Sunday, July 10, 2011

குறளின் குரல் - 29

பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 96. குடிமை
குறள் எண்: 957

குடிபிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.


குடிப்பிறந்தார்கண் விளங்கும் குற்றம், விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

விளக்கம்:

நற்குடியில் பிறந்தவரிடம் சிறு குற்றம் கூட இருக்கக் கூடாது. ஆகாயத்தில் இருக்கும் நிலவில் இருப்பது சிறு களங்கம்தான் என்றாலும், அது பலரும் அறியும் வண்ணம் மிகவும் வெளிப்படையாகத் தெரியும். அதே போல், நற்குடியில் பிறந்தவரிடம் இருக்கும் சிறு குற்றமும் பலராலும் அறியப்பட்டுப் பெரிதாகத் தோன்றும்.

விசும்பு - வானம், தேவலோகம், மேகம், செருக்கு, வீம்பு, திசை

மறு - களங்கம், குற்றம், தீமை, அடையாளம், மச்சம்

--------------------

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 88. பகைத்திறம் தெரிதல்
குறள் எண்: 875

தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.


தன் துணை இன்றால்; பகை இரண்டால்; தான் ஒருவன்
இன் துணையாக் கொள்க, அவற்றின் ஒன்று.

விளக்கம்:

துணைக்கு ஒருவரும் இன்றித் தனித்து நிற்கும் ஒருவனுக்குப் பகையோ இரண்டாக உள்ளது. அந்நிலையில் அப்பகைவருள் ஒருவரைத் தன் இனிமையான துணையாக மாற்றிக் கொள்ள வேண்டிய திறம் ஓர் ஆட்சியாளருக்கு இருக்க வேண்டும்.

-----------------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 12. நடுவுநிலைமை
குறள் எண்: 111

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.


தகுதி என ஒன்று நன்றே - பகுதியான
பாற்பட்டு ஒழுகப்பெறின்.

விளக்கம்:

நட்பு, பகைமை என்று பேதம் பார்க்காமல், வேண்டியவர் வேண்டாதவர் என்று ஒரு பகுதியின் பால் சார்ந்து நிற்காமல், அவரவர்க்குரிய முறைமைப்படி நடந்து கொள்வதே நல்லறமான நடுவுநிலைமை என்னும் தகுதியாகும்.

---------------------------
பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 109. தகையணங்குறுத்தல்
குறள் எண்: 1082

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தனைக்கொண் டன்ன துடைத்து.


நோக்கினான் நோக்கு எதிர் நோக்குதல் - தாக்கு அணங்கு
தானைக் கொண்டன்னது உடைத்து.

விளக்கம்:

அவளை நான் பார்க்கும்போது எதிர்ப்பார்வை பார்க்கிறாள் அவள். இயல்பாகப் பார்க்கும் போதே தன் பார்வையால் வருத்தக்கூடிய ஒரு பெண் எதிர்ப்பார்வை பார்ப்பது, தான் மட்டும் வராமல் தன்னுடன் ஒரு பெரும்படையைச் சேர்த்துக் கொண்டு வந்து தெய்வப்பெண்ணொருத்தி தாக்குவதைப் போல் உள்ளது.

அணங்கு - தெய்வப்பெண், பத்திரகாளி, தேவர்க்கு ஆடும் கூத்து, அழகு, அச்சம், விருப்பம், மயக்க நோய், வருத்தம், கொலை, கொல்லிப்ப்பாவை, பெண்
தகை - அழகு
அணங்குறுத்தல் - காதல் துன்பத்தை உண்டாக்குதல்

------------------
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 24. புகழ்
குறள் எண்: 239

வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.


வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம்.

விளக்கம்:

நல்ல விளைச்சல் தரும் நிலமே பயன் தருவதில் சிறந்ததாகும். அத்தகைய நிலம், புகழ் இல்லாமல் வாழ்பவரின் உடலைச் சுமக்கும் போது, வசைகள் குற்றங்கள் இல்லாதது என்ற தன் புகழில் இருந்து குறைந்து போகும். நல்ல புகழ்வாய்ந்தவர்கள் வாழும் நிலத்தில் மட்டுமே விளைச்சலின் பலன் அதிகமாக இருக்கும் என்ற செய்தியும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

------------------------------
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 73. அவையஞ்சாமை
குறள் எண்: 727

பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்.


பகையகத்துப் பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல்.

விளக்கம்:

போர்க்களத்தில் பகைவரின் நடுவில் நின்றிருக்கும், மனதில் துணிவற்ற கோழையின் கையில் ஒளி பொருந்திய வாள் இருந்தாலும், அவன் வீரன் இல்லை என்பதால் அந்த வாளால் ஒரு பயனும் இல்லை.

அதே போல் ஒருவன் எவ்வளவுதான் சிறந்த நூல்களைக் கற்றிருந்தாலும், பலரும் கூடியிருக்கும் அவைக்கு நடுவில் தான் கற்றவற்றைச் சொல்லத் துணிவில்லாமல் அஞ்சினான் என்றால், அந்த நூல் தந்த கல்வியால் யாதொரு பயனும் இல்லை.

இரண்டுமே பிறரின் நகைப்புக்கு வழிவகுக்குமேயன்றி ஒரு பயனையும் தருவதற்கு வாய்ப்பில்லை.

No comments: