Wednesday, October 3, 2012

குறளின் குரல் - 58

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 100. பண்புடைமை
குறள் எண்:991


எண்பதத்தா லெய்த லிளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு.


எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார்மாட்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு.


விளக்கம்:

எல்லோரிடத்திலும் எளிமையாகப் பேசுவதும், பழகுவகும், பண்புடைமை என்னும் சிறப்பான நெறியினை அடையும் வழியாகும் என்பது வழக்கு.
------------

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 97. மானம்
குறள் எண்: 961


இன்றி யமையாச் சிறப்பின வாயினுங்
குன்ற வருப விடல்.
 
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

விளக்கம்:

மிகவும் முக்கியமான, கட்டாயமாகச் செய்தே ஆக வேண்டிய செயல்கள் என்றாலும் கூட, தம் பெருமையும் தம் குலப்பெருமையும் குன்ற வைக்கும் தன்மை வாய்ந்தவை அச்செயல்கள் என்றால், அத்தகைய செயல்களைச் செய்யாமல் கைவிடுவதே நன்று.
-------------------
 
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகார்ம்: 65, சொல்வன்மை
குறள் எண்: 646


வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்.


வேட்பத்தால் சொல்லிப் பிறர் சொல் பலன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள்.


விளக்கம்:

தான் சொல்லும் கருத்துகள் மற்றவர் விரும்பித் தொடர்ந்து கேட்குமாறு, அவர் மனம் கோணாதவாறு இனிதாகச் சொல்ல வேண்டும்.


பிறர் தமக்குச் சொல்லும் சொல்லின் பயன்களை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவையிரண்டும் கருத்தில் கொள்வது, தமக்குரிய பண்பில் சிறிதும் மாசு குன்றாதவர்களின் கொள்கையாகும்.
-----------------
 
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 84. பேதைமை
குறள் எண்: 833


நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.


நாணாமை, நாடாமை, நார் இன்மை யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில்.


விளக்கம்:

பழி பாவங்கள் நேர்ந்து விடுமே என்று வெட்கப்படாமை
நாடவேண்டியவற்றை நாடிப் பெறாமை
எவரிடத்திலும் அன்பு இல்லாத தன்மை
பேணிக் காக்க வேண்டியவற்றைப் பேணாமை


இவை எல்லாம் பேதைகளுக்கு இயல்பாய் அமைந்த தொழிலாகும். நல்லவற்றை அறியாதவர் பேதைகள்; ஆதலால் இவை அவர்களது 'தொழில்' எனப்பட்டன.
 
நார் - அன்பு, மட்டை முதலியவற்றின் நார், கயிறு, வில்லின் நாண், பன்னாடை, கல்நார்
------------------
 
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 62. ஆள்வினையுடைமை
குறள் எண்: 618


பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்துள்வினை யின்மை பழி.

பொறி இன்மை யார்க்கும் பழி அன்று; அறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி.


விளக்கம்:

மெய், வாய், கண், செவி, மூக்கு என்ற ஐம்பொறிகளில் ஒருவருக்குக் குறைகள் இருக்குமெனில் அது குறை என்று பழிக்கப்படாது. அறிய வேண்டியவற்றை எல்லாம் அறிந்து கொண்டு, முயற்சி ஏதும் செய்திடாமல் இருப்பதே குறையாகும்.


3 comments:

ராமலக்ஷ்மி said...

விளக்கங்கள் நன்று மலர்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை... வாழ்த்துக்கள்...

மிக்க நன்றி...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி தனபாலன், ராமலக்ஷ்மி