புகார்க்காண்டம் - 2: மனையறம் படுத்த காதை
கண்ணகியும் கோவலனும் இணைந்து இன்புற்றிருத்தல்
வாசனைப் பூம்படுக்கையில்
சென்றமர்ந்தனர்
கண்ணகியும் கோவலனும்.
கோவலன் அவனும்
கண்ணகியவளின்
பெரிய தோள்களில்
வரிக்கோலமாய் எழுதினான்
கரும்பையும் வல்லிக்கொடியையும்...
எத்தகையது அக்காட்சி?
முதிர்ந்த கடல் கொண்ட
உலகம் முழுதையும்
தம் கதிர்களால் ஒளியேற்றும்
கதிரவனும் வெண்மதியும்
ஒருசேர இருந்த
காட்சியை ஒத்திருந்தது..
கண்ணகி சூடியிருந்த
மலர்மாலையில் இருந்த
நிலவையொத்த
வெண்மல்லிகைப்பூக்கள்
வண்டுகளின் பாடல்
செவிமடுத்து
மொட்டவிழ்ந்து திறந்தன...
கோவலன் சூடியிருந்த
மாலையில் இருந்தன
இதழ்முறியாதசெங்கழுநீர்ப்பூக்கள்...
மல்லிகைமாலையும்
செங்கழுநீர்த்தாரும்கலந்து முயங்கின..
செயலற்ற நிலையில்
கலந்து மகிழ்ந்தனர் தம்பதியர்..
தீராத காதலுடன்
கண்ணகியின் திருமுகம் நோக்கிய
கோவலன் தானும்
முன் எப்போதும்
சொல்லப்பட்டிராத
பொருள்நிறை உரையுடன்
கண்ணகி நலம் பாராட்டத் தொடங்கினான்..
கோவலன் கண்ணகியின் நலம்பாராட்டுதல்
தேவர்கள் போற்றும்
சிவன் தான்
சூட்டிய பெருமைக்குரியது
அழகிய இளம்பிறை நிலவது..
உன்னுடன் பிறந்த பிறப்பு என்பதால்
பெருமான் தந்தானோ உனக்கு
அப்பிறையை நெற்றியாக?
போர்க்களத்தில் தம்மை
எதிர்க்கும் பகைவர்க்கும்
படைக்கலன்கள் வழங்கிப்
போர் புரியச் சொல்லும் பண்புண்டு.
அதைப்போலவே
மன்மதன் தானும்
தம் பெரிய கரும்புவில்லை
இரண்டாகப் பிளந்து தந்தானோ
உன் இருபுருவங்களாக?
தேவருண்ணும்
அமிழ்தின் முன்னே பிறந்த
இலக்குமியானவள் நீ என்பதால்
தேவர் கோமான் இந்திரன் தானும்
வச்சிரப்படையைத் தந்தானோ
வச்சிரப்படையைத் தந்தானோ
உன் அழகிய இடையாக?
ஆறுமுகம் கொண்ட
முருகன் தான்
உனக்குத் தரும்
உரிமையைப் பெற்றிலன்
என்ற போதும்
உன்னைக் கண்டு நான்
துன்புற வேண்டுமென்று
தன் சுடர்நெடு வேல்தனைத் தந்தானோ
கடை சிவந்து
குளிர்ச்சி பொருந்தி நிற்கும்
நின் இரு கண்களாக?
2 comments:
//மல்லிகைமாலையும்
செங்கழுநீர்த்தாரும்
கலந்து முயங்கின..
//
கொஞ்சம் நுணுக்கிப் பார்த்தால் தான் இதெல்லாம் மூலத்திலேயே வருகின்றன என்று தெரிகிறது. தான் என்பது ஆண் அணிவது; மாலை என்பது பெண் அணிவது. பெருமாளுக்குத் தொடுத்த தாரை தான் அணிந்து பார்த்தாள் கோதை; அதனால் இந்தக் காலத்தில் தாரை ஆண்டாள் மாலை என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
வாங்ககுமரன்...உண்மைதான்..
உங்கள் விளக்கத்துக்கு நன்றி...இந்த இலக்கியங்களின் சிறப்பே இதுதான்...இன்னும் எத்தனை அழகு நுணுக்கங்கள் இப்படிப் புதைந்து கிடக்கின்றனவோ..
Post a Comment