Monday, July 27, 2009

நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 3)

'முன்வினை விளையும் காலம்
என்றீரே சாத்தனாரே
அவ்வினை விளைவு
ஏதென்று பகர்வீரோ'
வேந்தன் கேட்க
உரைத்தனர் சாத்தனார்.

'வெற்றி வேந்தே! கேள்.
அதிராச் சிறப்புடை
மூதூர் மதுரையில்
கொன்றை மலரணி
சடைமுடியான் கோவில்
வெள்ளியம்பலத்தில்
நள்ளிருள் ஒன்றில்
நான் ஓய்விருந்த வேளை..

மதுரை மாதெய்வமது
வீர பத்தினி
கண்ணகி முன் தோன்றி
உரைத்ததோர் செய்தி
நான் கேட்டேன்;
கேட்ட செய்தி
உமக்குரைப்பேன். '

'கொதி நெருப்பின்
தணல் சீற்றம்
கொங்கையில்
பொங்குவித்தவளே!
நீவிர்
முன் செய்த வினையது
முதிர்ந்து முடிந்து போனது;

முற்பிறவியில்
சிங்கபுரத்து வணிகன்
சங்கமன் மனைவி
நின் கணவனுக்கிட்ட சாபம்
இப்பிறவியில் வந்துற்றது.

நீண்ட கூந்தலாளே!
இன்னும் ஈரேழு நாளில்
இவ்வையகத்து எல்லை நீங்கிய
நின் மணாளன் திருமுகம்
வானவர் வடிவத்தில்
காண்பாயேயன்றி
மானுடர் வடிவத்தில்
கண்டிட மாட்டாய்!'

'அத்தெய்வம் கூறிய
கட்டான உரை
சாத்தன் நான் கேட்டேன்'
என்று கூற..

ஆங்கிருந்த
இளங்கோவடிகளும்
சாத்தன்வழி கேட்ட
கண்ணகி கதையால் தாமுணர்ந்த
முப்பெரும் சேதிகள்
யாதென்று பகர்ந்திட்டார்.

'அரசாட்சியில் தவறிழைத்தோர்க்கு
அறவுருவே எமனுருவாகும்;

கற்பில் சிறந்த மாதரசியை
உலகத்தோர் தேவர்
உயர்ந்தோர் அனைவரும்
போற்றியே புகழ்ந்திடுவர்;

செய்த வினை
ஊழெனத் தொடர்ந்து வந்து
ஊட்டி நிற்கும்
தப்பாது தன் பயன்;

ஒற்றைச் சிலம்பால்
சூழ்ந்த இவ்வினை குறித்துச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
பாட்டுடைச் செய்யுள் ஒன்று
இயற்றிடுவேன் யான்' என்றார்
இளங்கோவடிகள்.

சிலம்பின் வரிகள் இங்கே..பதிகம் வரிகள் 37-60)

15 comments:

கோபிநாத் said...

அருமை...!

உங்களின் இந்த கவிதை நடையில் கதை சொல்லும் விதமும் திரு. கவிஞர் வாலி அவர்களின் பாண்டவர் பூமியை நினைவுப்படுத்துகிறது.

மனமார்ந்த பாராட்டுக்கள் ;)

டவுட்டு அடுத்து தொடருமா இல்ல இத்தோட முடியுதா!!?

வல்லிசிம்ஹன் said...

அன்பு பாசமலர் முந்திய பதிவைப் படிக்கிறேன்.
கண்ணகிக்குப் பதில் சொன்ன சாத்தன் கதை இப்போதுதன் தெரியும். உண்மைதான் ஊழிற் பெரிது எது.

கே.ரவிஷங்கர் said...

சிம்பிள் வரிகள் அதே சமய்ம் முக்கியமானவற்றை விடாமல்.

ஜீவி said...

//'அரசாட்சியில் தவறிழைத்தோர்க்கு
அறவுருவே எமனுருவாகும்;

கற்பில் சிறந்த மாதரசியை
உலகத்தோர் தேவர்
உயர்ந்தோர் அனைவரும்
போற்றியே புகழ்ந்திடுவர்;

செய்த வினைப்பயன்
ஊழெனத் தொடர்ந்து வந்து
ஊட்டி நிற்கும்
தப்பாது தன் பயன்; //

சிலப்பதிகாரத்தின் இருதயபாகமாம்
முத்தான மூன்றையும் முறைபட
அடிகள் அடியொற்றி
அருமையாகச் சொல்லிவிட்டீர்!
இவர் போல அவர் போல என்று
எவர் போலும் இல்லாது
தனித்தன்மை பூண்ட தகைசால் நடை
இனிவருவதையும் இயம்புவீர்!
கவிதை ஊற்றெடுத்து ஓடிவருகையில்
தமிழே தகதகக்கிறது, நன்றி, அம்ம!

பாச மலர் said...

கோபி..சிலப்பதிகாரம் முழுவதும் இவ்வாறு தொடரும்...அடுத்த வாரம் விடுமுறை இந்தியா செல்கிறேன்..2 மாதங்களுக்கு..வாய்ப்பிருந்தால் அங்கிருந்தும் தொய்வில்லாமல் தொடரும் எண்ணம் உள்ளது...

பாச மலர் said...

வாங்க வல்லிமா...மதுரையில் மாதெய்வம்(மதுராபதி என்று கூறுகிறார்கள்) கண்ணகிக்கு முற்பிறவி பயன் உரைத்தது..

அவர்கள் உரையாடலை அருகிருந்து கேட்டார் சாத்தனார் என்ற புலவர்...

அதை இப்போது மன்னன் மற்றும் இள்ங்கோவுக்கு உரைக்கிறார்...

சரியாகப் புரியும் படி அந்தப் பகுதி இங்கே நான் எழுதவில்லையென்று தோன்றுகிறது..

பாச மலர் said...

நன்றி ரவிஷங்கர்...
நன்றி ஜீவி சார்..

RATHNESH said...

"அரசியல் பிழைத்தோர்க்கு" (இது அரைசியல் என்று அச்சாகி இருக்கிறது இணைப்பில் - அரசியல் தர்மங்கள் பாதியாகி விட்டன என்று எடுத்துக் கொள்வதா? அரைகுறையாகி விட்டன என்று எடுத்துக் கொள்வதா?)

இதற்கான விளக்கம், அரசாட்சியில் இருப்போர்க்கு மட்டுமா அரசியலில் இருப்போர் அனைவருக்குமா? தண்டனை பாண்டியனுக்கும் அவன் மனைவிக்கும் மட்டுமே கிடைத்ததால் இப்படிப் பொருள் கொண்டீர்களா?

பாச மலர் said...

ரத்னேஷ்,

அந்த இணைப்பு Tamilreader சுட்டிதான்..

அச்சுப் பிழை..

இன்றைய அரசியல் பிழை செய்வோர்க்கு இப்படி தண்டனை கிடைத்தால்..உலகில் எத்தனை அரசியல்வாதிகள் உயிர் பிழைப்பார்கள்? 'எண்ணி'ப் பார்க்கவே முடியவில்லை...

பாச மலர் said...

ரத்னேஷ்,

எனக்குத் தெரிந்த வரை..செங்கோல் நெறி தவறிய மன்னனுக்கு மட்டுமே இது பொருந்துகிறது சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரை..

Annam said...

superu:)

கிருத்திகா said...

மலர் ரொம்ப எளிமையா அதே சமயம் செறிவா கொண்டு போறீங்க... வாழ்த்துக்கள்.

பாச மலர் said...

வாங்க அன்னம்..கிருத்திகா..நன்றி..

ராமலக்ஷ்மி said...

அருமை அருமை.

குமரன் (Kumaran) said...

பதிகத்தை மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள் பாசமலர். ஊரில் இருந்த வந்த பின்னர் அடுத்த பகுதிகள் தொடரும் என்று நினைக்கிறேன்.

இரத்னேஷ், அரசு என்ற சொல் அரைசு என்று இலக்கியத்தில் பல இடங்களில் வந்திருக்கிறது. இலக்கணப்படி இப்படி வருவதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. அந்த முறையில் அரசியல் இங்கே அரைசியல் என்று பதிகத்தில் வந்திருக்கிறது.