Sunday, July 31, 2011

நான் அறிந்த சிலம்பு - 10

புகார்க்காண்டம் - 2: மனையறம் படுத்த காதை

கண்ணகியும் கோவலனும் இணைந்து இன்புற்றிருத்தல்

வண்டுகள் சுவைக்கும்
வாசனைப் பூம்படுக்கையில்
சென்றமர்ந்தனர்
கண்ணகியும் கோவலனும்.

கோவலன் அவனும்
கண்ணகியவளின்
பெரிய தோள்களில்
வரிக்கோலமாய் எழுதினான்
கரும்பையும் வல்லிக்கொடியையும்...

எத்தகையது அக்காட்சி?
முதிர்ந்த கடல் கொண்ட
உலகம் முழுதையும்
தம் கதிர்களால் ஒளியேற்றும்
கதிரவனும் வெண்மதியும்
ஒருசேர இருந்த
காட்சியை ஒத்திருந்தது..

கண்ணகி சூடியிருந்த
மலர்மாலையில் இருந்த
நிலவையொத்த
வெண்மல்லிகைப்பூக்கள்
வண்டுகளின் பாடல்
செவிமடுத்து
மொட்டவிழ்ந்து திறந்தன...

கோவலன் சூடியிருந்த
மாலையில் இருந்தன
இதழ்முறியாத
செங்கழுநீர்ப்பூக்கள்...
 
மல்லிகைமாலையும்
செங்கழுநீர்த்தாரும்
கலந்து முயங்கின..

செயலற்ற நிலையில்
கலந்து மகிழ்ந்தனர் தம்பதியர்..

தீராத காதலுடன்
கண்ணகியின் திருமுகம் நோக்கிய
கோவலன் தானும்
முன் எப்போதும்
சொல்லப்பட்டிராத
பொருள்நிறை உரையுடன்
கண்ணகி நலம் பாராட்டத் தொடங்கினான்..

கோவலன் கண்ணகியின் நலம்பாராட்டுதல்

தேவர்கள் போற்றும்
சிவன் தான்
சூட்டிய பெருமைக்குரியது
அழகிய இளம்பிறை நிலவது..
உன்னுடன் பிறந்த பிறப்பு என்பதால்
பெருமான் தந்தானோ உனக்கு
அப்பிறையை நெற்றியாக?

போர்க்களத்தில் தம்மை
எதிர்க்கும் பகைவர்க்கும்
படைக்கலன்கள் வழங்கிப்
போர் புரியச் சொல்லும் பண்புண்டு.
அதைப்போலவே
மன்மதன் தானும்
தம் பெரிய கரும்புவில்லை
இரண்டாகப் பிளந்து தந்தானோ
உன் இருபுருவங்களாக?

தேவருண்ணும்
அமிழ்தின் முன்னே பிறந்த
இலக்குமியானவள் நீ என்பதால்
தேவர் கோமான்
இந்திரன் தானும்
வச்சிரப்படையைத் தந்தானோ
உன் அழகிய இடையாக?

ஆறுமுகம் கொண்ட
முருகன் தான்
உனக்குத் தரும்
உரிமையைப் பெற்றிலன்
என்ற போதும்
உன்னைக் கண்டு நான்
துன்புற வேண்டுமென்று
தன் சுடர்நெடு வேல்தனைத் தந்தானோ
கடை சிவந்து
குளிர்ச்சி பொருந்தி நிற்கும்
நின் இரு கண்களாக?


குறளின் குரல் - 30

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 96. குடிமை
குறள் எண்: 957

குடிபிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.


குடிப்பிறந்தார்கண் விளங்கும் குற்றம், விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

விளக்கம்:

நற்குடியில் பிறந்தவரிடம் சிறு குற்றம் கூட இருக்கக் கூடாது. ஆகாயத்தில் இருக்கும் நிலவில் இருப்பது சிறு களங்கம்தான் என்றாலும், அது பலரும் அறியும் வண்ணம் மிகவும் வெளிப்படையாகத் தெரியும். அதே போல், நற்குடியில் பிறந்தவரிடம் இருக்கும் சிறு குற்றமும் பலராலும் அறியப்பட்டுப் பெரிதாகத் தோன்றும்.

விசும்பு - வானம், தேவலோகம், மேகம், செருக்கு, வீம்பு, திசை
மறு - களங்கம், குற்றம், தீமை, அடையாளம், மச்சம்
--------------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 88. பகைத்திறம் தெரிதல்
குறள் எண்: 875

தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.


தன் துணை இன்றால்; பகை இரண்டால்; தான் ஒருவன்
இன் துணையாக் கொள்க, அவற்றின் ஒன்று.

விளக்கம்:

துணைக்கு ஒருவரும் இன்றித் தனித்து நிற்கும் ஒருவனுக்குப் பகையோ இரண்டாக உள்ளது. அந்நிலையில் அப்பகைவருள் ஒருவரைத் தன் இனிமையான துணையாக மாற்றிக் கொள்ள வேண்டிய திறம் ஓர் ஆட்சியாளருக்கு இருக்க வேண்டும்.
-----------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 12. நடுவுநிலைமை
குறள் எண்: 111

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.


தகுதி என ஒன்று நன்றே - பகுதியான
பாற்பட்டு ஒழுகப்பெறின்.

விளக்கம்:

நட்பு, பகைமை என்று பேதம் பார்க்காமல், வேண்டியவர் வேண்டாதவர் என்று ஒரு பகுதியின் பால் சார்ந்து நிற்காமல், அவரவர்க்குரிய முறைமைப்படி நடந்து கொள்வதே நல்லறமான நடுவுநிலைமை என்னும் தகுதியாகும்.
---------------------------

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 109. தகையணங்குறுத்தல்
குறள் எண்: 1082

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தனைக்கொண் டன்ன துடைத்து.


நோக்கினான் நோக்கு எதிர் நோக்குதல் - தாக்கு அணங்கு
தானைக் கொண்டன்னது உடைத்து.

விளக்கம்:

அவளை நான் பார்க்கும்போது எதிர்ப்பார்வை பார்க்கிறாள் அவள். இயல்பாகப் பார்க்கும் போதே தன் பார்வையால் வருத்தக்கூடிய ஒரு பெண் எதிர்ப்பார்வை பார்ப்பது, தான் மட்டும் வராமல் தன்னுடன் ஒரு பெரும்படையைச் சேர்த்துக் கொண்டு வந்து தெய்வப்பெண்ணொருத்தி தாக்குவதைப் போல் உள்ளது.

அணங்கு - தெய்வப்பெண், பத்திரகாளி, தேவர்க்கு ஆடும் கூத்து, அழகு,
அச்சம், விருப்பம், மயக்க நோய், வருத்தம், கொலை, கொல்லிப்ப்பாவை, பெண்

தகை - அழகு

அணங்குறுத்தல் - காதல் துன்பத்தை உண்டாக்குதல்
------------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 24. புகழ்
குறள் எண்: 239


வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.


வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம்.

விளக்கம்:

நல்ல விளைச்சல் தரும் நிலமே பயன் தருவதில் சிறந்ததாகும். அத்தகைய நிலம், புகழ் இல்லாமல் வாழ்பவரின் உடலைச் சுமக்கும் போது, வசைகள் குற்றங்கள் இல்லாதது என்ற தன் புகழில் இருந்து குறைந்து போகும். நல்ல புகழ்வாய்ந்தவர்கள் வாழும் நிலத்தில் மட்டுமே விளைச்சலின் பலன் அதிகமாக இருக்கும் என்ற செய்தியும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.
------------------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 73. அவையஞ்சாமை
குறள் எண்: 727

பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்.


பகையகத்துப் பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல்.

விளக்கம்:

போர்க்களத்தில் பகைவரின் நடுவில் நின்றிருக்கும், மனதில் துணிவற்ற கோழையின் கையில் ஒளி பொருந்திய வாள் இருந்தாலும், அவன் வீரன் இல்லை என்பதால் அந்த வாளால் ஒரு பயனும் இல்லை.

அதே போல் ஒருவன் எவ்வளவுதான் சிறந்த நூல்களைக் கற்றிருந்தாலும், பலரும் கூடியிருக்கும் அவைக்கு நடுவில் தான் கற்றவற்றைச் சொல்லத் துணிவில்லாமல் அஞ்சினான் என்றால், அந்த நூல் தந்த கல்வியால் யாதொரு பயனும் இல்லை.

இரண்டுமே பிறரின் நகைப்புக்கு வழிவகுக்குமேயன்றி ஒரு பயனையும் தருவதற்கு வாய்ப்பில்லை.

Sunday, July 10, 2011

மறைமலையடிகளாரை நினைவுகூர்ந்த போது..

கடந்த வெள்ளியன்று ரியாத்தில் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மறைமலையடிகளார் விழா நடந்தேறியது. அப்போது, மறைமலையடியகளார் குறித்த என்னுரை..




வாழ்க்கையில் ஏற்படும் தேவைகளைப் பல வகைகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் முக்கியமானவை இரண்டு - அவை சமுதாயத் தேவைகள், தனி நபரின் தேவைகள்...தேவைகளுக்கும் வரலாறு என்பதற்கும் தொடர்பு உண்டு..நேற்று, இன்று, நாளை என்ற சுழற்சியே காலத்தின் சுழற்சி..நேற்று என்பது வரலாறு..இன்று என்பது நடைமுறை..நாளை என்பது நேற்றும் இன்றும் கூடி நிர்ணயிப்பது...

நேற்று முடிந்துவிட்டதே..அந்த வரலாறு..அது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? தனிநபர் தேவைக்கும் வரலாற்றுக்கும் தொடர்புண்டு...சான்றாக, தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவனைத் தந்தையார் திட்ட, 'இவர் வாங்கிய மதிப்பெண் மட்டும் அதிகமோ? இவர் என்ன மருத்துவராகவா இன்று இருக்கிறார்'? என்று பிள்ளை நினைக்க...இது தந்தை குறித்த வரலாறு...அது அந்தக் குடும்பம் மட்டுமே கருத வேண்டிய..அல்லது கருத வேண்டாத ஒரு நிகழ்வு..

ஆனால் சமுதாயத் தேவைகளைக் கருத்தில் கொண்டு நாம் காணவேண்டிய, புரட்டிப் பார்க்க வேண்டிய, பெருமைப்பட வேண்டிய வரலாறுகள் சில என்றென்றும் உயிரோட்டமானவை. மொழி அதன் வளர்ச்சி, மாற்றம், வளர்சிதை மாற்றம்..இப்படியாகப் பல பிரிவுகள்... மொழி என்பது தனி நபரின் சொத்தல்ல; அது பலரின் பொது உடைமை; உரிமை...மொழி என்பது சமுதாய நோக்கில் காணப்பட வேண்டிய, பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வரலாறு..

மொழி என்பது ஒருவருடன் தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கட்டும் என்ற காரணத்தினால் உருவான ஒன்று மட்டுமல்ல; ஒரு முகவரியாக, ஓர் அடையாளமாக விளங்குவது மொழி...சங்க காலத்தில் வழங்கப்பட்டது தூய தமிழ்மொழி...அத்தகைய தமிழ்மொழி பிறமொழிக் கலப்பால் சிதைந்த போது..அது எந்த வளர்ச்சிக்கும் வழி காட்டாமல் உள்ள மொழியை, அதன் சிறப்பைக் குழி தோண்டிப் புதைக்கும் வண்ணம் அந்த மொழிக் கலவை அமைந்த போது...அம்மொழியைக் காக்கும் உணர்வின் உறுதியால் தனித் தமிழ் இயக்கம் ஆரம்பித்துப் போராட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது நம் மொழி..

தமிழுடன் சமக்கிருத மொழியைக் கலந்து பேசிய மணிப்பிரவாள நடை கொடிகட்டிப் பறக்க..தமிழ் வார்த்தைகள் மெல்ல மெல்லச் சிதைந்து...வேற்று மொழிச் சொற்கள் தமிழ் வார்த்தைகளின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட போது..நிலைமையைச் சரிப்படுத்த முனைந்த பலருள் மிகவும் முக்கியமானவர், மறைமலை அடிகளார்.

மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15 ஆம் நாள் திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். 1950 ஆம் செப்டம்பர் 15 ஆம் நாளில் மறைந்தார். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். இவரது இயர்பெயர் வேதாசலம். பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை என்று மாற்றிக்கொண்டார்.

மறைமலைஅடிகள், நாகையில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால், தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார்.சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.

சென்னைக்கு வந்த பின்னர்க் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்கரின் கொள்கைப்படி 1905 இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.

தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்.

செய்யுள், புதினம், நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி போன்ற பல துறைகளிலும் அடிகளார் நூல்களைப் படைத்துள்ளார். தமிழ், தமிழர் வாழ்வு, உணவுமுறை, இலக்கிய ஆய்வு, வாழ்வியல், மறைப்பொருள் ஆய்வு, சைவ சித்தாந்த நெறிமுறைகள்..இவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இவர் இயற்றிய நூல்கள் இன்றும் பெரும்புகழோடு விளங்குகின்றன.

தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர் மனதில் தோன்றியதற்கு முக்கிய காரணம் இவருடைய மகள் நீலாம்பிகை அம்மையார்.

ஒரு நாள் தோட்டத்தில் அவர் நீலாம்பிகையுடன் நடந்து கொண்டிருந்தார். தமிழ்ப் பாடல்களை இசைக்கவும் வல்லவர் அவர். அப்படித்தான் அன்று, மகளிடம் வள்ளலாரின் பாடலைப் பாடிக் கொண்டிருந்த போது அப்பாடலில் தேகம் என்ற வார்த்தை வந்தது. அடிகள் சொன்னார்: தேகம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதிலாக யாக்கை என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாமே என்று மகளிடம் கூறினார்.

நம் தமிழ் மொழியிலேயே எண்ணற்ற வார்த்தைகள் இருக்க, வடமொழிச் சொற்கள் தமிழின் இடத்தைப் பிடித்துக் கொள்ள எப்படி முடிந்தது? எதனால் இப்படி நடந்தது? தமிழில் வார்த்தைகளுக்குப் பஞ்சமா? இல்லையில்லை..நம் மொழியை அதன் அழகிய வடிவத்துடன் காக்க வேண்டும் என்ற எண்ணத்துக்குத்தான் பஞ்சம்...

தனித்தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்று உறுதி பூணவேண்டியது நம் கடமை என்று தோன்றியது அடிகளாரின் மகளான நீலாம்பிகைக்கு..மகளின் எண்ணம் தந்தையாரையும் தொற்றிக்கொண்டது. தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்கும் எண்ணம் அவர் மனதில் அன்று தோன்றியது; அது முதல் அடிகளாரின் எல்லாத் தமிழ்ப்பணிகளுக்கும் துணைநின்று அவரை ஊக்குவித்தவர் அவர் தம் மகளே..மொழியை அவரவர் விருப்பபடியெல்லாம் மாற்றிக்கொள்ளும்படியான நிலை இருக்கக்கூடாது.....அதற்கென்று ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்று அடிகளார் வலியுறுத்தினார். அப்படி 1916 ஆம் ஆண்டு தோன்றியதுதான் தனித்தமிழ் இயக்கம்.

இன்று தேகம் என்ற சொல்லைத் தமிழ் என்று கருதுகிறோம் நாம்; யாக்கை என்ற தூய தமிழ்ச்சொல் ஏதோ வேற்று மொழியாகத் தோன்றுகிறது. இது போன்ற சொற்கள் ஆயிரமாயிரம்.. இச்சொற்கள் தமிழ் மொழிக்குள் புகுந்து இன்று தூய தமிழ்ச்சொற்களை தூரமாய்ப் போகும்படி துரத்திவிட்டுவிட்டன. நாம் எழுதுவது தூய தமிழ் என்று நினைக்கிறோம்..ஆனால் வேற்று மொழிச் சொற்களையும் தமிழ்ச்சொற்கள் என்று தவறாக நினைக்கிறோம். தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் மறுக்கிறோம்.

தன் வாழ்க்கையிலும், தன் பழக்கவழக்கங்களிலும் ஒழுக்கநெறியைக் கொண்டு வாழ்ந்தவர் அடிகளார். குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயரிடவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அடிகளாருக்குத் தமிழின் மீது இருந்த பற்று அவர் குடும்பத்தினரையும் தாக்கம் செய்யத் தவறவில்லை. அடிகளாரது திருக்குமாரரான திருநாவுக்கரசு, மற்றும் பேரன் தாயுமானவன் எழுதிய நூல்களின் மூலம் அடியாரது வாழ்க்கைக் குறிப்புகள் அறியப்பெறுகிறோம்.

அவருடைய தனித்தமிழ் இயக்கம் ஆற்றிய பணிகள்தான் என்ன? வ.சுப.மாணிக்கனார் தனித்தமிழ் இயக்கத்தின் சிறப்பு பற்றி இவ்வாறு கூறுகின்றார்...,"அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம் தமிழ்த்தாயின் நெஞ்சு புரையோடாதும், தமிழர் அறைபோகாதும் காத்தது. தமிழின் வயிற்றிலிருந்து முன்பு பல திராவிட மொழிகள் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியது போல மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழைக் குன்றிக் குலையாதவாறு தடுத்தது" என்று உரைக்கிறார்.

தமிழைத் தமிழாக இருக்க விடுங்கள் என்று அடிகளார் வலியுறுத்தியது கேட்டு எள்ளி நகையாடியவர் பலர்..கலிகாலக்கொடுமை என்றும் இகழ்ந்தனர். அவர்களுக்கெல்லாம் சிரித்தவாறே அடிகளார் அளித்த பதில்...இதுதான்..


நம் தனித் தமிழ்த்தாயைப் பிறமொழிச் சொற்கள்
என்னும் கோடாரியினுள் நுழைந்து கொண்டு,
இத்தமிழ்ப் புதல்வர் வெட்டிச் சாய்க்க
முயல்வதுதான் கலிகாலக் கொடுமை!
இத்தீவினை புரியும் இவர்தம்மைத் தடுத்து,
எம் தமிழ்த்தாயைப் பாதுகாக்க முன்நிற்கும்
எம்போல்வாரது நல்வினைச் செயல்
ஒருகாலும் கலிகாலக்கொடுமை ஆகாது என்று
உணர்மின்கள், நடுநிலையுடையீர்"!

என் மொழியை என் விருப்பத்துக்குப் பேசுவது என் உரிமை. வேற்று மொழிச் சொற்கள் கலந்தும் பேசுவேன்; இருக்கின்ற சொற்களை மாசு படுத்தியும் பேசுவேன் என்று சொன்னவர்கள் / சொல்பவர்கள் உண்டு. அதற்கும் தகுந்த சரியான மறுமொழி மலர்ந்தது அடிகளாரிடமிருந்து...

மொழியின்றி மக்களும், மக்களின்றி மொழியும் உயிர்வாழ்தல் இயலாது. ஒவ்வொருவரும் தம் விருப்பத்துக்கு மொழியில் கலப்படம் செய்தும், திரித்தும் பேசினால் குறுகிய காலத்துக்குள்ளேயே பேரழிவு வந்து சேரும். சிறிய அளவில் ஒரு கூட்டம் கூடினால் கூட, ஒவ்வொருவரும் அவர் விருப்பத்துக்கு மொழியை மாற்றிப் பேசினால், அவர்களுக்குள்ளேயே தொடர்பு அறுந்து போகும். ஒவ்வொரு சிறு கூட்டத்திற்கும் ஒவ்வொரு மொழி தோன்றும். காலந்தோறும் ஒவ்வொரு புது மொழி உருவாகி அக்கூட்டங்களை ஒன்று சேரவிடாமல் பிரித்துவிடும்.

தமிழ் மொழி நெறியை மதிக்காதவர் நடத்திய கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் மிகச் சிறப்பும் பெருமையும் வாய்ந்த பெரியோரிடமிருந்து அழைப்பு வந்த போதெல்லாம், 'உங்கள் பணிகளைப் பாராட்டும் அதே வேளையில், தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை என்று உறுதியாகவும், துணிச்சலாகவும் நேருக்கு நேர் உரையாடி அவ்வழைப்புகளை மறுத்தவர் அடிகளார்.

இத்தகைய மாமனிதர்கள் கட்டிக்காக்க முற்பட்டும் கூட இன்று எந்த நிலையில் இருக்கிறது நம் தமிழ்மொழி என்று சிந்தித்துப் பார்க்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். துறைதோறும் தமிழ்ச்சொற்கள் அதிகமாக நம் கைவசமே இருக்க, தமிழில் சொற்களே இல்லை, அதனால்தான் வேற்றுமொழிச்சொற்கள் பயன்படுத்துகிறோம் என்பார் சிலர்.

பல மொழிகளைக் கற்பதற்குத் தடையாக நம் முன்னோர்கள் இருந்தார்கள் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது. வேற்றுமொழித் திணிப்பைதான் எதிர்த்தார்களேயன்றி, எந்த ஒரு மொழியையும் எதிர்க்கவில்லை.எந்த மொழி பயின்றாலும் அதற்குரிய தனி அழகோடு, சிறப்போடு வேற்று மொழிச்சாயல்கள் தவிர்த்துப் பயிலுவதுதான் சிறந்தது.

இணையத்தில் இன்று ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக, அதிகம் எழுதப்படுவது தமிழ்மொழி; அறிவியல் துறைகள் சார்ந்த சொற்களுக்கு ஈடாக ஏற்கனவே இருக்கின்ற தமிழ்ச் சொற்களை எடுத்துக்காட்டியும், புதிதாகச் சொற்கள் பல படைத்தும் தமிழ்த்தொண்டாற்றி வருகின்றனர் அறிஞர் பலர்.சமீபத்தில்..ஆரிய மொழி ஆர்வலர்கள் தமிழுக்குச் செய்யத் துணிந்த துரோகங்கள் தமிழ் அறிஞர்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஓராண்டுக்கு முன் நடந்த நிகழ்வு..

இத்தகைய சிறப்புகள் நம் தமிழ் மொழியில் இன்றும் காண முடிகிறது. இந்தப் பெருமை அழிந்துவிடாமல் தக்கவைத்துக் கொள்வதே தமிழுக்கும், தமிழறிஞருக்கும், நாளைய சமுதாயத்திற்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஆகும்.

இன்று குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோரும்...என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்...பிறமொழிக்கலப்பின்றி எத்தனை வாக்கியங்கள்..பேசமுடிகின்றது? இந்தத் தவறைத் தெரிந்தே செய்து வருகிறோம்..அதில் பெருமையும் கொள்கிறோம்...அன்று மணிப்பிரவாளம்..இன்று தமிங்கிலம்...

தமிழ் நெறியைக் காக்கப் பேசும் பேச்சுக்கள் எல்லாம் கேலி கிண்டலுக்குள்ளாகி, தமிழ் வெறி என்று முத்திரை குத்தப்பட்டுப் பழிக்கப்படுகின்றன.

உணவில் கலப்படம்...அது உடலுக்குக் கேடு..
பொருள்களில் கலப்படம்...அது வணிகத்துக்குக் கேடு..
கொள்கைகளில் கலப்படம்..அது அரசியலார்க்குக் கேடு..
பழக்க வழக்கங்களில் கலப்படம்...அது பண்பாட்டுக்குக் கேடு..
மொழியில் கலப்படம்....காலத்தின் இயல்பான சுழற்சிக்குக் கேடு..

சிந்திப்போம்...தவறுகளைத் திருத்த முற்படுவோம்.

குறளின் குரல் - 29

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 96. குடிமை
குறள் எண்: 957

குடிபிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.


குடிப்பிறந்தார்கண் விளங்கும் குற்றம், விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

விளக்கம்:

நற்குடியில் பிறந்தவரிடம் சிறு குற்றம் கூட இருக்கக் கூடாது. ஆகாயத்தில் இருக்கும் நிலவில் இருப்பது சிறு களங்கம்தான் என்றாலும், அது பலரும் அறியும் வண்ணம் மிகவும் வெளிப்படையாகத் தெரியும். அதே போல், நற்குடியில் பிறந்தவரிடம் இருக்கும் சிறு குற்றமும் பலராலும் அறியப்பட்டுப் பெரிதாகத் தோன்றும்.

விசும்பு - வானம், தேவலோகம், மேகம், செருக்கு, வீம்பு, திசை

மறு - களங்கம், குற்றம், தீமை, அடையாளம், மச்சம்

--------------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 88. பகைத்திறம் தெரிதல்
குறள் எண்: 875

தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.


தன் துணை இன்றால்; பகை இரண்டால்; தான் ஒருவன்
இன் துணையாக் கொள்க, அவற்றின் ஒன்று.

விளக்கம்:

துணைக்கு ஒருவரும் இன்றித் தனித்து நிற்கும் ஒருவனுக்குப் பகையோ இரண்டாக உள்ளது. அந்நிலையில் அப்பகைவருள் ஒருவரைத் தன் இனிமையான துணையாக மாற்றிக் கொள்ள வேண்டிய திறம் ஓர் ஆட்சியாளருக்கு இருக்க வேண்டும்.

-----------------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 12. நடுவுநிலைமை
குறள் எண்: 111

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.


தகுதி என ஒன்று நன்றே - பகுதியான
பாற்பட்டு ஒழுகப்பெறின்.

விளக்கம்:

நட்பு, பகைமை என்று பேதம் பார்க்காமல், வேண்டியவர் வேண்டாதவர் என்று ஒரு பகுதியின் பால் சார்ந்து நிற்காமல், அவரவர்க்குரிய முறைமைப்படி நடந்து கொள்வதே நல்லறமான நடுவுநிலைமை என்னும் தகுதியாகும்.

---------------------------
பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 109. தகையணங்குறுத்தல்
குறள் எண்: 1082

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தனைக்கொண் டன்ன துடைத்து.


நோக்கினான் நோக்கு எதிர் நோக்குதல் - தாக்கு அணங்கு
தானைக் கொண்டன்னது உடைத்து.

விளக்கம்:

அவளை நான் பார்க்கும்போது எதிர்ப்பார்வை பார்க்கிறாள் அவள். இயல்பாகப் பார்க்கும் போதே தன் பார்வையால் வருத்தக்கூடிய ஒரு பெண் எதிர்ப்பார்வை பார்ப்பது, தான் மட்டும் வராமல் தன்னுடன் ஒரு பெரும்படையைச் சேர்த்துக் கொண்டு வந்து தெய்வப்பெண்ணொருத்தி தாக்குவதைப் போல் உள்ளது.

அணங்கு - தெய்வப்பெண், பத்திரகாளி, தேவர்க்கு ஆடும் கூத்து, அழகு, அச்சம், விருப்பம், மயக்க நோய், வருத்தம், கொலை, கொல்லிப்ப்பாவை, பெண்
தகை - அழகு
அணங்குறுத்தல் - காதல் துன்பத்தை உண்டாக்குதல்

------------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 24. புகழ்
குறள் எண்: 239

வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.


வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம்.

விளக்கம்:

நல்ல விளைச்சல் தரும் நிலமே பயன் தருவதில் சிறந்ததாகும். அத்தகைய நிலம், புகழ் இல்லாமல் வாழ்பவரின் உடலைச் சுமக்கும் போது, வசைகள் குற்றங்கள் இல்லாதது என்ற தன் புகழில் இருந்து குறைந்து போகும். நல்ல புகழ்வாய்ந்தவர்கள் வாழும் நிலத்தில் மட்டுமே விளைச்சலின் பலன் அதிகமாக இருக்கும் என்ற செய்தியும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

------------------------------
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 73. அவையஞ்சாமை
குறள் எண்: 727

பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்.


பகையகத்துப் பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல்.

விளக்கம்:

போர்க்களத்தில் பகைவரின் நடுவில் நின்றிருக்கும், மனதில் துணிவற்ற கோழையின் கையில் ஒளி பொருந்திய வாள் இருந்தாலும், அவன் வீரன் இல்லை என்பதால் அந்த வாளால் ஒரு பயனும் இல்லை.

அதே போல் ஒருவன் எவ்வளவுதான் சிறந்த நூல்களைக் கற்றிருந்தாலும், பலரும் கூடியிருக்கும் அவைக்கு நடுவில் தான் கற்றவற்றைச் சொல்லத் துணிவில்லாமல் அஞ்சினான் என்றால், அந்த நூல் தந்த கல்வியால் யாதொரு பயனும் இல்லை.

இரண்டுமே பிறரின் நகைப்புக்கு வழிவகுக்குமேயன்றி ஒரு பயனையும் தருவதற்கு வாய்ப்பில்லை.