Wednesday, May 4, 2011

சொர்க்கம் நரகம்

வறுமைக்கோட்டுக்குப்
பல படிகள் மேலே
பண உரிமைக் கோட்டின்
எல்லையும் தாண்டி
உயர்ந்து உயர்ந்து
மேலே மேலே..

வாழும் நாளெல்லாம்
சொர்க்க சுகானுபவங்களில்
ஈடுபட்டுத் திளைக்கும்
அவனுக்கு
அங்கே நரகமாம்....

வறுமைக்கோட்டுக்குப்
பல படிகள் கீழே
பாதாளம் தாண்டியும்
பசியது பாய்ந்திருக்க
தாழ்ந்து தாழ்ந்து
கீழே கீழே...

வாழும் நாளெல்லாம்
நரக வேதனைகளில்
உழன்று சுழலும்
இவனுக்கு
அங்கே சொர்க்கமாம்...

இன்றைய பொழுது
இன்னும் கழியவில்லை..
நாளைய பொழுது
இன்னும் வரவேயில்லை..

கனாக்கள் காண்கிறோம்
காணாப் பொழுது குறித்து..

சொர்க்கமும் நரகமும்
ஒருங்கே கலந்த மேதினியில்..
வாழ்கின்ற நாட்களில்
வழிதொகை ஏதுமின்றி
மனம்போன போக்கில்
உழலும் நமக்கு
மரணித்த பின்
எங்கே இருப்பிடம் என்ற
அற்பப் பயம் எதற்கு?!

மறுமை பயங்களைக்
கொஞ்சம் தள்ளிவை!
இன்றைக்கு என்ன செய்கிறாய்
அதை மட்டும் நினைவில்வை!

இன்று இங்கே
நரகத்தில் உழலும்
நரன் ஒருவனுக்கேனும்
சொர்க்கம் காட்டி
அவன் வாழ்வின்
சுவை கூட்டிவை!

உன் நேரமும் கவனமும்
தேவை என்னும் இதயம்
உன் அருகிலேயே
இருக்கக்கூடும்..

பாசம் வேண்டும் குழந்தையாகவோ
பரிவு வேண்டும் பெற்றோராகவோ
அன்பு வேண்டும் சகோதரமாகவோ
உதவி வேண்டும் நட்பாகவோ
காதல் வேண்டும் துணையாகவோ..

இன்று இங்கே
நரகத்தில் உழலும்
நரன் ஒருவனுக்கேனும்
சொர்க்கம் காட்டி
அவன் வாழ்வின்
சுவை கூட்டிவை!

6 comments:

ராமலக்ஷ்மி said...

மிக அருமை மலர். நல்லதொரு செய்தியை நயம்படக் கூறியுள்ளீர்கள்!

சாந்தி மாரியப்பன் said...

//வாழ்கின்ற நாட்களில்
வழிதொகை ஏதுமின்றி
மனம்போன போக்கில்
உழலும் நமக்கு
மரணித்த பின்
எங்கே இருப்பிடம் என்ற
அற்பப் பயம் எதற்கு?!//

அட்டகாசமான வரிகள்.. அருமையான கவிதை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுவைகூட்டுவோம்..பாசமலர். :)

பாச மலர் / Paasa Malar said...

அனைவருக்கும் நன்றி...

முத்துலட்சுமி,

உங்களுக்குச் சிறப்பு நன்றி..'சுவை கூட்டிவை' என்று நான் பிறர்க்குக் கூறும் அறிவுரையில் என்னையும் சேர்த்துக் கொள்ளத் தவறிவிட்டேன்...
'சுவை கூட்டுவோம்' இன்னும் சிறப்பாக உள்ளது.

ஜீவி said...

//பாசம் வேண்டும் குழந்தையாகவோ
பரிவு வேண்டும் பெற்றோராகவோ
அன்பு வேண்டும் சகோதரமாகவோ
உதவி வேண்டும் நட்பாகவோ
காதல் வேண்டும் துணையாகவோ..//

-- இதில் வேண்டுவோர், வேண்டாதோர் என்று யாருமில்லை; எல்லோருக்கும் எல்லாமும் தான் வேண்டியிருக்கிறது.. பாசம், பரிவு, அன்பு, உதவி, காதல் எல்லோமுமே கொடுத்துப் பெற வேண்டியதாயும் இருப்பதினால், பெற வேண்டியதற்கான மிகச் சுலபமான வழி கொடுத்தலே! கொடுத்துப் பெறுதல் பண்டமாற்று போல்த் தோன்றினாலும், அதில் கொள்ளையிலா இன்பம் உண்டு.
'அன்பு வேண்டுமா, அன்பு செய்!' என்பது ஆன்றோர் வாக்கு. இது போலவே தான் எல்லாமும்!

மிகவும் அர்த்தம் நிரம்பிய கவிதைக்கு நன்றி, பாசமலர்!

Yaathoramani.blogspot.com said...

நாளை/ மறு நாள்/ எதிர்காலம் / சொர்க்கம்
எல்லாம் நிழல்கள்தான்
இன்று/இங்கு/இப்போது/இக்கணம்
இவை மட்டுமே நிஜங்கள்
நிஜத்தில் மனிதனாக வாழ சொல்லிப்போகும்
உங்கள் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்