Sunday, April 17, 2011

அவன் அவள் நாங்கள்

ரொம்ப நாள் கழித்துத் தியேட்டருக்கு இன்று வந்தோம்..எப்போதும் ஏதாவது ஒரு அலுவல்..தட்டிக் கழித்துவந்த என் கணவர் மனம் வந்து இன்று ஒருவழியாகப் படத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்...சீக்கிரமே வந்துவிட்டதால் தியேட்டருக்கு வருபவர்களை நோட்டம் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அவர்கள் வந்தார்கள்...

வித்தியாசமான அவள் முக பாவத்தைப் பார்த்ததுமே தெரிந்தது..அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவள் என்பது..கூட வந்த ஆண் சுற்று முற்றும் பார்த்துவிட்டு இரண்டு வரிசை முன்னால் அமர்ந்தான்...கடைசி வரிசையில் நாங்கள் இருந்தோம்...உட்கார்ந்த மாத்திரத்திலேயே அவன் மேல் சாய்ந்து உட்கார்ந்தாள் அவள்...அவன் தோள் மீது கைகள் போட, அவளிடம் குனிந்து ஏதோ பேசி மெல்லிதாக அவள் கைகளை விலக்கினான் அவன்...சற்றே விலகிச் சுற்று முற்றும் பார்த்தவள் அவன் கைகளை எடுத்துத் தன் கைகளுடன் பின்னிக் கொண்டாள்..சட்டென்று அவன் கைகளில் ஒரு முத்தமும் கொடுத்தாள்...மீண்டும் அவன் குனிந்து ஏதோ சொல்ல விலகினாள்...

அய்யோ படமே இன்னும் ஆரம்பிக்கலை..இவ்வளவு வெளிச்சத்திலேயே இப்படின்னா....இன்னும் விளக்கு அணைந்தால்...நல்ல வேளை கோடை விடுமுறைக்குக் குழந்தைகள் பாட்டி வீடு சென்றுள்ளதால், அவர்கள் வரவில்லை...வேறு யாராவது வந்து சேர மாட்டார்களா என்றிருந்தது அந்தப்பெண் அடித்த கூத்து....அவள் ஏதாவது செய்வதும், அவன் குனிந்து பேசுவதும், அவள் விலகுவதும்...தொடர்ந்தது..பாக்ஸ் என்பதால் குறைந்த இருக்கைகளே இருந்தன...

இது என்னடா வித்தியாசமாருக்கு...சில்மிஷங்கள் எல்லாம் ஆண்தான் செய்வான் என்றால்..இங்கே இப்படி...அந்தப் பெண் மேல் இரக்கம்தான் வந்தது..அந்தப் பாவி எந்த அளவுக்கு இப்பெண்ணிடம் பழகியிருந்தால் இவள் இந்த அளவுக்குத் துணிவாள்..அது சரி பாவம் அவளுக்கென்ன செய்கிறோம் என்று புரியவா போகிறது?!

ஏன் அங்கேயே பாக்குற...சும்மா இரேன்..

ஏங்க..தள்ளிட்டு வந்துருப்பானோ...

அதுல என்ன சந்தேகம்? நிச்சயமா அதுதான்..

எங்கேயிருந்து வந்திருக்கும் இந்தப்பெண்?

எப்படிங்க இப்படில்லாம்...எப்படித்தான் மனசு வருதோ..பாத்தா நமக்கே பாவமாருக்கு..

சும்மா இருக்க மாட்டே...

இப்படித் தள்ளிட்டு வர்றவங்களுக்கெல்லாம் தண்டனை குடுக்க சட்டம் இல்லியோ...இதுவும் ஈவ் டீஸிங்ல வருமா?
சின்னப் பசங்கதான் இப்படிக் கூத்தடிக்குதுன்னா..இதுங்களுமா இப்படி...

நமக்கேன் வீண் பேச்சு..படம் ஆரம்பிச்சாச்சு...படத்தை ஒழுங்காப் பாரு..

மெல்லிய இருளைத் துளைத்த திரை வெளிச்சம் பரவ...கண்கள் படத்தைப் பார்த்தாலும் அவ்வப்போது அவர்களைப் பார்க்கத் தவறவில்லை என் கண்கள்....படம் போட்டதும் கைதட்டிப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள் அவள்...ஆனால் திடீரென்று அவன் மேல் மீண்டும் சாய்ந்து கொள்ள...

பேசாம படத்தைப் பாரு..என் கைகிள்ளினார் இவர்...

திடீரென்று நாலு இளைஞர்கள் வந்தார்கள்...எங்களுக்கும் அந்த ஜோடிக்கும் இடையே இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள்...

அய்யோ...இவர்கள் இதைப் பார்த்து..என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ....நல்ல நாள் பாத்து வந்து தொலைச்சோம் படத்துக்கு...ச்சே!

அந்தப் பெண் என்ன செய்தாளோ என்னவோ.. திடீரென்று அவர்கள் எழுந்து வந்து எங்கள் வரிசையின் அடுத்த ஓரத்தில் அமர்ந்தார்கள்...

திரும்பிப்பாத்தே கொன்னுடுவேன் உன்னை...இவர் மிரட்டுகிறார்...

ஆனாலும் ஓரக்கண்ணில் இந்தக் காட்சிகளைக் காணத் தவறவில்லை நான்...இவருக்கு மட்டும் எப்படித்தான் வேறெந்த சிந்தனையும் இல்லாமல், தொந்தரவு இல்லாமல் படத்தைப் பார்க்க முடிகிறதோ தெரியவில்லை...

கண்களை மீட்டெடுத்துத் திரைப்பக்கம் திருப்பினாலும்...அவ்வப்போது அங்கேயேதான் போகிறது..

ஒரு வழியாய் இடைவேளை வந்தது...வெளியே அவன் போகும் போது அவன் கையைப் பிடித்துக்கொண்டே அந்தப் பெண்ணும் பின்னால் சென்றது..

கோன் ஐஸ் வாங்கிக் கொண்டு வந்தார்கள்...ஆமாமா இந்த மூஞ்சிக்கு இது வேறு...கையில் வழிய வழிய அந்தப் பெண் சாப்பிடச் சாப்பிட அவன் கைக்குட்டையால் அதைத் துடைத்துக் கொண்டேயிருந்தான்....ரொம்ப அவசியம்தான்...சாப்பிடும் வரையில் சும்மா இருந்த அவள் மீண்டும் தன் வேலையை ஆரம்பிக்க....ஏதோ குனிந்து அவளிடம் சிரித்துப்
பேசினான்..நல்ல வேளையாக அந்த இளைஞர்கள் இன்னும் வரவில்லை...இவ்ள நேரம் இவன் சும்மா இருந்த மாதிரி இருந்துச்சு....இப்ப இவனும் ஆரம்பிச்சுட்டானா...


நினைத்துக் கொண்டிருந்த போது அவனும் அவளும் புறப்பட ஆயத்தமானது தெரிந்தது..போலாம்மா...என்று அவன் கெஞ்ச...ம்ஹும் படம் பாக்கணும் என்று அவள் குழறுமொழியில் கொஞ்ச...எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது...ஒழிந்து போங்கள்....வீடு வாசல் இல்லேன்னா லாட்ஜுக்குப் போய்த் தொலைய வேண்டியதுதானே...

காபி வாங்கப் போனவர் என்ன இன்னும் காணோம்..அந்த இளைஞர்களையும் காணவில்லை..இவரையும் என்ன இன்னும் காணவில்லை...அங்கே தனியாக அதுகளுடன் இருக்க பயமாகக்கூட இருந்தது..

அதோ..கூட யார் பாலு அண்ணாவும் வருகிறார்...

என்ன அண்ணா படம் பாக்க வந்தீங்களா நீங்களும்..

ஆமாம்மா....நண்பர்களுடன் வந்தேன்...கீழே உட்கார்ந்திருக்கோம் நாங்க..என்றவர்...

ஹலோ முரளி..எப்படியிருக்கீங்க...விமலா எப்படிம்மா இருக்கே என்று அவனையும் அவளையும் பார்த்துக் கேட்க...

நல்லாருக்கோம்...என்ன பாலு  இந்த வாரம் வீட்டுக்கே வரலை..ஃப்ரீயா இருக்கப்ப வாங்க.....இதுக்கு மேல தாங்காது...ஏதோ ஆசப்பட்டாளேன்னு வந்தேன்....நாங்க கிளம்புறோம்னு சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள் இருவரும்.

இவன் என் ஃப்ரெண்ட்..எவ்ள நல்ல மனுஷன்..நல்லாருக்க பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணவே அவன் அவன் யோசிக்கும் போது, இவனுக்கு ரொம்ப நல்ல மனசு..போன மாசம்தான் கல்யாணம் ஆச்சு..புத்தி சுவாதீனம் இல்லாத அல்லது ஊனமுற்ற ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னான்...வீட்ல இவங்க அம்மா எதிர்த்தும் கூட இப்படி ஒரு பொண்ணத் தேடிப் புடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்...பாவம்னு அவன் அம்மாவும் சமாதானமாய்ட்டாங்க...முகம் கோணாம எப்படிப் பாத்துக்குறான் தெரியுமா...

பாலு அண்ணா சொல்லிகொண்டே நான் கூனிக் குறுகிப் போனேன்...ஏன் இவர்கள் உறவு பற்றி நல்லதாய், ஆரோக்கியமாய் ஒரு சிந்தனை எங்களுக்கு வராமல் போனது...என் கணவரை நான் பார்க்க அவரும் தர்மசங்கடத்தில் நெளிவது புரிந்தது...பாலு அண்ணா சென்றதும் திரைப்படம் தொடர....ஏதோ ஒரு புரிதலுடன் அவர் கையை என் கைக்குள் வைத்துக்கொண்டேன்...

7 comments:

கோபிநாத் said...

குட் ;)

ஜீவி said...

//வித்தியாசமான அவள் முக பாவத்தைப் பார்த்ததுமே தெரிந்தது..அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவள் என்பது.//

இந்த விஷயத்தை கதையின் ஆரம்பத்திலேயே நீங்கள் சொல்லியிருப்பது தான் இந்தக் கதையின் சிறப்பு. படிப்பவரை வேறு மாதிரியெல்லாம் நினைக்க வைக்க வேண்டுமென்றே அதற்கேற்ற மாதிரி போக்குக்காட்டி எழுதிவிட்டு, கடைசியில் 'அப்படியெல்லாம் இல்லை, இப்படி' என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளாமல், இயல்பாய் கதையை நடத்திச் சென்றது சிறப்பாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

இயல்பான ஓட்டத்துடன் அருமையா இருக்கு.

ஹுஸைனம்மா said...

ம்.. முதலில் அவளின் நிலையைச் சொல்லியதுதான் சிறப்பு. யாரானாலும் இந்நிலையில் அந்த ஆணைத்தான் சந்தேகிப்பார்கள்.

இப்படியும் ஒரு ஆண் இருக்கமுடியுமான்னுதான் தோணுது.

ராமலக்ஷ்மி said...

பலநேரங்களில் நமது அனுமானங்களுக்குப் பின்னே உண்மை வேறுவிதமாக இருப்பதை அறிய இயலாமலே போகும். இங்கு அறிய வந்ததை நேர்மையுடன் பதிந்த விதம் நன்று மலர்.

பாச மலர் / Paasa Malar said...

அனைவருக்கும் நன்றி...

ராமலக்ஷ்மி....வாழ்க்கையில் நான் சந்தித்த இருவேறு சம்பவங்களின் கற்பனைத் தொகுப்பே இச்சிறுகதை..

ராமலக்ஷ்மி said...

நான்தான் லேபிளை பார்க்க விட்டிருக்கிறேன். அருமையான கதை மலர்.