Thursday, April 4, 2013

நான் அறிந்த சிலம்பு - 39

புகார்க்காண்டம் - 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
 
 

சிலம்பின் வரிகள் இங்கே: 189 - 203

இளவேனிலும் மலயத் தென்றலும் உலாவும் வீதி

தன்னால் காதலிக்கப்பட்ட
காதல் கணவன்கோவலனைப்
பிரிந்த கண்ணகி
அலர் (பழிச்சொல்) எய்தியவள்;
அங்ஙனம் காதலனைப் பிரிந்து
அலர் எய்தாத,
அழகிய வளைந்த
குழை அணிந்திருந்த
மாதவி மடந்தையோடும்;

இல்லம்தனில் வளர்கின்ற
முல்லை மல்லிகை இருவாட்சி;
தாழியுள் வளர்கின்ற
குவளை மலர்;
வண்டுகள் சூழும்
செங்கழுநீர்ப்பூ;
இவை
ஒருங்கே கொண்டு
நெருங்கத் தொடுத்த
மாலையில் படிந்தும்


காமமாகிய கள்ளினை
உண்டு களித்தும்
நறுமணம் செறிந்த
அழகுப் பூம்பொழிலில்
விளையாட விரும்பியும்
நாள்தோறும் மகிழ்ச்சி
மட்டுமே நிறைந்திருக்கும்
நாளங்காடியதனில்
பூக்கள் விற்கும் இடங்களில்
நறுமணப்பூக்களின்
இடையே புகுந்தும்
நகைத்து விளையாடும்
பெண்கள் கூட்டத்தின்
காமம் வழியும் மொழிகள்
கேட்டுக் களித்தும்


குரல் எனும்
பாட்டிசைக்கும் பாணரோடும்
நகரிலுள்ள பரத்தையரோடும்


இன்புற்று உலா வரும்
கோவலன் அவன் போல்
இளி எனும்
இசை இசைக்கும் வண்டோடும்


இனிமை சுமந்த
இளவேனிலோடும்
பொதிகைமலையில் இருந்து
புறப்பட்ட இளந்தென்றலாம்
மலயமாருதம்
புகார் நகர்தன்னின் வீதிகளில்
புகுந்தேதான் விளையாடியது.
 

வல்லமை 24.09.12 இதழில் வெளிவந்தது.

1 comment:

ஜீவி said...

காட்சி வருணனை அடிகளாருக்கு கைவந்த கலை போலும்!