Tuesday, May 7, 2013

நான் அறிந்த சிலம்பு - 41

புகாரக்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை


சிலம்பின் வரிகள் இங்கே: 227 - 240
 
மனைபுகுந்த ஆடவர் தம் மனைவியரின் ஊடலைத் தீர்க்க அறியாமல் நடுங்குதல்

விருந்தினரோடு வீடுதான் புகுந்திட்ட
அகன்ற பெருந்தோள் கணவருடன்
ஊடல் பாராட்ட இயலாமல்
அவருடன் பொருந்தியிருந்து
வந்திட்ட விருந்தினரை
வரவேற்று உபசரித்தனர்
இல்லற மகளிர்.

வழிபாட்டு ஒழுக்கத்தில்
மேலோங்கிச் சிறந்த
அருந்ததி போலும்
கற்பில் சிறந்த
இல்லற மகளிரை
அவர்தம் கணவர் பெருமக்கள்
மதித்தேதான் போற்றினர்.

தம் நெஞ்சத்திடம்
தம் எண்ணம் உரைத்தனர்.

ஒளியும் அழகும் பொருந்திய
இம்மாதர் திருமுகம் கண்டிட்ட
நீலமணி ஒத்த இதழ்களையுடைய
குவளை மலர்கள்
புறங்கொடுத்துப் போயின.

மகளிரின் கரிய கண்களின்
கோபக் கருஞ்சிவப்பு
விருந்தினர் வரவால்
நீங்கியே போயிற்று.

இக்கோபச்சிவப்பு மட்டும்
நீங்காமல் போயிருந்தால்
இந்தப் பரந்த நிலவுலகம்
இவர்தம் ஊடல் நீங்கிட
வேறு ஒரு மருந்தைத்
தர வல்லதோ...

இங்ஙனம் எண்ணி எண்ணிச்
செயலற்று மயங்கினர்
கணவன்மாரும்
விழாவது நடந்திட்ட நாட்களில்..

கண்ணகிக்கும் மாதவிக்கும் கண் துடித்தல்

இச்சிறப்புடை இந்திரவிழாவின்
நள்ளிரவுப் பொழுதொன்றில்
தன்னுள்ளே இருக்கும்
மணத்தாது மகரந்தங்கள்
தேன் செறிந்து ஊறி உறுத்துவதால்

மேற்பரப்பில் இருக்கும்
கட்டு மெல்லவே அவிழ்ந்து
தேன் சொரியச் சொரிய
நடுநடுங்கும் கழுநீர் மலரைப்போல
உள்ளத்தின் நினைவை
உள்ளே மறைத்துக்
கண்ணீரைச் சொரிந்தன
இரு பெண்களின் கண்கள்.


கோவலனுடன் கலவியற்ற காரணத்தால்
கருத்திருந்த கண்ணகியின் கருங்கண்ணும் (இடக்கண்ணும்)
பிரிவுத்துயர் தாளாமல்
கண்ணீரைச் சொரிந்திட்டது;
துடிக்கவும் செய்தது.

கோவலனுடன் கலவியால் சிவந்திட்ட
மாதவியவள் செங்கண்ணும் (வலக்கண்ணும்)
ஆனந்தம் தாளாமல்
கண்ணீரைச் சொரிந்திட்டது;
துடிக்கவும் செய்தது.

(குறிப்பு:
  • பெண்ணின் இடக்கண் துடித்தல் - நன்மைக்கு அறிகுறி; கண்ணகி கோவலுடன் இணையும் நன்மையை உணர்த்த அவளின் இடக்கண் துடித்தது.
  • பெண்ணின் வலக்கண் துடித்தல் - தீமைக்கு அறிகுறி; மாதவி கோவலனைப் பிரியும் தீமையை உணர்த்த அவளின் வலக்கண் துடித்தது.)
(இந்திரவிழவு ஊர் எடுத்த காதை முற்றிற்று.
அடுத்து வருவது கடல் ஆடு காதை)
 
வல்லமை 08.10.12 இதழில் வெளிவந்தது

1 comment:

ஜீவி said...

கண்ணகி-மாதவி இவர்களின் உணர்வுத் துடிப்புகளை அவர்தம் இட, வல கண்துடிப்புகளில் அடக்கிய அடிகளாரின் கற்பனைத் திறன் தான் என்னே!