Monday, May 23, 2011

குறளின் குரல் - 27

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 31. வெகுளாமை
குறள் எண்: 303

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும்.


மறத்தல் வெகுளியை யார் மாட்டும் - தீய
பிறத்தல் அதனால் வரும்.

விளக்கம்:

தம்மைக்காட்டிலும் வலியரோ, மெலியரோ..எவரிடத்தும் கோபம் கொள்வதை மறந்துவிட வேண்டும். ஒருவர்க்கு வருகின்ற தீமையெல்லாம் சினம் கொள்வதால்தான் வருகிறது. சினத்தைத் தவிர்க்க, தீமைகள் விலகும்.
----------------------
பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 28. கூடா ஒழுக்கம்
குறள் எண்: 279

கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.


கணை கொடிது; யாழ் கோடு செவ்விது; ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.

விளக்கம்:

அம்பு வடிவத்தால் நேரானது; என்றாலும் பிறரைக் காயப்படுத்தும், கொல்லும் செயலால் கொடுமையானது. யாழ் என்னும் இசைக்கருவியின் கோடுகள் வளைந்து காணப்படுவது; என்றாலும் இசை பொழிந்து பிறரை மகிழ்விக்கும் செயலால் இனிமையானது.

அம்பையும், யாழையும் அவை தரும் பயன்களைக் கொண்டுதான் கொடிது, செவ்விது என்று எடை போடுகின்றோம்.

அதே போல் ஒருவர் செய்யும் செயல்கள் மூலம்தான் அவர் நல்லவரா, கெட்டவரா என்று எடை போட வேண்டும்; புறத்தோற்றத்தைக் கண்டு மயங்கித் தவறாக எடை போடக் கூடாது.

செவ்விது - நேரானது, நன்று
----------------------------

பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: 68. வினை செயல்வகை
குறள் எண்: 674

வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற்
தீயெச்சம் போலத் தெறும்.


வினை, பகை, என்று இரண்டின் எச்சம் நினையுங்கால்,
தீ எச்சம் போலத் தெறும்.

விளக்கம்:

தீயை முழுவதுமாக அணைக்காமல், அதனால் என்ன ஆகப் போகிறது என்று கவனமின்றி விட்டுவிட்டால், பின் அதுவே பெருநெருப்பாக மாறிப் பேரழிவை விளைவிக்கக் கூடும். அதே போல, ஒரு செயலைச் செய்யத்தொடங்கி அதை முடிக்காமல் பாதியில் விட்டுவிடுதல், பகையை முழுவதுமாக ஒழிக்காமல் எஞ்சியிருக்கும்படி விட்டுவிடுதல் - இவை இரண்டும் பிற்காலத்தில் பெரும் கேடுகளை வரவழைக்க வல்லவை.

முற்றிலும் அணைக்காமல் விட்ட தீ பின் ஆபத்தை வரவழைப்பது போல், முற்றாகச் செய்யாத வினையும், முற்றாக முடிக்காத பகையும் பின்னொரு காலத்தில் பேரழிவைத் தரும்.

எனவே எடுத்த செயலை முற்றிலுமாக முடிக்க வேண்டும்; வளர்ந்த பகையை முற்றிலுமாக அழிக்க வேண்டும்.

தெறுதல் - அழித்தல், கோபித்தல், வருந்துதல், தண்டனையளித்தல், பகைத்தல், கொல்லுதல்

தெறும் - அழிக்கும்
------------------------

பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 31. வெகுளாமை
குறள் எண்: 309

உள்ளிய வெல்லா முடனெய்து முள்ளத்தா
லுள்ளான் வெகுளி யெனின்.


உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

விளக்கம்:

ஒருவன் தன் மனத்தாலும் சினத்தை நினைக்காதவன் என்றால், அவன் அடைய விரும்பும் நன்மைகள் எல்லாவற்றையும் உடனுக்குடன் அடைந்து பயன் பெறுவான். சினம் இருக்கும் உள்ளத்துக்கு நினைத்ததை அடையும் ஆற்றல் இல்லை. சினம் இல்லாத இடத்தில் நன்மைகள் தேடி வந்து சேர்ந்து தக்க பயனைத் தரும்.
---------------

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 19. புறங்கூறாமை
குறள் எண்: 182

அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை.


அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே -
புறன் அழீஇப் பொய்த்து நகை.

விளக்கம்:

அறம் என்ற ஒன்றே இல்லையென்று அறைகூவிப் பாவச்செயல்களையே செய்தல் தீது; அதை விடத் தீது எதுவென்றால், ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பழித்துப் பேசிவிட்டு, அவர் இருக்கும் இடத்தில் அவரைப் பொய்யாய்ப் புகழ்ந்து, பொய்யாய்ப் புன்னகைப்பது.
-------------------

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 57. வெருவந்த செய்யாமை
குறள் எண்: 564

இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்.


'இறை கடியன்' என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லைக் கெடும்.

விளக்கம்:

'இந்த அரசன் / தலைவன் கொடியவன்' என்று ஒரு நாட்டின் மக்கள் பழித்துக்கூறும் கொடுங்குணம் உள்ள அரசன் / தலைவன், தன் நாடு, பெருமை, ஆயுட்காலம், பதவி - இச்சிறப்புகளில் படிப்படியாய்க் குறைந்து போவதுடன், மிக விரைவில் தானும் அழிந்து கெடுவான்.

உறை - பெருமை, இருப்பிடம், வாழ்நாள், பொருள், நீளம், உயரம், மருந்து, கிணற்றில் பொருத்தும் வளையம், உணவு, வெண்கலம், ஆயுதவுறை, நீர்த்துளி, காரம், பொன், பாம்பின் நச்சுப்பை, மழை

கடுகி - குறைந்து, சிறுத்து

ஒல்லை - விரைவு, வேகம், பழைமை, தொந்தரவு

வெரு - அச்சம்

No comments: