Thursday, September 20, 2012

குறளின் குரல் - 57

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 44. குற்றங்கடிதல்
குறள் எண்: 431


செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.


செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமிதம் நீர்த்து.


விளக்கம்:

செல்வம், பதவி, புகழ் முதலியவற்றால் வரும் செருக்கு,
கடுமையான கோபம்,
பிறர் போற்றாத சிறுமைப்பண்புகள் - இவை இல்லாதவரின் வளர்ச்சி என்பது தடையின்றிப் பெருகிச் செழிக்க வல்ல மேம்பாடு உடையதாகும்.
 
---------------
 

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 98. பெருமை
குறள் எண்: 971
ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்
கஃதிறந்து வாழ்து மெனில்.
 
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
'அஃது இறந்து வாழ்தும்' எனில்.

 
விளக்கம்:
 


செயற்கரிய செயல்கள எல்லாம் தம்மால் செய்ய முடியும் என்று ஊக்கத்துடன் வாழ்வதே ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளி தருவதாகும். அத்தகைய ஊக்கம் இல்லாமல், செயல்களைச் செய்வது தம்மால் இயலாது; ஊக்கம் இன்றியே வாழ்தல் கூடும் என்று கருதுவோரின் வாழ்க்கை இழிவையே காணும்.

------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 67. வினைத் திட்பம்
குறள் எண்: 663


கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி
னெற்றா விழுமந் தரும்.


கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக் கொட்கின்
எற்றா விழுமம் தரும்.


விளக்கம்:

மேற்கொண்ட ஒரு செயல் முடியும் வரை அதை வெளிபடுத்தாமல் தன்னடக்கமாக இருந்து, அச்செயலைத் திறம்படச் செய்து முடித்து, இறுதியில் அனைவருக்கும் வெளிப்படுத்துவதே ஆளும் திறமையாகும்.
இப்படி இல்லாமல், இடையிலேயே பலரும் அறிய வெளிப்படுமாயின், அது அச்செயல் புரிந்தவர்க்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

கொட்க - வெளிப்படுத்த, சுழல, சூழ வர, திரிய
ஆண்மை - ஆளும் தன்மை, ஆண் தன்மை, வெற்றி, வலிமை, அகங்காரம்
விழுமம் - துன்பம், சிறப்பு, தூய்மை


-------------------


பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 80. நட்பாராய்தல்
குறள் எண்: 792


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரந் தரும்.


ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்
.


விளக்கம்:

ஒருவரது குணங்களையும் குற்றங்களையும் திரும்பத் திரும்ப ஆராய்ந்து அறிந்து அதன் பின் ஆழ்ந்த நட்புக் கொள்ளாதவருக்கு, தான் சாவதற்குக் காரணமான துன்பம் கூட அந்நட்பின் பொருட்டு விளையக் கூடும். எனவே, ஆராய்ந்து, அறிந்து நட்புக் கொள்வதே உகந்தது.

-------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் எண்: 695


எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை.

எப்பொருளும் ஓரார், தொடரார், மற்று அப் பொருளை
விட்டக்கால் கேட்க, மறை.


விளக்கம்:

அரசர் / ஆளும் பதவியில் இருப்போர், அனைவரின் முன் வெளிப்படையாகப் பேசமுடியாமல் மறைபொருளாகப் பேசும் தருணங்களில், அவற்றை உற்றுக் கவனிக்காமல், ஒட்டுக் கேட்காமல், அது என்ன என்றும் கேள்விகள் கேட்காமல் இருக்க வேண்டும். அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

 



6 comments:

MARI The Great said...

விளக்கவுரைக்கு நன்றி!

கோபிநாத் said...

எளிய விளக்கங்கள்...நன்றி அக்கா ;)

ராமலக்ஷ்மி said...

//மேற்கொண்ட ஒரு செயல் முடியும் வரை அதை வெளிபடுத்தாமல் தன்னடக்கமாக இருந்து, அச்செயலைத் திறம்படச் செய்து முடித்து, இறுதியில் அனைவருக்கும் வெளிப்படுத்துவதே ஆளும் திறமையாகும்.//

மிக அருமையான விளக்கம் மலர்.

பாச மலர் / Paasa Malar said...

படித்ததர்கு நன்றி வரலாற்றுச் சுவடுகள்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி