாங்குவோர் குரலும்
ஒலித்துக்கொண்டேயிருந்தது
தொய்வின்றித் தொடர்ச்சியாக.
 
முன்னொரு முறை
முசுகுந்தன் என்ற சோழவேந்தன் தானும்
அசுரவதம் செய்ய உதவினன் இந்திரனுக்கு.
அச்செயல்தனைப் பாராட்டும் முகமாய்
புகார் நகரையும் அரசனையும்
காப்பதற்கென்றே வலிமைமிக்க
பூதமொன்றைப் பரிசளித்தனன்
இந்திரன் முசுகுந்த மன்னனுக்கு.

அப்பூதம் தானும்
காவிரிப்பூம்பட்டினத்தின்
நாளங்காடி மருங்கில்
தங்கியே நின்று தக்க காவல் புரிந்தது.

இந்திர விழாவின் தொடக்கத்தில்
அப்பூததுக்குப் பலிகள் இட்டு
வணங்கி வருவது மரபு.
அம்மரபின் அடியொற்றியே
நிகழ்ந்தன பூசைகள் நாளங்காடிதன்னில்.

சித்திரை மாதத்தில்
சித்திரை நட்சத்திரத்தில்
நிறைந்த முழுமதி நாளன்று
நாளங்காடி மருங்கே
திரண்டு வந்தனர் மறக்குல மகளிர்.

"வெற்றிவேல் ஏந்திய முசுகுந்த மன்னனுக்கு
உற்ற துயர் ஒழித்திடுவாயாக"
என்றேதான் வேண்டி இந்திரன் ஆணைப்படி
புகார் நகரக் காவல்பூதத்தின்
கோயில் வாசல் பலிபீடத்தில்
அவரை துவரை புழுங்கிய பண்டங்கள்
எள்ளுருண்டைய் கறிச்சோறு
இவற்றுடன்
பூக்கள் நறும்புகை பொங்கல்
படைத்தேதான் வழிபட்டனர்.

பின் தெய்வம் ஏறி
துணங்கைக்கூத்தராகி, குரவைக்கூத்தராகி
ஆடி மகிழ்ந்து
"எம்பெருநில மன்னவன் அவன்
காத்தருளும் இருநிலமும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
மழையும் வளமும் சுரந்திடுக"
என வாழ்த்துப் பாடியே
அழகிய கோலம்பூண்ட மறக்குல மகளிர்
வல்லமையுடன் ஆரவார ஓசையுடன்
முழங்கியே விழாவது கொண்டாடினர்.
 

வல்லமை 30.07.12 இதழில் வெளிவந்தது.

Tuesday, November 27, 2012

நான் அறிந்த சிலம்பு - 30

புகார்க்காண்டம் - 05. இந்திர விழவு ஊர் எடுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 40 - 58
 

பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கத்தின்
காட்சிகள் இவை.
மிகவும் பெரிய இராஜ வீதிகள்
கொடிகளையுடைய தேர் ஓடும் வீதிகள்
கடைத்தெரு
பெருங்குடிப் பிறந்த
வாணிகர் வாழ் மாடமாளிகைகள் இருந்தன.

மறை ஓதும் அந்தணர்
அனைவராலும் விரும்பப்படும் உழவர்
ஆயுள் காக்கும் வேத மருத்துவர்
காலம் கணிக்கும் சோதிடர்

இங்ஙனம் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த
பல்வகைப்பட்டவரும்
தனித்தனியே வாழ் இடங்கள் இருந்தன.

முத்துக் கோர்ப்போர்
சங்கை அறுத்து வளையல்கள் செய்வோர்
இவர்கள் வாழ்கின்ற அகன்ற பெருவீதி

அரசனை வணங்கும் சூதர்
புகழ்ந்து பேசும் மாகதர்
வைதாளி ஆட்டமாடும் வேதிகர்
காலம் கணிக்கும் நாழிகைக் கணக்கர்
அழகாய்ப் புனைந்து ஆடி
அனைவரையும் மகிழ்விக்கும் சாந்திக் கூத்தர்


காமக் கிழத்தியராம் பரத்தையர்
கோலத்தார் கூத்தார்
அன்று அன்றே தம் பரிசுகள் பெறும் விலைமகளிர்
ஏவல் தொழில் செய்து வாழ்பவர்
ஆகியோர் வாழும் இடங்கள் இருந்தன.

தொழிற்பயிற்சி சிறப்புறப்பெற்ற
குயிலுவக் கருவியாளர்
படைக்கும் விழவுக்கும்
பல்வகை நிகழ்ச்சிக்கும் வாசிக்கும்
வாத்தியக் கலைஞர்
நகைச்சுவையுடன் பேசும் விதூடகர்
ஆகியோர் வாழும் இடங்கள் இருந்தன.

விரைந்து செல்லும்படி
குதிரைகளைச் செலுத்தும்
குதிரைவீரர்கள்
யானைப்பாகர்
நெடிய தேரைச் செலுத்தும்
தேர்ப்பாகர்
அஞ்சுதல் என்பதறியாத
வீரத்தில் சிறந்த
காலாட்படைத் தலைவர்

இவர்கள் அனைவரும்
அரசனவன் கோட்டையைச்
சூழ்ந்து இருக்கும்படி அமைந்த
வாழ் இடங்கள் இருந்தன.

இன்னும் இன்னும்
பலப்பல பெருமைகள் கொண்டு
சிறப்பு வாய்ந்த சான்றோரால்
புலவர் பெருமக்களால்
வாழ்த்திப் பாடற்குரிய
சிற்ப்புகளும் பெருமைகளும்
பெற்று விளங்கியது பட்டினப்பாக்கம்.
 

வல்லமை 23.07.12 இதழில் வெளிவந்தது.

Saturday, October 13, 2012

நான் அறிந்த சிலம்பு - 29

புகார்க்காண்டம் – 05 இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 21- 30
சிலம்பின் வரிகள் இங்கே: 31 - 39

மருவூர்ப்பாக்கம் – பகுதி – 2

இது இது இன்ன இன்னது
என்று பிரித்தறியச் சுலபமாக,
குவித்து வைக்கப்பட்ட பொருட்களுடன்
கூலவீதிகளில்
எண்வகைத் தானியங்கள்
குவிந்தேதான் இருந்தன.

பிட்டு வணிகர்
அப்ப வணிகர்
கள் வணிகராம் வலைச்சியர்
மீன் வணிகராம் பரதவர்
வெள்ளை உப்பு வணிகராம்
உமணர் உமட்டியர்

கயிறு திரித்து விற்கும் பாசவர்
வெற்றிலை வணிகர்
வாசனைப் பொருள் வணிகர்
பல வகை மாமிச வணிகர்
எண்ணெய் வணிகர்
நிறைந்து காணப்படும்
ஊன்மிக்க வாழிடங்கள் இருந்தன.

வெண்கலத்தில் பாத்திரம் செய்யும் கன்னார்
செப்பு வேலை செய்யும் கொட்டிகள்
மரவேலை செய்யும் தச்சர்
வலிமை மிக்க கைகளுடைய கொல்லர்
ஓவிய வினைஞர்
மண்பாண்டம் செய்யும் குயவர்
பொன் வேலை செய்யும் கொல்லர்
இரத்தின வேலை செய்பவர்

துணிவேலை செய்யும் தையற்காரர்
தோல்பொருள் செய்யும் செம்மார்
துணிகள் கொண்டு
படம் முதலியன செய்வோர்
நெட்டிக் கோரைகள் கொண்டு
விலங்கு பறவை பூங்கொத்து முதலிய
கலைப்பொருள் செய்வோர்
என்று பலவாகக்
குற்றமற்ற கைத்தொழில்
செய்திடுவோர் பலரும்
வாழும் இடங்கள் இருந்தன.

குழல் கொண்டு யாழ் கொண்டு
குரல் முதலான ஏழிசைகளைக்
குற்றமற இசைத்து
அவ்விசைவழி தோன்றும்
திறங்களையும்
திறமையுடன் பாடவல்ல
பெரும்பாணர் வாழிடங்கள் இருந்தன.

சிறு சிறு கைத்தொழில் செய்வார்
பிறர் கட்டளைக்குப் பணிந்து
குற்றேவல் புரிந்து நிற்பவர்
வாழும் இடங்களும் இருந்தன.

கடலதன் பரப்பில்
யவனர் இருக்கை தொடங்கி
நகரதன் வீதிகளில்
பல்பொருள் அங்காடிகள் கொண்டு
பலதரப்பட்ட குடிமக்கள்
வாழும் இடங்களைக் கொண்டு
குற்றமறச் செழித்து நின்றது
மருவூர்ப்பாக்கம்.

வல்லமை 16.07.12 இதழில் வெளிவந்தது.

Tuesday, October 9, 2012

மனவறைச் சுத்தம்

மனவறைச் சுத்தம் - 1

சுருட்டிய கூந்தல்
உடைந்திட்ட கேசகவ்வி
ஜோடியற்ற ஒற்றைத்தோடு
காலியான வாசனை திரவியக் குப்பி
வீண் பொருட்கள்
அலங்கார மேசையில்..


எழுதாத பேனா
உதவாத கசங்கிய காகிதம்
உலர் பசை
எழுதிமுடித்த கவிதையின்
ஒத்திகை வரைவுகள்
வீண் பொருட்கள்
எழுது மேசையில்..


களையப்படுகின்றன குப்பைகள்
அறைதோறும் அவ்வப்போதேனும்..


பொறாமை பழியுணர்வு
என்றோ கேட்டதொரு வசவு
எங்கோ பார்த்ததொரு
வேண்டாத காட்சி
யாரோ கிளறிய
குப்பை நினைவு
சினம் ரணம்..


களைய முடியத்தான் இல்லை..
பழையன களை(ழி)யும் முன்னே
மீண்டும் புதிய குப்பைகள்
மனவறை மருங்கினில்..

*********************

மனவறைச் சுத்தம் - 2

கழிவுநீர்த் துளையின்
அடைப்பானில்
பிடிவாதமாய் ஒட்டியிருக்கும்
கழிவுணவுப் பிசுக்குகள்போல்


மரிக்காமல் மனதில்
மேடை போட்டு
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்
கழிவுணர்வுத் துகள்கள்.


விதியே என்றிருந்தால்
வியாதிதான்.


அருவியென
அடித்து ஊற்றி
நல் நினைவுகள்
நீர்தெளிக்க
சடுதியில் கழுவப்படும்
மனவழுக்குகள்.


களைகள் களைந்து
கழுவியெடுக்கும்
அருவியதனுக்குப்
பலரும் சூட்டிடும்
பலப்பல பெயர்கள்.


அன்பு
உதவி
ஈகை
நம்பிக்கை
சம்சாரம்
சந்நியாசம்
பக்தி
ப்ரார்த்தனை
.................
.................
 

குறளின் குரல் - 59

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 96. குடிமை
குறள் எண்: 959


நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.


நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்; காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல்.


விளக்கம்:

நிலத்தின் இயல்பை, அந்த மண்ணில் விளைந்த பயிர்கள் காட்டி விடும். அதுபோலவே, நற்குடியில் பிறந்த ஒருவரின் இயல்புகளை அவர்கள் பேசும் சொற்களே காட்டி விடும்.
-------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 60. ஊக்கமுடைமை
குறள் எண்: 599


பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.


பரியது கூர்ங் கோட்டது ஆயினும், யானை
வெரூஉம் புலி தாக்குறின்.


விளக்கம்:


விலங்குகளில் அதிகம் பருமனானதும், கூர்மையான தந்தங்களையும் உடையது யானை. இருப்பினும் அதற்குப் போதுமான அளவு ஊக்கம் இருப்பதில்லை.
எனவே, அதனினும் உருவத்தில் சிறிய, ஆனால் ஊக்கத்தில் பெரிய புலி தாக்குமானால், ஊக்கமற்ற காரணத்தால் யானை அஞ்சி நடுங்கும்.
பிற வலிமைகளைப் பெற்றிருந்தாலும், ஊக்கமின்மையால் ஓர் அரசர், ஊக்கமுடைய பிற அரசர்க்கு அஞ்சுவர்.
----------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 90. பெரியாரைப் பிழையாமை
குறள் எண்: 894


கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல்.


கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.


விளக்கம்:

ஆற்றலில் சிறந்தவர்க்கு, அதிக ஆற்றல் இல்லாதவர்கள் தீங்கு செய்ய எண்ணக் கூடும்.

அது தம் அழிவு காலத்தைத் தாமே வலிந்து கையசைத்து வரவேற்று அழைப்பதற்கு ஒப்பாகும்.

ஆற்றலில் சிறந்தவர்க்குத் துன்பம் விளைவிக்க எண்ணுவது, தமக்குத் தாமே துன்பத்தை வரவழைக்கக்கூடியதாகும்.
------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 10. இனியவை கூறல்
குறள் எண்: 99


இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.



இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது.



விளக்கம்:


பிறர் தம்மிடம் இன்சொல் பேசும் போது அது எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று உணர்பவர்கள், பிறரிடத்து இன்சொல்லைப் பேசாமல் வன்சொல் பேசுவது எதற்காகவோ?
---------------------
 
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 84. பேதைமை
குறள் எண்: 835


ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்
தான்புக் கழுந்து மளறு.


ஒருமைச் செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு.


விளக்கம்:

தன்னிச்சையாக, ஒருமுகச் சிந்தனையோடு செயல்படுவான் அறிவுத்திறன் அற்ற பேதை; அவன் எக்காலத்திலும் துன்பம் என்னும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும். தன் செயல்களின் மூலமே தன் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவன் அவன்.

Wednesday, October 3, 2012

மங்கி வரும் இளமைக்காலம்


 
மூலம்: - ஷேக்ஸ்பியர் Sonnet 73

வருடத்தின் பருவகாலம் இன்னதென்று
முதிர்ந்து வரும் என்னில் நீ அறியலாம்;

சிதைந்து போன தேவாலயத்தில்
இனிய குரலில் குழுப்பாடல்கள்
பறவைகள இசைக்கும்
இடங்களுக்கு அருகாமையில்
குளிரில் நடுங்கும்
பழுப்பு மஞ்சள் இலைகள்
மிகவும் குறைந்த எண்ணிக்கையில்
கிளைகளில் ஆடும் தருணங்களில்;
அல்லது ஓர் இலை கூடக் கிளைகளில்
இல்லாத தருணங்களில்;


இன்னும் மீதமிருக்கும்
மங்கலான வெளிச்சமதை
மரணம் தழுவ அருகில் வரும்
என்னில் நீ காணலாம்.

சூரியன் மேற்கில்
மறைந்த பிறகான தருணங்களில்;
சடுதியில் கறுப்பு இரவு
ஒளிர் வெளிச்சத்தை
மறைத்துச் செல்லும்
மரிக்கச் செய்யும்
மறையச் செய்யும் தருணங்களில்;

மரணிக்கக் காத்திருக்கும்
இளமை நெருப்பின் மீது படரும்
நீறுபூத்த நெருப்பாய் நான்
தகதகவென்று ஒளிர்கின்றேன்.

மரணப்படுக்கையில்தான்
அனைத்தும் முடிவு காண வேண்டியுள்ளது.


உணவளித்து ஊட்டி வளர்த்த மரத்துண்டுகள்
முழுமையாய் எரிந்து போனதும்
மரித்துப் போகும் நெருப்பது போன்றது வாழ்க்கை.
இளமைச் சக்தி குறைந்ததும்
வாழ்க்கையின் வலுவும் குறைந்து போகும்..

மங்கி வரும் என் இளமையையும்
அதன் ஏக்கங்களையும் தாபங்களையும்
நீ உணர்வாயோ என் அன்பே!

என் இளமை மங்கி மயங்கி வருவதை
நீ அறிவாயோ
பிரியும் தருணம் நெருங்கி வருவதை
நீ அறிவாயோ
அதனால்தான்
அதிக காலம் விரயமாவதற்குள்
உணர்ந்த காதலை
மேலும் வலுப்படுத்துகிறாயோ...
அதீதம் 11 ஆகஸ்ட் 2012 இதழில் வெளிவந்தது.