Sunday, October 17, 2010

நான் அறிந்த சிலம்பு - பகுதி 7

கண்ணகியின் குலமும் நலமும்


இப்பெருஞ்சிறப்புடைப்
புகார் நகர் தன்னில்
மழைக்கு நிகராய்
மலைமலையாய்க்
கொடைதரும் கைகள்கொண்ட
மாபெரு வணிகனாம்
மாநாய்கன் குலத்தில்
பொற்கொடியாய்ப்
பொலிந்து திகழ்ந்தாள்
பன்னிரு வயதுப் பெண்ணொருத்தி.

அவள்
தாமரை மலரமர்
திருமகளுக்கு
நிகரான புகழுடைய
பேரழகு வாய்ந்தவள்.

யாதொரு குற்றமில்லா
அருந்ததிக்கு நிகரான
கற்புத்திறத்தினள்..

பெருங்குணங்கள் மீதுள்ள
அளவற்ற காதலின்
திருவுருவானவள்..

ஆதலால்
அம்மாநகர மங்கையரால்
தொழுது போற்றப்படுபவள்.

அவள்தம் திருப்பெயர்தான்
கண்ணகி...

கோவலன் சிறப்பு


அப்புகார்தனில்
வாழ்ந்தனன்
மாசாத்துவான் என்னும்
வணிகன்.


பெரியதொரு நிலவுலகைத்
தனியொருவனாய் நின்றாளும்
சோழமன்னன்
தம் குடிகள் பலவற்றுள்
முதல் குடியாய் வைத்து மதிக்கும்
உயர்ந்தோங்கிய செல்வமுடையவன்.

அவன் தான்
அறநெறியில் ஈட்டிய
பெருஞ்செல்வம் அதனைப்
பலருக்கும் பகிர்ந்தளித்து உதவும்
சீர்குணமுடையவன்.


இருநிதிக் கிழவனென்றும்
சிறப்புப் பெயர்கொண்ட
மாசாத்துவானின் திருமகன்
பதினாறு வயதினன்.

அத்திருமகனும்
பூமியே சிறுத்துக் குறுகும்படிச்
சிறந்த புகழ் வாய்ந்தவன்.

மதி போன்ற முகமுடையோன்;
பாடலின் இனிமையும்
தோற்றுப் போகும்படியான
குரல்மொழிவளம் மிக்கவன்...

அவனைக் கண்டதும்
தம்முள் கிளர்ந்த
காதலால் கன்னிகையர்
'இவன் நாம் வணங்கத்தக்க முருகவேள்'
என்று காதற்குறிப்பைத் தம்
தோழிக்கு உணர்த்தச் செய்யும்
திறம் கொண்டவன்.

அவன்தம் திருப்பெயர்தான்
கோவலன்....

சிலம்பின் வரிகள் இங்கே (23-39)

2 comments:

குமரன் (Kumaran) said...

மிக எளிமையாகச் சொல்லி வருகிறீர்கள் பாசமலர்.

கோவலனை அறிமுகம் செய்யும் போது அவனுக்கு ஈர்-எட்டு வயது என்று அறிமுகம் செய்கிறார் காவிய ஆசிரியர். தவறாக இங்கே பன்னிரு வயது என்று வந்திருக்கிறது.

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி கோபி...

நன்றி குமரன்...திருத்திவிட்டேன்