Sunday, December 16, 2007

இன்றிரவு எப்படியும் - சும்மா ஒரு கதை

இன்றிரவு எப்படியும் அவனைக் கொலை செய்து விட வேண்டும்..பார் விளையாடும் நேரம்தான் சரியான தருணம்..ஒரு விபத்து போல் ஆகி விடும். அப்புறம் ஆரவாரம் எல்லாம் அடங்கிய பின்னே மெதுவாக ராசி நம் வழிக்கு மீண்டும் வந்து விடுவாள். யோசித்து யோசித்து, மனசாட்சியின் கூக்குரலையும் அடக்கி வைத்துவிட்டு முடிவு செய்தான் மரியோ.

பார் விளையாடும் போது கீழே வலைகள் ஏதும் விரிக்காமல் விளையாடுவதுதான் அவர்கள் சர்க்கஸின் தனித்துவம். அந்தரத்தில் தொங்கிக் கொண்டு, தாவிச் சுழன்று பார் மாறுவதுதான் உச்சக்கட்டம். அப்படி மூன்றாவது முறை மாறும் போது எதேச்சையாக நிகழ்ந்தது போல் ராஜுவின் கையை விட்டுவிட வேண்டும். பின் என்ன சங்குதான்..

காலடியில் இருந்த பழத்தைக் கொத்திக் கொண்டிருந்த அந்தப் பஞ்சவர்ணக்கிளியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் மரியோ...சற்று தூரத்தில் இருந்த கூடாரத்திலிருந்து லேசான புகை வந்து கொண்டிருந்தது. வழக்கம்போல் பாலுதான் சமைத்துக்கொண்டிருப்பான். சர்க்கஸ் முதலாளிக்குத் தெரிந்தால் ப்ரச்னையாகிவிடும். எத்தனை முறை கண்டித்தாலும் இவன் கேட்பதில்லையே என்று நினைத்தான் மரியோ. தீ விபத்து நேரும் அபாயம் இருப்பதால் சமைப்பதற்குத் தடை விதித்திருந்தார் முதலாளி.

அந்தக் காலை நேரத்திலேயே லேசாக வெயில் உரைக்க ஆரம்பித்திருந்த கோடைக்காலமது. அவன் மனம் மட்டும் பனி மூட்டமாய்..எப்படி என்னை ஏமாற்றத் துணிந்து விட்டாயே ராசி...அநேகமாக எல்லோருக்கும் தெரியும் அவர்கள் காதலர்களென்று...மரியோ அனாதை
விடுதியிலிருந்து வந்தவன்..சிறு வயதிலேயே இந்த சர்க்கஸ் முதலாளியிடம் சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று முக்கியமான"பார்" விளையாட்டில் முன்னணி நாயகன். அவன் சேர்ந்த ஐந்து ஆண்டுகளின் பின் வந்து சேர்ந்தவள் ராசி. நட்பு முறையில் ஆரம்பித்த பழக்கம் காதலாகிக் கனிந்துருகி கல்யாணம் செய்யும் முடிவுக்கு வந்திருந்தனர். ராசியின் பெற்றோரும் சம்மதித்து விட்டனர்.

அப்போதுதான் இடையில் வந்து சேர்ந்தான் இந்த ராஜு..சர்க்கஸ் வட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுபவன் அவன். தனித்திறமைகள் நிறைய வாய்ந்தவன். கோமாளி, மேஜிக் வித்தைகள், மரணக்கிணறு மோட்டார் சைக்கிள், பார் விளையாட்டு என்று அனைத்திலும் அசத்தும் ஓர் ஆல் ரவுண்டர். அவன் பழைய கம்பெனி நொடித்துப் போனதும் இங்கே வந்து சேர்ந்தான், மரியோவின் காதலுக்கு எமனாக.

ராசியும், அவள் பெற்றோரும் மனம் மாறிக் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பக்கம் சாயத் தவிப்புக்குள்ளானான் மரியோ..அனைவரும் பலவிதப் பயிற்சிகளும் ராஜுவிடம் பெற்றுக் கொள்ளும்படி முதலாளியின் ஆணை. முதலில் இதை நம்ப மறுத்த அவன் இதயம் அவர்கள்
இருவரையும் பயிற்சி நேரம் நெருக்கமாகப் பார்த்த பல தருணங்களில் குமைந்து போனது. போதாக்குறைக்கு அவன் நண்பர்கள் வேறு "என்னடா ரூட் மாறிப்போகுது போலருக்கு" என்று பேச ஆரம்பித்தனர். ராசியின் பெற்றோரும் கூட மாறிப் போயினர்.துணிந்து விட்டான் மரியோ...புழுங்கிப் புழுங்கி ...இதோ இன்று கொலை பண்ணும் அளவுக்கு..

இரவு ஆட்ட நேரம் வந்தது..ஆவலுடன் எதிர்பார்த்த பார் விளையாட்டு..இதோ முதல் சுற்று மாறியாகிவிட்டது..இன்னும் ஒரு சுற்று போக வேண்டும்..இரண்டாவது சுற்றில் தயார்நிலைக்கு வந்தான் மரியோ...அடுத்த சுற்றில் ராஜுவின் கையைப் பிடிக்காமல் தவற விட
வேண்.......அடடா..இது என்ன யார் விழுந்து கொண்டு இருப்பது...எல்லாமே சுற்றுவது போல்..மிதந்து மிதந்து கீழே...தரையை முத்தமிடும் உச்சந்தலை... ரத்தவெள்ளத்தில் மரியோ..

ஆரவாரம்...போலீஸ்...எல்லாம் முடிந்து ராஜு நினைத்துக் கொண்டான்...அப்பாடா..முரண்டு செய்த ராசி என் வழிக்கு வந்து விடுவாள்...திட்டமிட்டபடி இரண்டாவது சுற்றில் அவள் காதலனைக் கொலை செய்தாயிற்றே..."இன்னும் கொஞ்ச நாள் பொறு மனமே ராசி உனக்குத்தான்" என்று சொல்லிக் கொண்டான்...

(எப்போதோ பார்த்திருந்த ஓர் ஆங்கிலப் படத்தின் தழுவல் தான் இது...பெயர் மறந்து விட்டது..கணவன் மனைவியைக் கொல்ல நினைக்க, மனைவி அதே போல் திட்டமிட்டுக் கடைசிக் காட்சியில் கணவனைக் கொல்லும் கதை..களமும் பாத்திரங்களும் சற்றே மாற்றி...)

Wednesday, December 12, 2007

பாம்புகளுடன் பழகலாம் வாங்க..!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற வழக்கைப் பொய்யென்று நிரூபித்திருக்கிறார் ஒரு பேராசிரியை..தேனியைச் சேர்ந்த திருமதி அருணா, பாம்புப் பண்ணையே வீட்டில் வைத்திருக்கிறார். பாம்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் வாங்கியுள்ளார். சிறு வயதிலிருந்தே பாம்புகள் பற்றிய செய்திகளால் ஈர்க்கப்பட்ட இவர் அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து,ப‌ல‌ உண்மைக‌ள் அறிந்து இன்று தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று இவற்றைப் பற்றி விளக்கியும் வருகிறார்.

அவர் சொல்வது:

பாம்புகள்தான் நம்மைப் பார்த்துப் பயப்பட வேண்டும். அவற்றைப் பார்த்து நாம் பயப்படத் தேவையில்லை என்ற செய்தியை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். அவற்றின் இடத்தில் நாம் வாழ்கிறோம். அதை உயிரினமாக நாம் மதிக்க வேண்டும். நம் வாழ்க்கை முறைக்கும், நம் மண்ணுக்கும் பாம்புகள் மிகவும் அவசியம் என்கிறார்.

நான்கு வ‌கைப் பாம்புக‌ள்தான் விஷ‌த்த‌ன்மை கொண்ட‌வை..ம‌ற்ற‌ எல்லாம் விஷ‌த்த‌ன்மையில்லாதவை..நாம் கெடுத‌ல் செய்தால்தான் அவை ந‌ம்மைக் க‌டிக்க‌ வ‌ரும். நாம்தான் அவ‌ற்றைத் தேவையில்லாமல் துன்புறுத்துகிறோம், ப‌ய‌ப்ப‌டுகிறோம் என்கிறார்.

இவ‌ருடைய‌ க‌ண‌வ‌ரும் இதைப் புரிந்து கொண்டு இவ‌ருக்கு உறுதுணையாக‌ நிற்கிறார்.இவ‌ருடைய‌ மாண‌விய‌ரும் இவ‌ரிட‌ம் ப‌யிற்சி மேற்கொண்ட‌ பின் பாம்புக‌ளோடு தோழிய‌ர் போல‌ப் ப‌ழ‌கி வ‌ருவ‌தாக‌வும், ஒரு ஆப‌த்தும் இல்லையென்றும் கூறுகின்ற‌ன‌ர். "ப‌ழ‌கலாம் வாங்க‌", என்று சிவாஜி ஸ்டைலில் ந‌ம்மையும் அழைக்கிறார்க‌ள்.

பாம்பு என்ற‌ பெய‌ரைக் கேட்டாலே குலை ந‌டுங்கும் என‌க்கு, திருமதி. அருணா மற்றும் மாணவியர் பாம்புக‌ளைக் க‌ழுத்து ம‌ட்டும் கைக‌ளில் விளையாட‌ விட்ட‌ காட்சி அச‌ர‌ வைத்தது.

தான் ம‌ட்டும‌ல்லாம‌ல், த‌ன் மாண‌வியரும் ச‌க‌ஜ‌மான‌ நிலையில் பாம்புக‌ளுட‌ன் ப‌ழ‌கி வ‌ரும் நிலைமையை உருவாக்கி, இன்னும் பலரையும் இது போல மாற்றக்கூடிய தன்மையும் உறுதியும் கொண்ட‌ திரும‌தி. அருணா உண்மையிலேயே பாராட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்தான்.


ந‌ன்றி: ச‌ன் டிவி செய்திக‌ள்

Monday, December 10, 2007

மீண்டும் நீ வருவாயா பாரதி?



சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம் என்ற
உன் சேதுக் கனவுகள் சேதாரமாய்
கேள்விக்குறியாய் கேலிக்குரியதாய்க்
காலத்தின் பதிலுக்காய்க்
காத்துக் கிடக்கிறது.

காவிரி, முல்லை, பாலாறு
கூட்டணிச் சதியில்
மும்முனைப் போரில்
முடங்கிக் கிடக்கும்
நம் தமிழ் நாட்டு விவசாயம்.
இங்கு நதிகள் அல்ல
வறட்சி மட்டுமே வற்றாமல் பாய்கிறது.

யாமறிந்த மொழிகளிலே
தமிழை மட்டும் காணவே காணோம்.
தமிங்கலம் என்ற திமிங்கலம்
வாய் பிளந்து சிரித்திருக்க
எங்கும் எதிலும் தமில்,டமில்,டேமில்..

புதுமைப் பெண்கள்
கொஞ்சம் சாதனை மிச்சம் வேதனை
ஒரு சுனிதா வில்லியம்ஸ்
உருவாகும் நேரம்
ஓராயிரம் சுப்பம்மாக்களும்
அல்லவா உருவாகின்றனர்?
முப்பத்து மூன்று விழுக்காடு என்று
மூன்று தலைமுறையாய்ச் சொல்கிறார்கள்
இன்னும் முப்பத்து மூன்று வருடங்களாவது
இதைச் சொல்ல மட்டுமே செய்வார்கள்.

விளையாடும் பாப்பாக்கள் ஓடுவதற்கு
ஏது இடம்? ஏது நேரம்?
நான்கு சுவற்றுக்குள்
கணினியுடன் தனிமையுடன்..
இல்லையேல் பட்டாசுடன், பட்டினியுடன்
சிவகாசிச் சிறுவனின்
பேரனாவது பள்ளி காண்பானா?
இல்லை தாத்தா பட்ட கடனுக்காகத்
தற்குறியாய் நிற்பானா?

உன் காணி நிலக் கனவுகள்
கோணிக்குள் பதுங்கிட
உணவுக்கும் உடைக்குமே
பஞ்சமோ பஞ்சம்...

சாதிகள் இல்லையடி பாப்பா!
இன்று சாதிகள்
கொஞ்சம் நஞ்சம் இல்லையடி பாப்பா!
வஞ்சகம் இல்லாமல்
பல்கிப் பெருகிய கிளைகளடி பாப்பா!

வெந்து தணிகின்றன
சேரிக் குடிசைகள்
வெடித்து மடிகின்றன
கொத்துக் கொத்தாய் உயிர்கள்
தீராத விளையாட்டு
தீப்போல் பரவும்
தீவிரவாத விளையாட்டு!

அச்சம் அச்சம் அது
எங்குதான் இல்லை?
எதில்தான் இல்லை?

நல்லதோர் வீணை செய்வானேன்?
அதை நலம்கெடப் புழுதியில் எறிவானேன்?
நாங்கள் வீணைகள் செய்வதே
வீணென்று விட்டொழித்தோம்!

மீசைக் கவிஞனே!
உன் வானவில் கனவுகள்
வண்ணம் பெறும் காலம்
கூடிவரவில்லை இன்னும்.
கோடித்துயரிலும்
நாடி தளர்ந்திடாமல்
நம்பிக்கை மட்டும் வாழ்கிறது இன்னும்.

ஒளிபடைத்த கண்னும்
உறுதி கொண்ட நெஞ்சும்
மீட்டுக் கொஞ்சம் தந்திட
உன் பாட்டுத் திறத்தாலே
எம்மைப் பாலித்திட
நீ பிறந்த நாளில்
மீண்டும் பிறந்து வருவாயா பாரதி?

Saturday, December 8, 2007

உவமைகளில் பொய்யும் மெய்யும்

சூரியனின் சாயல்கள்
சுமக்காத கண்கள்
பவளத்தின் சாயல்கள்
பளிச்சிடா இதழ்க‌ள்
ப‌னியின் வெண்மை
பார்ர்த்திராத பழுப்பு நிறம்
கம்பிக‌ளை ஒத்த‌ கேச‌ம் ...‍‍
இவைதான் என் காதலி!

செந்நிற‌ம் மேவிய‌
வெண்ணிற‌ ரோஜாக்க‌ள்
தோட்ட‌த்தில் பார்த்த‌துண்டு
அவ‌ள் க‌ன்ன‌த்தில்
பார்த்த‌தில்லை.

திர‌விய‌ங்க‌ளின் சுக‌வாசத்தில்
ம‌ய‌ங்கிய‌துண்டு
என் காதலியின் சுவாச‌த்தில்
நான்
பொசுங்கிய வாசமும்
நுகர்ந்ததுண்டு.

என் காதலியின்
குரலழகு கேட்ட‌துண்டு
அத‌னினும் இனிமையான‌
இன்னிசையில் ந‌னைந்த‌துண்டு.

தேவதைகள் பூமிக்குக்
கால் நடந்து வந்த காட்சி
ப‌ல‌ர் கூற‌க் கேட்ட‌துண்டு
கண்டதில்லை இதுவரை..
ஆனால்
என் காதலியின்
காலடிகளில்
நில‌ம‌து அதிர்ந்த‌
நித‌ர்ச‌ன‌ம் க‌ண்ட‌துண்டு.

என்றாலும்
என் காதல்
அழகானது
அபூர்வமானது
பொய்யான உவமைகளில்
புனையப்படாதது.

என் காத‌லி
உவமைகளை எல்லாம்
பொய்யாக்கிக்
காத‌லை மட்டுமே
மெய்யாக்கியவள்!

என்ன‌வாயிருக்கும் இது என்று குழ‌ப்ப‌மா? ஷேக்ஸ்பிய‌ர் இய‌ற்றிய‌ sonnets என்ற‌ க‌விதைத் தொகுப்பிலுள்ள‌ 130 ஆம் க‌விதையின் மொழிமாற்ற‌ம் இது..வார்த்தைக்கு வார்த்தைக்கான‌ மொழியாக்கம் அல்ல‌..கொஞ்ச‌ம் என் க‌ற்ப‌னையும் க‌ல‌ந்த‌து.

ந‌ம் கவிஞர்களின் உவ‌மைக‌ள் சில நினைவுக்கு வ‌ருகின்ற‌ன‌..

சுட்டும் விழிச் சுடரே ...

முத்து பவளம் முக்கனி சர்க்கரை..

நீர‌லைக‌ள் இட‌ம் மாறி நீந்துகின்ற‌ குழலோ..

நீ ஆடை அணிக‌ல‌ன் சூடும் அறைக‌ளில்
ரோஜா ம‌ல்லிகை வாசம் ..

பூவில் மோத‌ப் பாத‌ம் நோக‌...

பேசுவ‌து கிளியா இல்லை
பெண்ண‌ர‌சி மொழியா ...

உவ‌மைக‌ளில் பொய்யென்ன‌ மெய்யென்ன‌ எல்லாமே அழ‌குதான்!