பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 16. பொறையுடைமை
குறள் எண்: 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்
தகுதியான் வென்றுவிடல்.
விளக்கம்:
ஆணவத்தால், செருக்கால் பிறர் தமக்குத் தீங்கு செய்ய நேரிடும். அந்த நேரத்தில், நாம் அவரினும் அதிகமான தகுதியான பொறுமையை மேற்கொண்டு அவரை வென்றிட வேண்டும்.
செருக்கைச் செருக்கால் வெல்வது இயலாத ஒன்று; அது மேலும் மேலும் பகையை வளர்த்து நிற்கும். பொறுமையால் வெல்வதுதான் நன்மை தரும்.
--------------------------
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 53. சுற்றந்தழால்
குறள் எண்: 525
கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப்படும்.
விளக்கம்:
ஒருவன் தன் சுற்றத்தார்க்குத் தம்மிடம் உள்ள பொருளைக் கொடுத்தும், அவரிடத்து இனிமையான சொல் பேசியும் வாழ்ந்து வருவானாயின், அவன் பல்வகைப்பட்ட சுற்றங்கள் எல்லாவற்றாலும் சூழப்படுவான்.
அடுக்கிய சுற்றம் - தன் சுற்றம், பின் சுற்றத்துக்குச் சுற்றம்...என்று அடுக்கி வருவது...
தழால் - சேர்த்துக்கொள்ளுதல், தழுவுதல்
----------------------
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 94. சூது
குறள் எண்: 939
உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து
மடையாவா மாயங் கொளின்.
உடை, செல்வம், ஊண், ஒளி, கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்.
விளக்கம்:
சூதாட்டத்தில் ஈடுபடுபவர் உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி என்ற ஐந்து செல்வங்களையும் அடையமாட்டார். இச்செல்வங்கள் அனைத்தும் ஏற்கனவே அடையப் பெற்றிருந்தாலும் சூதாட்டம் என்ற செயலால் அச்செல்வங்கள் அவரிடம் தங்காமல் விலகிப் போகும்.
ஆயம் - சூதாட்டம், வருத்தம், மேகம், தோழியர் கூட்டம், 34 அங்குல அகலமுள்ள குழி, வருவாய், கடமை, மக்கள் தொகுதி, பசுத்திரள், நீளம், பொன்
--------------------
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 63. ஆள்வினையுடைமை
குறள் எண்: 614
தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாள் ஆண்மை போலக் கெடும்.
விளக்கம்:
மனவலிமையும், முயற்சியும் இல்லாதாவன் பிறருக்கு உதவுவது என்பது, வீரம் இல்லாத கோழை தன் கையில் வாள் ஏந்திப் போரில் போரிடுவது போல எதற்கும் உதவாமல் போகும்.
பேடி கையில் உள்ள வாளினால் ஆகும் பயன் ஒன்றுமில்லை. ஊக்கமில்லாதவர் உதவியால் ஆகும் நன்மை ஏதுமில்லை.
தாளாண்மை - ஊக்கமுடைமை, முயற்சியுடைமை
வேளாண்மை - உதவி, தொண்டு, பணி
ஆண்மை - வலிமை, வெற்றி, ஆண்தன்மை, ஆளும் தன்மை, அகங்காரம்
-----------------------
பால்: இன்பத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 117. படர்மெலிந்திரங்கல்
குறள் எண்: 1161
மறைப்பேன்மேனி யானிஃதோ நோயை யிறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்.
மறைப்பேன்மன் யான், இஃதோ, நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
விளக்கம்:
தலைவனைப் பிரிந்து இருப்பதால், துன்பத்தால் வருந்துகிறேன். அத்துன்பத்தைப் பிறர் அறியாமல் மறைக்கத்தான் நினைக்கிறேன். ஆனால், இறைக்க இறைக்கப் பெருக்கெடுத்து வரும் ஊற்றுநீர் போல, என் பிரிவுத்துயரை மறைக்க மறைக்க என் காதல் நோயும் பெருகிக் கொண்டே போகிறது.
படர் - நினைவு, நோய், வருத்தம், வழி, ஒழுக்கம், மேடு, துகிற்கொடி, படைவீரர், ஏவல் செய்வோர், தேமல், தொடர்
------------------
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 61. மடியின்மை
குறள் எண்: 606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்
மாண்பய னெய்த லரிது.
படி உடையார் பற்று அமைந்தக்கண்ணும், மடி உடையார்
மாண் பயன் எய்தல் அரிது.
விளக்கம்:
உலகையே அரசாளும் அரசர் / தகுதிவாய்ந்த மேன்மக்கள் - இவர்கள் துணையும், உதவியும் கிடைக்கப்பெற்றாலும், அதன் மூலம் சோம்பல் உடையவர்கள் எந்தவொரு பயனையும், சிறப்பையும் அடைந்து விட முடியாது. சோம்பல் உடையவர்க்கு அவர் சோம்பலே பகை; தடை. அதனால் அவர்கள் எத்தகைய வலிமையான துணையைப் பெற்றிருந்தாலும் பயன் ஒன்றும் இல்லை.