Tuesday, October 9, 2012

மனவறைச் சுத்தம்

மனவறைச் சுத்தம் - 1

சுருட்டிய கூந்தல்
உடைந்திட்ட கேசகவ்வி
ஜோடியற்ற ஒற்றைத்தோடு
காலியான வாசனை திரவியக் குப்பி
வீண் பொருட்கள்
அலங்கார மேசையில்..


எழுதாத பேனா
உதவாத கசங்கிய காகிதம்
உலர் பசை
எழுதிமுடித்த கவிதையின்
ஒத்திகை வரைவுகள்
வீண் பொருட்கள்
எழுது மேசையில்..


களையப்படுகின்றன குப்பைகள்
அறைதோறும் அவ்வப்போதேனும்..


பொறாமை பழியுணர்வு
என்றோ கேட்டதொரு வசவு
எங்கோ பார்த்ததொரு
வேண்டாத காட்சி
யாரோ கிளறிய
குப்பை நினைவு
சினம் ரணம்..


களைய முடியத்தான் இல்லை..
பழையன களை(ழி)யும் முன்னே
மீண்டும் புதிய குப்பைகள்
மனவறை மருங்கினில்..

*********************

மனவறைச் சுத்தம் - 2

கழிவுநீர்த் துளையின்
அடைப்பானில்
பிடிவாதமாய் ஒட்டியிருக்கும்
கழிவுணவுப் பிசுக்குகள்போல்


மரிக்காமல் மனதில்
மேடை போட்டு
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்
கழிவுணர்வுத் துகள்கள்.


விதியே என்றிருந்தால்
வியாதிதான்.


அருவியென
அடித்து ஊற்றி
நல் நினைவுகள்
நீர்தெளிக்க
சடுதியில் கழுவப்படும்
மனவழுக்குகள்.


களைகள் களைந்து
கழுவியெடுக்கும்
அருவியதனுக்குப்
பலரும் சூட்டிடும்
பலப்பல பெயர்கள்.


அன்பு
உதவி
ஈகை
நம்பிக்கை
சம்சாரம்
சந்நியாசம்
பக்தி
ப்ரார்த்தனை
.................
.................
 

9 comments:

ராமலக்ஷ்மி said...

இரண்டுமே அருமை மலர்.

இராஜராஜேஸ்வரி said...

சினம் ரணம்..


களைய முடியத்தான் இல்லை..

சிறப்பான கவிதைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள் !

கோபிநாத் said...

;-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\களையப்படுகின்றன குப்பைகள்
அறைதோறும் அவ்வப்போதேனும்..// அப்படிங்கறீங்க..:))
சரி சரி எப்பயாச்சும் க்ளீனிங்க் உண்டுதானே..
மனவறைச்சுத்தம் கஷ்டம்தான்..

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராஜ ராஜேஸ்வரி மேடம்

பாச மலர் / Paasa Malar said...

வாங்க கோபி.. நன்றி

பாச மலர் / Paasa Malar said...

உஷ் முத்து..ரகசியம்..இதை எழுதியதும் மண்டைல கொஞ்சம் புத்தி உதிச்சு, சோம்பேறித்தனக் கொஞ்சம் உதறி கொஞ்சமே கொஞ்சம் மேசைச் சுத்தம் செய்தானாக்கும்...