அதிகாரம்: 89. உட்பகை
குறள் எண்: 881
நிழல்நீரு மின்னாத வின்னா தமர்நீரு
மின்னாவா மின்னா செயின்.
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னா ஆம் இன்னா செயின்.
விளக்கம்:
நிழலிலுள்ள நீர்நிலையின் நீரானது, நுகரும் காலத்தில் இன்பம் தருவதாகத்தான் இருக்கும். ஆனால் பிறிதொரு காலத்தில் அதுவே நோய் விளைவிக்கும் தன்மையுடையதாக மாறும்.
அதுபோலத் தீய இயல்புடையவரின் உட்பகை ஆரம்ப காலத்தில் இன்பம் தருவதாகத் தோன்றினாலும், இறுதியில் துன்பமே விளைவிக்கும்.
--------------------
அதிகாரம்: 8. அன்புடைமை
குறள் எண்: 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்மரம் தளிர்த்தற்று.
விளக்கம்:
வன்மையான மேட்டு / பாலை நிலத்தில் உள்ள மரம் காய்ந்து போய், துளிர்க்கும் வழியில்லாது நிலையற்ற தன்மையுடன் தவித்திருக்கும்.
அது போல், அன்பு என்னும் ஈரம் உள்ளத்தில் இல்லாதவரின் வாழ்க்கையும் உலர்ந்த தன்மையுடன் தளிர்க்க இயலாமல் தவித்திருக்கும்.
--------------------
அதிகாரம்: 12. நடுவு நிலைமை
குறள் எண்: 115.
கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
கேடும் பெருக்கம் இல் அல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.
விளக்கம்:
வாழ்வில் செல்வம் அழிவதும், செல்வம் பெருகுவதும் இல்லாதது அல்ல; அனைவருக்கும் ஏற்படுவதுதான்.
செல்வம் நிலையானது அல்ல. அத்தகைய நிலையற்ற ஒன்றுக்காக மனம் தவறி, நடுவுநிலைமை தவறி நடப்பது அழகல்ல.
நெஞ்சத்தில் நடுவுநிலைமை கொண்டு, இடர் வந்த போதும் அந்நெறியிலிருந்து தவறாமல் வாழ்தலே சான்றோர்க்கு அழகாகும்.
--------------------
அதிகாரம்: 21. தீவினை அச்சம்
குறள் எண்: 205
இலனென்று தீயவை செய்யற்க செய்யி
னிலனாகு மற்றும் பெயர்த்து.
'இலன்' என்று தீயவை செய்யற்க; செய்யின்,
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து.
விளக்கம்:
'பொருள் வளம் இல்லாதவன் ஆகிவிட்டேனே' என்று மனம் வருந்தி, பொருள் ஈட்டுவதற்காகத் தீய செயல்கள் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு தீயவை செய்ய முற்பட்டால் அனைத்தும் இழந்து மீண்டும் மீண்டும் வறுமையைச் சந்திக்க நேரிடும்.
---------------
அதிகாரம்: 90. பெரியாரைப் பிழையாமை
குறள் எண்: 891
ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாந் தலை.
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை, போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
விளக்கம்:
தாம் எடுத்துக்கொண்ட காரியத்தை முடிக்கவல்லவர்களின் துணையை இகழ்ந்து அலட்சியம் செய்து ஒதுக்குதல் கூடாது.
தமக்குத் தீங்கு வரக்கூடாது என்று தற்காத்துக் கொள்பவர்கள் செய்து கொள்ள வேண்டிய காவல்களுள், இதுவே முதாலான, சிறந்த காவலாகும்
Thursday, June 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
விளக்கங்கள் வெகு நன்று.
தொடருங்கள்.
வீட்டுல இருக்கும் போது இந்த விஜய் டிவியில ஒரு நிகழ்ச்சி...பள்ளி மாணவர்களுக்கான போட்டி...அதுல குறள் பகுதி போட்டியும் ஒன்னு....யப்பா...நானே ரொம்ப நல்லவன் போல....அந்த மாணவர்கள் அந்த பகுதி வந்தாலே...பாஸ் அப்படின்னு வேற கேள்விக்களுக்கு போனாங்க.
அப்போ உங்க நினைப்பு வந்துச்சி...இப்படியாச்சும் குறள்களை பதிவு பண்ணிவைக்கிறது எப்புட்டு நல்லதுன்னு ;)
தொடர்ந்து பதிவு பண்ணுங்க ;)
குறட்பாக்களில் ஒவ்வொன்றுமே அருமை. அவற்றுள் நல்முத்துகளாகத் தேடித் தருவதற்கு நன்றி பாசமலர்.
Post a Comment