Monday, June 25, 2012

நான் அறிந்த சிலம்பு - 23

புகார்க்காண்டம்: 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை


சிலம்பின் வரிகள் இங்கே..21 - 34


நிலாமுற்றத்தில் கோவலனும் மாதவியும் களித்திருத்தல்

வயதில் இளையவர்கள்தான் என்றாலும்
பகையரசரைத் தோற்றோடச் செய்யும்
மாண்பும் செருக்கும் மிக்கவர்கள்
தென்னவர் குலப் பாண்டிய மன்னர்கள்.

அம்மரபில் முதலானவன்
'சந்திரன்' ஆவான்.


அவன் தானும்
செந்நிற வானில்
வெண்ணிறப் பிறையெனத் தோன்றி
அல்லல்கள் தரும் அந்திமாலையெனும்
பகைவனைத் துரத்தி ஓட்டிவிட்டு
தன் முறைதனில் பிறழ்ந்திடாது
பால்கதிர்களைப் பரப்பிவைத்து
மீன்கள் குவிந்திருந்த
வானத்து மருங்கில்தான்
ஆட்சி செய்திட்டே
தன் ஒளி துலங்கச் செய்தான்.


மனையிடத்து
பூத்திட்ட முல்லையும்
அவிழ்ந்த மல்லிகையும்
இன்னும் பல பூக்களும்
பரந்து தூவிக் கிடந்த
படுக்கையதனில்
பொலிவுடன் தான் வீற்றிருந்தனர்
கோவலனும் மாதவியும்.


பரந்து உயர்ந்த
அல்குலின்மேலிருக்கும்
அழகிய சேலையின்மீதுள்ள
பவள வடமும் மேகலையும்
நிலைகுலைந்திருக்க


நிலவின் பயனைத்
துய்ப்பதற்கென்றே
அமைந்திருந்த
உயர் நிலா முற்றத்திலே
தன் காதலன் கோவலனுக்கு
ஒரு நேரம் ஊடல் இன்பமும்
ஒரு நேரம் கூடல் இன்பமும்
மாறி மாறி அளித்திருந்தனள் மாதவி.


ஆர்வம் கிளர்ந்தெழும்
நெஞ்சத்துடன் கோவலனை எதிர்கொண்டு
அவனைத் தழுவி முயங்கினள்.


அம்முயக்கத்தால்
முன் கலைந்திட்ட ஒப்பனையதனை
கூடலின் பின் அவ்வப்பொழுது சரிசெய்து
அவள் மகிழ்ந்திருந்தனள்.


மாதவியவள் மட்டுமன்றிக்
காதலருடன் கூடியிருந்த
மகளிர் அனைவரும்
களித்தே மகிழ்ந்திருந்தனர்.

வல்லமையில் 04.06.12 அன்று வெளிவந்தது.

Wednesday, June 20, 2012

நான் அறிந்த சிலம்பு - 22

புகார்க்காண்டம் - 4. அந்திமாலை சிறப்புச்செய் காதை


மாலைப்பொழுதின் வரவு


விரிகதிர்கள் பரப்பி
உலகம் முழுவதையும் ஆண்ட
ஒப்பற்ற தனி ஒற்றைச் சக்கரத்
தேரினையுடைய திண்மையாளன்
சூரியன் அவனைக் காண்கிலனே.


அழகிய அகன்ற வானத்தின்கண்
தம் கதிர்களை விரித்து
ஒளிதனைக் கூட்டும்
திங்கள் செல்வன் அந்நிலவு
எங்கேதான் போய் உள்ளானோ?


இவ்வாறெல்லாம்
தன் காதலனைப்பிரிந்த
நிலமடந்தை
அவனைத் தேடியே புலம்பினள்.


திசையாகிய தன் முகத்தில்
பசலையது படர,
செம்மலர்க்கண்கள் தான்
கண்ணீரது வார்த்திட,
உடல் முழுதும்
குளிர்ந்தே நடுங்கிட
கடல் அலையை
ஆடையாய் உடுத்திட்ட
நிலமடந்தையவளும்
தன் கணவனைக் காணாது
அல்லலுற்று நெஞ்சு கலங்கிடும்
இடுக்கண் மாலைப்பொழுது.


கடமையது தவறிடாது
தம் அரசுக்கு வரி செலுத்திடும்
நற்குடிமக்கள் வருந்தும்படி
உட்பகையுடன் நின்றிருந்து
உடனிருந்தே
பகைவர் தமக்குத்
தம் குடிகெடுக்க தாமே உதவி,


வெற்றிகள் குவிக்கும்
தம் புவிமன்னன்
இல்லாத நேரத்து
நாட்டுநலம் அழியும்படி
வந்து நின்று தாக்கி
உட்பகைச் சதியால் வென்று
அங்கேயே தங்கிடும்
குறுநிலமன்னன்போல்


வளமது கொழித்துச் செழிக்கும்
புகார்நகர் தன்னிலே
பகல் முடிந்து ஆரம்பமானது இருள்.


அந்த மாலைப்பொழுதில்
என்னவெல்லாம் நடந்தது?


தம் நெஞ்சில் நீங்காது தங்கியிருக்கும்
கணவரைப் பிரிந்த மகளிர்
சொல்ல முடியாத துயரமுற்றனர்.


தம் காதலர் அவருடன்
கூடியே களித்திட்ட மகளிர்
சொல்ல முடியாத இன்பமுற்றனர்.


வேய்ங் குழலது ஊதியே
ஆயர்களும்
முல்லைப்பண் இசைத்திட்டனர்.


அவருடன் சேர்ந்தே
இளைய வண்டுகள் தாமும்
முல்லைப்பூவின் இதழ்களில்
வாய்வைத்தே ஊதி
இசைச்சூழல் எழுப்பி நின்றன.


அறுகால் அதனைப்
பகைமையாய்க் கருதிட்ட
சிறுகால் அதுவும்
வண்டுகளைத் துரத்திவிட்டு
மலர்களின் வாசம்
முகர்ந்து சென்று
சுமந்து சென்று
வீதியெல்லாம் பரப்பியது.


(அறுகால் - வண்டு; சிறுகால் - தென்றல்)


ஒளிபொருந்திய அழகு வளையல்கள்
அணிந்திட்ட மகளிர்தாமும்
தத்தம் இல்லங்களில்
அழகான் மணிவிளக்குகளை
ஏற்றி வைத்தனர்.


வளமிக்க புகார்நகர்தன்னில்
இங்ஙனம் வந்துற்றது
மாலையதன் பொழுது.

வல்லமை 28.05.12 இதழில் வெளிவந்தது.

Monday, June 18, 2012

நிச்சலனமற்ற பொழுதுகளில்..

வரவு செலவுகள்
பார்த்தான பின்

இன்ப துன்பங்களில்
தோய்ந்தான பின்

களித்துக் களைத்து
ஓய்ந்தான பின்

மீதம் இருப்பது
நிச்சலனமற்ற
இன்றையப் பொழுதின்
இந்தக் கணம் மட்டுமே...

நிச்சலனமற்ற பொழுதுகளில்
கரைகின்ற வாழ்க்கை
சில சமயங்களில்
பிடித்துத்தான் போகிறது!

Sunday, June 17, 2012

நான் அறிந்த சிலம்பு - 21

புகார்க்காண்டம் - 03. அரங்கேற்ற காதை


சிலம்பின் வரிகள் இங்கே: 160 - 179


மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்


காவல் வேந்தன்


அழகுபட ஆடியே
முடித்தனள் மாதவி;
ஆடலது ரசித்திட்டே
அகமகிழ்ந்தனன்
காவல் வேந்தன் .


அவன் தான் அணிந்திருந்த
'பச்சை மாலைப்' பரிசினையும்
கூத்து நெறிகள்
தவறிடாமல் ஆடியதால்
'தலைக்கோலி' பட்டமும்
பெற்றனள் மாதவி.


'முதன்முதலாய் மேடையேறி
முதன்மை பெற்று விளங்கி
அரங்கேற்றம் நிகழ்த்திய
நாடகக் கணிகையர்க்குரிய
பரிசின் அளவு இது'
என்று நூலோர் வகுத்திட்ட
விதியதன் படியே
ஆயிரத்தெட்டு கழஞ்சுப் பொன்னை
மன்னனிடமிருந்து பரிசாகப்
பெற்றனள் மாதவி.


மாதவியின் மாலையைப் பெற்றுக் கோவலன் அவளுடன் இருத்தல்


பத்துப் பத்தாய் அடுக்கிய நூறுடன்
எட்டையும் இணைக்க
மற்ற எதனுக்கும் இல்லாததொரு
சிறப்பில் மேம்பட்ட
பசும்பொன்னால் ஆனது
ஆயிரத்தெட்டு கழஞ்சுப் பொன்மாலை.


இத்தகைய பெருமதிப்புவாய்ந்த
பொன்மாலையதனை
அதிகப் பொன் கொடுத்து
வாங்க வல்லவன்
மாதவியின் மணாளனாக ஏற்றவன்
என்றெண்ணினள்
மாதவியின் தாய் சித்ராபதி.


இவ்வெண்ணத்துடனேயே
பொன்மாலையதனை
மருண்டு நோக்கும் மான்விழிகொண்ட
கூனியொருத்தி கைதனில் கொடுத்தே
நிறுத்திவைத்தனள் 
மாலை விற்பனர் போலவே..
செல்வந்த இளைஞர்கள்
வலமது வந்திடும்
நகரின் பெருவீதிகளில்.


மாமலராம் தாமரை போன்ற
நெடிய கண்களையுடைய
மாதவியள் மாலையை
வாங்கிய கோவலனும்
கூனியவளுடன் தான் சென்று
மாதவியின் மணமனை புகுந்தனன்.


அம்மனைதன்னில்
மாதவியைத் தன்னுடன்
சேர்த்து அணைத்த அப்பொழுதினில்
மதி மறந்தே மயங்கினன்.


அவள்தனை ஒருபோதும்
நீங்கிட முடியாத
பெருவிருப்பினன் ஆயினன்.


குற்றங்கள் ஏதுமற்ற
சிறப்புகள் மட்டுமே பெற்ற
தன் மனை மனைவி
முற்றிலும் மறந்தனன்.


வெண்பா


அனைத்துக் கலைகளின் கருவிகளாம்
கணிதம் இலக்கணம் - இவ்விரண்டு
இயற்றமிழ்ப் பிரிவுகள் ஐந்து
(எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி)
இசைத்தமிழின் பண்கள் நான்கு
நாடகத் தமிழின் கூத்துகள் பதினொன்று -


- இவையனைத்தையும்
தம் ஆடல் பாடல் திறத்தினாலே
புவிவாழ் மக்கள் அனைவரும்
ஆழ்ந்து அறிந்து
அனுபவித்துப் போற்றிடும்படி
நிகழ்த்திக்காட்டினள்
அழகிய புகார் நகரதனில் பிறந்திட்ட
பொன்வளை அணிந்திட்ட
மாதவியெனும் கணிகை.

(அரங்கேற்ற காதை முற்றிற்று.)

வல்லமை 21.05.12 இதழில் வெளிவந்தது.

Wednesday, June 13, 2012

நான் அறிந்த சிலம்பு - 20

புகார்க்காண்டம் - 3. அரங்கேற்ற காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 129 - 159

மாதவியின் நாட்டியம்

மங்கலப்பாடல்


அரசன் முதலான அனைவரும்
தகுதிக்கேற்ப அமைத்த இருக்கைகளில்
அமர்ந்திருந்தனர்.


இசைக்கருவிகளை இசைப்பவர்தாமும்
அவரவர்க்குரிய இடத்தில்
முறைப்படி நின்றனர்.


நடனமாடும் கணிகையவள்
மாதவி தானும்
தன் வலதுகாலை முன்வைத்து
அரங்கம் அதனில் ஏறியே
பொருமுகத்திரை பொருந்திய
வலப்பக்க்த்தூண் அருகே
மரபதன்படி சென்றே நின்றனள்.


ஆடிய அனுபவ முதிர்ச்சி அதிகமுள்ள
தோரிய நடன மகளிர்தாமும்
ஒருமுகத்திரை பொருந்திய
இடபக்கத்தூண் அருகே
மரபதன்படி சென்றே நின்றனர்.


நன்மைகள் பெருகும்படியும்
தீமைகள் நீங்கும்படியும்
தாள இயல்பு பொலிந்திருந்து
அவதாள இயல்புகள் நீங்கியிருந்து
தெய்வப்பாடல்களாம்
ஓரொற்று வாரப்பாடல்களும்
ஈரொற்று வாரப்பாடல்களும்
முறைமையுடனே இசைத்த்னர்.


வாரப்பாடல்கள் முடிகையில்
இசைக்கும் இசைக்கருவிகள்தாமும்
ஒருங்கே இசைத்தன.


இசைக்கருவிகள் ஒலித்த முறை

குழல் வழியே
அதன் அடியொற்றி
யாழது இசைத்தது.


யாழின் வழியே
சிறப்புடன்
தண்ணுமையது இசைத்தது.


தண்ணுமையின் வழியே
இழைவுடன்
முழவது இசைத்தது.


முழவுடன் கூடிநின்று
இடக்கை வாத்தியமாம்
ஆமந்திரிகை இசைத்தது.


அந்தரக் கொட்டு


ஆமந்திரிகையுடன் கூடி
இசைக்கருவிகள் இடைவெளியின்றியே
ஒன்றியிருந்து ஆர்த்து ஒலித்தன.


ஒரு தாளத்திற்கு
இரு கொட்டுகள் கொண்டு (10 பற்றுகள்)
பஞ்ச தாளப் பிரபந்தம்
கட்டப்பட்டது.
அத்துடன் தீர்வு என்பதுவும் சேர்ந்து (1 பற்று)
பற்று பதினொன்று ஆனது.


இங்ஙனம் பதினொறு பற்றாலே
ஆடி முடிப்பது தேசிக்கூத்து என்பது
நாடக நூல்கள் எழுதிய மரபு.
இம்முறை வழுவாது
அந்தரக்கொட்டு ஆடல் ஆடி முடித்தபின்...


தேசிக் கூத்து


பாலைப்பண் என்னும் மங்கலப்பண்ணை
அளவு குன்றாதபடிஆளத்தி செய்து (ஆளத்தி - ஆலாபனை)
உறுப்புகள் நான்கும் (உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை)
மங்கலச் சொற்கள் உடையதாய்க்
குறைபடாமல் சொற்படுத்தி இசைப்படுத்தி


தேசிக்கூத்தின் முறைமைப்படி
மூன்று ஒத்து உடைய அளவில் ஆரம்பித்து
ஓர் ஒத்து உடைய தாளத்தில் முடித்து
அழகிய மண்டில நிலை கொண்டு
ஒற்றித்து ஒத்தல்
இரட்டித்து ஒத்தல் கடைப்பிடித்து
பாட்டும் கொட்டும் கூத்தும்
மாதவி ஆடிய பின்னே........


மார்க்கக் கூத்து


பஞ்ச பிரபந்தங்களாகக் கட்டப்பட்ட
வடுகில் ஒத்து தேசியில் ஒத்து காட்டி
இரட்டிக்கு இரட்டியாக (இரண்டிரண்டு)
மட்ட தாளம் முதல் நிலையாக
ஏக தாளம் இறுதி நிலையாக
வைசாக நிலை கொண்டு
ஆடியே முடித்தனள்.


பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று
வந்திருந்து நடனமாடியது போலவே
அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து
நாட்டிய நூல்கள் சொல்லிவைத்த
முறையது தவறிடாது
அனைவரும் கண்டு இன்புற்றிட
நாட்டிய அரங்கினில் ஆடினள் மாதவி.

வல்லமை 14.05.12 இதழில் வெளிவந்தது.