Thursday, April 4, 2013

நான் அறிந்த சிலம்பு - 37

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
சிலம்பின் வரிகள் இங்கே: 157 - 175

இந்திரனை நீராட்டுதல்

அரசனின் ஐம்பெருங்குழுவினர்,
எண்பேராயத்தினர்,
அரச குமரர், வணிக குமரர்,
கண்டவர் வியக்கும் வண்ணம்
குதிரைகளை இயக்கும் வீரர்,
யானை மீது ஏறி வரும்
திரள்கூட்டத்தினர்,
விரைவாகச் செல்லும்
குதிரைகள் பூட்டிய தேர்கள் உடையோர்
அனைவரும் ஒன்றாய்க் கூடினர்.

ஐம்பெருங்குழுவினர் - அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர்
எண்பேராயத்தினர் - கரணத்தியலவர், கருமகாரர், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி(குதிரை) மறவர்

அங்கே கூடிய அனைவரும்
தம் அரசனை மேம்படுத்த எண்ணியே
"புகழ்நிறைந்த மன்னன் வெற்றி கொள்வானாக"
என்றே வாழ்த்தினர்.

மிகப்பெரிய இப்புவியின்கண் வாழும்
ஆயிரத்தெட்டு சிற்றரசர்,
தம் வளத்தால் உலகைக்காக்கும்
குளிர்ந்த காவிரியின்
பூந்தாது நிறைந்த
பெரிய சங்கமத்துறையில் இருந்து
புண்ணிய நன்னீரைப்
பொற்குடங்களில் ஏந்தியே வந்து
மண்ணில் இருப்பவர் மருட்சியுறவும்
விண்ணில் இருப்பவர் வியந்துபார்க்கவும்
வானவர்க்கு அரசனாகிய இந்திரனை
ஆயிரத்தெட்டு கலச நீரைக் கொண்டு
திருமஞ்சன நீராட்டினர்.

கோயில்களில் வேள்வி

தாய்வயிற்றில் பிறக்காத
திருமேனியன் மாதவன்
சிவபெருமான் கோயிலிலும்,
ஆறுமுகமும் அழகுறக்கொண்ட
அழகன் முருகன் கோயிலிலும்,
வெள்ளிய சங்கு போன்ற நிறமுடையான்
பலதேவன் திருமால் கோயிலிலும்,
முத்துமாலைகள் அணிசெறிந்த
வெண்கொற்றக்குடையுடைய
இந்திரன் கோயிலிலும்,
யாக ஓம குண்டங்கள் அமைத்து
மிகவும் மூத்த இறைவன் அருளிய
நால்வேதங்கள் ஓதி
யாகத்தீ வளர்த்து
விழா எடுக்கப்பட்டது.
 

வல்லமை 10.09.12 இதழில் வெளிவந்தது.

1 comment:

ஜீவி said...

துவங்கிய காரியத்தைத் தொடர்வதற்கு நன்றி. தொடர்ந்து வருகிறேன்.