Monday, July 27, 2009

நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 3)

'முன்வினை விளையும் காலம்
என்றீரே சாத்தனாரே
அவ்வினை விளைவு
ஏதென்று பகர்வீரோ'
வேந்தன் கேட்க
உரைத்தனர் சாத்தனார்.

'வெற்றி வேந்தே! கேள்.
அதிராச் சிறப்புடை
மூதூர் மதுரையில்
கொன்றை மலரணி
சடைமுடியான் கோவில்
வெள்ளியம்பலத்தில்
நள்ளிருள் ஒன்றில்
நான் ஓய்விருந்த வேளை..

மதுரை மாதெய்வமது
வீர பத்தினி
கண்ணகி முன் தோன்றி
உரைத்ததோர் செய்தி
நான் கேட்டேன்;
கேட்ட செய்தி
உமக்குரைப்பேன். '

'கொதி நெருப்பின்
தணல் சீற்றம்
கொங்கையில்
பொங்குவித்தவளே!
நீவிர்
முன் செய்த வினையது
முதிர்ந்து முடிந்து போனது;

முற்பிறவியில்
சிங்கபுரத்து வணிகன்
சங்கமன் மனைவி
நின் கணவனுக்கிட்ட சாபம்
இப்பிறவியில் வந்துற்றது.

நீண்ட கூந்தலாளே!
இன்னும் ஈரேழு நாளில்
இவ்வையகத்து எல்லை நீங்கிய
நின் மணாளன் திருமுகம்
வானவர் வடிவத்தில்
காண்பாயேயன்றி
மானுடர் வடிவத்தில்
கண்டிட மாட்டாய்!'

'அத்தெய்வம் கூறிய
கட்டான உரை
சாத்தன் நான் கேட்டேன்'
என்று கூற..

ஆங்கிருந்த
இளங்கோவடிகளும்
சாத்தன்வழி கேட்ட
கண்ணகி கதையால் தாமுணர்ந்த
முப்பெரும் சேதிகள்
யாதென்று பகர்ந்திட்டார்.

'அரசாட்சியில் தவறிழைத்தோர்க்கு
அறவுருவே எமனுருவாகும்;

கற்பில் சிறந்த மாதரசியை
உலகத்தோர் தேவர்
உயர்ந்தோர் அனைவரும்
போற்றியே புகழ்ந்திடுவர்;

செய்த வினை
ஊழெனத் தொடர்ந்து வந்து
ஊட்டி நிற்கும்
தப்பாது தன் பயன்;

ஒற்றைச் சிலம்பால்
சூழ்ந்த இவ்வினை குறித்துச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
பாட்டுடைச் செய்யுள் ஒன்று
இயற்றிடுவேன் யான்' என்றார்
இளங்கோவடிகள்.

சிலம்பின் வரிகள் இங்கே..பதிகம் வரிகள் 37-60)

Saturday, July 25, 2009

பெண்ணியல் நிர்ணயம்

பூக்கள் ரசித்தவள்
அதன் இதழ்கள்
கிழிக்கிறாள்.

இரவு வானம் ரசித்தவள்
அதன் நொடிகளில்
அஞ்சுகிறாள்.

கவிதைகள் ரசித்தவள்
கவிக் காகிதங்கள்
கசக்கி எறிகிறாள்.

வானவில் ரசித்தவள்
வண்ணங்களையே
வெறுக்கிறாள்.

விதியின் நிர்ணயம்
கடமையின் அளவுகோலில்.

பெண்ணியல் நிர்ணயம்
அவள் துணைவனின்
மனக்கோலத்தில்.

பாரங்கள் சுமந்தாலும்
சுரக்கும் பால்தேடும்
மகவுக்காய்
வாழ்க்கை வலிகள்
வணங்குகிறாள்.

ரசனையின் கருப்பொருள்
அவள் கருவின் பொருளில்
கண்டு மலைக்கிறாள்.

விதியின் நிர்ணயம்
கடமையின் அளவுகோலில்.

பெண்ணியல் நிர்ணயம்
தாய்மையின் வரங்களில்.

Monday, July 20, 2009

நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 2)

பகுதி - 1

வியப்பிலாழ்ந்த வேந்தனவனும்
விழிகளைச் சுழற்றி
விடை வினவி நிற்க..

ஆங்கேயிருந்த
தமிழ்ப்புலவன் சாத்தனும்,
இவ்வரலாறு
நன்கறிவேன் என்றுரைத்தே
நவிலத் தொடங்கினன்....

ஆத்தி மலர் ஆரம் அணி
சோழன்குடை வரம்பில்
பெரும்புகழ் வாய்ந்த
புகார் நகரில் வாழ்ந்தனன்
பெருவணிகன் கோவலன்.

நாடகக் கணிகை
நாட்டிய மங்கை மாதவியிடம்
நாட்டம் கொண்டு மயங்கியே
கொட்டமடித்துக் களித்து
ஈட்டிய செல்வமனைத்தும்
தோற்றுத் தொலைத்தனன்.

தன் மனைவி கண்ணகி
காலணிச் சிலம்பு கொண்டு
தோற்ற பொருளதனை
வென்றெடுக்கும் முகமாய்...

புலவர் பலரின்
பாடற்சிறப்பில்
ஓங்கி மிளிரும்,
பாண்டிய மன்னனின்
புகழ் பாடி நிற்கும்,
மாடமாளிகைகள்
மலையென உயர்ந்து
மலைக்க வைக்கும்
சீர்பெரும் மாமதுரை
சென்று சேர்ந்தனன்
வணிகனவன்
கண்ணகியவளுடன்.

காற்சிலம்புகளில் ஒன்றைக்
கையில் ஏந்திக்
கடைவீதி சென்றவன்
பொற்கொல்லன் ஒருவனிடம்
விலைபேசி நின்றனன்.

கண்ணகி சிலம்பின்
கண்கவர் செதுக்கல்
முன்னர் தான் களவாடிய
அரசி கோப்பெருந்தேவியின்
சிலம்பதனை ஒத்திருக்கச்
சடுதியில் தீட்டினன்
சதியொன்றை அக்கொல்லன்.

கோப்பெருந்தேவியன்றி
வேறெவர்க்கும் பொருத்தமில்லை
இக்காற்சிலம்பு
பொறுத்திடுக நல்லவிலை கிட்டுமென்று
காத்திருக்கச் சொல்லிவிட்டுப்
பாண்டியன் தம் அரண்மனை ஏகினன்.

முன்செய்த வினைப்பயன்
பின் தொடர்ந்து எதிர்தேடும்
காலமதனுடன்
கள்வன் பொற்கொல்லன் சதியும்
கைகோர்த்துச் சதிராட..

சினமது கண்மறைக்க
ஆராயும் மனமது காணாமல் போக..
கொல்லன் கதைகேட்ட
கொற்றவன் பகர்ந்தனன்
ஓர் அவசரத் தீர்ப்பு.

அம்மாபெரும் கள்வனைக் கொன்று
கோப்பெருந்தேவி சிலம்பு
மீட்டு வருகவென்று.

செங்கோலின் ஆணை
செவ்வனே நிறைவேறக்
கொலைக்களம் கண்டனன்
வீண்பழி சுமந்த கோவலன்.

தன் காதல் கணவனைக்
காலன் கவர்ந்து சென்றது தாளாமல்
அங்கும் இங்கும் அலைந்து
நிலையின்றித் தவித்தனள்
கண்ணகி.

தம்
நீண்ட கண்களில்
நீரை உகுத்தனள்.

முத்தாரம் தவழ்
முலையொன்றைத்
திருகியெறிந்து
கூடல் மதுரை
கூக்குரலிட
தீக்கிரையாக்கினள்.

பத்தினி சாபத்தால்
பாண்டியன் கேடுற..
மாபெரும் பத்தினி தெய்வம்
இவளென்று
பலரும் புகழும்
பெருமை பெற்றனள்.

இங்ஙனம்
கண்ணகி கோவலன்
வரலாறு
ரத்தினச் சுருக்கமாய்ச்
செப்பினர் சாத்தனார்.


சிலம்பின் வரிகள்.. இங்கே..

Saturday, July 11, 2009

நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 1)

சிலப்பதிகாரம் என்ற மாபெரும் படைப்பு, பெரும்பாலானோர்க்கு ஒரு தவிர்க்க முடியாத பாதிப்பை உருவாக்கி நிற்பது உண்மை. அத்தகைய பாதிப்பு என்னுள்ளும் இருக்கிறது.சிலம்பின் கதை நம் வாழ்வியல் இலக்கணத்தின் படிமங்கள் பலவற்றைத் தொகுத்துச் சொல்கிறது என்றதொரு எண்ணம் எனக்குண்டு. அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பல பாடல்கள் பள்ளிப்
பருவம் தொட்டுப் படித்த போதும், முழுமையாக இதனைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. இப்போது படிக்கவும் தொடங்கிவிட்டேன். எனக்குப் புரிந்ததை என் மனதில் பதிந்ததை வலையில் பதியும் ஆர்வம் வந்தது. இணையம் மூலம் பல செய்திகள் கிடைக்கப்பெற்றன. மேலும் மதுரையில் புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த ப. சரவணன் அவர்களின் 'சிலப்பதிகாரம்' என்னும் எளிய உரையும் இம்முயற்சியில் எனக்கு மிகவும் துணையாக நிற்கிறது.
 
இதோ தொடங்கிவிட்டேன். முக்கிய செய்திகள் மட்டும் தொகுக்கும் நோக்கம் காரணமாய் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தையான விளக்கமாய் இல்லாமல் ஒரு தொகுப்பாய் மட்டுமே இருக்குமென்று நினைக்கிறேன். என்றாலும் விடுபட்ட முக்கிய குறிப்புகளை அவ்வப்போது விளக்கவும்முற்பட்டுள்ளேன்.

பதிகம்

குடதிசைச் சேரமண்ணின்
மன்னன் செங்குட்டுவனும்
குணவாயில் கோயிலில்
துறவுக்கோலம் பூண்ட
அவன் தம்பி இளங்கோவும்
மலைவளம் கண்டு களித்துப்
பெரியாற்றங்கரையில்
பேரோய்வில் ஆழ்ந்திருந்த வேளை...

குன்றக்குரவர்
திரளென வந்து
தந்ததொரு செய்தியது
விந்தையிலும் விந்தை!!

பொன்னிற மலர்நிறை
வேங்கை நிழலில்
தன்னொரு முலையிழந்த
நிலையில் நின்றனள்
மங்கையொருத்தி
மாபெரும் பத்தினி.

அவள்முன் தோன்றினன்
தேவர் தலைவன்
இந்திரன்.
இறையெய்திய அவள்தம்
கணவன் திருமுகம்
அவள் கண்முன் காட்டினன்;
பின்
வானூர்தியில்
மங்கையவளுடன்
விண்னுலகம் சென்றனன்.

மெய்யோ இது பொய்யோ?
இந்த விந்தைதான் எதுவோ?
நல்லதோ? கெட்டதோ?
இதன் விளைவுதான் எதுவோ?
விளக்கம் கேட்டு மன்னனை
வினவி நின்றனர்
குன்றக்குரவர்.

சிலம்பு வரிகள்..இங்கே...

(தொடரும்)

Thursday, July 9, 2009

உவமை உருவகம்


காதல்....
எல்லையற்ற
மகிழ்ச்சிக்கான
இணையற்ற உவமை.
உயிரின் அனைத்து
உணர்ச்சிகளின்
உணர்வுகளின்
இணையற்ற உருவகம்.