Thursday, April 4, 2013

நான் அறிந்த சிலம்பு - 40

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 204 - 210


சிலம்பின் வரிகள் இங்கே: 211 - 227 
 

வீதியில் உலாவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்

அகன்ற அழகிய வானில்
இராகு கேது பாம்புகளுக்கஞ்சிக்
கருமுகில் சுமந்து
முயற்கரை* ஒழித்துத்
திரியும் நிலவது போல்

(முயற்கரை - நிலவிலுள்ள கறை)

கருங்கூந்தல் சுமந்து
கயல்மீனான இருவிழிகளிடைக்
குமிழ்மலர் போன்ற மூக்கினையும் கொண்ட
அழகுப் பரத்தையர்
புகார் வீதிகளில் உலவுகின்றனரோ
என்றெண்ணியே
பரத்தையர் முகம் கண்டு
காமுற்று மயங்கினர் இளைஞர் சிலர்.

முன்பொருமுறை
சிவனால் எரிக்கப்பட்ட
மகரக் கொடி தாங்கிய மன்மதன்
தன் உடம்பினை மீண்டும் பெறுதல் பொருட்டு
ஈரம் நிறைந்த திங்களாகி
பெரிய நிலத்தே உள்ள
அமுதக் கலையின்
சீர்மை பொருந்திய துவலையுடைய
நீரைப் பருகி வளரும்படி
வளர்த்த மின்னல் கொடி ஒன்று
இந்நிலத்தே வந்ததோ...
என்றெண்ணியே
பரத்தையர் இடையழகில்
மயங்கிப் பிதற்றினர்
இன்னும் சில இளைஞர்.

பெருநிலம் ஆள்கின்ற மன்னர்க்குத்
தம் பெருவளம் காட்ட விரும்பிய
திருமகள் இங்குதான் வந்து புகுந்திருப்பாள்
என்றே கருதியது தாமரை மலர்.

அத்தாமரை மலர் எத்தன்மைத்து?!
அழகு நங்கையின்
செந்நிற முகம் ஒத்தது.


எரிதழல் நிறமுடை இலவ மலர்
போன்ற அதரங்களையும்
வெள்ளை நிறமுடை முல்லை அரும்புகள்
போன்ற பற்களையும்
கருமை நி\றமுடை நீள்குவளை மலர்
போன்ற கண்களையும்
குமிழ்மலர்
போன்ற மூக்கையும்
தன்னுள் அடக்கிக் கொண்டு
வேற்று உருவம் தாங்கியே
திருமகளைச் சேரவென்று
அவளைத் தேடியே திரிந்த
கள்ளத் தாமரை
போன்றவள் இவ்வழகுப் பெண்.

ஒரே ஒரு தாமரை மலருக்குப்
பல மலர்களின் குணம் வாய்த்தது போல்
ஒரே ஒரு பெண்ணிடம்
பல்வகைப்பட்ட அழகும் அமைந்திருந்தது
கண்டு மயங்கித் திரிந்தனர்
இன்னும் சில இளைஞர்.

பல உயிர்களையும்
கவர்ந்து செல்லும்
எமன் அவனும்
ஆண் இயல்போடு உருவத்தோடு
தாம் திரிந்தால்
அச்செயல் மன்னனவன்
செங்கோல் மறுத்ததாகும்
பழி நேரும் என்றஞ்சியே


தன் உருவம் மாற்றிக்கொண்டு
நாணமுடைய தோற்றமும்
நகையுடைய முகமும்
திவவினையுடைய*
பண்ணிசைக்கும் யாழின் மொழியையும்
தன்னகத்தே கொண்டு
பெண்ணுருவம் தாங்கி
இவ்வீதியில் திரிகின்றான் போலும்
என்றெண்ணியே
அப்பரத்தையர் அழகில்
தம்முயிர் பறிபோவது போல்
பிதற்றி நின்றனர் இளைஞர் சிலர்.

(திவவு - யாழின் கோட்டிலுள்ள நரம்புக்கட்டு)

உருவம் ஏதுமில்லாக் காமனவன்
ஒப்பற்ற பெருஞ்சேனையெனத்
திகழ்ந்தது பரத்தையர் கூட்டம்.

அப்பொதுமகளிருடன் ஊடி
அவர்களைப் புகழ்ந்து
முன்போலவே ஊடல் வென்று
அவர்களை வேறெங்கும் போகவிடாது
தடுத்து நிறுத்திப் புணர்ந்தனர்.

அத்தருணத்தில்
அம்மகளிர் தோள்களில்
மார்புகளில் எழுதிய
தொய்யில் எனும் வரிக்கோலம்
ஆடவரின் மார்பிலும் தோளிலும்
எழுதப்பட்டது.

புதிதாய்ப் பதிந்திட்ட
இம்முத்திரை குறித்து
மனைவியர் தம்மோடு ஊடுவர்
என்றஞ்சியே
விருந்தினர் சிலருடன்
தம் வீடு சென்றனர் ஆடவர்.
 

வல்லமை 31.09.12 இதழில் வெளிவந்தது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

ஜீவி said...

//அத்தாமரை மலர் எத்தன்மைத்து?!
அழகு நங்கையின்
செந்நிற முகம் ஒத்தது.//

ஒரே மாதிரி வரிகளை அமைக்காது மாறுதல் கொடுத்து அமைத்து, வாசிப்பதற்கு சுவையூட்டியது அழகு!